இராஜராஜ சோழன் காலம் வரையில் கோயில்கள் மிகவும் சிறிய அளவிலேயே கட்டப்பட்டன. கற்கோயிலாக அமைந்தவை சுமார் 30 அடி உயரமே எழுந்தன. சில கோயில்களின் விமானங்கள் பிரஸ் தரத்திற்கு (தோள் பகுதிக்கு) மேல் செங்கற்களால் கட்டப் பட்டன. மேல் தளங்கள் செங்கல்லால் கட்டப்பட்ட கோயில்கள் சற்று அதிக உயரமாக இருந்த போதிலும் 60 அடிக்கு மேல் எந்த கோயிலும் கட்டப்படவில்லை. (தி.வை. சதாசிவ பண்டாரத்தார் பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியீடு, சென்னை, 2008, ப. எண்.115) 

      இராஜராஜன் அரியணை ஏறிய பின்னரும் இது போன்ற எளிய, அதிக உயரமற்ற கோயில்களே பல இடங்களில் கட்டப் பட்டன. அவ்வகையிலே தமிழ கத்தின் 216 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விமானத்தை உடைய இத்தஞ்சைப் பெருங்கோயில் கட்டுமானத்தை இராஜ ராஜர் கி.பி. 1003 ல் தான் தொடங்கி இருக்கிறார். 

      முதலாம் இராஜராஜர் எடுப்பித்த கலைக் கோயில்களுள் தஞ்சைப் பெருங்கோயிலே தலையாய தாகக் கருதப்படுகிறது. தமி ழரின் கம்பீரத்திற்கு (ஒட்டு மொத்த) சான்றாய் நெடி துயர்ந்து நிற்கும் இக் கோயில் ஒரு காலப் பெட்டகம். கல்வெட்டு கள் பலவற்றை தன்ன கத்தே கொண்ட வர லாற்றுக் கருவூலம். ஆயிரம் வருடங்களாய் தன்னைக் காணும் மனிதர்களையெல்லாம் வியக்க வைக்கும் ஒரு கலைப் பெட்டகம். இக்கோயிலை எழுப்பியது மாமன்னன் இராஜராஜனே என்பதை அக்கோயில் கல்வெட்டே “தஞ்சாவூர் நாம் எடுப்பிச்சருளின திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” என எடுத்துக் கூறி சான்று பகர்கிறது. 

      இக்கோயிலின் விமானம் ‘தட்சிண மேரு’ என்றும் ‘தென்னாட்டு இமயம்’ என்றும் அழைக்கப் படுகிறது. இக்கோயில் கருவறையுள் மிகப் பெரிய இலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ள இறைத் திருமேனியை இராஜராஜேச்சுரமுடைய பரமசாமி, இராஜராஜேச்சுரமுடையார், தக்கண மேரு விடங்கர் என்றெல்லாம் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. 

      இராஜராஜ சோழரின் 25ஆம் ஆட்சியாண்டு 275 ஆம் நாளில் வெட்டப்பட்ட கல்வெட்டு இத்தஞ்சை பெருங்கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவுற்றதைக் கூறுகிறது. 

இக்கல்வெட்டில்... 

“யாண்டு இருபத்தைஞ்சாவது நாள் இருநூற்றெழு பத்தைஞ்சினால் உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் ஸ்ரீ இராஜராஜேச்சுரமுடையார் ஸ்ரீ விமானத்து செம்பின் ஸ்தூபித்தறியில் வைக்க குடுத்த செப்புக் குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கின தகடு பல பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை இரண்டா யிரத்து தொள்ளாயிரத்து இருபத்தறு கழஞ் சரை” என்றுள்ளது. 

      இவ்வரிகளால் இராஜராஜன் தன் 25 ஆம் ஆட்சியாண்டில் 275ஆம் நாளில் ஸ்ரீ விமானத்து ஸ்தூ பித்தறியில் வைப்பதற்குச் செப்புக் குடம் கொடுத்துள்ளமை தெரிய வருகிறது. இந்நாள் கி.பி.1010 ஏப்ரல் 22ஆம் நாளாகும். இந்நாளில் தான் கோயிலுக்கு முதல் குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். 

