1. இந்தியா தனது விவசாய நலன்களுக்காக ஒரு துணைக்கோள் ( சாட்டிலைட் ) ஏவுகிறது. 

2. புதுதில்லியில் குடியரசு தின அணிவகுப்புக்குச் செல்வதற்கான ஐந்து பேர் கொண்ட குழுவை அனுப்ப பெண்கள் கல்லூரியின் NCC பிரிவொன்று பயிற்சியில் ஈடுபட மலைப்பகுதியில் இருக்கும் கல்லூரிக்கு வருகிறது.

3. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஆதிவாசிமக்கள் சமூகத்தைச் சார்ந்த வனக்காவலர் துருவன் (ஜெயம் ரவி) NCC இல் பயிற்சியாளர் ஆகிறார்.

4. இந்தியா துணைக்கோள் ஏவுவதைத் தடுக்க அந்நிய நாட்டு ஊடுருவல்களின் மூலம் சதி நடைபெறுகிறது.

காட்டிற்குள் நடக்கும் அந்நிய நாட்டுச் சதியை முறியடித்து, எந்தத் தடங்கலுமில்லாமல் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்தை கதாநாயகனுடன், பெண்கள் இணைந்து நிறைவேற்ற உதவுகிறார்கள். வழக்கமான அர்ஜுன், விஜயகாந்த்... படங்களைப் போல் செய்துவிட்டு கதாநாயகன் மட்டும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவன் என்பதாகக் காட்டியிருப்பது மட்டும்தான் வித்தியாசம். இடையில் சாதிவகையில் ஆதிவாசி மக்கள் அவர்களுக்குத் திறமையிருந்தாலும் இழித்துரைக்கப்படுகிறார்கள் என்று இயக்குனர் காட்ட முயன்றுள்ளார்.

திறமை X சாதி

மேல் சாதியினர் X ஆதிவாசி

என்ற கட்டமைப்பை மேலோட்டமாகப் பயன்படுத்தி பிரதானமான முரண்பாடுகளை வசதியாக மறைத்து விட்டார்.

முக்கியமாக ஆதிவாசிமக்கள் யாரும் தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று உள ரீதியாக எண்ணுவதில்லை.அவர்கள்,தாங்கள் இயற்கையின் புதல்வர்கள், மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமையுடனே வாழ்கிறார்கள். ஆனால் இங்கோ சமவெளியில் நிலை தலைகீழானது. தாழ்த்தப்பட்ட மக்கள் t;, தங்களைத் தாழ்த்தப்பட்டவராகவே எண்ண வைக்கும் உளச் சிதைவு நடைபெற்றிருக்கிறது. ஜனநாதன் அந்தச் சமூகத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதபடியால் இதைப் போன்ற காட்சிகளைப் படம் முழுவதும் சித்தரிக்கிறார். இதோடல்லாமல், ஆதிவாசிகள், அவர்களின் தற்கால வாழ்வைத் தீர்மானிக்கிற முரண்கள் பற்றிக் கதையாடலில் ஒரு சுவடும் இல்லை.

ஆதிவாசி மக்கள் கண மரபினர், குழுவாய் வசிப்பவர்கள், தலைவன் என்பவன் ஓர் நிர்வாக வசதிக்காக மட்டுமே, மற்றபடி முதிய அனுபவம் நிறைந்தோர்க்கே அதிக மரியாதை அளிப்பவர்கள். அத்தகையக் குழுவினரிடமிருந்து துருவன் (ஜெயம் ரவி) நாயகனாகப் புனையப்படுகிறார். பிரிட்டிஷ் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்கொண்ட சுதந்திரப் போராட்டத்தில் ஆதிவாசிகளின் பங்கு கணிசமானது. சந்தால் போராட்டம் துவங்கி பல்வேறு உறுதியான, நீண்ட வெற்றிகரப் போராட்டங்கள் அவர்களுடை யவை. இன்றும் அரசு அடக்குமுறையை எதிர்க்கும் மேற்குவங்காள மிட்னாபூர், மிசோரம், திரிபுரா, நாகா, மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிஸ்ஸா, ஆந்திரா, கர்நாடகாவில் நாகர்ஹோலே, கேரளாவில் முத்தங்கா,பிளாச்சிமடா, கோவை ஆனைகட்டியில் வன உயிரியியல் பூங்காவை எதிர்த்தப் போராட்டம் ஆகியவற்றில் ஆதிவாசி மக்களின் உறுதியும், போராட்ட குணமும் வியக்கத்தக்கது. அவர்கள் தங்கள் இயற்கை யையும், மண்ணுரிமையினையும் போராடிப் பாதுகாத்துக் கொள்வது தங்களுக்கு மட்டுமல்ல இந்த மனித குலத்திற்காகவும்தான்....

இத்தகைய சூழலில் 1980இல் காங்கிரஸ் அரசு தன்னுடைய விஞ்ஞான போர்த் தொழில்நுட்பத் திட்டங்களுக்காக ஒரிஸ்ஸாவில் பாலியபால் என்ற மாவட்டத்தில் ஆதிவாசி மக்களை வெளியேற்றி அங்கு தனது ஏவுகணைத் திட்டத்தை அமைத்தது. இத்தளத்தி லிருந்து ஏவப்பட்ட இவ்வேவுகணைகளுக்கும், துணைக் கோள்களுக்கும் அக்னி, ப்ருத்வி, ஆகாஷ், பிரம்மாஸ், ஆர்யபட்டா, பாஸ்கரா என்ற புராணத் தொடர்பு கொண்ட பெயர்களைச் சூட்டுவது குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இதற்கு மேலும் ஓர்படியாக பி.ஜே.பி.யின் வாஜ்பாயி அரசு புத்தர் புன்னகைக்கிறார்!(?) என்று முரண்நகையாக பொக்ரான் அணுகுண்டு வெடிப்புக்குப் பெயர் சூட்டியதைக் காண வேண்டும். வளர்ச்சி, போர்த் தொழில்நுட்பத் தை கைவரப் பெறல் என்றவகையில் ஆதிக்க, பிராந்திய வல்லரசு மனப்பான்மையின் விதை களாக இவை 70களில் ஊன்றப்பட்டன. அப்போது அதை எதிர்த்த ஆதிவாசி, சுதேசி, இயற்கை ஆர்வலர்கள் அதன் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இன்றும் ஆதிவாசி மக்களின் காடுகளானவை, மரங்கள், மூலிகைகள், கனிமங்கள், தனிமம், இயற்கைச் செல்வம், கிரானைட் போன்ற வளங்களுக்காகவும், இட ஆக்கிரமிப்பிற்காகவும் சூறையாடப்படுகின்றன. அவர்களின் சுயசார்ப்புத் தன்மையும் கலாச்சாரப் பழங்குடித் தன்மையும் அழித்தொழிக்கப்படுகின்றன.

