நாட்டின் வளங்களைச் சூறையாடி, அன்னிய நாடுகளிடம் பங்கு போடும் அரசியல்வாதிகள், உரிமைகளைக் கோரும் மக்களை – ‘இறையாண்மை' என்ற ஒற்றைச் சொல்லைக் காட்டி – தேசத்தைக் காப்பாற்ற அடிமைகளாக இருக்கும்படி அச்சுறுத்துகின்றனர். இந்நிலையில், இறையாண்மை மீதான மாயையை உடைத்தெறிகிறார், சென்னை பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு. மணிவண்ணன். தில்லி பல்கலைக் கழகத்தில் 18 ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், 1980 முதலே மனித உரிமை செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக, பர்மா, திபெத் மற்றும் ஈழ மக்களுக்காக இடையறாது குரல் கொடுத்து வருகிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண, அய்.நா. அங்கீகாரம் பெற்ற உலகளாவிய அமைதி இயக்கங்கள் சார்பாக ஈழத்திற்கு பத்து முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். மாணவர்கள் இடையிலும், பன்னாட்டு பிறமொழி அறிஞர்கள் இடையிலும் தனது உரைகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் ஈழப் போராட்டத்தின் நியாயங்களை – அரசியல் அறிவியல் பார்வையிலும், வரலாற்றுப்பூர்வமாகவும் எடுத்துரைத்து வருகிறார். ‘தலித் முரசு'க்கு இவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி.

சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்: அ. செந்தில் நாராயணன்

உங்களுடைய குடும்பம் மற்றும் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்கள்.

என்னுடைய சொந்த ஊர் வேலூர். என்னுடைய தந்தையின் பூர்வீகம் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள போளூர். என்னுடைய தாயார் வேலூர் கணியம்பாடி பக்கத்தில் உள்ள நெல்வாயில் பகுதியைச் சேர்ந்தவர். நாங்களெல்லாம் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய பெரியப்பா முழு நேர அரசியல்வாதி. ஆர்வலர்களாக அரசியல் வேலை செய்த குடும்பம் எங்கள் குடும்பம். மலேசியாவில் 1930 இலிருந்து 1942 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் என்னுடைய குடும்பம் இருந்தது. அதற்குப் பிறகு சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு, மீண்டும் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். 1974 இல் ஜே.பி.யின் ‘எமர்ஜென்சி'க்கு எதிரான இயக்கத்தில் எங்கள் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர். நான் பள்ளியில் படிக்கிறபோது, அந்த இயக்கத்தில் மாணவர்கள் சார்பில் பணியாற்றியிருக்கிறேன். அதற்குப் பிறகு தீவிரமாக பள்ளிப் பருவத்திலேயே, சோஷலிச, கம்யூனிச இயக்கத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தது.

இதற்கான அறிமுகம் எங்கிருந்து கிடைத்தது?

சமுதாயம்தான் அறிமுகம். நாம் நாள்தோறும் பார்க்கின்ற அநீதிகள்தான் நமக்கு அறிமுகம். என்னுடைய குடும்ப நண்பர்கள் எல்லாருமே அடிமட்டத்தில் வேலை செய்யக்கூடிய அரசியல் ஆர்வலர்களாக இருந்தார்கள். எங்களுக்குத் தலைவர்கள் யாரும் அறிமுகம் கிடையாது. இன்றைய காலகட்டம் வரை, அதே நிலையில்தான் நானும் சென்று கொண்டிருக்கிறேன். கம்யூனிச, சோஷலிச இயக்கத்தில் இருக்கிறவர்கள், காந்திய இயக்கத்தில் இருக்கிறவர்கள் என பல அரசியல்காரர்கள் எங்கள் குடும்பத்தில் வந்து போயிட்டிருப்பாங்க. அதனால்தான் பலரும் விவாதிப்பதை கேட்க முடிந்தது. இன்றைக்குக்கூட வறுமையை பார்க்கக்கூடிய சக்தி எனக்கு இல்லை. வறுமை என்று யாராவது சொன்னால்கூட என் கண்களில் தண்ணீர் வந்துவிடும். சாதாரணமாக, அடிமட்ட மக்களின் வாழ்க்கை நிலை என்னை மிகவும் பாதித்திருக்கிறது. மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் கொள்கை, அறிவுரைகளைவிட முதலில் நம் சமூகத்தில் கண் முன்னால் இருக்கிற வறுமை, கண் முன்னால் நடக்கிற அநீதிகள்... இவைதான் எனக்கு முதல் பாடம்.

