Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.


பேராண்மை - திறனாய்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பீஸ் வஸ்சீலியெவ் எழுதிய “அதிகாலையின் அமைதியில்’ என்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி. ஜனநாதன் திரைக்கதை, இயக்கத்தில் வெளி வந்துள்ள திரைப்படம் பேராண்மை.
 
ஐந்து பெண்கள் ஒரு இராணுவத் தளபதி தலைமையில் செர்மன் பாசிஸ்டுகளின் சதித் திட்டத்தை முறியடிக்கும் சாகசம்தான் அதிகாலையின் அமைதியில் கதையின் மையக்கரு. இதே பாணியில் இந்திய அரசிற்கு எதிரான வெளிநாட்டவரின் சதித்திட்டத்தை முறியடிக்கும் கதைதான் பேராண்மை. தமிழகச் சூழலுக்கு ஏற்ப கதையும் களமும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வெள்ளிமலையில் இருந்து ‘பசுமை’ என்ற செய்மதி (சாட்டிலைட்) அனுப்பத் தயாராக உள்ளார்கள். பழங்குடி சமூகத்தில் பிறந்த துருவன் (‘ஜெயம்’ ரவி) இடஒதுக்கீட்டில் படித்து முள்ளிமலை கல்லூரியின் என்.சி.சி. பயிற்சியாளராக உள்ளார். இவரிடம் பயிற்சிக்கு வரும் ஐந்து பெண்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஜீப்பில் செல்கிறார். வாகனம் விபத்துக்குள்ளாகிறது. இதனால் இரவு காட்டில் தங்க நேரிடுகிறது. ஐந்து பேரில் ஒரு பெண் காட்டில் வெளி நாட்டவர் நடமாட்டத்தைப் பார்க்கிறாள். துருவனிடம் சொல்கிறாள்.

வெள்ளிமலையில் இருந்து செலுத்தப்பட உள்ள செய்மதியைத் தடுப்பதற்காக வந்துள்ள வெளிநாட்டு கூலிப்படையினரைத் தடுத்து நிறுத்தத் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். 16 வெளிநாட்டு கூலிப்படையினரை இந்த 6 பேரும் எப்படித் தாக்கி அழித்து வெற்றி பெறுகின்றனர் என்பதுதான் பேராண்மை படத்தின் மையக்கரு.

இந்தியா ஒரு விவசாய நாடு. பசுமைப்புரட்சி என்ற பெயரில் இரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கியுள்ளனர். அதிக மகசூல் வரும் என்று பன்னாட்டு கார்கில், மன்சாண்டோ கம்பெனிகளின் விதைகளை அறிமுகப்படுத்தினர். மகசூல் வரவில்லை. மாறாக விதைத்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைதான் அதிகமானது.

மரபணு மாற்றப்பட்ட அமெரிக்காவின் மன்சாண்டோ நிறுவனம் தயாரித்த பி.ட்டி காட்டன் என்ற பருத்தி விதை அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற ஆசையூட்டப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை நம்பி பயிரிட்ட மராட்டிய விதர்பா, ஆந்திராவின் பகுதி விவசாயிகள்தான் கடனாளியாகத் தற்கொலை செய்து கொண்டுமடிந்தனர். இந்தச் செடிகளைத் தின்ற ஆயிரக் கணக்கான கால்நடைகள் இறந்தன.

இயற்கையாக நமது பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ். சுவாமிநாதனின் தவறான விவசாயக் கொள்கையால் மண்μம் மலடாகி விவசாயிகள் வாழ்வும் கேள்விக்குறியாக உள்ளது. தற்சமயம் மகிகோ என்ற பன்னாட்டு நிறுவனம் தயாரித்துள்ள மரபணு மாற்று கத்திரிக்காய்க்கு மத்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தந்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.
 
விதைகளற்ற இந்த மரபணு கத்திரிக்காய் விவசாயிகளை மேலும் பாதிக்கும். அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் சூழலில், இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக கருத்து களைப் பரப்பும் வகையில் வெளி வந்துள்ள பேராண்மை திரைப்படம் வரவேற்புக்குரியது.
 
மண்ணை மலடாக்கிவிட்டு நம் வாழ்க்கை மட்டும் எப்படிச் சிறக்கும்? என்ற கேள்வி மூலம் இயற்கை வேளாண்மைக்கு மக்களைத் திரட்டுகிறது இப்படம். தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்ற கருத்தை மாற்றி வெளிநாட்டினரைக் காட்டியிருப்பது பாராட்டிற்குரியது.
 