70இல் ஊன்றப்பட்ட இவ்விதைகள் செடிகளாக மாறிவரும் சூழலில் இன்று இந்தியா பிராந்திய வல்லரசு மனோபாவத்தில் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2009 மே 18இல் நடந்த இலங்கை இனப்படுகொலை (ஈழப் போர்). பசில் இராசபட்சே, மகிந்த இராசபட்சே கூற்றின் படி இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்பதை வைத்துப் பார்த்தால் இந்தியாதான் இராணுவ தொழில்நுட்ப உதவிகளையும் உளவுத் தகவல் பரிமாற்றத்தையும் உடனுக்குடன் வழங்கிப் போரை வழிநடத்தி வந்தது. இதில் விடுதலைப் புலிகளின் படைப்பிரிவு நடமாட்டங்கள், மக்கள் தொகுதி இடம் பெயரல் போன்ற அனைத்தும், துணைக் கோள் உதவியுடன் பதிவு செய்யப்பட்டு இராணுவ உளவு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களாக இலங்கை ராணுவத்திற்குப் பரிமாற்றப்பட்டன. இலட்சக்கணக்கான தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.

போர் முடிந்த மூன்று மாதங்களில் இந்திய அரசின் விவசாயத்துறையின் அறிவிப்பாக, இலங்கை யின் உணவுதானிய உற்பத்தி, விவசாயத் தொழில் நுட்பத் தேவை ஆகியவற்றில் கைகோத்து இந்தியா இலங்கையுடன் செயல்படும் என்றும் இதன் முக்கியப் பொறுப்பில் மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் செயல்படுவார் என்றும் வெளிவருகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் பசுமைப் புரட்சியின் காரணமாக இந்திய விவசாயத்தை வெளி நாட்டு மலட்டு அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிமையாக்கியவர். பன்னாட்டு (ஏகபோக முதலாளிகளின்) நிறுவனங்களின் பூச்சிமருந்து, செயற்கை உரங்களின் சந்தையாக இந்திய விவசாயத்தை மாற்றிக் கொள்ளை இலாபம் அள்ளிக் கொண்டு போக அவர்களுக்கு உதவியவர். இவர்தான் இந்திய அரசாங்கத்தின் தற்போதைய விவசாயக் கொள்கை வடிவமைப்பாளர், பிரதம மந்திரியின் விவசாய ஆலோசகர், நவீனத்தொழில் நுட்பத்தினைக் கொண்டு இந்திய விவசாயத்தினை மாற்றியமைக்க அரும்பாடுபட்டு வருபவர்.

1. மூன்று மாதங்களுக்கு முன்பு கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தின் முன் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது என்ற செய்தி....

2. ஒரு மாதத்திற்கு முன்பு, தமிழ்நாட்டில் விவசாயப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள், அரசு அதிகாரிகள் தவிர வேறு யாரேனும் விவசாயத்தைக் குறித்த கருத்துக்களையோ, வகுப்புகளையோ, நடைமுறைகளையோ செயல்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்படுவர் என்ற சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

இவை இரண்டும் இந்திய விவசாயத்தின் சுயசார்ப்புத் தன்மையையும், இயற்கை விவசாயத்தையும் வேரோடு புதைக்கும் செயல்பாடாகும். TNAU எனப்படும் கோவை விவசாயப் பல்கலைக்கழகம், மான்சாண்டோ போன்ற பன்னாட்டுக் கழகங்களோடு தொடர்பு கொண்டு இங்கு விதையைச் சுயமாக எடுத்து அடுத்த விளைச்சலுக்கு உபயோகப்படுத்துவது என்ற நிலையை மாற்றி Genetically modified GM உணவினைத் தரும் மரபீனி மாற்றுவிதையைப் புழக்கத்தில் விட ஆராய்ச்சி செய்து நடை முறைப் படுத்தத் திட்டமிடுகிறது. இது மிகவும் அபாயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என கண்டறியப் பட்டதால் இன்னும் பல மேலை நாடுகள் கூட இத்திட்டத்தை முடக்கிவைத்துள்ளன. ஆனால் மத்திய/மாநில அரசுகளோ இதை எதிர்த்த விவசாயிகளைச் சிறையில் தள்ளின.

வடஇந்தியாவில் இயற்கை சார்ந்த விவசாயத்தைப் பிரபலப்படுத்தி வரும் பலேக்கர் என்பவரும், சாய்நாத் என்ற பத்திரிக்கையாளரும், திவீந்தர் சர்மா என்ற விவசாய உணவுத் துறையின் அறிஞரும், தமிழ்நாட்டில் நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகளும், நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பப் பயன்பாடும், பூச்சிமருந்தும், செயற்கை உரமும், மரபீனி நுட்பமும், மலட்டு விதைகளும், வணிகம் சார் பயிர்களும் (ஜட்ரோபா விளைச்சல்) ஓரினப் பாலை முறையும் எப்படி இயற்கைக்கும், உயிர்ச்சூழலுக்கும், மனிதகுலத் திற்கும் பெருந்தீங்காக முடியும் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து இயற்கை விவசாய விஞ்ஞானத்திற்கு வலுவூட்டி வருகிறார்கள்.

