நேற்று இருந்தவர் இன்று இல்லை எனும் பெருமை உடையது இவ்வுலகம் எனவே ஒருவரது வாழ்வுதான் அவரது மரணத்திற்குக் கௌரவத்தைத் தருகிறது. அதனால்தான் சுயநலவாதியின் மரணம், இறகை விட லேசானது; ஆனால், மக்களுக்காக மடிபவரது மரணம், மலையைவிடப் பெரியது எனத் தோழர் மாவோ குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ஒரு மரணம் 2009 அக்டோபர் எட்டாம் நாள் நிகழ்ந்தது‡ அன்று தான் மனித உரிமைப் போராளி பாலகோபால் போராடுவதை நிறுத்திக் கொண்டார்.

இந்தியத் துணைக் கண்ட மனித உரிமைப் போராட்ட வரலாற்றில், புதிய சிகரங்களை எட்டியவர் பாலகோபால். உரிமைப் போராட்டங்களின் பரிமாணங்களை அனைத்துத் துறைகளுக்கும் விரிவாக்கியவர். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்பற்று தன்னெழுச்சியாக நடைபெற்று வந்த இத்தகைய போராட்டங்களை இழை அறுபடாத ஒரு வரலாற்றுப் போக்காக உருமாற்றியவர் அவர். மனித உரிமைச் செயல்பாடு என்பது ஏதோ ஒரு சில அறிவு ஜீவிகள் தொடர்பானது; நகர் சார்ந்த ஒரு விவாத அரங்கு என்பது போன்ற பிம்பங்களைத் தகர்த்தெறிந்து, அது வீதியில் மக்களோடு நின்று வென்றெடுக்கப்பட வேண்டிய போர்முறை எனப் பிரகடனப்படுத்தினார்.

1952 ஆம் ஆண்டு ஆந்திரத்தில் பிறந்த பாலகோபால், அவரது தந்தையார் பல்வேறு இடங்களுக்குப் பணி மாறுதல் செய்யப்பட்டதால், நெல்லூர்‡ஸ்ரீகாகுளம் போன்ற பல இடங்களில் தனது படிப்பைத் தொடர்ந்தார். கணிதத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தவுடன், வரங்கலில் உள்ள தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். படிக்குங் காலத்தில் கல்வியில் அரிய சாதனைக்காகப் பல்வேறு தங்கப் பதக்கங்கள் பெற்றார். இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார். அப்பொழுது இவரது ஆய்வுகளைத் திருடி தன்னுடைய ஆய்வாக இவரது பேராசிரியர் ஒருவரே தனது பெயரில் வெளியிட்டு விட்டார். இதனால் மனம் கசந்து, அக்கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

1980ஆம் ஆண்டில் வரங்கலிலுள்ள காகதீயப் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்பொழுது நக்சல்பாரி இயக்க நடவடிக்கைகள் ஆந்திராவில் உச்சத்தில் இருந்தன. காவல் துறை வன்முறையும், மோதல் கொலைகளும், போராளிகள் காணாமல் போவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. காவல் துறையின் அத்து மீறல், கேள்வி முறையின்றிக் கோலோச்சிக்கொண்டிருந்தது. இளமையிலேயே மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்ட பாலகோபால், இயல்பாகவே இத்தகைய காவல்துறை அராஜகப் போக்கை எதிர்த்துப் போராடத் திட்டமிட்டார். நண்பர்களின் உதவியோடு ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டி (Andhra Pradesh Civil Liberties Committee - APCLC) அமைப்பை உருவாக்கினார். 1983ஆம் ஆண்டு அதன் பொதுச் செயலாளர் ஆனார். அப்போது தொடங்கிய அவரது மனித உரிமைப் பாதுகாப்புப் பணி, பதினைந்து ஆண்டுகள் மிகக் கடுமையான போராட்டங் களுக்கிடையிலும் தொய்வின்றித் தொடர்ந்தது.