      தஞ்சைப் பெருங்கோயிலின் கட்டுமானப் பணிகள் கி.பி. 1003 ஆம் ஆட்சியாண்டின் 275-ஆவது நாளில் தான் முடிவடைந்திருக்கிறது என்றாலும், கி.பி.1006 லேயே மாமன்னன் இராஜராஜன் சாளுக்கிய அரசனான ‘சத்யாஸரயன்’ என்ப வனை போரில் தோற்கடிகத்துத் திரும்பி வந்தவுடன் இக்கோயில் கருவறைத் தேவரை, பொன் மலர்களை வைத்து வழிபட்டதாக வரலாற்று அறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். (சோழர்கள் புத்தகம் 1, தமிழாக்கம் கே.வி.ராமன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007, ப. 291) 

      அக்காலத்தில் புவனேஸ் வரத்தில் புகழ்பெற்று விளங்கிய 160 அடி உயர லிங்கராஜர் கோயிலை விட பெரிய கோயிலாக தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டினார் பெரு வேந்தர் இராஜராஜர். இப்பெருங் கோயில் 793 அடி நீளமும், 397 அடி அகலமும் உடையதாகும். 

      15 தளங்களுடன் எழுப்பப் பட்டுள்ள இக்கோயில் விமானம் 216 அடி உயரத்தை உடையது. இவ் விமான உப பீடத்தின் உயரம் ஆறு அடியாகும். அதன் மேலுள்ள அதிட்டானம் 8 அடியாகும். இந்த அதிட்டானம் பிரதி பந்த வகையைச் சார்ந்தது. அதிட்டானத்திற்கு மே லுள்ள சுவர் பகுதி கர்ண கூடம் - பஞ்சரம் - சாலை - பஞ்சரம் - கர்ணகூடம் என்ற அமைப்பில் ஐந்து பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

      இந்த ஐந்து பத்திகளுள் சாலைப்பத்திகள் மூன்று திசை களிலும் (தெற்கு, மேற்கு, வடக்கு) நுழைவாயில்களாக காட்டப்பட்டிருக்கின்றன. கர்ண பத்திகளில் உள்ள தேவ கோட்ட மாடங்களில் பிச்சா டனார், ஹரிஹரர், அம்மையப்பர், நடராசர், ஆலிங்கனர், உமாசகிதர் சிற்பங்களும், பஞ்சரப்பத்தியில் வீரபத்திரர், லிங்கோத்பவர், கங் காதரர், காலகால மூர்த்தி, சந்திர சேகரர் சிற்பங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. 

      பொதுவாக எல்லாக் கோயில் கட்டுமானங்களிலும் ஆதி தளம் முடிந்து முதல் தளம் தொடங்கும் அதன் சுற்றளவு சிறிது குறையும். ஆதி தளத்தை விட முதல் தளத்தின் உயரம் சிறிது குறைந்தே காணப்படும். 

      ஆனால் வேறு எங்கும் காண முடியாத கட்டுமான அதிசயமாக தமிழகத்தில் திருக் குரக்குத் துறை எனப்படும் சீனிவாச நல்லூரிலும், தஞ்சை இராஜ ராஜேஸ்வரத்திலும் ஆதி தளத்தின் தொடர்ச்சியாக முதல் தளமும் அதே அளவு உயரத்திலும் அமைந் திருக்கிறது. இக்கோயில் கட்டு மானத்தின் மற்றுமொரு புதுமை சாந்தார பகுதி. சாந்தாரம் என்பது கருவறையின் இரு சுவர்களுக்கு இடைப்பட்டு அமையும் சுற்று வழியே. 