இயற்கை சார்ந்த இவர்களை எம்.எஸ். சுவாமி நாதன் வகையறாவும், பன்னாட்டுக் குழுமங்களும், இவற்றை அடியயாற்றும் TNAU யும், அரசும் எதிரியாக எண்ணி பீதியுற்றிருப்பதன் விளைவே தமிழ்நாடு அரசின் புதிய சட்டம்.

ஆக... பெரும் செலவைக் கொண்டும், முதலீட்டைக் கொண்டும் தீட்டப்படும் நவீனத் தொழில்நுட்ப விவசாய முறைகள் பன்னாட்டுக் குழுமங்களும் சில குழுக்களும் மட்டுமே பயனடைய உதவியாகவுள்ளன. மற்றபடி பெருமளவில் சுயசார்பு வேளாண் தொழிலுக்கும், இயற்கை விவசாயத் திற்கும் எதிராயுள்ளது என்பது நிதர்சனம்.

ஆனால் ஜனநாதனோ இந்த இந்தியத் துணைக்கோள் இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்யும் என கேழ்வரகில் நெய் வடிந்த கதையாகக் காதில் பூச்சுற்று கிறார்.

இந்தியாவில் சிறு விவசாயிகளை நகர்ப்புறம் சார்ந்த பிச்சைக்காரர்களாய் மாற்றிவிட்டு, அவர்களின் தற்சார்பு விவசாயத்தை அழித்து, வெளிநாட்டு உணவு மற்றும் விதைகளை இறக்குமதி செய்து புதிய நவகாலனிய அடிமை நாடாய் மாற்றும் முயற்சிகள் தொடர்கின்றன. இதில் எம்.எஸ். சுவாமி நாதன் போன்றோர் தளபதியாய் விளங்க, ஜனநாதனோ இவர்களின் கலை இலக்கிய ஊது குழலாகிறார். துணைக்கோள் ஆராய்ச்சிகள் எந்நாளும் விவசாயிகளுக்கு வசந்தத்தைக் காட்டப் போவதில்லை. ஆதிவாசிகளுக்கு விடியலைத் தரப் போவதுமில்லை. ஜனநாதனோ (ராக்கெட்) ஏவுகணையின் சுடு தீப்பிழம்பைச் சூரியன் எனக் கண்டு மயங்குகிறார்.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது. இதை உலகில் மிக முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக உயிரியலாளர்கள் கணிக்கின்றனர். பல் உயிரிவகை சார்ந்த மரங்கள் தச்சு மர வேலைக்காகாதென, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இயற்கையை அழித்துத் தேக்கு, யூகலிப்டஸ், வாட்டில் (சாயத்திற்கு உபயோகப்படும்) என்ற ஓரினப் பாலைகளை உருவாக்கினர். அப்போது வளர்ந்து கொண்டிருந்த உலகத் தேயிலைச் சந்தை அவர்கள் கண்ணை உறுத்தக் காடுகள் வெட்டப்பட்டு தேயிலையும், காப்பியும் பயிரிடப்பட்டது. இன்று நீலகிரி, மூணாறு, வால்பாறை, குடகு போன்ற இயற்கை ததும்பும் குளிர்ச் சூழலில் பயிராகும் இவற்றை இயற்கைச் சூழலியல் விஞ்ஞானிகள் பச்சைப் பாலை என்றழைக்கின்றனர். உலகின் இரண்டாவது சிரபுஞ்சியான தேவாளா (கூடலூர் . நீலகிரி மாவட்டம்) ஆண்டுக்கு 9 மாதங்கள் மழை பெய்யுமிடம் இன்று மழையில்லாமல் தவிக்கிறது. இத்தகையச் சீர்கேட்டை ஏற்படுத்தும் தேயிலைத் தொழில் ஐரோப்பிய, வெளிநாட்டுச் சந்தைக்காகப் பூச்சிமருந்தையும், உரத்தையும் தவிர்த்து ஆர்கானிக் டீ ஆக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேயிலைத் தோட்டத்தின் காட்சி கண்ணுக்கு அழகு என்பதால் ஜனா இதைப் பற்றியயல்லாம் அதிகம் அலட்டிகொள்ளாமல் கதாநாயகனை வைத்து ஒயம்மா,யம்மா ஒயம்மா, யம்மா ஒயம்மா, யம்மாஎன்று பாடி ஆட வைத்தி ருக்கிறார். ஏனெனில் ஆதிவாசிகளின் காட்டை யும், வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் அழித்து அவர்களைக் கூலிஉழைப்பாளியாக்கு வது தேயிலைக்காடு. உணர்வுள்ள எந்த ஆதிவாசியும் அதை எதிரியாகவே காண்பான்.

காட்டுப் புலியடிச்சு காட்டு ராசன் கொண்டு வராண்டா....”’’

காடு என்பது ஒரு பன்மய உயிர்ச்சூழல், காட்டில் தாவரங்கள் அதிக அளவிலும் அதற்கடுத்து மரங்களும், அதையடுத்து பூச்சிகள் விலங்குகள் என அமையும். ஆதிவாசி மூதுரை கூறுகிறது: புலி அழிந்தால் காடழியும்என்று. புலி உயிர்ச் சூழல் நாற்கரத்தின் (பிரமிட் ) உயர்புள்ளி... 25 சதுர கிலோ மீட்டருக்கு 1 புலி இருந்தாலே அக்காடு வளமிகுந்ததெனக் கொள்ளப்படும் எனச் சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புலிகள் தற்போது அழிந்து வரும் இனப்பட்டியலில் சேர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்கினத்தைச் சேர்ந்தவை. பல்வேறு ஆசிய நாடுகள் புலிகளைக் காப்பாற்றத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தோலுக்காகவும், மருத்துவப் பயன்களுக்காகவும் அழிக்கப்பட்ட புலிகள் ஏராளம்... இன்று எண்ணிக்கையில் அடங்கிவிடக்கூடிய அளவிலே புலியினம் இந்தியாவில் உள்ளது. ஆதிவாசி களுக்குப் புலி தெய்வம். (நமக்குத்தான் அது கொடிய விலங்கு எனப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.) அவர்கள் அதைத் தம் வாழ்வின் ஒரு பகுதியாகப் பார்க்கின்றனர். ஆனால் இயற்கையையும் ஆதிவாசி களையும் உயர்த்திப் பேசுவதாகக் கூறும் பேராண்மை திரைப்படத்திலோ

காட்டுப் புலியடிச்சு காட்டு ராசன் கொண்டு வராண்டா”’’

என்று புலியடித்த வீர காவியத்தைக் கூறும் மடமையைச் செய்து அதற்கு ஆதிவாசிகள் ஆடுவதாய் வேறு காட்டியிருக்கின்றனர்.