பேராசிரியர் பணியை விட, வழக்குரைஞர் பணியில் இருந்தால் அதிக அளவு மக்கள் தொண்டாற்ற முடியம் எனக் கருதிய தோழர் பாலகோபால் பேராசிரியர் பணியைத் துறந்தார். இவரோடு பணியாற்றிய பலரும் அதற்காக இவரைக் கேலியும் கிண்டலும் செய்தனர். ஏனெனில், கணிதத்தில் பாலகோபால் அந்த அளவு விற்பன்னராக விளங்கினார். அதனால்தான் பின்னாளில், ஆனந்த் டெல்டும்டே இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கணிதத் துறையிலேயே பாலகோபால் தனது ஆய்வுகளைத் தொடர்ந்திருந்தால், இந்தியாவிலேயே மிகச் சிறந்த கணித நிபுணர்களில் ஒருவராகத் திகழ்ந்திருப்பார்” எனப் பாராட்டி எழுதினார். ஆனால் தோழர் அது பற்றியயல்லாம் கவலைப்படாமல், சட்டப் படிப்பை பெங்களூர் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார். 1997ஆம் ஆண்டு முதல் முழுநேர வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

வழக்குரைஞராகப் பணியாற்றினாலும், தனது பொதுப் பணியை அவர் விட்டுவிடவில்லை. திங்கள் முதல் வெள்ளிவரை வழக்குமன்றப் பணிகள்; சனி/ஞாயிறு ஆகிய நாட்களில் களப்பணிகள் என்ற வகையில் திட்டமிட்டுச் செயலாற்றினார். வழக்கு மன்றத்தில் கூட, ஏழை எளியவர்களுக்காக, குரலற்றவர்களுக்காக இலவயமாக வழக்காடினார். கட்சிக்காரர்களுக்குச் செலவு வைக்கக்கூடாது என்பதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை அவரே வெகுநேரம் தட்டச்சு செய்து கொள்வார். மிகக் குறைந்த கூலி பெற்றுவந்த பீடித் தொழிலாளர்களுக்காக வாதாடி, உரிய கூலி வழங்கச் செய்தார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையோர், பெண்கள் ஆகியோரது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே தம் வழக்குரைஞர் பணியைப் பெரிதும் பயன்படுத்தினார். காவல்துறையால் எண்ணற்ற முறை தாக்குதலுக்கு உள்ளான நக்சல் பாரி தோழர்களுக்காக வாதாட யாரும் முன்வராத சமயத்தில், தன்னந்தனியாக அவர்களுக்காக பாலகோபால் நேர்நின்று வாதாடினார். அரசாங்கத்தின் பொய் வழக்குகளைத் தன் வாதத்திறமையால் தகர்த்தெறிந்தார்.

காவல்நிலையச் சாவுகள், வரதட்சணைக் கொடுமை, ஏழைகளுக்கான நிலவுரிமை போன்றவற்றிற்காகச் சட்டவிதிகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார். பாலகோபாலது சட்ட ஞானத்தையும், வாதிடும் திறமையையும் மூத்த வழக்குரைஞரான கே.ஜி. கண்ணபிரான் போன்றவர்கள் மிகவும் வியந்து பாராட்டியுள்ளனர். சட்டத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை ஏழைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் அதே சமயம், அதன் எல்லைகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால்தான் சட்டத்தால் மட்டுமே சமுதாயச் சிக்கல்களைத் தீர்த்துவிடமுடியும் என்று நம்பிக்கை வைப்பது தவறு என்றும், மக்கள் போராட்டங்கள் மூலம்தான் பல அநீதிகளுக்குத் தீர்ப்பைப் பெறமுடியும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சட்டத்தின் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்த சமூகப் போராளியாக அவர் திகழ்ந்தார்.

