“பூங்காற்று திரும்புமா..?

என் பாட்டை விரும்புமா..?”

- பாடலைக் கேட்கிறபோதெல்லாம் மனசுக்குள் இனம் தெரியாத உணர்வை உணராத தமிழ் ரசிகர் எவரேனும் இருப்பாரோ? அப்படி யொரு ரச வித்தையை நிகழ்த்திய பாடலல்லவா அது? அந்தப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய பாடகர் மலேசியா வாசுதேவன் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி தமிழ் சினிமா ரசிகர் களுக்கு உண்மையிலேயே ஒரு அதிர்ச்சிச் செய்தி தான்.

மலேசியாவில் பிறந்த வாசுதேவனுக்குப் பூர்வீகம் கேரளம். மலேசியாவில் தமிழர்கள் நடத்திவந்த இசைக்குழுவில் துவக்க காலத்தில் முக்கிய பாடகராக இருந்தார் மலேசியா வாசு தேவன். தமிழ் சினிமாவின்மீதும், நடிப்பின்மீதும் அவருக்கு எப்போதும் ஒரு ஆர்வம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும். மலேசியாவில் நாடகங் களிலும் நடித்தார். அந்த அனுபவத்தோடு சென்னைக்குப் புறப்பட்டார். வாய்ப்புகளுக்காக அலையாய் அலைந்தார். இடையே மலேசியத் தமிழர்கள் தயாரித்த ‘இரத்தப் பேய்’ என்ற படத் தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சமூக சீர்திருத்த சிந்தனையை அந்த நாளிலேயே சினிமாவில் விதைத்த இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனான எஸ்.வி.ரமண னின் இசைக்குழுவில் சிஎஸ்.ஜெயராமன், டி.எம்.சௌந்தரராஜன் குரல்களில் பழைய பாடல்களைப் பாடி அசத்தினார். ரமணனில் ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் நிறுவனத்தின் விளம்பரங் களுக்கு குரல் தந்தும், அவர்களின் நிறுவனம் எடுத்த ஆவணப்படங்களில் நடித்தும் வந்த மலேசியா வாசுதேவன் இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவில் பாடத் தொடங்கினார்.

‘பொல்லாத உலகில் ஒரு போராட்டம்’ -என்ற படத்திற்கு ஜி.கே.வெங்டேஷ் இசை யமைத்தார். அவர்தான் வாசுதேவனுக்கு முதன் முதலில் அந்த சினிமாவில் பாட ஒரு வாய்ப்பைத் தந்தார். அவர் பாடிய முதல் பாடல் ‘பாலு விக்கிற பத்தும்மா...’ - என்று தொடங்கும் பாட லாகும். அது ஓரளவே பிரபலமானது. பிறகு பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’யில் மலேசியா வாசுதேவன் பாடிய ‘ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு’ -பாடல்தான் அவருக்கு முழு அங்கீ காரத்தைத் தந்தது. தமிழகத்தின் எல்லாத் திசைகளிலும் முட்டிமோதி எதிரொலித்தது அந்தப் பாடல். அதே பாரதிராஜா தனது ‘கைதியின் டைரி’யில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தியதன் விளைவாக பாடகரான மலேசியா வாசுதேவன் ஒரு தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் வெளிப்பட்டார்.

மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அவர் கதை, வசனம் எழுதிய படம்தான் ‘மலர்களிலே அவள் மல்லிகை’. இந்தப் படத்தில்தான் தனது நீண்ட நாள் நண்பரான கங்கை அமரனுக்கு இசை யமைப்பாளர் வாய்ப்பைத் தந்தார் மலேசியா வாசுதேவன்.

பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்தவர் மலேசியா வாசுதேவன். இத்தனை திறன்களிருந்தும் இயல்பில் அவரை அரிதாரம் பூசாத நல்ல மனிதர் என்கின்றனர் அவரது திரைத்துறை சகாக்கள். வெளியில் தெரிவதை விரும்பாமல் பலருக்கும் அவர் உதவிகள் செய்யக்கூடியவர் எனவும் புகழ்கின்றனர்.

தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள, அவர் களுடன் வில்லனாகப் பல படங்களில் நடித் துள்ள மலேசியா வாசுதேவன் தனது எளிய குடும்பத்தில், எந்தவிதக் கலைப்பின்னணியும் இல்லாமல் வெளிச்சத்திற்கு வந்தவர். சுய முயற்சி என்பதன் பழுதற்ற எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர். தமிழில் அவர் பாடியிருப் பது 8000 க்கும் மேற்பட்ட பாடல்கள். அதோடு, இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலை யாளம் ஆகிய மொழி களில் 5000 பாடல்கள்.

மலேசியா வாசுதேவன் மறைந்தாலும், எளிய அதேநேரத்தில் அழுத்தமான குரலுக்குச் சொந்தக்கரரான அவரின் பல நூறு பாடல்கள் என்றென்றும் காற்றுவெளியில் உயிர்த் திருக்கும்.

- அரவரசன்

Pin It