இன்றைய அறிவியலின்படி, சைவம் சாப்பிடுபவர்களும் உயிர் வதை செய்கிறார்கள். ஆட்டை அறுத்தால்தான் அது உயிர்வதை என்று நினைக்க முடியாது. கத்தரிக்காய் செடியாக இருந்தாலும் அது உயிர்தான். அறிவியலின்படி, உயிரில்லாத எதுவும் வளராது. நம்முடைய பேனாவோ, பென்சிலோ வளர்கின்றனவா? உயிர் இருந்தால் மட்டுமே வளர இயலும். இனப்பெருக்கம் செய்வதாக இருந்தால் உயிர் வேண்டும். சமீபகால கண்டுபிடிப்புகளின் மூலம், செடி கொடிகளும் உணர்வுகள் உள்ளவை என்று தெரிகிறது. நம் கண்களுக்கு புலப்படாத வகையில் அவை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

நவீன தோட்டக் கலையில் இசைக்கருவிகள் மூலம் தாவரங்களை செழிப்பாக வளர வைக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம். இசையின் மூலம் விளைச்சல் அதிகமானால் அது எதைக் காட்டுகிறது? செடி கொடிகளும் உணர்வுகள் உள்ளவை என்பதைத்தானே? தொட்டால் சிணுங்கி எனும் தாவரம் நாம் தொட்டவுடன் சுருங்குகிறது. சூரியகாந்தி எனும் மலர் சூரியனை நோக்கியே இருக்கிறது. தாவரங்கள் உயிரும், உணர்வும் உள்ளவை என்று அறிய இதை விட என்ன வேண்டும்? எனவே, உயிரைக் கொல்வது பாவம் என்ற அடிப்படையில் மட்டுமே நோக்கினால், சைவத்தையும் நாம் தவிர்த்திட வேண்டும் அல்லவா? 

தண்ணீரிலும் நுண்ணிய உயிரினங்கள் உள்ளன. தண்ணீரைக் கொதிக்க வைப்பதின் மூலம் அந்த உயிரினங்களை நாம் கொல்கிறோம். கொதிக்க வைத்த தண்ணீரும் ஒருவிதமான சூப்தான் என்பது உண்மை. தண்ணீரிலும் இலட்சக் கணக்கான உயிரினங்களை நாம் கொல்ல வேண்டி உள்ளது. அவை கத்தரிக்காய் அளவிற்கு பெரிதாக இல்லாவிட்டாலும் உயிர்கள்தானே? எனவே, யார் உயிர்வதை செய்யவில்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்!

உயிர்வதை செய்யாமல் மனிதன் வாழ இயலாது. ஒரு மனிதன் 'நான் மற்ற உயிர்களை வதை செய்ய மாட்டேன்' என்று இருந்தால் அவனும் சாக வேண்டியதுதான். அவன் மண், கல், இரும்பு போன்றவற்றை வேண்டுமானால் தின்று வாழலாம்! எனவே, நாம் எதைத் தின்றால் வாழ முடியும் என்று பார்த்தால், மற்ற உயிர்களைத்தான் உண்ண வேண்டியுள்ளது. மற்ற உயிரினங்களைத் தின்று வாழும் வகையில்தான் மனித உடல் உள்ளது.  'நான் சைவம்' என்று யாரேனும் கூறினால், பகுத்தறிவின்படி அது சுத்தமான பொய்யாகிறது.

லட்சக்கணக்கான எலிகளை நாம் பயிரைப் பாதுகாக்கக் கொல்கிறோமே? அதன் மூலம்தானே தானியங்களை விளைவிக்கிறோம்? கொசுவர்த்தியை ஏன் பயன்படுத்துகிறோம்? கொசுக்கள் செத்து விழுவதைப் பார்த்து வருந்துகிறோமா? மாடுகளைக் கொன்றுதானே நாய்கடி மருந்து தயாரிக்க முடிகிறது? மீன் சாப்பிட மாட்டேன் என்று கூறுபவன் மீன் மாத்திரை சாப்பிடுவதில்லையா? அவ்வளவு ஏன், சைவம் என்று கூறுபவர்கள் பால் குடிக்கின்றனர் அல்லவா? பால் சைவம் என்று எப்படி முடிவெடுக்கிறீர்கள்? பருத்திப் பாலை குடித்து விட்டு வேண்டுமானால் 'சைவம்' என்று கூறலாம். மாட்டுப் பால் எப்படி சைவமாகும்? எருமைப் பாலையும், பசும்பாலையும் சாப்பிடுவதன் மூலம் அந்த மாமிசத்தின் ஒரு பகுதியை உண்கிறோம் என்று ஆகிறது. இன்னும் சொல்லப் போனால், பால் சாப்பிடுவதே ஒரு அநியாயமான மிருக வதைதான். அது கன்னுக் குட்டிக்காகத்தானே சுரக்கிறது? உங்களுக்காகவா சுரக்கிறது? "நம்முடைய நன்மைதான் முக்கியமானது; மற்றவை எல்லாம்அப்புறம்தான்" என்றுதானே நாம் நியாயம் கற்பிக்க முடியும்?

இந்த அறிவியல் யுகத்தில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் 'உயிர்வதை' பற்றி பேசிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. எல்லோரும் உயிர்களை தினம் தினம் வதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனவே, இந்த உலகில் வெஜிடேரியன் என்று எவரும் இருக்க முடியாது. அந்த காலத்தில், அறிவியல் அறிவில்லாத காலத்தில், மக்கள் சைவம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கலாம். இப்போது அப்படி நினைத்தால் அது அறிவின்மையாகும்.

- தஞ்சை வெங்கட்ராஜ்

Pin It