நேரடியான சமூக செயல்பாடுகளில் எப்பொழுது ஈடுபட்டீர்கள்?

1987க்குப் பிறகு மனித உரிமைகள் தொடர்பாக நிறைய வேலைகள் செய்தேன். 1987, 90 ஆம் ஆண்டுகளில் ‘சோஷலிஸ்ட் பார்ட்டி' சார்ந்த அமைப்புகளில் இருந்தேன். பிறகு கல்வியியல் ஆலோசகராக, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு நான்கு ஆண்டுகள் உதவியாக இருந்தேன். ஏறக்குறைய 1997 வரையில் அந்த அமைப்புகள் எல்லாம் தீவிரமாக இயங்கி வந்தன. ஆனால், அரசியல் கட்சிகள், இந்த நாட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் அவ்வாறு இருக்கின்ற காரணத்தினால் தான் – அரசியல் கட்சியல்லாத, அரசியல் செய்யக்கூடிய அமைப்புகளை சார்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக ஈழப்பிரச்சனை. மேலும், ஜனநாயக ரீதியான போராட்டங்கள் உலகில் எங்கு நடந்தாலும் அதை ஆதரிப்பவனாக இருக்கிறேன். குறிப்பாக, பர்மாவின் ஜனநாயகப் போராட்டத்தில் நேரடியாகவே பதினைந்து ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். என்.எல்.டி. என்ற ஓர் அமைப்பின் முன்னிலை உறுப்பினர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அரசியல் சார்ந்த உதவிகளை நான் செய்கிறேன்.

ஈழம் தொடர்பான பணிகளை எந்த வகையில் முன்னெடுத்து வருகிறீர்கள்?

முதல் திருப்பு முனை, 1983இல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை. இந்தளவிற்கு தமிழர்கள் பாதிப்புக்குள்ளானது, மனதை உறுத்திக் கொண்டிருந்தது. ஈழப் பிரச்சனைகள் பற்றி 1987லிருந்து என்னுடைய கருத்துக்களை கட்டுரைகளாக எழுதி வந்திருக்கிறேன். தனியாக ஒரு புத்தகம் கூட வெளியிட்டிருக்கிறேன். பிறகு வெகுஜன பத்திரிகைகளில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறேன். 1987இல் ராஜிவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்குப் பிறகு 74 பக்க கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். அதில் இந்திய அமைதிப்படையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தேன். இந்த கட்டுரைக்குப் பிறகு பலவிதமான சங்கடங்களை நேரடியாகவே சந்திக்க வேண்டியிருந்தது.