மிகக் கடுமையான காவல் துறை அத்துமீறல்கள் இருந்த சமயத்திலும், சற்றும் அஞ்சாமல் அரசாங்கத்தை எதிர்த்து சமரசமின்றி அவர் போராடினார். இதனால் பலமுறை அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். கோபி ராஜன்னா, டாக்டர் ராமநாதன், ஜாமா இலட்சும ரெட்டி, நாரா பிரபாகர் ரெட்டி போன்ற மனித உரிமைப் போராளிகள் கொல்லப்பட்டதைக் கண்டும், அஞ்சாமல் மக்கள் பணியாற்றினார். அவருக்கு என்றுமே உயிரச்சம் இருந்ததில்லை. தடாவில் கைது செய்யப்பட்டு, வரங்கல் சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பு அமைப்பாகிய அகில பாரதிய வித்யார்த்த பரி­த்தைச் சார்ந்தவர்களது தாக்குதலுக்கு உள்ளானார். 1989ஆம் ஆண்டு காவல் துறையின் ஆதரவோடு இயங்கிவந்த பிரஜா பண்டு என்ற அமைப்பினர், பாலகோபாலைக் கடத்திச் சென்று விட்டனர். நக்சல் போராளிகளிடம் சிறைப்பட்டிருந்த காவலர்களை விடுவித்தால்தான், பாலகோபாலை விடுவிப்போம் என்ற கோரிக்கையை அவ்வமைப்பு வைத்தது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள மனித உரிமைப் போராளிகள், பேராசிரியர்கள், முற்போக்கு அமைப்பினர் எனப் பல்வேறு அமைப்பினரும் பாலகோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மூன்று நாட்கள் கழித்து, காவலர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, பாலகோபால் ஐதராபாத்தில் விடுதலை செய்யப்பட்டார்.  1992 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் முன்பாகவே அவர் மீண்டும் தாக்கப்பட்டார். இத்தகைய தருணங்களில் எல்லாம், ஊடகங்கள் அவரை மையப்படுத்திச் செய்தி வெளியிட முனைந்த பொழுது, அவர் அதைத் தவிர்த்து, மக்களது பிரச்சனைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து உண்மையை வெளிப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார்.

மனித உரிமைப் போராட்டங்கள் என்பவை வெறுமனே காவல்துறை அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவது மட்டுல்ல, புதியதோர் சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கானஇலட்சியத்தை அப்போராட்டங்கள் கருவாகக் கொண்டிருக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அந்த அடிப்படையில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைச் சுரண்டலின் உச்ச கட்டமாகக் கண்டு அதை எதிர்த்து இயக்கங்கட்டினார். நந்தி கிராமம், ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப்பகுதி ஆகிய இடங்களில் அமைக்கப்படவிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுத்தார். அதேபோல் அணு ஆயுதங்கள் இல்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்பதற்காக அணு ஆயுதங்களுக்கு எதிரான ஆந்திரப்பிரதேச இயக்கம் (A.P. Forum against Nuclear Weapons) எனும் அமைப்பை உருவாக்கினார். இந்திய‡அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தையும் இந்தப் பின்னணியிலேயே அவர் கடுமையாக எதிர்த்தார். அமெரிக்க வல்லரசையும் சமரசமின்றி இறுதிவரை எதிர்த்துப் போராடினார்.

மரண தண்டனையை முற்றாக ஒழித்துக்கட்டவேண்டும் என இறுதிவரை தொடர்ந்து போராடி வந்தார். இதற்காக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நடைபெற்ற கருத்தரங்குகள் ‡ ஆர்ப்பாட்டங்கள் ‡ பேரணிகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கினார். அதேபோல், மண்டல் அறிக்கை வெளியானபோது, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களைக் கண்டித்து, இடஒதுக்கீட்டின் இன்றியமையாமை, அதன் சனநாயக உள்ளடக்கம் ஆகியன குறித்துத் தெளிவான வாதங்களை முன்வைத்தார்.

