கடவுள் தோளில் சுமந்து வந்து
இங்கே விளையாடி விட்டு வா
என்று ஆசி கூறி மறைந்தார்

விளையாட்டு விதிகள் அச்சடிப்பு :

"இருப்பதை கெட்டியாக பிடித்துக் கொள் - என்றாலும்
இருக்கிற எதற்கும் மதிப்பு இருக்காது
இல்லாத ஒவ்வொன்றுக்கும் அவமதிப்பு தப்பாது"

விதிபடி விளையாட ஆரம்பித்தேன்
ஆட்டம் நிற்பதாகவும் தெரியவில்லை
சிலநேரங்களில் விளையாடவும் தெரியவில்லை

முதல் ஆட்டத்தின் அம்பு வேட்டையரிடம்
தற்போதைய ஆட்டத்தில் எல்லோரிடத்திலும்
தப்பித்து தாண்டினால் புள்ளிகள் கூடும்

சொரிந்து சொரிந்து காட்ட வேண்டியதாகியது
குரங்கு தான் என்று நிரூபிக்க - இல்லையெனில்
நான் வெளியேற்றப்படக் கூடும்

ஆதிகால வேட்டை விளையாட்டின் நெடி
தலையணை உறையிலும் கசிந்தது
ஆழ்ந்து உறங்கலாம் என்றாலும்
சும்மா இருந்த என்னை
இங்கே இறக்கிவிட்டுச் சென்று விட்டவரை
கடவுள் என்று எப்படி சொல்கிறேன்?

- சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It