2009 ‘ மே மாதம் முள்ளி வாய்க்காலில் நடந்த போரில்/இனப்படுகொலையில் புலிகள் வீழ்த்தப்பட்டனர். வெண்கொடி ஏந்தி வந்த அரசியல் தொடர் பாளர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். அனைத்துப் போர் நியமங்களையும் மீறி மக்கள் சிதிலமாக்கப்பட்டனர். இந் நிகழ்வை அக்டோபர் 2009 இல் வெளியான இப்படம், முள்ளி மலையில் மக்களைக் கொன்று தின்று அச்சுறுத்திய புலி காட்டில் திரிய அதைப் பிடிக்கச் சென்ற ஆதிவாசி துருவன் மூன்று நாட்களாய் அலைந்து ஒற்றையாளாய்ப் புலியை வீழ்த்தி வலையில் இட்டுத் தூக்கி வருவதாகப் புனைகிறது. புலியை வெற்றி கொண்ட வீரனைப் பாராட்டி பாட்டுப் பாடி, மாலையிட்டு வரவேற்கின்றனர் ஆதிவாசி மக்கள். எவ்வளவு கொடூரமான சித்தரிப்பு!

தென் இலங்கையிலே இராசபட்சேவைப் பாராட்டி அவரது கட்சியினரும், சிங்களக் காடையரும் செய்கின்ற செயலை, உலகில் மக்கள் நேயமுள்ள, அன்பு கொண்ட எவரும் செய்வதற்குக் கூசும் செயலை ஜனநாதன்(பிம்பங்களாக்கிப் பதிவு) செய்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் முள்ளி (வாய்க்கால்) மலையில் புலியைப் பிடித்தவர், படத்தின் இறுதியில் தமிழ் (நிலத்திலிருந்து) மலையிலிருந்து சண்டையிட்டுப் பாதுகாத்து இந்தியாவின்/இந்திய மக்களின் (MNC,முதலாளி,அரசியல்வாதிகளின்) நன்மைக் காக வெள்ளி மலையிலிருந்து (இந்தியத் தேசத்தின் உச்சமாக உருவகப்படுத்தப்பட்ட வெள்ளி (பனி) மலையான இமய மலையைப் பாரதியார் பாடலின் வழியாக நினைவு கொள்க) ஏவப்படும் துணைக்கோளிற்கு வந்த ஆபத்தை நீக்கி வானில் ஏவச் செய்து தமிழன் பெருமையை விண்ணில் நிலை நாட்டுகிறார். இக்கதையாடல் மூலமாகத் தமிழ் அடையாளத்தை/தொல் அடையாளத்தை அழித்து இந்தியத் தேச அடையாளத்தின் மீது ஏற்றுகிறார்.

சிகரத்திலிருந்தும் நாங்க வளராம இருக்கோம்என்ற வைரமுத்துவின் வரிகள் எப்படி இவர்களின் நகரமயச்சிந்தனைகளிலிருந்து ஒரு ஆதிவாசி வாழ்க்கையைக் கண்டு தங்களின் கருத்துக்களை அவர்கள் மேல் சுமத்துகின்றனர் என்று பார்த்தால் இவர்களின் அனுபவ வறட்சியை நினைத்தும், வளர்ச்சி என்பது குறித்த சிந்தனைகள் கண்டும் நமக்குக் கோபம் எழுகிறது.

கூட்டு வாழ்வு, பொதுவுடைமை போன்ற இணைந்த வாழ்க்கை யிலிருந்து வெளிவந்து இன்று தனி நுண் அலகுக் குடும்பம், தேவைக்கான வகையில் மட்டும் உறவு, பணம் மற்றும் இலாபம் சார்ந்த நோக்கு, அன்பி லாத உறவுகள் என்று பல்வேறு சிக்கல்களும், மனம் சார்ந்த உடல் உபாதை களையும்கொண்டு தனியாக கழிவிரக்கத்தில் எதன் மீதும் நம்பிக்கையோ, பாசமோ, அன்போ, ஆதரவோ காட்டாத தனி மனிதர்களாய், மக்கள் மாற்றப்பட்ட சூழலில் ஆதிவாசிகளைப் பார்த்து நாங்கள் வளராம இருக்கோம்என்று அவர்களைக் கூற வைப்பது எவ்வளவு பெரிய மடமை... உங்களது ஏவுகணை களும், உயிரித் தொழில் நுட்பமும், மரபீனி விதையும், டி.வி.யும், ஆகாய விமானமும், கார் போக்குவரத்தும் செல்போனும், மெக்காலே கல்வியும், மனச் சிதைவும், உடல் உபாதைகளும், தற்கொலைகளும், பைத்தியக்காரத்தனமும் (ஆதி வாசிச் சமூகங்களில் மனச்சிதைவும், பைத்திய நோயும், தற்கொலையும் இல்லை) போரும், நயவஞ்சகமும், அழித்தொழித்தலும், சிறையும், கைதும், மரண தண்டனையும், இனப்படுகொலையும் தான் வளர்ச்சியா? இல்லை. நாம் இவற்றை வீக்கம் என்றே கொள்ள முடியும்.

