சென்னை
11.7.45

ஆருயிர் நண்ப,

உன் அருமையான இரண்டு கடிதங்களும் கிடைத்தன. நல்லது.

விளாத்திகுளம் சுவாமியவர்களை இப்போது அழைத்து வரவேண்டாம். இங்கு தகுந்த ஏற்பாடுகள் செய்துகொண்டு சாவகாசமாக அவர்களை வரவழைக்க வேண்டும் என்று துரை கூறுகிறார். தகுந்த மரியாதை செய்து, கச்சேரி முதலானவைகளெல்லாம் நடத்த வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்காக, ஸ்ரீ சுவாமியவர்களைப் பற்றி நம் பத்திரிக்கையின் அடுத்த இரண்டு இதழ்களில் எழுதிவிட்டு மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. உன் கடித விபரத்தை துரைக்குத் தெரிவித்தேன். உனக்கும் அவருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தைப் பற்றி நீ குறிப்பிட்டிருக்கிறாய்! இனியாவது பாடம் படித்துக்கொள். உலகம் உனக்கு இன்னதென்று தெரிந்திருக்கும். நிற்க.

என் முந்திய கடிதத்தில் நான் வாலாஜாபாத்துக்குப் போகப் போவதாகத் தெரிவித்திருந்தேன் அல்லவா? அதன்படியே போயிருந்தேன். என் பிரயாண விபரம் பற்றியும், அந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றியும் என்னால் இக்கடிதத்தில் எழுத முடியாது. உன்னிடம் நேரில் சொல்லவேண்டும். அங்கே நான் பிரசங்கம் செய்தேன்: இது ஒரு செய்தி. அடுத்தப்படியாக ஒரு செய்தி: அதாவது அந்தப்பள்ளிக்கூடத்தில் ஒரு வாத்தியார் இருக்கிறார். அவர் அசல் உன் முகஜாடையுடனும், உன்னுடைய நடையுடை பாவனைகளுடனும் இருந்தது. எனக்கு வியப்பை அளித்தது. அவரோடு பேசவேண்டும் என்று எனக்கு ஒரு விசித்திரமான ஆசை! எப்படிப் பேசுவது? கடைசியில் நான் பிரசங்கம் செய்துவிட்டு போகும்போது அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். வெகுநேரம் யோசித்து அவரைப் பார்த்து ஒரு புன்னகையாவது செய்ய வேண்டும் என்று விரும்பி அப்படியே செய்தும்விட்டேன். அவர் மிகவும் சங்கோஜத்தோடு சிரித்துவிட்டு அப்பால் போய்விட்டார். நாம் வாலாஜாபாத்துக்கு இன்னொருமுறை போக வேண்டியிருக்கும்.

மகாபாலிபுர பிரயாண விஷயமாகக் கோவில்பட்டி நண்பர்களின் நிலைபற்றி நீ தெரிவித்திருந்தாய். உண்மை நிலையும் அதுதான். அவர்களைக் குற்றம் சொல்ல இடமும் இல்லைதான். ரூ 35ம் பத்துநாள் லீவும் கிடைப்பது சாமான்யமில்லை. ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு. இது ஒரு அரிய சந்தர்ப்பம். இங்கே அருமையான நண்பர் குழாம் ஒன்றாகத் திரண்டிக்கிறது ஒருவருக்கொருவர் அறிமுகமும் செய்துகொள்ள வேண்டும். அதனால் நீ எப்படியாவது நண்பர்களை ஜரூர்படுத்து.

குறிப்பு: ஜூலை மாதம் 28ம் தேதி சனிக்கிழமையன்று மகாபலிபுரம் போக நிச்சயமாகத் தீர்மானமாகி விட்டது. இந்தத் தேதியை இனி மாற்ற இயலாது. அதனால், நம் நண்பர்கள் சென்னைக்கு 27ம் தேதி காலை 7 மணிக்கே வந்துவிட வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
கு. அ

**************************

சென்னை
16.8.45

அன்பு மிக்க நண்பன் ராஜநாராயணணுக்கு,

நீ ஊருக்குப் போய் எழுதிய இரு கடிதங்களும் கிடைத்தன.

நீங்கள் ஸ்வரப்படுத்தியுள்ள பாடல்களை எல்லாம் ஸ்வரக் குறிப்புகளோடு அனுப்பிவைக்கவும். முக்கியமாகக் கம்பராமாயணப் பாடல்களை அனுப்பவும் என விலாசத்துக்கு. நீ எடுத்துச் சென்ற புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டு, பந்தோபஸ்தாக நண்பன் ராமசாமி வசம் கொடுத்தனுப்பவும்.

நீ ஊருக்குப் போய் செட்டியாருக்குக் கடிதம் எழுதினாயா?

நீ போகும்போது மகாகவி “பாரதியார்” என்ற உன் புஸ்தகத்தை வாங்கிச் செல்ல மறந்துவிட்டாய். அதை நண்பர் முத்துசாமிவசம் கொடுத்தனுப்புகிறேன். முத்துசாமி எப்பொழுது அங்கு வருவார் என்று சொல்லமுடியாது. சில நாட்கள் இங்கிருந்துவிட்டு வரலாம்.

நண்பன் அருள்தாஸின் சகோதரி சென்னையில் வாழ்க்கைப்பட்டிருக்கும் விபரம் உனக்குத் தெரிந்திருக்கலாம். அந்த அம்மாள் தம் கணவருடன் நான் வசிக்கின்ற சூளைமேட்டில்தான் இருப்பதாக நான் முன்னதாகவே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் எங்கே, ஏது என்று தெரியாது. நேற்று சந்தர்ப்பவசமாக, நானும் எனது வேலூர் நண்பர் ஒருவரும் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டு அமிஞ்சிக்கரை ஹோட்டலுக்கு காலை உணவு அருந்தச் செல்லுகையில் என் குரலைக் கேட்டு ஒரு நண்பர் வெளியே வந்தார்.