1994–க்குப் பிறகு நான் ‘புரொடெக்டட் லிஸ்டில்' வந்துவிட்டேன். எனக்கு வரக்கூடிய கடிதங்கள், பார்சல்கள் எல்லாமே இந்திய அரசால் தணிக்கை செய்யப்பட்டன. இன்றைக்குதான் இதை வெளிப்படையாக சொல்கிறேன். மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குப் போக முடியாத ஒரு தடை எனக்கு இருந்தது. அது, ஈழத்துக்காக வந்தது என்று நான் யாரிடமும் சொன்னது இல்லை. 1994இல் அமெரிக்காவின் ‘குயின்ஸ்டன்' மற்றும் யேல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைத்தன. அப்போதும் இந்த ஒரு காரணத்தைச் சொல்லியே அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதுபோன்ற கடுமையான சோதனைகளையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். ஈழ இயக்கத்தின் சார்பாக வேலை செய்கிறேன் என்று என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கல்வி சார்ந்து இயங்கும் பல்கலைக் கழக அமைப்புகள், ஆராய்ச்சிக் கூட அமைப்புகள்கூட ஜனநாயக ரீதியில் செயல்படுவதில்லை. நாளைக்கு உங்கள் மீது என்ன வேண்டுமானாலும் பழி சொல்வார்கள். ரொம்ப சாதாரணமாக சொல்லக் கூடியவை, ‘நீங்க இயக்கங்களுக்காக வேலை செய்கிறீர்கள். நீங்கள் தேசத்திற்கு எதிராக வேலை செய்கிறீர்கள்' என்பவை.

அந்த மூன்று ஆண்டு காலத்தில் எனக்கு பல்கலைக்கழகத்தில் எந்த வாய்ப்புகளும் கொடுக்காமல் மறுத்தே வந்தனர். 2000 ஆண்டு வரையிலும் தொடர்ந்து இதுபோன்ற அழுத்தங்கள் இருந்தன. நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து கொண்டே இருப்போம். நாம் ஈழத்திற்காக மட்டும் போராடவில்லை. ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுகிறோம். இதனால் தனிப்பட்ட யாரும் நம்மை தண்டிக்கிறார்கள் என்று நினைக்கத் தேவை இல்லை. நாம் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்வோம் என்றே கருதுகிறேன். அதனால் இது எனக்கு ஒரு பெரிய காயமாகவும் தெரியவில்லை. மேலும், இதற்காக என்னுடைய நிலைப்பாட்டை நான் என்றைக்குமே மாற்றிக் கொண்டதில்லை. ஈழ மக்களின் உரிமைக்காகவும், ஈழச் சுதந்திரத்திற்காகவும், மொத்தமாகச் சொன்னால், ஈழ மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வேண்டும் என்ற இந்தக் கருத்தை நான் என்றைக்குமே மாற்றிக் கொண்டதில்லை.

உங்களுடைய சக பணியாளர்கள் இதை எப்படி எடுத்துக் கொண்டார்கள்?

என்னுடைய கருத்து என்னவென்றால், நாம் தமிழனாக இருந்து மட்டும் இதைப் பேச வேண்டிய அவசியமில்லை. இது எல்லாரும் பேச வேண்டிய ஒன்று. நம்முடைய உரிமைகளைப் பற்றி பேசும்போது, மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நம்முடைய உரிமைகளைப் பற்றி பேசும்போது, நம்மைப் போல எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1987க்குப் பிறகு 22 ஆண்டுகளாக இலங்கை பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருகிறேன். நான் திபெத் இயக்கத்திலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்; பர்மா இயக்கத்திலும் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்.

என்னைப் பொருத்தவரையிலும் பர்மா, திபெத் பிரச்சினைகளில் எத்தகைய ஈடுபாட்டுடன் செயல்படுகின்றேனோ, அதேதான் ஈழத்திலும். இன்னும் சொல்லப் போனால் இது கண்ணீர் கலந்த ஒரு போராட்டம். அங்கு சிந்தனை ரீதியில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இது மனரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இருக்கிறது. நீங்கள் ஒரு பர்மியராகவோ, ஈழத் தமிழனாகவோ, திபெத்தியராகவோ இருக்க வேண்டியதே இல்லை. அந்த மக்களுக்காகப் போராட வேண்டும். அதுதான் அடிப்படை! எங்கெல்லாம் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறதோ, நான் அந்த இனமாகத்தான் உணர்கிறேன்.

