எட்டி எட்டி பார்த்துவிட்டு
ஓடி விடுகிறார்கள் குழந்தைகள் எனில்
மருமகள் வரவேற்பறையில் இருக்க கூடும் ..

சுற்றில் வரும்
பெரிய மருத்துவரைப் போல வந்து
"சரி, வேறன்ன ..?" என
ஆரம்பிக்கும் பிள்ளையிடம் -
       இரண்டு நாளாய் எதிர்வீட்டில்
       புதிதாக குழந்தையொன்று கையசைக்கிறது - என்றோ
       பல்லில் செருகிய ஏதோ
       சாயங்கால வாக்கில் வந்ததும்
       தான் தூங்க முடிந்தது   -   என்றோ
       இலவசம் தருகிறார்கள் என்றாலும்
       "நான் என்ன நினைக்கிறேன், என்றால் ....” - என்றோ
        ஏதாவது சொல்ல முடியுமா ?

சில்லறையாகத் தெரிந்தது -
இறந்து போன உன் உறவினர்கள்
கனவில் வந்ததாக நீ சொன்னபோது ...
இப்போது..
என் கனவில் நீ வருகிறாய்.
நானும் யாரிடமும் சொல்லுவதில்லை .

- கே.சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It