இயக்குநர் ஜனநாதன் தமது உரையாடல் மூலம் தமது சமூக சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இடஒதுக்கீடு மூலம் படிப்பவர்கள் திறமை குறைவானவர்கள் என்று கருத்து பரப்பும் திரையுலகினர் நடுவில், பழங்குடி சமூகத்தில் பிறந்த ஒருவன் இடஒதுக்கீட்டில் படித்து எப்படிச் சாதிக்கிறான் என்பதைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக மட்டும் காட்டும் திரையுலகில் அவர்களைப் போராளி களாக மாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.

உழைப்பை, உழைப்பின் மதிப்பை, உபரி மதிப்பை அரசியல் பொருளாதாரம் தொடர்பான வகுப்பறையில் ஒருசில நிமிடங்கள் விளக்குகிறார். தமிழ்த் திரையுலகில் வகுப்பறை என்றாலே தமிழையும், தமிழாசிரியரையும் கிண்டலடிக்கிற வகையில்தான் பெரும்பாலும் இருக்கும். இந்த நிலையில் இருந்து மாறுபட்டு மார்க்சியப் பாடத்தை எளிய முறையில் விளக்கியிருப்பதற்காக இயக்குநர் ஜனநாதனைப் பாராட்டலாம்.

நீங்க ஏன் ஆங்கிலம் பேசுவதில்லை என்று ஒரு மாணவி கேட்கும்போது, “நான் ஆங்கிலம் பேசினா எங்க சனங்களுக்குப் புரியாது, உங்களுக்கும் பிடிக்காது” என்று பழங்குடிஇனக் கதாநாயகன் துருவன் பேசும் வசனம் அருமை.
 
அரசியல் பொருளாதரத்தைப் புரிந்து கொள்ளாமல் இனம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. பொதுவுடைமை அரசியலைப் படிக்க முடியாது என்பது போன்ற வசனங்கள் நன்று.

துருவன் வேடத்தில் ‘ஜெயம்’ ரவி அற்புதமாகப் பொருந்தியுள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கோவணம் கட்டிக்கொண்டு எருமை மாட்டுக்குப் பேறு (பிரசவம்) பார்க்கும் காட்சி இயல்பாக உள்ளது. நாயக பிம்பத்தைப் (ஹீரோ இமேஜ்) பார்க்காது கதைக்காகத் தன்னை மாற்றியிருப்பது நல்லது.

சாதியைச் சுட்டிக் காட்டி உயர்வகுப்பு மாணவிகள் இழிவுபடுத்தும் போதும், உயர் அதிகாரி இழிவுபடுத்தும் போதும் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

உரையாடலை உச்சரிக்கும் முறை, சண்டைக்காட்சி - என்று இன்னும் பல வகைகளில் மாறுபட்டு நடித்துள்ளார். மாணவிகளாக வரும் ஐந்து பேரும் சரியான தேர்வு. ஊர்வசி, பொன்வண்ணன், ஊனமுற்ற பழங்குடி இளைஞராக வரும் குமர வேலு உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர். வடிவேலு நடிப்பு ஊறுகாய் போல. ஓவியர் மருதுவும் நடித்துள்ளார். வனத்துறை அதிகாரி பழங்குடி மக்களைத் தாக்குகிற காட்சி, வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியத்தை நினைவுபடுத்துகிறது.

கல்லூரி மாணவிகளின் வீரச்செயல்கள் ஈழவிடுதலைப் பெண் போராளிகளை பிரதிபலிக்கிறது. மாணவி ஒருத்தி இறந்தவுடன் அவளைப் புதைத்துவிட்டு துப்பாக்கி வைக்கும் காட்சி ஈழத்தை மனக்கண்முன் கொண்டுவருகிறது.

சதீஸ்குமாரின் ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசையில் வித்யாசாகர் இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம். சில இடங்களில் வரும் இரட்டைப் பொருள் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
 
திரைப்படம் என்ற தளத்தைக் கடந்து சிந்தித்தால்... இப்படம் முன் வைக்கும் அரசியல் மிக விரிவானது. பொதுவுடைமைக் கருத்தியல் மட்டுமின்றி, சூழலியல், இயற்கை வேளாண்மை, பெண்ணியம், சாதியம் உள்ளிட்ட தளங்களிலும் கதை நகர்கிறது. இது இயக்குனரின் நேர்மையான பிடிவாதத்தைக் காட்டுகிறது. அவர் விரும்பிப் புகுத்திய இக் கருத்தியல் கூறுகள், உறுத்தலாக இல்லாமல் கதையோடு இயைந்து விட்டன.

