புலன்களுக்கு அப்பாற்பட்ட
ஏதோ ஒரு உணர்வுக்குள்
அவன் அவளைப் புதைத்த
நினைவுகள் நெளிகின்றன

இனி ஏதும் சொல்வதற்கில்லை
என்பதாய்
அந்நிகழ்வைப் பற்றி
சாட்சியம் சொல்லும்
அந்த இரவில் தான் அது நிகழ்ந்தது

இருளும்
அதை சார்ந்த தூக்கமுமாய்
தென்றல் ஒன்றை வருடியவாறு
கடற்க்கரை படுத்திருந்தது

ஒவ்வொரு மரணத்தின் பிறகான
வாழ்வை
தலைமேல் சுமந்து வந்து
அந்த கடற்கரையின்
மார்பில் கொட்டிக்கொண்டிருந்தது
அலைகள்

அவை
அள்ளி வீசிய ஈரத்தில்
பற்றிக் கொண்டது
கோபத்தின் தீப்பொறி ஓன்று.

அது
பிரபஞ்சத்தை
இரண்டாகக் கிழித்து
கடந்து போனது

முட்டாள்களின் கடல்
எந்தக் காரணமுமின்றி
ஒரு படையின் ஆரவாரத்தை
இப்பொழுதும்
தொடர்கிறது

புலன்களுக்கு அப்பாற்பட்ட
ஒரு உணர்வில்
கடற்கரையெங்கும்
சிதறிக் கிடக்கிறது
அவள் நினைவுகள்

- கலாசுரன்

Pin It