என்னைப் பொருத்தவரையில் யாராவது என்னைப் பார்த்து ‘நீ தமிழனா?' என்று கேட்டால் முதல் நிலையில் ‘ஆமாம்' என்றும் அடுத்த நிலையில் ‘எங்கெல்லாம் யாருடைய உரிமைகள் பறிக்கப்படுகிறதோ, அந்த இனத்தைச் சேர்ந்தவன் நான்' என்றும் கூறுவேன். அது எந்த இனமாக இருந்தாலும் தாழ்வில்லை. உலகத்தில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நாம் போராட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் ஈழ மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்களில் எந்த அளவுக்கு திபெத், பர்மிய மக்கள் போராடினார்களோ, அவர்களுக்குக் கிடைத்த இடம் கூட, தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை கண்கூடாகப் பார்த்தேன்.

எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

ஜனநாயக ரீதியாக ஒரு நூறு திபெத்தியர் வந்து போராட இடம் கேட்டார்கள் என்றால், அவர்களுக்கு எப்பொழுதுமே அது மறுக்கப்பட்டதில்லை; பர்மியர்களுக்காகப் போராடினால், அதற்கு ஓர் இடம் கிடைத்தது. ஆனால் ஈழப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவர்களுக்கு, இங்கு இடமே ஒதுக்கப்படவில்லை.

அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

நமக்கு பலவிதமான சூழ்நிலை. ஒன்று, அவர்கள் வெளிப்படையாக சொல்லக்கூடிய இலங்கை இறையாண்மை மற்றும் இந்திய இறையாண்மை. இரண்டாவது, ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நிலை, தவறான கருத்துகள் பரவலாக அரசு எந்திரங்கள் மற்றும் உளவு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அது என்னவென்றால், தமிழ் ஈழ மக்களுக்காகப் பேசப்படுகின்ற எல்லா குரல்களுமே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குரலாக இருக்கிறது என்றொரு தோற்றத்தை உண்டாக்கியதுதான்.

ஈழப்போராட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுபவர்கள், இதை விடுதலைப் புலிகள் சார்பாக மட்டுமே முன்னெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

இல்லை, அப்படி இல்லை. என்னைப் பொருத்தவரையிலும் இந்த நான்காவது ஈழப் போரின் இறுதி நேரத்தில் எத்தனையோ இயக்கங்கள், புலிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் என்ன பேசுகிறார்கள் என்றால், நாங்கள் புலிகள் இயக்கத்தில் இல்லை என்றாலும் எங்களுக்காகப் பேசக்கூடிய ஓர் அமைப்பு புலிகள் அமைப்பாக இருக்கிறது என்கிறார்கள். புலிகள் இயக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம்; இல்லை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் புலிகள் பேசியதை நீங்கள் மறுக்க முடியாது. அதுதான் ஓர் அரசியல் நிலை; முக்கியமான ஒரு கருத்து. மற்ற கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம். அவர்களுடைய அரசியல் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், புலிகள் பேசிய அடிப்படைக் கருத்துகள் – ஈழத்தமிழர்களின் உரிமை, ஈழத்தமிழர்களின் வாழ்நிலை, ஈழத்தமிழர்களின் எதிர்காலம். இதில் எந்த மாற்றுக் கருத்துகளும் இருக்க முடியாது. இந்த நிலைப்பாட்டில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ஒரு மாற்றுக் கருத்து இருந்ததால்தான் புலிகளை மய்யப்படுத்தி, ஒரு ஜனநாயக ரீதியான கருத்து உருவாகாமல் தடுத்து விட்டார்கள்.

இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட தீர்வுதான் சாத்தியம் என்று இந்திய அரசு ஓயாமல் சொல்கிறது. அப்படியான ஒரு தீர்வு சாத்தியமா?