“அழகிரிசாமி!”

குரலைக்கேட்டதும் ஏறிட்டுப் பார்த்தேன்.

நண்பர் அருள்தாஸ் காட்சியளித்தார்.

அவருடைய சகோதரியின் குடும்பம் எங்கேயிருக்கிறது தெரியுமோ? நான் உனக்குக் காட்டினேனே, துரை முன்னால் குடியிருந்த வீடு என்று அதே வீட்டில்தான். எனக்கு அடுத்த தெருவில்.

எதிர்பாராத விதமாக மூன்று வருஷங்களுக்குப் பின் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்ந்தோம். அருள்தாஸ் லீவ் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்து நான்கு நாட்கள் ஆய்விட்டதாம். என்னுடைய உரத்தகுரல் அவருக்குக் கேட்டிராவிட்டால் நாங்கள் சந்தித்திருக்கப் போவதில்லை. இன்றுதான் ஈரோடுக்குப் போகிறார். அங்குதான் வேலை, உன்னைப் பற்றியெல்லாம் விசாரித்தார். என்னை ஆப்பிள் ஆரஞ்சுப் பழங்களால் உபசரித்தார். என்ன இனிய நட்பு!

கோவில்பட்டி நண்பர்கள் என் ஷேமத்தை விசாரித்தாக நீ எழுதியிருக்கிறாய். அவர்கள் விசாரித்ததினால்தானே என்னவோ, எனக்கு சற்று உடல்நலமும் ஏற்பட்டிருக்கிறது.

நாலைந்து நாட்களாகக் கஷ்டப்படுத்திய வயிற்றழைச்சல் குணமாகிவிட்டது. ஆனால் உடல்மட்டும் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. நண்பர் முத்துசாமி என் பலவீனத்தைப்போக்க பல வழிகள் சொன்னார். அவற்றின்படி நடக்க முயலுகிறேன்.

சென்னையின் நிலையைப் பற்றி சென்னையைப் பற்றிய எல்லா விபரங்களையும் நம் நண்பர்களுக்கு நீ ஏன் சொல்லக்கூடாது?

மகாயுத்தம் முடிந்துவிட்டது நம் திட்டங்களை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. இப்பொழுதிருந்தே நம் எதிர்கால நலத்துக்காக நாம் கூட்டுறவோடு பாடுபடத் தொடங்கவேண்டும். இனி ஒரு நிமிஷத்தையும் வீணாக்கக்கூடாது. நண்பர் முத்துசாமி அங்கு வரும்போது சில வலுவான யோசனைகளோடு வருவார். கடிதங்கள் மூலமாகவும் உனக்கு எழுதிக் கொண்டிருப்பேன்.

வேறு விசேஷம் ஒன்றுமில்லை.

நீ துரைக்கு எழுதிய கடிதத்தை அவரிடமே சேர்த்துவிட்டேன்.

“வானத்தில் தடங்கல் இல்லாமல் பறந்து கவிதைபாடும் பறவை வாழ்க்கை உனக்குக்கூடிய சீக்கிரம் வரப்போகிறது. உனக்குப் பிரியமானவர்களின் சொல்லை நீ கேட்பதைவிட உனக்குக் கசந்து தோன்றும் டாக்டர்களின் சொல்லைக் கேட்டு நட”.

அன்புடன்
கு. அ

**************************

சென்னை
23.8.45

அன்புமிக்க ராஜநாராயணணுக்கு,

நலம்; நலம் அறிய ஆவல்.

உன் கடிதம் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கிடைத்தது. அவகாசமின்மையினால்தான் உண்மையில் இதுவரை பதில் எழுதவில்லை.

நீ முத்துசாமிக்கு அனுப்பிய பணம் வந்து சேர்ந்தது. இந்த விபரம் ராசமாமிக்குத் தெரியுமா?

நீ ராமசாமியிடம் என் கடிதத்தைச் சேர்த்தாயா? நான் அவனுக்கு எழுதிய ஆங்கிலக் கார்டு கிடைத்ததாமா?

ராமசாமி எப்பொழுது இங்கே வருகிறான்? வரும்போது ஞாபகமாக ஆபிஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் கொடுத்தனுப்பவும். மாதக்கணக்காக ஒன்றுமில்லாமல் இப்போது திடீரென்று, ‘கனகாம்பரம்’ என்ற புஸ்தகத்துக்கு அவசரம் வந்துவிட்டது. இப்படி எந்தப் புஸ்தகமும் எந்த நேரத்திலும் கேட்கப்படலாம் என்பது உனக்குத் தெரியும். அதோடு ராமசாமியிடம் சில நூல் சிட்டங்கள் கொடுத்தனுப்ப முடியுமா?

நீ முன்னால் என்னிடம் கொடுத்த “உலகம் யாவையும்” என்ற பாட்டு அச்சாகிக்கொண்டிருக்கிறது. அதில் நாட்டை 29வது மேளம் என்றிருக்கிறது. அதை நீ 36வது மேளம் என்று திருத்தச் சொல்லவில்லையா?

“மனோலயம்” என்று ஒரு ராகம் உண்டென்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

என் நிலமைக்காக நீ வருந்தி எழுதியிருப்பதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உன் ஆசிர்வாதப்படியே எல்லாம் நடக்கட்டும்.

அன்புடன்
கு. அ

Pin It