      இந்த வழி மூலம் விமா னத்தின் வெளியே வராமலேயே கருவறையைச் சுற்றி வர முடியும். இராஜராஜர் காலத்தில் இக்கோயில் கருவறைக்கு மேல் கூரை அமைக்கப் படவில்லை. அதாவது கருவறைத் தேவர் இருக்கு மிடத்திலிருந்து மேலே பார்த்தால் சிகரத்தின் அடிப்பாகம் வரை தெரியும். இவ்விமானத்தின் கட்டு மானம் ஆதி தளத்திலே சதுரமாகத் தொடங்கி சிறிது சிறிதாகக் குறுகி, மேலே செல்லச்செல்ல வட்டமாக மாறுவதை, இரண்டாம் தளத்தின் உட்புறமிருந்து நோக்கினால் இன் றளவும் கண்ணுற்று வியக்கலாம். இவ்விமானத்தின் முதல் தளத் திலுள்ள சாந்தார பகுதி ஓவியக் கூடமாகத் திகழ்கிறது. இரண்டாம் தள சாந்தார நாழி சிற்பக் கூடமாகக் காட்டப்பட்டிருக்கிறது. 

      இந்த சாந்தார பகுதியில் சிவனின் 108 தாண்டவ கரணங்களை புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்க முற்பட்டு, 81 சிற்பங்களை மட்டுமே முழுமையாக செதுக்கியுள்ளார்கள். மூன்றாவது தளத்திலிருந்து சாந்தார பகுதி கட்டப்படாமல் இரண்டு சுவர் பகுதிகளும் ஒன்றிணைக் கப்பட்டு உள்ளன. தளவரிசைகளின் மேலே எண்பட்டை வடிவிலான ‘கீரிவம்’ என்னும் விமானத்தின் கழுத்துப் பகுதி காணப்படுகிறது. அதன் மேலே எட்டுப்பட்டையுள்ள திராவிட பாணியிலான சிகரம் அமைந்துள்ளது. (தமிழர் கட்டடக் கலையை திராவிட பாணி கட்டடக் கலை என்று முன்னவர்கள் சொல்லி வந்ததை யொட்டி கட்டுரையாளரும் அப்பெயரைப் பயன்படுத்தியுள்ளார் - ஆசிரியர்) சிகரத்தின் மேலே 12 அடி உயரம் கொண்ட கலசம் (செப்புக் குடம்) அமைக்கப் பட்டுள்ளது. 

      இந்த செப்புக் குடம் 339.55 கிலோகிராம் எடையுள்ள செப் பினால் செய்யப்பட்டு பின்பு தங்க முலாம் பூசப்பட்டது. இக்கோயில் கருவறை, இடைநாழிகை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. இடைநாழிகையின் வட புறத்தே இருக்கும் வாயிலுக்கு ‘அணுக்கன் திருவாயில்’ என்றும் தென்புறத்தே இருக்கும் வாயிலுக்கு ‘விக்ரம சோழன் திருவாயில்’ என்றும் பெயர்கள் நிலவி வருகின்றன. 

      வழிபாட்டுத் தலமாக மட்டு மல்லாமல் கலைப் பெட்டகமாக, பண்பாட்டுச் சிகரமாக, தமிழர் வரலாற்றின் அழுத்தமான பதிவாக, இவை எல்லாவற்றிற்கும் மேலாக அக்கால சமுதாய நடவடிக்கைகளின் மையமாக எழுப்பப்பட்ட இக் கோயில் பாதுகாப்பு கருதி அகழி யால் சூழப்பட்டு வடி வமைக்கப் பட்டுள்ளது. இரண்டு கோபுர வாயில்களைக் கொண்ட இக்கோ யிலின் முதல் கோபுரம், இரண் டாவது கோபுரத்தை விட உயர மானது. கேரளாந்தகன் திருவாசல் (கேரளாந்தகன் என்பது இராஜ ராஜரின் விருதுப் பெயர்களுள் ஒன்று) என்றழைக்கப்படும் முதல் கோபுரம் 29.25 மீட்டர் நீளமும், 17.40 மீட்டர் அகலமும் கொண்டது. இது ஐந்து நிலைகளைக் கொண்டது. இராஜராஜன் திருவாசல் என்ற பெயர் கொண்ட இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. 

