Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

‘என்.டி. டிவி’ எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இராணுவச் செய்தியாளர் நிதின் ஆனந்த் கோகலே. ஈழத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க் காலத்தில் களத்திலிருந்து செய்திகளை சேகரித்தவர். அவர் தனது அனுபவங்களை இலங்கை : சமாதானத்தி லிருந்து போர் வரை (Srilanka : From war to peace) என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். அதில் இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு இந்திய அரசு செய்த உதவிகளை பட்டியலிட்டுள்ளார். நூலிலிருந்து சில முக்கிய பகுதிகள்:

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜபக்சே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதமே அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது விடுதலைப் புலிகளை அழிக்க அவர் உறுதியுடன் இருந்ததும், அதை மிகப் பெரிய லட்சியமாக கொண்டிருந்ததையும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தரப்பு முடிவு செய்தது. தொடக்கத்தில் பேச்சு வார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையாது. விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தையையே சாக்காக வைத்து மீண்டும் ஆயுதங்களை குவிப்பார்கள். ஒன்று கூடுவார்கள். சண்டை முடிவின்றி நீளும் என்று இந்தியத் தரப்பிடம் வாதிட்டார் ராஜபக்சே.

அவரது பேச்சை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதே சமயம் விடுதலைப் புலிகளுடன் மோதுவதாக இருந்தால் ஒரே மூச்சாக சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும். அவர்களிடம் இலங்கை படையினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு இலங்கை படையினரைப் பலப் படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியது அவசியம் என்பதையும் ராஜபக்சே இந்தியத் தரப்பிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு வெளிப்படையான ஆயுத உதவிகளை, ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வ தில்லை என்ற முடிவை காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்தது.

2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப் படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்துவிடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை  விதிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக 2002 ஆம் ஆண்டு இந்திய கடலோரக் காவல்படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.

இந்தியா வாங்கிய ஹெலிகாப்டர்கள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தில் ஆழ் ஊடுருவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருந்தன.

இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்கள் பேருதவியாக இருந்ததாக இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று பேரையும் சரி சமமாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட ராஜபக்சே, அவரது சகோதரர் பசில், கோத்தபாயா மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவின் வேலை தினசரி இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு போர் குறித்த நிலவரங்களை கூறுவது.
அதேபோல இந்தியத் தரப்பிலும் ஒரு ரகசியக் குழு அமைக்கப்பட்டது. சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன், பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பிடித்தனர்.
இந்த இரு குழுக்களும் தினசரி போர் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டன. ஒருவருக் கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். இரு குழுக்களும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும் கூட அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்ளத் தவறவில்லை. மேலும் ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி வைக்கப்பட்டது. ஆனால் இவர்களின் ஒவ்வொரு சந்திப்பின் போதும் புலிகள் அழிப்பு குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
2007-09 ஆம் ஆண்டுகளில் இலங்கைக் குழு இந்தியாவுக்கு ஐந்து முறை வந்தது. இந்தியக் குழு 3 முறை இலங்கை போனது.

இந்தியக் குழுவின் பயணங்களிலேயே மிகவும் முக்கியமானது 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவசங்கர மேனன் தலைமையிலான குழு இலங்கை போனதுதான். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் விறுவிறுப்படைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொழும்பில் சார்க் அமைப் பின் 15 ஆவது மாநாடு நடக்கவிருந்தது. இந்நிலையில் சூன் மாதம் இந்திய விமானப்படை மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர் நாராயணன், மேனன், விஜய் சிங் குழுவினர். இவர்களது வருகை ரகசியமாக வைக்கப் பட்டது. மேலும் பாதுகாப்பு என்கிற பெயரில் இந்தியப் பாதுகாப்புப் படையினரை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அதன்படி இந்தியக் கடற்படைக் கப்பல்கள் விமான எதிர்ப்புப் பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் குவிக்கப்பட்டன.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிகையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கை தலைநகர். கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலைக் காணப்பட்டது.

பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப் படை ஹெலி காப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப் பட்டன. பாதுகாப்பு கெடுபிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது. பிரச்சனை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது.

இந்த பயணத்தின்போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்து முக்கியமாக ஆலோசித்தார்கள். இலங்கை ராணுவ தளபதி பொன் சேகா, கடற்படைத் தளபதி கரன்ன கோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாகச் சந்தித்துப் பேசியது.

இந்தச் சந்திப்பின்போது சீனா மற்றும் பாகிஸ்தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர். ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீனா, பாகிஸ்தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராஜபக்சேவிடம் ஒரே ஒரு முக்கியச் செய்தியை மட்டும் சற்று உறுதிபடத் தெரிவித்து விட்டு வந்தது. அது 2009 இல் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக போரை முடித்துவிடுங்கள் என்பதுதான்.

தேர்தலின் போது ஈழப் போரின் நிழல் விழுவதையும் அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரஸ் அரசு விரும்ப வில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது. தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் அரசு பயந்தது.