இவற்றைத் தவிர, இப்படம் பற்றி நாம் சில மறுப்புரைகளையும் முன்வைக்கிறோம்.

1. இந்தியா ‘இயற்கை வேளாண்மை’க்காக செய்மதி (சாட்டிலைட்) அனுப்பும் என்று இயக்குனர் உண்மையிலேயே நம்புகிறாரா? அமெரிக்காவே அனுமதிக்காத பி.ட்டி விதைகளை அனுமதித்து வேளாண் தொழிலை இரசாயனப் பெருந்தொழிலுக்குப் பலி கொடுக்கும் நாடு அல்லவா இந்தியா!
 
2. ’நாம் ரெண்டு பேரும் அடிச்சிக்கிறதுக்கு நாம காரணமில்ல. மூணாவதா ஒரு சக்தி இருக்கு’ என்று பசுமை விகடன் நேர்காணலில் கூறியுள்ளார் இயக்குனர். பெரும் பொருளாதாரத்தில் எல்லா ஒடுக்குமுறைகளும் ஏகாதிபத்திய நாடுகளின் இறக்குமதிதான் என்ற பார்வை அவருக்கு இருப்பதை இது உணர்த்துகிறது.

இந்தியா எனும் அரச வடிவம் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாகவும் சுரண்டல் ஆயுதமாகவும் இருப்பதை இயக்குனர் கவனிக்கத் தவறுகிறார். அவரது முந்தைய படமாகிய ஈ-யிலும் இத்தன்மை இருந்தது.

பேராண்மையில் இக்கருதுகோளை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார். எந்த ஏகாதிபத்தியத்திற்கும் புறக் காரணிகளும் உண்டு; அகக் காரணிகளும் உண்டு என்பதே இயல்பு. அமெரிக்காவின் பெரும்பகுதி மக்கள் இன்று வேலையில்லாமை, வறுமை, மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் காரணம் ‘சீனா’ உள்ளிட்ட பிற பெருமுதலாளியச் சுரண்டல் நாடுகளும் காரணம்.
 
இந்தியாவிலிருந்து போய்க்குவியும் பிழைப்புதேடிகளும் காரணம்தான். இவர்களும் சேர்ந்துகொண்டுதான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர். அதற்காக... அமெரிக்காவில் நிலவும் வறுமைக்கு அமெரிக்கா காரணமாக இல்லாமல் போய்விடுமா? முதல் குற்றவாளி அமெரிக்காதானே!

இந்தியா எனும் அரச வடிவம் தன்னளவிலேயே ஓர் ஒடுக்கு முறைக் கருவியாகவும் இருக்கிறது. தன் ஒடுக்குமுறையை வலுப்படுத்திக் கொள்ளவும் சுரண்டலைப் பெருக்கிக் கொள்ளவும், தன் வர்க்க-இன நலன்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் இந்தியா பிற ஏகாதிபத்தியங்களை நாடுகிறது. பிற ஏகாதிபத்தியங்கள் சுரண்டிக் கொள்ள வழி வகுக்கிறது. குறிப்பாகவே கூற வேண்டுமெனில்...

உலகமயப் பொருளாதாரம் எனும் கருத்தியல் ஆதிக்கம் தோன்றும் முன்புதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரால் இந்தியா இந்திய மரபு வேளாண்மையை ஒடுக்கியது. பசுமைப் புரட்சி எனும் ஆயுதம் இந்திய வேளாண்மை மீது பாய்ச்சப்பட்டதன் காரணம் இந்திய அரச வடிவத்தின் சுரண்டல் தன்மையே தவிர, நேரடி அந்நிய ஏகாதிபத்திய ‘நெருக்குதல்’ அல்ல!
 
இந்திய வர்க்க - சாதி ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுரண்டல்களுக்காக வேளாண் துறையில் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய சக்திகளை அனுமதித்தனர். பசுமைப் புரட்சியில் இந்திய ஏகாதிபத்தியமும் பலனடைந்தது. அது முழுமையான இறக்குமதியோ சதியோ அல்ல!