      இந்த இரண்டாம் கோபு ரத்தையும், அதை ஒட்டி அமைந் துள்ள இரண்டு அடுக்குகளைக் கொண்ட திருச்சுற்று மாளிகை யையும், இராஜராஜரின் தளபதியான ‘கிருட்டிணன் ராமன்’ என்னும் ‘மும்முடிச் சோழ பிரம்மமாராயன்’ என்பவர் எழுப்பினார். இம்மதில் கிழக்கு மேற்கில் 800 அடி நீளமும், தெற்கு வடக்கில் 400 அடி அகலமும் உடையது. இராஜராஜர் காலத்தில் இக்கோயிலில் நெடிதுயர்ந்து தன்னிகரற்று இருக்கும் விமானம், இரண்டு கோபுரங்கள், திருச்சுற்று மாளிகை, அதிலமைந்துள்ள அக்னி, எமன், நைநுருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன் ஆகிய எண்திசைக் காவலர்களுக்கான ஆலயங்கள் சண்டிகேஸ்வரர் கோயில் ஆகியவை மட்டுமே எழுப்பப் பட்டன. எண்திசை கடவுளர் களுக்கான சிற்றாலயங்களின் கலசங் களை (தூபிக் குடங்களை) இராஜ ராஜதேவரின் தலைமை குருவான ஈசான சிவ பண்டிதர் கொடுத்து இருக்கிறார். மாமன்னர் இராஜ ராஜன், தாம் எழுப்பிய கோயி லுக்குப் பல கொடைகளை அளித்தார். பிறர் இக்கோயிலுக்கு அளித்த அறக்கொடைகளையும், கோயில் கல்வெட்டிலேயே இடம் பெறச் செய்தார். 

      தஞ்சைப் பெருங்கோயில் கல்வெட்டொன்று, 

‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரமுடையாருக்கு நாம் குடுத்தனவும், அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்தில் வெட்டுக’ 

      என இராஜராஜர் ஆணையிட்டதைக் கூறுகிறது. 

      வீர சோழன் குஞ்சரமல்ல பெருந்தச்சன், நித்த வினோத பெருந் தச்சன், கண்டராதித்ய பெருந்தச்சன், குணவன் மதுராந்தகன் பெருந்தச்சன் ஆகியோரை இக்கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டடக் கலை வல்லுநர்களாக இக்கோயில் கல் வெட்டே குறிப்பிடுகிறது. இந்தப் பெருந்தச்சர்களுள் தலைமைத் தச்ச ரான வீரசோழன் குஞ்சரமல்லன் என்பவருக்கு இராஜராஜபெருந் தச்சன் என்ற பட்டமும் இராஜ ராஜனால் வழங்கப்பட்டது என்ற செய்தியிலிருந்து இராஜராஜன் தமது முதன்மை விருது பெயரையே தன் தலைமை தச்சருக்கும் கொடுத்து சிறப்பித்து இருக்கிறார் என்பது தெரிகிறது. 

      இக்கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் கோயில் பாண்டியர் களாலும், முருகர் கோயில் நாயக்கர் களாலும் நடராஜர் சபா மண்டபம் மராட்டிய மன்னராலும் எழுப்பப் பட்டது. தற்போது வழிபாட்டில் இருக்கும் பெரிய நந்தி நாயக்கர் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. 6 மீட்டர் நீளமும், 2.5 மீட்டர் அகலமும் 3.66 மீட்டர் உயரமும் உடைய இந்நந்தி ஒரே கல்லால் ஆனது. பெருவேந்தர் இராஜராஜர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட அழகிய நந்தி தற்போது தெற்கு திருச்சுற்று மாளிகையில் வடக்கு நோக்கி வைக்கப்பட்டுள்ளது. சோழர் கால நந்தி இப்போது வழிபாட்டில் இல்லை. 

      இராசராசன், பெரிய கோயி லில், நாள்தோறும் திருப் பதிகம் பாட 48 பிடாரர்களையும் (ஓது வார்கள்) கொட்டிமத்தளம், உடுக்கை வாசிப்போர் இருவரையும் அமர்த்தி நிவந்தம் வழங்கியுள்ளார். ஆடல் பாடல் கோயில் பணிகள் ஆகிய வற்றை நிகழ்த்த 400 தளிச் சேரிப் பெண்டுகளை அமர்த்தி அவர் களுக்கு நிலம், வீடு, நிவந்தம் செய் துள்ளார். அத்துடன் மெய்க் காவலர்கள், பண்டாரிகள் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் பலரையும் அமர்த்தியுள்ளார். 