இந்தியாவின் கவலையைப் புரிந்து  கொண்டார் ராஜபக்சே. அதே சமயம் அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. அதே சமயம் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து மேனன், நாராயணன், விஜய் சிங் கோஷ்டியினர் பாதி கோரிக்கைகள் நிறைவேறிய அரைகுறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.

கை கொடுத்த இந்தியக் கடற்படை

இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில்  பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.

இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்தக் கப்பல்கள் மூலம் புலிகளுக்காகக் கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது.

2006 ஆம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண் டிருந்தன. இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை, உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியைச் சுற்றி வந்தன.

அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்ட இந்த விமானங்கள் இலங்கை கடல் பகுதியில் ஐயத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்கு தெரிவிக்கும்.

உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படை யினர் அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாகக் கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற் புலிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர்.

இப்படி இந்தியாவின் உதவியால் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. 2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இது தவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின.

இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த் கரன்ன கொடா 2008 ஆம் ஆண்டு இவ்வாறு கூறினார். ‘இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையின் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது’ என்றார்.

மேலும் விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்துவிட்டோம். இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர் மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானவை.

இந்தியாவின் உதவியால் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு முறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம். அக்டோபர் 7 ஆம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது.
இலங்கை கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத் தான் விடுதலைப்புலிகளின் கப்பல்கள், படகுகளை தகர்த்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியக் கடற்படை கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்குச் சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை

புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகளின் பிரிவு பெரும்பலம் படைத்தது. ஆனால், இந்தியா இப்படி உளவு சொல்லி இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்ததை அவர்கள் அறிந்து கொள்ளாமல் விட்டுவிட்டதால் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது.

2009 மார்ச் மாதமே இந்தியாவின் உதவிகள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனாலும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தது இலங்கை. காரணம் அப்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஜுரம் தீவிரமாக இருந்ததால். ஆனால் இந்தியக் கடற்படை செய்த உதவிகள் இலங்கைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தன என்பது நிதர்சனம். கடற்படையின் தென்பிராந்திய கமாண்டர் மூலமாக மூன்று அதி விரைவு படகுகள், ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் ஆகியவை இலங்கைக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தன. 2007 ஆம் ஆண்டின் பின் பகுதியிலிருந்தே இந்தியாவின் இந்த உதவி தொடங்கிவிட்டது.

இப்படி இந்தியக் கடற்படையும், இலங்கை கடற்படையும் சேர்ந்து கடல் பகுதியை முற்றுகையிட்டு தொடர்ந்து இறுக்கி வந்ததால் கடற்புலிகள் கிட்டத்தட்ட செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு, புலிகளுக்கு பெரும் அடியாக அமைந்து போனது. யாழ்ப்பாணம் குடா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் தீவுதான் நெடுந்தீவு. இந்தத் தீவு இராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட சம தொலைவில் உள்ளது.

இந்தத் தீவை கடற்புலிகளை கண்காணிக்க மையமாக மாற்றிக் கொண்டது இலங்கைக் கடற்படை. யாழ்ப்பாணம் கடல் பகுதியை மட்டுமல்லாது மன்னார் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையும் இந்தத் தீவிலிருந்தே கண்காணித்து வந்தது இலங்கைக் கடற்படை.

ஆனால், 2007 ஆம் ஆண்டு மே மாதம் நெடுந் தீவில் உள்ள கடற்படை முகாமை விடுதலைப் புலிகள் துணிச்சலுடன் தாக்கினர். அங்கிருந்த 7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள் 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் 2 மெஷின் கன், ஒரு ஆர்.பி.ஜி. லாஞ்சர், எட்டு ரைபிள்களைத் தூக்கிக் கொண்டு தப்பினர்.
இந்த முகாமிலிருந்து ஒரு ரேடாரையும் புலிகள் எடுத்துக் கொண்டு போய் விட்டதாக கூறப்பட்டது. இது கடற்படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கோரியது. இந்த முறை இந்தியா உடடினயாக உதவி செய்தது. ஆனால், என்ன மாதிரியான உதவி என்பதை இரு தரப்பும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இப்படி இலங்கைக்கு மறைமுகமாக பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தும் கூட பாகிஸ்தான் சீனாவுடனான தனது நெருக்கத்தை இலங்கை அதிகரித்துக் கொண்டே போனது.
நன்றி : ‘விடுதலை முழக்கம்’

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 sivam 2011-06-08 15:19
katturaiyilirun thu thelivaaga therivathu ennavendraal, puligalai vendrathu ilangai alla, inthiyaathaan enbathe!
Report to administrator
0 #2 Renjith Kumar 2012-03-20 20:08
What a shame to Indian bad Congress govt.? How dare u to supply weapons and information to the fanatci singalese? Time will give answer. My dear Tamils plz thinnk about it. The congress govt should be removed from India? Sonia u r a ............... ......
Report to administrator

Add comment


Security code
Refresh