மலம்

மலத்தைப்பார்த்தே
நாள் துவங்குகிறது
சரியாக கழிந்துவிட்டதா
என்ற நினைப்பிலேயே
ஒவ்வொரு நாளும் கடக்கிறது.

தெருவில் அங்கெங்கினாதபடி
கிடப்பது வேறு தொடர்ந்து
அதை ஞாபகமூட்டிக்கொண்டே
இருக்கிறது.

மனிதமலம் மட்டுமல்ல,
கிடக்கும் விலங்கின் மலமும்
மனதை ஆக்கிரமிக்கின்றன

அதை அள்ளுபவனின்
மற்றும் சுமப்பவனின் மலத்தை
யார் அள்ளுவார், சுமப்பார் என்ற
கேள்வியும் மனதில்
ஊஞ்சலாடுகிறது.

எந்த மருத்துவரும்
நோயாளியிடம்
முதலில் கேட்கும்
கேள்வியில் அது சப்பணமிட்டு
உட்கார்ந்து கொள்கிறது.

ஒவ்வொரு மனிதனும்
முழுதும் அகன்று விட்டது
என நினைத்துக்கொண்டாலும்
ஒரு அவுன்ஸ் மலத்தோடுதான்
நடமாடுதல் சாத்தியம்
என்ற உண்மையும் மனதை
என்னவோ செய்கிறது.

நான் அதி சுத்தம்
எனக்கூறிக்கொள்பவனை
நினைத்தால் உள்ளூர
சிரிப்பு வருகிறது.

இங்குள்ள
கலையும், கவிதையும்
மலத்தைப்பற்றி எதுவும்
பேசாது இருப்பது வியப்பை
அளிக்கிறது.

அதனால் தான்
இயல்பைப்பற்றிய
இலக்கியம் இன்னும்
படைக்கப்படவில்லை
போலும்.

எனினும்
இதுவரை படைக்கப்பட்டவை
அதனையொத்ததாகவே
காணப்படுகிறது.

Pin It