இந்தச் சிக்கலில் இயக்குனர் தீவிரப் பரிசீலனை செய்யாவிட்டால்...

அவரது தொடர் உழைப்பும் ஈகங்களும் ‘இந்தியா எனும் ஒடுக்கு முறை கருவி’யைக் காப்பாற்றவே பயன்படும். உயிரைப் பணயம் வைத்து செய்மதியைக் காக்கும் துருவன் பரிதாபமாக தன் வழமையில் ஈடுபட.. சாதி வெறி பிடித்த கணபதிராம் எனும் அயோக்கியனுக்கு இந்திய அரசு விருது வழங்குவதாக இறுதிக் காட்சியைச் செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.
 
’எங்கள் உயிர்களைக் கொடுத்தேனும் இந்தியாவைக் காப்போம்’ என்று அப்போதும் துருவன் முழங்குவான். இது ஐயமில்லாமல், இந்தியா மீதான சாட்டையடிதான். ஆனால்... இந்தியாவை ஏற்றுக் கொண்டு செய்யும் விமர்சனமாக மட்டுமே இது உள்ளது. இயக்குனர் மார்க்சியம் படித்தவர் என்பதால் அவருக்கும் தெரிந்த மொழியில் சொல்கிறோம்;

‘இந்தியாவை நேச முரணாக அணுகுகிறார் இயக்குனர். மாறாக, இந்தியா தமிழருக்கும் பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்குமான பகை முரண்’ என்பதை அவர் ஆய்ந்து உணர வேண்டும். இந்தியா எனும் அரச ஒடுக்குமுறை வடிவம் தகர்ந்தால் மட்டுமே...தேசிய இன, வர்க்க விடுதலை கிடைக்கும். இந்தப் பார்வை இன்றி இயங்கினால், நாமும் அப்பாவி துருவன்களாகவே முழங்கிக் கொண்டிருப்போம், இறுதி வரை!

