Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

‘திராவிட’ எதிர்ப்பு என்ற குரல் பெரியாருக்கு எதிராக மீண்டும் சில மேடைகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பெரியார் ‘திராவிடர்’ என்ற குறிப்புச் சொல்லை பயன்படுத்த நேர்ந்ததை விளக்குகிறார், இக்கட்டுரையில்! கன்னட, மலையாளிகள் சுயமரியாதை உணர்வற்றவர்கள் என்று கூறும் பெரியார், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயரில்லாததால், தமக்கு நேர்ந்த மனத் துயரையும் சுட்டிக் காட்டுகிறார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்களை முன் வைப்போருக்கு, இந்த அறிக்கை உரிய பதிலைத் தருகிறது.

"நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.

மூன்றாவது - இவர்கள் இருநாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். 1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வட ஆர்க்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. ராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை 12. தென்னார்க்காடு, 13. தென் கன்னடம், 14. மலபார். அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை, மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனி நாடாக ஆகிவிட்டால் - நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன். நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும், மொழியினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரம்தான்.

நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்தால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும், திராவிடன் என்று சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.

இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இப்போது மற்றொரு மாபெருந் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றியிருக்கிறது. அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் - மேல் சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். “நம்நாடு எது நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்."

- பெரியார், ‘விடுதலை’ 12.10.55
கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Dr. V. Pandian 2009-11-14 12:33
பெரியார் மீது குறையேதும் சொல்ல முடியாது. அன்றிருந்த பார்ப்பன ஆதிக்கத்தையும், அன்றிருந்த சென்னை மாகான நிலத்தின் அடிப்படையையும் வைத்து அவர் திராவிடன் என்ற அடையாளத்தைக் கையாண்டார். அதில் தவறேதும் இல்லை!

ஆனால், திராவிடன் என்ற அடையாளம் ஒட்டுமொத்த திராவிட இனத்தை மீட்டிருந்தாலும ், தமிழர்களை அது வஞ்சித்திருக்கி றது என்பது உண்மை. பெரியாரே கர்நாடக, ஆந்திர, கேரள திராவிடர்களும் தங்களைத் தமிழராக உணரவேண்டும் என்றும், சமஸ்கிருதம் கலந்த அந்த மொழிகளைக் கைவிட்டு, தமிழையே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டதாக அறிகிறேன்.

எனவே, தமிழ் நாட்டில் பன்னூறு காலமாக வாழும் இம்மக்கள் தமிழ் மக்களே. அதோடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வாழும் அம்மக்கள் தங்களை கன்னடராகவோ, தெலுங்கராகவோ, மலையாளியாகவோ உணரும் பட்சத்தில், தமிழ் நாட்டிலும் நாம் திராவிடன் என்ற சொல்லாட்சியைக் முற்றாகக் கைவிட்டு, தமிழர் என்று மட்டும் இனி உணர்வோம்.

தமிழரின் மீட்சிக்கு அது இன்றியமையாதது!
Report to administrator
0 #2 karuvai murugu 2010-05-10 11:34
vaalumidamengum vanjakarkalin sooltchiyaal vurimaiylanthu allalpadum tamilargalai meendum meendum kotchai padithateerkal! nangal tamilargal dhiravidargal alla. saathikalaimara nthu tamilargal Tamil ina vunarvu petru elutchi perum velaiyil inthiyathaiyum, dhiravidathaiyu m katti yengalai malungadikka vendam. vungalukku melum vilakkam vendum endral varalatrin iyangiyal matrangalai aaivu seiyungal, illavidin aaivu seiyappatta palveru puthagangalai padithu thelivu perungal, periyariyalai mattum vaithukondu tamilinam viduthalai kana mudiyathu.
Report to administrator

Add comment


Security code
Refresh