இதைப்பார்க்கில் ஜனா தனது நோக்கத்தில் முற்றுமாகத் தோல்வியுற்றுள்ளார் என்பதே பொருந்தும். நாம் பேசிய செய்திகளைத் தாண்டி இப்படத்தினை அரசியல் நோக்கில் பொருத்திப் பார்த்தால் மார்க்சியத்தைக் குறித்தத் தவறான சவலைப் பிள்ளைப் புரிதலைத்தாண்டி எதையும் வெளிக் கொணரா அரசியல்தான் படத்தில் வெளிப் பட்டிருக்கிறது. அதனால்தான் புலியைப் பிடித்துக் கொண்டாடி, பாட்டுப்பாடி, தமிழ் நிலத்திலிருந்து பசுமை என்னும் பெயரில் செயற்கைக் கோள் செலுத்தி இந்தியத் தேசியப் பார்ப்பனிய பனியா கட்டமைப்பின் மேன்மைக்காக ஆதிவாசி துருவனை போர்க்களம் காணச் செய்திருக்கிறார் ஜனநாதன்.

இதற்காக மாவட்ட வாரியாக ஜனநாதனுக்கு த.மு.எ.ச. அமைப்புகள் விழா எடுத்துக் கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பின்னே ஒரே படத்தில், ஆதிவாசிப் பிரச் சனையை சொல்லி யாச்சு, வேளாண் மையைப் பத்திப் பேசியாச்சு, தொழில் நுட்ப வளர்ச்சி வேணும் னு கோரிக்கை வைச் சாச்சு, பெண் களுக்கு 82 சதவீதம் கொடுத் தாச்சு, இலங்கைத் தமிழர் துயர் துடைச்சாச்சு (புலியை அழித்து) ராக்கெட் விட்டாச்சு, இந்திய அரசைக் காப்பாத்தியாச்சு... இந்த மாதிரி மார்க்சியக் கருத்துகளை இன்னும் கட்சி கூட வெளிப்படையா சொல்ல முடியலையே?

பெண்கள் கல்லூரியிலிருந்து தேசிய மாணவர் படை (என்.சி.சி.) குழுவினர் மலைப்பகுதிக்குப் பயிற்சிக்கு வருகின்றனர். சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஐவரைத் தேர்ந்தெடுத்து தில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு விழாவிற்கு அனுப்பு வார்கள். ஆனால், இப்படத்திலோ சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஐவரை விடுத்து மோசமாகப் பயிற்சியயடுத்த ஐவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கல்லூரிப் பேருந்தில் மாணவிகள் கேலி, கிண்டல் பேச்சு துவங்குகிறது. மொத்தமாக 50க்கும் குறையாத மாணவிகள் இருக்க ஐவர் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். மற்ற மாணவிகள் வகுப்பிலும், பயிற்சியிலும் சரியாகச் செயல்பட இவர்கள் மட்டுமே துடுக்குத்தனமாக துருவனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புணர் வைக் காட்டிச் சிரமங்களை ஏற்படுத்துகின்றனர். இதற்குச் சாதியுணர்வு முக்கியப் பங்காற்றுவதாகக் காண்பிக்கப்படுகிறது. கிராமத்தில் ஆதிக்க சாதி மனோபாவம் தொடர்ச்சியாக ஊட்டப்படும் போதும், சாதி ஆதிக்கத்திற்கானத் தேவைகளை நிலைநாட்டும் போதும்தான் சாதிய அடக்குமுறை வெளிப்படும். ஆனால், இங்கு காண்பிக்கப்படுவதோ நகர்ப்புறம் சார்ந்த, தமிழில் கடிதம் எழுதுவதற்குக் கூட தெரியாத மாணவிகள். இவர்களைத்தான் சாதி மனோபாவம் கொண்ட பெண்களாகக் காட்டுகிறார் இயக்குனர்.

இவர்களுக்குப் பயிற்சி அளிப்பவரின் பெருமை தெரியவில்லை. எருமைக் கன்று ஈனுவதை மருத்துவம் பார்க்கும் மகத்துவம் தெரிவதில்லை. ஆதிவாசி இளைஞன் துப்பாக்கிச் சுடுதல், கூடைப் பந்து, கால்பந்து விளையாடுதல், வகுப்பெடுத்தல், பயிற்சி அளித்தல் என சகல கலைகளிலும் சிறந்து விளங்குவதில் மரியாதை வருவதில்லை என்று காட்டிவிட்டு, கூலிப்படையில் ஒருவனைக் கொல் வதைப் பார்த்து மதிப்பு வரும்படி காட்டியுள்ளனர். இந்தப் பண்பையுடைய பெண்கள் தான் தேசம் செலுத்தும் ஏவுகணைக்குப் பிரச்சினை என்றவுடன் உடனடியாகத் துப்பாக்கி தூக்கி சல்யூட் அடித்து உறுதி பூண்டு தேசம் காப்போம்! எனச் சபதம் செய்து கிளம்புகிறார்கள். ஜெய் ஹிந்த்!

1. ஏய்! என்னுடைய ஜட்டியைக் காணாம் என ஆரம்பித்து மஞ்சள் ஜட்டியா... இவ போட்டிருக்கிறத பாத்தேன்! என்று கூறி அதை அணிந்திருந்த பெண்ணிடமிருந்து கட்டாயப்படுத்தி உருவி அவிழ்த்து அதை முகர்ந்து பார்த்து ஐயே! என முகத்தைத் திருப்புவது ஓர் அழகுக் காட்சி...

2. துருவன் தனது கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிட்டு தேடுகையில் அவரிடம் உங்ககிட்ட நிஜமாகவே துப்பாக்கி இருக்கா சார் என்று அன்பாகக் கேட்பது.

3. துருவனைச் சிக்கவைப்பதற்காக இரவு 12 மணிக்கு விடுதிக்கு வரச் சொல்லி, “காட்டுக்குள் போகணும்னா நிர்வாணமாக வரச் சொல்கிறார்என ஒரு பெண் தானே முன் வந்து நிர்வாணமாய் நடப்பது ஒரு தீரம் மிகுந்த காட்சி.