மனித உரிமைப் போராட்டங்கள் என்பவை, சமுதாயத்தின் மாறிவரும் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்பத் தமது திசை வழியைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வந்தார். “பாலகோபால் எந்த ஒன்றையும் முன்தீர்மானத்தோடு எப்போதும் அணுகியதில்லை. எந்த ஒரு புதிய நிகழ்வையும் அவர் வரவேற்றதோடு, அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார்” என ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டி பொறுப்பாளர் தோழர் சேசையா குறிப்பிட்டார். உரிமை மீறல் குறித்த அவரது அறிக்கைகள், மனித உரிமைப் போராளிகளுக்கு ஒரு பாடமாகவே அமைந்திருந்தன. 1997ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டி சார்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன் அவர் எடுத்து வைத்த வாதங்களின் அடிப்படையில்தான், மோதல் சாவுக்குக் காரணமாக காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட வழியிலான முதல் தகவல் அறிக்கை போட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நடைமுறை உருவாக்கப்பட்டது. ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் அவரது வாதத் திறமையால் ஒவ்வொரு மோதல் சாவுக்கும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் எனவும், வழக்கு மன்றத்தில் அதுபற்றி விசாரிக்கப்படவேண்டும் எனவும் வழிவகை காணப்பட்டது. ஆனால், அது இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடையில் (Stay) உள்ளது. அதேபோல் நண்பர்களுடன் இணைந்து பாலகோபால், இந்திய மக்கள் மனித உரிமை ஆணையம் (Indian People’s Human Rights Commission) எனும் அமைப்பை முதன் முதலாக உருவாக்கினார். தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) உருவாவதற்கு இதுவே முன்னோடியாக அமைந்தது. அதே போல் பாலகோபாலின் தொடர் செயல்பாட்டின் பாதிப்பினால், “தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சியின் சாவல்கள்” எனும் தலைப்பில் தனியே ஓர் அறிக்கை திட்டக் கமிசனில் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

தனது பணிகளை ஆந்திர எல்லையோடு நிறுத்திக் கொள்ளாமல், எங்கெங்கு உரிமை மீறல்கள் நடைபெற்றனவோ, அங்கெல்லாம் மக்களின் தளபதியாக வாளோடும் கேடயத்தோடும் முன்வரிசையில் நின்றவர் தோழர் பாலகோபால், காஷ்மீர், மணிப்பூர், சட்டீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்டு, பீகார், தமிழ்நாடு, கர்நாடகம் எனப் பல பகுதிகளுக்கும் சுழன்றடிக்கும் சூறாவளியயனப் பயணித்து, அங்கு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கும் தனது ஆதரவை நேரடியாகத் தெரிவித்தார்.

இந்தியத் துணைக் கண்டத்தைத் தாண்டி, இராக் ‡ பாலஸ்தீனம் ‡ தென்னாப்பிரிக்கா ‡ ஆப்கானிஸ்தான் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் உரிமைப் போராட்டங்களை சர்வதேசியக் கண்ணோட்டத்தோடு அவர் ஆதரித்தார்.

பாலகோபல் மிகச் சிறந்த பேச்சாளர். தாய்மொழியான தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சரளமாகத் தங்கு தடையின்றி வெள்ளப் பெருக்கென உரையாற்றும் வல்லமை கொண்டவர். கணிதப் பட்டதாரி என்றாலும், இலக்கிய நயத்தோடு ஈர்க்கத்தக்க வகையில் அழகாகச் சொற்பொழிவாற்றக் கூடியவர். சட்டஞானத்தோடு இந்தத் திறமையும், பல்வேறு வழக்குகளில் அவருக்கு வெற்றி கிடைக்கக் காரணமாய் அமைந்தன.

தோழர் பாலகோபால் மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட! அவரது கூர்மையான மதிநுட்பத்தை ‘எக்கனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி’ (Economic and Political weekly - EPw) இதழில் அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் வாயிலாகத் தெளிவாகக் காணலாம். பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பியை அறிமுகப்படுத்தி தெலுங்கில் அவர் எழுதிய நூல், மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இன்று வரை கோசாம்பி பற்றி வந்த நூல்களில் சிறந்ததாக அந்நூல் வரலாற்று மாணவர்களால் கருதப்படுகிறது. தவிரவும், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வெளியீடாக வந்த பொருளாதார நூல்களைப் பற்றி அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் மிகச் சிறந்தவையாகப் பாராட்டப்படுகின்றன. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களது குடிசைகளைக் காவல்துறை எரித்து நாசப்படுத்தியது குறித்து, அவர் எழுதிய அருமையான கட்டுரை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People’s Union for Civil Liberties – PUCL) அளிக்கும் இதழியலுக்கான இந்திய விருதைப் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது.