இறையாண்மை என்பது, முடியாட்சி மற்றும் முடியாட்சியிலிருந்து மக்களாட்சிக்கு அரசமைப்புகள் மாறி வருகின்ற நிலையில் ஏற்பட்ட ஒரு சிந்தனை. இறையாண்மை என்ற கொள்கைகூட, மக்களை சார்ந்துதான் இருக்க முடியும். மக்களின் இணக்கம்தான் ஓர் அரசுக்கு அடிப்படை. இந்த இறையாண்மை என்பது அரசமைப்புகள் உருவாக்கப்பட்ட பிறகு, மக்களிடமிருந்து வெகுதொலைவில் சென்றுவிட்டது. இறையாண்மையை மக்களிடமிருந்து விலக்கியே பார்த்து, அரசுக்கு மட்டும்தான் இறையாண்மை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது நவீன அரசமைப்புகளின் கருத்து. கடந்த இரு நூற்றாண்டுகளாக ஏற்பட்ட மாற்றம்.

இறையாண்மை என்பதன் உண்மையான கருத்து என்னவென்றால், மக்களின் இணக்கம், மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசமைப்புகளுக்கு மட்டுமே இறையாண்மை உண்டு என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கருத்தாகும். எந்த ஓர் அரசும் மக்களுக்காக செயல்படாமல் அதற்கு முரணாக, மக்களுக்கு எதிராக செயல்படும்போது அல்லது மக்களை வேறுபடுத்திப் பார்க்கும்போது, அந்த மக்களின் இணக்கம் என்று ஒன்று இல்லாத போது, இறையாண்மை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

ஏறக்குறைய 60 ஆண்டு காலமாக அல்லது வரலாற்றுப் பூர்வமாகப் பார்த்தால், ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள், ஏகாதிபத்தியத்திற்கு முன்னால் ஈழம் என்பது தனி அரசாட்சிப் பகுதி ஆகும். ஈழத்தின் வரலாற்றுச் சான்றுகளோடு பார்க்கும் போது, ஈழம் என்பது ஒரு நிறைவான பகுதியாகும். ஈழத்தின் இறையாண்மை என்பது, இலங்கை சிங்கள அரசுடன் சேரும்போது, ஈழத்தின் இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளது அல்லது புதைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலகட்டத்திற்குப் பிறகு, ஈழத்தின் இறையாண்மை மற்றும் சிங்கள அரசின் இறையாண்மை என்று இரண்டாக பார்த்திருக்க வேண்டியது ஒரு கட்டாயமாகும். ஆனால், ஆங்கிலேய ஆட்சியில் ஈழத்தின் இறையாண்மையை புதைக்கப்பட்ட ஒரு நிலையிலேயே விட்டுச் சென்று விட்டனர்.

அதன்பிறகு சிங்கள அரசும், சிங்கள ஆட்சியாளர்களும் ஈழத்தின் இறையாண்மையை வரலாற்றுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஈழத்தின் இறையாண்மை, ஈழத்தின் அரசமைப்பு என்பதைவிட, தமிழ் ஈழ மக்களின் இறையாண்மை என்பதைத் தான் நான் தெளிவாக சிந்தித்துள்ளேன். ஏனெனில், ஈழப் பகுதி என்பது வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் மட்டுமில்லாமல் பண்பாட்டு ரீதியாகவும் ஈழத்திற்கு இறையாண்மை உண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழ் மக்களையும் இந்தியாவிலிருந்து சென்ற தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு என யாரையும் இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதற்கான சான்றுகள் இல்லை. அதனால் இலங்கையின் இறையாண்மையை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டாக, தோட்டத் தொழிலாளர்கள் பற்றிப் பேசும் போது 150, 200 ஆண்டுகளாக இந்த நாட்டில் அவர்கள் வேலை செய்தார்கள். ஆப்பிரிக்க கறுப்பர்கள் பட்ட துன்பங்களைவிட அதிகமாகவும் தமிழ் மக்கள் தலையில் கல் சுமந்து யாழ்ப்பாணத்திலிருந்து நடந்து சென்றதாக வரலாறு உண்டு. கண்டி வழியாக நடந்ததாகவும் வரலாறு உண்டு. இது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்றைக்குக் கூட தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு துயரமான சம்பவம் என்னவென்றால், தோட்டத் தொழிலாளர்கள் யாரேனும் இறந்து விட்டால், அவர்களைப் புதைப்பதற்குக்கூட அவர்களுக்கு கல்லறைகள் கிடையாது. அந்தத் தோட்டத்திலேயேதான் பிணத்தை வீச வேண்டும்.