4. விடுதி அறைக்குள் ஆண்/பெண் கொஞ்சும் விரச ஒலிகளை எழுப்பி வார்டன் வடிவேலுவைத் தூண்டும் குறும்பு மிகுந்த காட்சி.

5. “மெதுவடை நல்லாயிருக்காம்! சாருக்கு ரொம்ப பிடிக்கும் போல இருக்குஎன்று இதமாய் சொல்வது.

6. மலை உச்சி டெண்டில் குளிர்கின்ற இரவில், சார் பாம்பு காட்டறேன்னு சொன்னீங்க இதுவரை காட்டலையே என்று ஆசையாய் கேட்பது.

7. “காட்டுக்குள்ள போறதால நம்ம கற்புக்கே ஆபத்து வரும். கற்புன்னா என்னடி?” என்று வெகுளியாய்க் கேட்பது.

8. சார் நீங்க குளிருக்கு நெருப்பு போட்டு சூடாக்கிட்டீங்க,எங்க குளிருக்கு என்ன பண்ணுவீங்க? என்று நடுக்கத்துடன் கேட்பது.

9. மலைக் கிராம செக்போஸ்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில் பலூன் எடுப்பதுபோல் ஆளுக் கொரு ஆணுறை வாங்கி காட்டுக்குள்ள போறோம், எதுக்காவதுன்னா இது வேண்டாமா?” என்று முன் யோசனையுடன் கேட்பது.

இவை போன்ற பெண் விடுதலைக் கருத்துக்களை படம் முழுதும் வைத்திருக்கிறார் ஜனா. இதற்காகவேனும் அவரைத் தனியாகப் பாராட்ட வேண்டும். (ஜனநாயக மாதர் சங்கத்தினர் மன்னிப்பீர்களாக)

எல்லாக் குட்டி நகரங்கள் முதற்கொண்டு பெரு நகரங்கள் வரை ஒரு கதை உலாவும். பெண்கள் ஹாஸ்டலில் பால் கொடுக்கும் பால்காரன் மர்மமாய் இறந்துவிட்டான், ஹாஸ்டலில் கொலை செய்யப்பட்டு விட்டான். ஆணுறுப்பு விரைத்துக் காயம்பட்டுக் கிடந்த நிலையில் இறந்திருக்கிறான் (நினைவுக்கு :. அண்ணாமலை . ரஜினி படம் ) என...

பெண்கள் கூட்டமாய் இருந்தால் எதையும் செய்யத் துணிவார்கள். தனியாக இருக்கும் பெண் அவள் யாராக இருந்தாலும் ஓர் ஆணைத் தன் காம வலையில் சிக்க வைப்பாள். மனுநீதி; நமக்கு போதித்து வந்திருக்கும் பெண் குறித்த பிம்பங்களை எந்தவிதக் கேள்வியுமின்றி கையாண்டிருக்கிறார் ஜனா. இதன் மூலம் ஆணாதிக்கச் சமூகக் கருத்துக்களை, பெண்ணின் உடல், மொழி, மனம், காமம் குறித்தப் பதிவுகளை மீள்கட்டமைப்பு செய்திருக்கிறார். ரவியை (பேரா) ஆண்மை உடையவனாகக் காண்பிப்பதற்கு மற்ற பெண்களை வில்லி போலச் சித்தரித்துள்ளார்.

என்ன இருந்தாலும் இறுதியில் ஆண்மகனிடம் அடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எம்ஜிஆர் பாணியில் தேசபக்தி கீதம் பாடி இவர்களை ஒன்றிணைப்பது அற்புதம்! பெண்ணின் தனித் தன்மையான பெண்ணியத் தன்மைளோடு படைக்காமல் அவளையும் ஆண் தன்மைக்கு/ஆணியப் பார்வைக்கு ஏற்ப வார்த்தல் என்ற அபத்தச் சமநிலையை ஜனா முன்வைத்திருக்கிறார்.

கதையாடலில், ஆதிவாசிகளின் மீதான தாக்குதல் மற்றும் இடப்பெயர்ப்பு, பயிற்சிக்காக வந்த தேசிய மாணவர் படை மாணவிகளின் கதி என்னவாயிற்றோ என ரேஞ்சரின் தேடுதல் வேட்டையின்போது நிகழ்கிறது. இனத் தூய்மையின் உருவகமாக கற்பு கொள்ளப்படுகிறது. அது பாதிப்புக்குள்ளாகிறது என்கிற யூகம் கூட, மாற்றினத் தாருக்கு எவ்வித இடமும் இல்லாமல் அப்புறப்படுத்து வதாலேயே தன் இனம் காக்கப்படும் என வெறியாட்டம் கொள்கிறது. இந்த இனவெறி, அரசு அதிகாரமாக வெளிப்படுவது குரூரத்திலும் குரூரம். எந்த இனம் பாதுகாக்கப்பட உகந்தது என்பதை அரசு தேர்வு செய்யும் போது, அந்தத் தேர்வின் அநியாயத்தை எடுத்துரைத்தால் கூட, கேள்வி கேட்கும் இனத்தை அழித்தொழிக்கும் நியாயத்தை அரசு கற்பித்துக் கொள்கிறது.