      இக்கோயில் விமானம் நாகர கலை பாணியும், திராவிட கலை பாணியும் இணைந்த ஒரு கலப்புக் கலைப் பாணியாய் (மிஸ்ர) மிளிர்கிறது. உபபீடம், தாங்குதளம், மற்றும் அதன் மேல் எழுந்துள்ள 15 அடுக்குகளைக் கொண்ட தள வரிசைகள் ஆகியவை (நான் கரமாக) நாகர பாணியில் அமைந்துள்ளன. அதன் மேல் அமைந்துள்ள விமா னத்தின் கழுத்துப் பகுதியாகிய கிரீவமும், தலைப்பகுதியாகிய சிகரமும் (எண்பட்டை வடிவில்) திராவிட பாணியில் அமைந் துள்ளன. 

      இக் கோயில் விமானத்தின் வடபுற மூன்றாவது தளத்திற்கு மேலுள்ள வட்ட பிரபாவளியில் ஓர் அயல் நாட்டவரின் உருவம் தொப்பித் தலையுடனும், நவீன உடையுடனும் செதுக்கப்பட்டி ருக்கிறது. இது இரகுநாத நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. ‘ஒரிஸண்ட்’ என்ற டேனிஷ் கப்பல் தலைவரான ‘ரோலண்ட் கிரேப்’ என்பவருக்காக இச்சிற்பம் அப் போது செதுக்கப்பட்டது. 

      இக்கோயில் விமான சாந்தார பகுதியில் உள்ள ஓவியங்களும், நாட்டிய தாண்டவ சிற்பங்களும் தமிழகக் கலை வரலாற்றின் அழுத்த மான பதிவுகள். தமிழகத்தில் வேறு எந்த கோயிலையும் விட மிக நீளமான மற்றும் ஆழமான வர லாற்றுச் செய்திகளை உடைய கல்வெட்டுக்களை நாம் தஞ்சை இராஜராஜேஸ்வரத்தில் காணலாம். 

      இக்கோயிலில் உள்ள நீளமான கல்வெட்டிற்கு 55.78 மீட்டர் நீளமும் 73 வரிகளும் கொண்ட தளிச்சேரிக் கல்வெட்டே எடுத்துக்காட்டு. 

      தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களைக் கொண்டது இக்கோயில்தான். கட்டப்பட்ட காலத்துக் கோபுரங்களோடு இன்று வரை திகழும் முதல் சோழர் கோயிலும் இதுதான். 

      இப்படிப் பல கட்டுமானச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண் டிருக்கும் இக்கோயிலைச் செம்மை யாகப் பாதுகாக்கும் பொறுப்பும், இந்த கலைக் கோயில் கூறும் ஆயிரம் ஆண்டு கால தமிழரின் அரசியல், பொருளியல், கலை, பண்பாட்டு, வரலாற்றுச் செய்திகளை முழுமை யாக உணர்ந்து பாதுகாக்கும் பொறுப்பும் தமிழர்களுக்கு இருக்கிறது. 

சான்றுகள் : 

1. தி.வை. சதாசிவ பண்டாரத்தார் பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியீடு, சென்னை, 2008. 

2. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சோழர்கள் புத்தகம் 1 (தமிழாக்கம் கே.வி.ராமன்) நியூ செஞ்சுரி புக் ஹ வுஸ், சென்னை, 2007) 

3. ttp://www.varalaaru.com/Default.aspp articleid=98 

4. வே. மகாதேவன், சிவபாத சேரகனின் தஞ்சை கல் வெட்டுக்கள், ஸ்ரீசங்கரா மேனி லைப்பள்ளி வெளியீடு, அடையாறு, 1985ப.5. 

5. http://www.varalaaru.com/Default/aspparticleid=112

Pin It