ஜார்ஜ் ஜோசப் - ‘குடிஅரசு’ ஏட்டில் ‘காந்தியின் இராம ராஜியம்’ எனும் தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். அவருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. அந்தக் கடிதங்களை ஜார்ஜ் ஜோசப் துணைவியார் காவல்துறையிடம் கொடுத்ததாக ஏடுகளில் வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து, பெரியார் ‘குடிஅரசில்’ ஒரு தலையங்கம் தீட்டினார். பெரியார் இயக்கத்தில் வாரிசுரிமையை நுழைத்துள்ள வீரமணிக்கு பதிலாகவே பெரியாரின் தலையங்கம் அமைந்துள்ளது. நீண்ட தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.

எந்த மனிதனாவது தனது லட்சியத்தைப் பிரதானமாய்க் கருதி அதற்கே உழைத்துத் தீர வேண்டுமென்று முடிவு கட்டிக் கொண்டு இருப்பானேயானால் அவன் அதற்காக உயிரை இழக்க நேருவது தான் அவனது லட்சியத்தில் அவனுக்குள்ள உறுதியையும் அவன் அடைய வேண்டிய வெற்றியையும் காட்டுவதாகும். அதோடு அந்த லக்ஷியத்திற்கும் அவன் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துவிட்டதான தனது கடமையையும் நிறைவேற்றியதாகும். அன்றியும் லக்ஷியக்காரன் உயிருடன் இருந்து லக்ஷியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பதில் எவ்வளவு பயன் ஏற்படுமோ அதைவிட கண்டிப்பாய் பல மடங்கதிகமான பலனும் ஏற்படக்கூடும். அறிவாளிகளின் வேலையும் அதுவேயாகும். ஆதலால் சாவுக்கு பயந்து யாரும் தங்கள் லக்ஷியங்களின் வேகத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இதை எழுதினோம்.

தவிர, “நான் செத்துப் போனால் என் பெண்டு பிள்ளை என்ன கதியாகும்?” என்கின்ற ஒரு மனப்பான்மைதான் இந்தியர்களை சுயமரியாதையற்ற கோழைகளாகச் செய்து கொண்டு வந்திருக்கின்றது. இந்த மனப்பான்மை இந்தியாவில் தான் அதிகம் உண்டு. சௌகரியமிருப்பவன் இம்மாதிரி காரியங்களில் பிரவேசிக்கும்போதே பெண்டு பிள்ளைகளது உயிர் வாழ்க்கைக்கு ஏதாவது செய்துவிட வேண்டியது அறிவுடைமையாகும். சௌகரியமில்லாதவன் அதற்காகவே உயிர்வாழ வேண்டும் என்று கருதுவானேயானால் அப்படிப்பட்டவன் தயவுசெய்து இம்மாதிரியான பொது நல காரியங்களில் பிரவேசிக்காமல் இருப்பதே நலமாகும். ஏனெனில், இம் மாதிரி லட்சியக்காரர்களாலேயே அதாவது “பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற இருக்கின்றோம், அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது லக்ஷியம் அல்லது கடமை” என்று கருதிக் கொண்டிருக்கிறவர்கள் பொதுக் காரியங்களில் பிரவேசிப்பதாலேயே உண்மையான லட்சியங்கள் - பொதுக் காரியங்கள் பாழாகின்றன அன்றியும் அவர்களுடைய பொதுநல சேவையும் நாணயக் குறைவானது - ஹம்பக்கானதும் என்று கருதப்பட வேண்டியதுமாகி விடுகின்றன. ஆகையால் அதைப்பற்றி யாரும் கவலைப்படக் கூடாது.

நிற்க இந்தப்படி நாம் எழுதுவதில் லக்ஷியத்திற்காக ஒருவனை சாகடிப்பது அல்லது ஒருவன் சாவது என்கின்ற இரண்டு காரியங்களையும் நாம் ஒன்றாகவே கருதி இருப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். சுயமரியாதை இயக்கத்தைப் பொறுத்த வரையில் அதன் லக்ஷியம் நிறைவேற ஒருவனை சாகடிப்பதைவிட லட்சியத்தின் எதிரி ஒருவனால் சாவதே மேல் என்று தான் இன்று கருதுகின்றோம். ஏனெனில் செத்தவனை இருவரும் போற்றுவார்கள். செத்தவனிடத்தில் இரு கூட்டத்தாரும் அனுதாபம் காட்டுவார்கள். அதன் மூலம் லட்சியத்திற்கு ஆக்கம் ஏற்படும். சாகடித்தவனை ஒரு கூட்டம் தான் போற்றலாம். அதுவும் தைரியமாய் வெளிப்படையாய் போற்ற மாட்டார்கள். அதிலிருந்தே எதிர்ப்பின் ஆக்கமும் குன்றலாம். அதுவும் தவிர கொல்லுபவன் ஒளிந்திருந்து பயந்து வேலை செய்ய வேண்டும். கொல்லப்படுபவன் தைரியமாய் வெளிப்படையாய் இருந்து உயிர் கொடுக்கலாம். மற்றும் சில நன்மைகள் உண்டு. ஆதலால் சாவுக்கு துணிந்து லட்சியங்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டியது உண்மை லட்சியக்கார மனிதனின் கடமை என்பதை வலியுறுத்துகின்றோம்.

- ‘குடிஅரசு’ 30.8.1931

Pin It