ஓர் அரசின் இனவெறி யார் வாழத் தகுதியுள்ளவர்கள்/தகுதியில்லாதவர்கள் என்கிற தீர்மானமாக இருக்கும்போது, செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு இனவெறியை வெளிப்படுத்தும் நுண் அதிகார மையங்களைத் தனது அதிகாரத்திற்கென பயன் படுத்திக்கொள்ளும். ஒரு குடிமகளி/னின் பிறப்பு எவ்வினத்தில் நிகழ்ந்தது என்பது அவள்/ன் வாழும் தகுதியைத் தீர்மானிப்பதால், ஒவ்வொரு இனமும் மற்ற எல்லா இனங்களின் வாழ்வுக்கும் எவ்வாறு பங்களித்துள்ளன என்கிற வரலாறு காணாமல் போகச் செய்யப்பட்டு, உயர்ந்த / தாழ்ந்த இனங்கள் எனும் ஏற்றத்தாழ்வை இயல்பாக்க அப்புள்ளியை ஆரம்பமாகக் கொள்கிற பேரின வரலாறு ஒன்று எழுதப்படும். இந்தப் பேரின வரலாறு பொதுப் புத்தியைத் தீர்மானிக்கும் போது மேலிருந்து கீழாக எல்லாத் தளங்களிலும் இனவெறி இயல்பாக் கப்படும். எல்லாத் தளங்களிலும் செயல்படும் இந்தப் பலதள வன்முறையை வெறும் திறமையைப் புரிந்துகொள்ளாத மனப் பிரச்சினையாக, அறிநிலைக் குறைபாடாகக் கதாநாயகிகளின் மூலம் கதையாடலில் மாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் பலதள வன்முறையைப் பற்றிக் கேள்விகள் எழாதவாறு தேசப் பாதுகாப்பைக் கடமையாகத் தேர்ந்து கொண்ட அரசு ஊழியராக, தேசப்பாதுகாப்பைப் பயிற்றுவித்து செயல்படச் செய்யும் பயிற்சியாளராக நாயகனின் செயல் பாட்டையும் கதையாடலில் மாற்றியிருக்கிறார்கள். (நம்ம சக்திகளை, எதிரிகளை அழிக்கத்தான் பயன்படுத்தணும்.) எனவே, கதையாடலில் காதல் மட்டுமல்ல, இந்தப் பலதள வன்முறையும் ஒரு காட்சியாக மட்டுமே வந்து போகிறது.

பேராண்மை படத் தலைப்பின் முன் வரையப் பட்டுள்ள பாம்புச் சின்னம், அசப்பில் பார்த்தால் குறிபார்த்துச் சுடும் இலக்குப் பலகையின் தோற்றம் போலிருக்கும். ஆதிவாசிக் கதாநாயகன் நவீன ராணுவ உடையணிந்து உயர்வகைத் தொழில்நுட்ப அம்பு வில்லுடன் குறிபார்த்து நிற்பதாகத் தோற்றம் காட்டுகிறது.

தன் வாலைத் தானே விழுங்கும் பாம்புப் படமானது, மிகப் பழமை வாய்ந்த சித்த ஆன்மீக மரபுகளிலும், நாகர் வழிபாட்டிலும் தொடர்ந்து வரும் சின்னம் சார்ந்த தொன்மத்தில் ஒன்று. ஒரு பாம்பு தன் வாலைத் தானே முழுங்குதல் என்பது தன்னை, தன் மனத்தை அறிதல், அடங்குதல் என்ற புலனறிவைக் கடந்த அக விழிப்பைச் சித்தரிக்கும் பரிபாஷையைக் கொண்டது. ஆனால் இங்கோ (பேராண்மை படத்தலைப்பில்) இந்தப் பாம்பானது இரு தலையுடன் மண்ணுள்ளிப் பாம்பைப் போன்று அதுவும் துப்பாக்கி சுடும் இலச்சினையாக உருமாற்றம் பெற்றிருப்பது மரபுகளின் வேர் நுனியைக்கூடப் பிடிக்காமல் தொன்மங்களின் அர்த்தத்தையும் அறியாமல் புரியாத் தன்மைகளைப் பிரம்மாண்டமாகவும் (பேராண்மை யாகவும்) விளம்பரம் செய்வதால் வரும் வீழ்ச்சி யாகும்!

அகந்தையை அழித்தல்என்ற குறி உள்நோக்கிச் செல்வது. குறி தானல்ல... புறத்தில் உள்ளது என்ற பார்வை புறத்தை அழிக்கும்’... தன்னைச் சுடும், வீக்கத்தை வளர்ச்சியயனக் காணும்... அழிவை வெற்றியயனப் பார்க்கும்... இந்தப்படம் துவக்கத்தில் இருந்தே அந்தத் தவற்றைச் செய்துள்ளது.

பேராண்மை திரைப்படம் எடுத்துக் கொண்ட, படைப்பயிற்சி, ஆதிவாசி இனப்பிரச்சனை போன்ற கருவைக் கையாண்ட உலகப்படங்களை ஒப்புநோக்கினால் :.

Full Metal Jacket (Director Stanley Kubrick)ன் படி அமெரிக்க அரசு தன்படைக்கு ஆள்சேர்ப்பதையும், அப்படை வியட்னாமில் அப்பாவி மக்களுக்கெதிராகச் செயல்படும் நேரத்தில் அது எவ்வாறு இளைஞர்களின் சிந்தனைப் போக்கையும், சுதந்திரத்தையும் நொறுக்கிப் போருக்காக ஓர் இயந்திர மனிதனை உருவாக்குகிறது என்றும் துல்லியமாய் காண்பித்திருப்பார். அப்படத்தில் பயிற்சி எடுக்கும் இளைஞர்கள் எஎஎஎஸ்ஸ்ஸ்ஸார்என்றும் ஓகேகேகே ஸார்என்றும், அடி வயிற்றி யிலிருந்து உரக்கச் சொல்வதும், மனிதர்கள் கேள்வி கேட்காமல் அதிகாரத்திற்கு தலை வணங்கும் பண்பைக் கொண்டவர்களாக, வார்க்கப் படுதலைக் காணமுடியும். இவர்களைக் கொண்டே முன் பின் தெரியாத வனின், ஒரு பாவமும் அறியாதவனின் தலை யைக் கொய்ய முடியும், கையைக் கட்டி முதுகில் பூட்ஸ்காலால் உதைத் துக்கீழே தள்ளிக் குருவியைப் போல் சுட்டுக் கொல்ல முடியும், அப்பாவி மக்களைக் கரப்பான் பூச்சியயனக் கருதித் தேய்க்க முடியும். இலங்கையில் இலட்சக் கணக்கான மக்கள் இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டு கொத்துக் கொத்தாக அழிகையில் ஜனா, என்.சி.சி. மூலம் ஆளெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Aguirrie, The wrath of god . வெர்னர் யஹர்சாக்கின் உன்னதத் திரைப்படம். ஸ்பானிஷ் படை ஆதிவாசி மக்களிடத்தை ஆக்கிரமிப்பு நடத்தும் போது அவர்கள் காட்டிய வீரத்தைக் கூறுகிறது.