(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே!
Comments (2)
  • சா.கர்ணன்
    நண்பர் நா.வைகறை அவர்களுக்கு வணக்கம், உங்களின் "பேராண்மை" திரைப்பட திறனாய்வு படித்தேன். படத்தில் குறிப்பிடும் படியான காட்சிகளையும், "இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக கருத்துகளைப் பரப்பும் வகையில் வெளி வந்துள்ள பேராண்மை திரைப்படம் வரவேற்புக்குரியது. மண்ணை மலடாக்கிவிட்டு நம் வாழ்க்கை மட்டும் எப்படிச் சிறக்கும்? என்ற கேள்வி மூலம் இயற்கை வேளாண்மைக்கு மக்களைத் திரட்டுகிறது இப்படம். தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்ற கருத்தை மாற்றி வெளிநாட்டினரைக் காட்டியிருப்பது பாராட்டிற்குரியது." அதன் நோக்கங்களையும் "பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக மட்டும் காட்டும் திரையுலகில் அவர்களைப் போராளிகளாக மாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. மாணவிகளின் வீரச்செயல்கள் ஈழவிடுதலைப் பெண் போராளிகளை பிரதிபலிக்கிறது."என்றும், அது ஞாபகப்படுத்தும் சேதிகளையும் "மாணவி ஒருத்தி இறந்தவுடன் அவளைப் புதைத்துவிட்டு துப்பாக்கி வைக்கும் காட்சி ஈழத்தை மனக்கண்முன் கொண்டுவருகிறது." என்றும், குறிப்பிட்டு இருந்தீர்கள். மிகவும் நன்றாக இருந்தது. அதே போல் திறனாய்வில், இயக்குநர் திரு.ஜனநாதன் அவர்கள் இந்தியா எனும் அரச வடிவம் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாகவும் சுரண்டல் ஆயுதமாகவும் இருப்பதை இயக்குனர் கவனிக்கத் தவறுகிறார். அவரது முந்தைய படமாகிய ஈ-யிலும் இத்தன்மை இருந்தது. என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். இதற்கு பதில் நான் சொல்வதை விடவும், இயக்குநர் திரு.ஜனநாதன் அவர்கள் "கருஞ்சட்டை தமிழர்" இதழுக்கு கொடுத்த பேட்டியை கொடுத்திருக்கிறேன். அவசியம் படிப்பீர்கள் என நம்புகிறேன். "கேள்வி: பேராண்மை படத்துல நீங்க சொல்ல நெனச்சதெல்லாம் சொல்லீட்டீங்களா? பதில் : இல்ல. சொல்ல முடியல. நெறய சென்சார்ல மாட்டிருச்சு. படம் இடைவேளைக்கு அப்புறம் மட்டுமே 12,000 அடி இருந்துச்சு. அத 6500 அடியா எடிட் பண்ண வேண்டிய தாயிருச்சு. " (சென்சார் போர்டு பற்றி இயக்குநர் வேலு பிரபாகரன் கடந்த காலங்களில் பேசி உள்ளதை படிக்கவும்) "நான் நெனச்சத கொஞ்சங் கொஞ்சமா சொல்வேன், என்னோட அடுத்தடுத்த படங்கள்ல." பொதுவாக தமிழ் படங்களில் ( சின்னத்திரை தொடர்கள் உட்பட ) 100க்கு 99.99 உயர் வகுப்பினரின் நடை, உடை, பாவணைகளையும் அவர்களுக்குத் தான் நாட்டுப்பற்று அதிகம் இருப்பது போலவும் படம் எடுக்கப்பட்டு (மற்ற வகுப்பினரிடம்) விற்கிறார்கள். "இந்தியாவப் பொறுத்தவரையில எந்த ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவனோ தாழ்த்தப்பட்டவனோ இந்த நாட்டுக்காக உண்மையாக உழைத்தால் அவன் மிகப் பெரிய கெளரவத்திற்கு உள்ளாவான் என்ற பொய்யான நம்பிக்கையை .. .. .. சொல்ல வேண்டியதாகி விட்டது. உண்மையிலேயே அப்படி இருந்திருந்தால் நான் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தப் படமும்கூடத் தேவையில்லை. சினிமாவ வச்சு என்னால இவ்வளவுதான் உணர்த்த முடியும்." இதைப் புரிந்து கொள்ளாமலே நடிக,நடிகை மோகத்தில் தமிழக மக்களும் தங்கள் ரசனையை இழந்து வருகிறார்கள். எப்போதாவது ( பருத்தி வீரன், ஆட்டோகிராப், தம்பி, புரட்சிக்காரன், கடவுள், பசங்க..இன்னும் சில ) தான் இதுபோன்ற தரமான படங்கள் வருகிறது. "தமிழ்நாட்டுல இந்த மாதிரி மாறுபட்ட திரைப்படம் எடுக்குறதுங்கறது ஒரு போராட்டம்தான். வழக்கமான படம் எடுக்கனும்னா தயாரிப்பாளர் மட்டும் போராடுனா போதும், படத்துல என். சி. சி. மாணவர்கள காட்டி யிருக்கேன். அவங்களோட உறுதிமொழி ஹிந்தியில் மட்டுந்தான் இருக்கு. ஆங்கிலத்துல கூட இல்ல. நான் தமிழ்ல உறுதிமொழிய சொல்லியிருந்தா அதுவே சென்சார்ல தடைபட்டிருக்கும். உண்மைக்கு மாறாவும் இருந்திருக்கும்." இப்படிபட்ட இயக்குநர்களிடமும் தரம், உலகளாவிய சிந்தனை என்ற கருத்தை முன் வைத்து திசை திருப்ப வேண்டாம். முடிந்த வரை திரு.ஜனநாதன் அவர்கள் மட்டுமில்லாமல் அவரைப் போன்ற சிந்தனை உள்ள இயக்குநர்களின் படங்களை வரவேற்போம். இது போன்று இன்னும் பல படங்கள் வரட்டும். அப்படிபட்ட ஆரோக்கியமான போட்டி வரும்போது அவர்களே தங்களை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புவோம். உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் இப்போதைக்கு இவராவது இப்படி ஒரு படம் கொடுத்ததற்காக முழு மனதார பாராட்டுவோம். இறுதியாக .. .. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான "ஜென்டில்மேன்"கள் இடம் கிடைக்காவிட்டால் ..கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபடுவார்கள். இட ஒதுக்கீட்டுக்கு படி பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் எம் "துருவன்" நாட்டுப்பற்றை இழக்க மாட்டார்.
  • Anonymous
    அய்யா கர்ணன், வனக்கம். கோபித்திருவின் கட்டுரையை படிக்கவும். கொக்காட்டியான்.
Write comment
Your Contact Details:
Comment:
தமிழ் (ammaa=அம்மா) English
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

அதிகம் பேர் படித்தது

Keetru RSS Feed

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

திரைவிருந்து


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP