பாரதி நூல்களைப் பொதுச் சொத்தாக்க வேண்டும் என்ற கிளர்ச்சி 1948 கடைசியிலும் 1949 முற்பகுதியிலும் வலுத்து வந்தது. இந்தக் கிளர்ச்சியின் விளைவாக ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரை முதன் மந்திரியாகக் கொண்ட சென்னை மாகாண மந்திரிசபை 1949 -ஆம் ஆண்டில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த ஆண்டில்தான் பாரதி பிரசுராலயத்திடமிருந்து பாரதியாரின் நூல்களை அரசாங்கம் விலைக்கு வாங்கியது. பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமையை ஏ.வி. மெய்யப்ப செட்டியார் இலவசமாக வழங்கினார். இதற்கு முன்பாக பாரதியாரின் படைப்புகள் என்ன சூழலில் இருந்தன என்பதைத் தெரிந்து கொள்வது முக்கிய தேவையாகவும் இருக்கிறது.

1931-ல் பாரதியின் குடும்பத்தார் பாரதி நூல் உரிமைகளை 4000 ரூபாய்க்குப் பாரதி பிரசுராலயத்திற்கு விற்றனர். ஏற்கனவே பாரதியின் இளையமகள் சகுந்தலாவின் கல்யாணச் செலவுக்காக வாங்கிய கடனைத் தீர்த்து, பாக்கி தவணைகளில் செல்லம்மாவிடம் தருவதாக ஒப்பந்தமாகியது. இந்தச் சமயத்தில் பாரதிபாடல்களின் ஒலிப்பதிவு செய்யும் உரிமையை ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் நிறுவனமான சரஸ்வதி ஸ்டோர்ஸ் 400 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது.

1935-ம் ஆண்டில் பாரதிநூல்கள் விற்பனையினால் பாரதியின் மனைவிக்குத் தக்க லாபம் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது. தாம் வறுமையால் வாடுவதாகவும், பாரதி பிரசுராலயம் குறித்த தவணைகளில் பணம் அனுப்பவில்லை என்றும், செல்லம்மாபாரதி புகார் கூறினார். இவருக்கு ஆதரவாகப் பல இளைஞர்கள் கிளர்ச்சி செய்தனர். ஆனால் இந்தப் புகார்களைப் பாரதி பிரசுராலயத்தினர் மறுத்தனர். இந்தச் சூழ்நிலையில் அரசு பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்கும் போது பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கு 10,000ரூபாயும், பாரதியின் புதல்வியர் தங்கம்மா மற்றும் சகுந்தலா இருவருக்கும் தலா 5,000 ரூபாயும் நிதியுதவி அளித்தது. பாரதி குடும்பத்தாரின் சம்மதமும் பெற்று அரசாங்கம் பாரதியின் நூல்களின் உரிமைகளை ஏற்றுக் கொண்டது. பாரதி பிரசுராலயத்திடமிருந்து அரசாங்கம் உரிமையை வாங்கிக் கொண்ட போது, அவர்களிடம் உள்ள நூல்களையும் எடுத்துக் கொண்டது. அந்த நூல்களை சென்னை அரசாங்க நூல் விற்பனை நிலையத்தில் ஒப்படைத்தது. அரசாங்கம் பாரதியின் நூல்களை விற்றாலும் சிவப்புநாடா முறையால் நூல் இருக்கிறதா? இல்லையா என்று தெரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். பாரதி கவிதைத் தொகுதியை அரசாங்கம் வெளியிட்ட சிறிது நாளிலே யார் வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்று அனுமதித்தது. இந்த உரிமையைப் பயன்படுத்தி இன்றும் பல பதிப்பகங்கள் பாரதியாரின் படைப்புகளை வெளியிட்டு வருகின்றன.

பாரதியின் பாடல்கள் தனி உரிமையாக இன்றி மக்கள் உரிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘பாரதி விடுதலை இயக்கம்’ நடந்தது. அதே சமயம் எட்டயபுரத்தில் பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் பேச அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு நடந்த சிறு கிளர்ச்சியின் விளைவாக அவர் பேச அனுமதிக்கப்பட்டார். அந்த இயக்கத்தை முன் நின்று நடத்தியவர்கள் டி.கே.சண்முகம், நாரணதுரைக்கண்ணன், திருலோக சீதாராம், வல்லிக்கண்ணன் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோரைக் கூறலாம்.

பாரதியார் நூல்கள்

1. பாரதியார் பகவத் கீதை (பேருரை) பூம்புகார் பதிப்பகம்

2. பதஞ்சலியோக சூத்திரம் மணிவாசகர் பதிப்பகம்

3. நவதந்திரக்கதைகள் பாரதி பிரசுராலயம்

4. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு காரியாலயம் (காந்தி உபதேசங்கள்

5. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்) சுதந்திரச்சங்கு காரியாலயம்

6. சின்னஞ்சிறு கிளியே பூம்புகார் பதிப்பகம்

7. ஞான ரதம், வானதி பதிப்பகம்

8. பகவத் கீதை நர்மதா பதிப்பகம்

9. சந்திரிகையின் கதை முத்தமிழ் நூலகப் பிரசுரம்

10. பாஞ்சாலி சபதம் பாரிநிலையம்

11. புதிய ஆத்திசூடி பூம்புகார் பிரசுரம்

12. பொன் வால் நரி ஞான பாரதி பதிப்பகம்

13. ஆறில் ஒரு பங்கு ஞான பாரதி பதிப்பகம்

மற்றும் பாரதியாரின் அனைத்து படைப்புகளும்.

(திரு. சீனி விசுவநாதன் அவர்களின் சீரிய முயற்சியால் ‘காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ வெளிவந்திருக்கின்றன. இம்முயற்சி இன்றும் தொடர்கிறது.)

Pin It