200 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இந்த மக்களை இந்த சமூகம் மதிக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும் ஒரு மனிதன், உலகளாவிய சட்ட ரீதியாக, எந்த நாட்டிலும் குடியுரிமை பெற்றுள்ளான். இது, எவராலும் மறுக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமை. ஆனால் அதே நிலையில் இருந்து பார்க்கும்போது இங்கிருந்தோ, இந்தியாவிலிருந்தோ, எந்த நாட்டிலிருந்தோ குறிப்பாக தெற்காசியாவிலிருந்து மிக அதிகமான மக்கள் அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளுக்குச் சென்று 2 ஆண்டுகள், 5 ஆண்டுகள் இருந்து ‘கிரீன் கார்டு' பெறுவதிலிருந்து பிறகு அதற்கடுத்ததாக குடியுரிமை பெறுவதுவரை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாக இருக்கிறது.

நாற்பது, அய்ம்பது ஆண்டுகாலம் வாழ்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியும் எனில், 200 ஆண்டுகளாகப் போராடி, அந்த நாட்டுக்காக தன்னுடைய உயிர், பொருள், வாழ்க்கை மற்றும் எல்லாவற்றையும் ஈந்த இந்த மக்களுக்கு – குடியுரிமை கூட வழங்கப்படவில்லை என்றால், எந்த நிலையில் அந்நாட்டின் இறையாண்மையை ஏற்றுக் கொள்வது?

அடுத்ததாக, ஈழ மக்களை ஒரு சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தும், கடந்தும் ஈழத்தின் பண்பாடு உள்ளது. இந்த உண்மையை சிங்களர்கள் ஒட்டுமொத்தமாக மறைக்கிறார்கள். ஈழத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாததாலும், அம்மக்களின் பண்பாட்டு மரபையே ஏற்றுக் கொள்ளாததாலும் சிங்களர்கள் மற்றும் அவர்களுடைய அமைப்புகள் சுதந்திரத்திற்குப் பிறகு இதைப் புதைத்ததோடு மட்டுமின்றி, மொத்தமாக இதை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழர்களின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் செயல்படும் நிலையில், ஈழ மக்களின் இறையாண்மையைப் பற்றிப் பேசுவது நமது இன்றியமையாத கடமையாகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குச் சென்று வந்தீர்கள் என்றால், இறையாண்மைக்கான காரணங்கள் புரியும். இறையாண்மை என்பது, ஒரு பெரிய அரசு முத்திரையோ அல்லது ஒரு குறியீடு உள்ள பத்திரமோ அல்ல. மக்களால் இந்த அரசு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடிப்படையாக அந்த இணக்கம் எந்த சமூகத்தில் இல்லையோ, அந்த சமூகத்தில் இறையாண்மை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விஷயமாகிறது. அவ்வாறு ஒரு மக்கள் சமூகம் ஓர் அரசின் கீழ் இணைந்து வாழ்வதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாத நிலையில், அந்த அரசினை ஏற்றுக்கொள்ள இயலாத அச்சமூகம் – தனக்கே உரிய தனித்துவமான ஒரு சமூக அமைப்பினை உருவாக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாக இருந்தால் – தனக்குரிய தனித்துவமான இறையாண்மைக்கான அடையாளங்களை கண்டுபிடிக்கும் எனில், அந்த மக்கள் சமூகம் அந்த இறையாண்மையைத் தேட உரிமை உண்டு. அதன் அடிப்படையில் தான் ஈழத்தின் இறையாண்மையை நாம் தேட வேண்டும். ஈழத்தின் இறையாண்மையை நாம் உணர்ந்து, அதை வெளிக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

– பேட்டி அடுத்த இதழிலும்

Pin It