பாலகோபாலின் துணைவியார் வசந்த இலட்சுமி, ஒரு பத்திரிகையாளர்; ஒரே மகன், பிரபட்டா, தற்பொழுது கல்லூரி மாணவர். இருப்பினும், இயக்கமே வாழ்வு என்பதாகத்தான் அவர் வாழ்ந்து வந்திருக்கிறார். மூத்த வழக்குரைஞர் கே.ஜி. கண்ணபிரானோடு இணைந்து, ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டியை முன்னுதாரணமிக்க ஓர் அமைப்பாக உருவாக்கினார். இந்தியத் துணைக் கண்ட மனித உரிமைப் போராட்ட வரலாற்றில், முத்திரைகள் பதித்த இயக்கமாக அதை அவர் வளர்த்தெடுத்தார். வன்முறை பற்றிய அணுகுமுறையில், அவ்வமைப்போடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதிலிருந்து விலகி, 1998 ஆம் ஆண்டு மனித உரிமைக்களம் (Human Rights Forum - HRF) எனும் அமைப்பைத் தொடங்கினார். வெறும் 32 பேர்களை மட்டுமே கொண்டு உருவான மனித உரிமைக் களம், இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் பரவலாக அறியப்பட்ட ஒரு முன்னோடி மனித உரிமை அமைப்பாக வளர்ந்திருப்பதற்கு, பாலகோபாலின் அயராத உழைப்பும், தளராத முயற்சியும்தான் காரணம் என்றால், அது மிகையாகாது.

இவ்வளவு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும், அது பற்றிச் சிறிதளவும் கர்வம் கொண்டவரல்லர் தோழர் பாலகோபால். அவரது எளிமை, மிகவும் பரவலாகப் போற்றப்பட்ட ஒன்றாகும். எவ்வளவு நெடுந்தூரப் பயணமாக இருந்தாலும், இரயிலிலேயே மக்களோடு ஒருவராகத்தான் பயணம் மேற்கொண்டார். தனக்கென எவ்வித வசதிகளையும் அவர் கோரியதில்லை. கொஞ்சம் துணிமணிகள், தொடர்வண்டி அல்லது பேருந்துக்குத் தேவையான கட்டணம் மட்டுமே வைத்துக் கொண்டு, இந்தியா முழுவதும் சுற்றித் சுற்றி வந்து மக்கள் தொண்டாற்றிய மாமேதை அவர். அறிவையும் திறமையையும் வைத்துக்கொண்டு அதைக் காசாகவும், செல்வாக்காகவும் மாற்றிக் கொண்டிருக்கும் அரசியல்வாதி அறிவுஜீவிகளுக் கிடையே, அதை மக்களுக்காக அர்ப்பணித்த மகத்தான தியாகி அவர். பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைத்திருந்தால், தனது கணிதத் திறமையை வைத்துக் கொண்டோ, சட்டஞானத்தை வைத்துக் கொண்டோ அவர் எளிதில் வசதி மிக்க வாழ்வை அமைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் அத்தகைய வாழ்வை ஒருகாலும் அவர் நாடியதில்லை. ஏழை மக்களுக்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டவர் அவர். சனநாயக மதிப்பீடுகளையும் சமத்துவக் கலாச்சாரத்தையும் உன்னதமான விழுமியங்களையும் உயர்த்திப் பிடித்த தோழர் பாலகோபால், மக்கள் மனதில் என்றும் அழியாச் சுடராய் ஒளிவீசிக் கொண்டிருப்பார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

 

Pin It