Rabbit Proof Fence ஆதிவாசிக் குழந்தைகள் சிறைப்படுத்தப்படுவர். தப்பிக்க வேண்டுமெனில் 1200 மைல்கள் கடக்க வேண்டும். கொக்கையும், பறவையையும் வழிகாட்டியாய்ப் பார்த்துத் தங்கள் சொந்த மண்ணிற்கும் மக்களுக்கும் ஏங்கி அதைத் திரும்ப அடைய நினைக்கும் உண்மைக் கதை....

காப்பெல்லோவின் Apocalypse Now மார்லன் பிராண்டோ நடித்தது. போர்த் தளபதியாய் இயங்கிய ஒருவன் போர்ச் சம்பவங்களின் ஊடே வாழ்வின் அர்த்தம் உணர்ந்து போர்புரியச் சென்ற மண்ணில் வாழ்ந்து வருகையில் அமெரிக்க அரசுப்படை அவருக்கு எவ்விதமான தீர்ப்பை வழங்குகிறது என்ற படம்.

தமிழின் எரியும் பனிக்காடுஎன்ற நாவல் பச்சைத் தேயிலையின் நிறம் சிவப்பு என்று பதைக்கிறது. சோளகர் தொட்டிநாவல், காக்கி அதிகாரத்திற்கும், ஆதிவாசி மக்களுக்கும் இருக்கும் எதிரிடை நிலையை விளக்குகிறது.

இதெல்லாம் ஜனாவிற்குத் தெரியாதா? தெரிந்தும் என்ன செய்வது... குத்தாட்டத்திற்குப் பதிலாக நல்ல வடிவாக 5 இளம் பெண்கள், கவர்ச்சியாக பாத்ரூம் பேச்சுக்கள், அருவிக் குளியல்கள், கார் சேஸிங் சண்டைப்படக் காட்சிக்காக, ஜீப் மலையில் விழும் காட்சி (சாரி. அதற்காக வேனும் ஓருமுறை Wages of Fear 1960இல் வெளி வந்தது பாருங்கள்), நாட்டை அழிக்கும் வில்லன் களிடமிருந்து ராக்கெட் டைப் பாதுகாக்க ஆக் ரோசச் சண்டை (இறுதியில் அனைத்து ஏரோ நாட்டிக்ஸ் ஹைடெக். லாஞ்சிங் கல்வியயல்லாம் கற்று எதிர் ஏவு கணையின் திசை மாற்றும் சாகசம்). ஹாலிவுட் படங்களின் தன்மையைக் கொடுக்க வாட்டசாட்டமான வெள்ளைத் தோலுடைய கூலிப்படை வில்லன்கள்... முழுமையான ஒரு மசாலாப்பட அளவுக்கு பேராண்மை வரக் காரணம் புரியவில்லை, இல்லை, தன்னம்பிக்கைக் குறை கொண்ட இப்படைப்புகள் தமிழுக்கு சாபக்கேடா? என்று தெரியவில்லை. மூலதனத்தைப் பற்றி வகுப்பெடுக்கும் ஜனா இலாபக் கணக்கை அதைவிடத் தெளிவாகப் போட்டிருக்கிறார் என்றுதான் இப்படம் உணர்த்துகிறது.

படத்தைத் தொகுத்துக் கூறினால், சமூகத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட ஆதிவாசி சமூகப் பிரதிநிதியைக் கொண்டு உரிமைகள் மறுக்கப்படுகின்ற பெண்ணினத்தைத் தேர்ந்து, (நினைவு கூர்க: இந்திய ராணுவத்தின் பாலியல் வன்செயல்களை எதிர்த்து மணிப்பூர் பெண்களின் / தாய்மார்களின் நிர்வாணத்தை (போர் ஆயுதமாய்) ஆடையாய் அணிந்த வீரமிகு போராட்டம்.) இவ்விரு கூட்டத்தையும் அந்நிலைக்குக் கொண்டுவரக் காரணமான போர்ப்படைத் தொழிலுக்கு (ஆணாதிக்கம்/போர்/இராணுவம்/ மையப்படுத்தப்பட்ட ஒற்றை அரசு) ஆள்பிடிக்கும் வேலையைச் செய்திருக்கிறது ஜனாவின் பேராண்மை படம். இதற்காக ஜனாவிற்கு பிராந்திய, தேசிய விருதுகள் வழங்கப்படும். மோகன்லால் போன்று என்.சி.சி.யில் சிறப்புக் கமாண்டர் அந்தஸ்து கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தக் கதை தமக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்று உள்ளூர அர்ஜுனுக்கும், விஜயகாந்திற்கும் ஏக்கமாய்த்தானிருக்கும். அந்தக் குறையை நீக்க செயற்கைக் கோள் பசுமை ஒன்றினைத் தொடர்ந்து பசுமை 2 வருவதைப் போல், பேராண்மை பகுதி 2ஐயும் ஜனா எடுப்பார் என நம்புகிறோம்!

தஹினே, பாயே, தஹினே, பாயே, பீச்சே மூட் ! ( ஹிந்தியில் )

நூல் பட்டியல்

1. டி.டி.கோசம்பியின் தொன்மங்கள், குறியீடுகள், உருவங்கள் குறித்த ஆய்வு

2. பியுசிஎல் லின் கூடலூர் நிலப்பிரச்சனையும், ஆதிவாசிகளின் வாழ்வாதாரமும் . உண்மை அறியும் குழு அறிக்கை

3. அழிவின் விளிம்பில் . முருகன்

4. உணவுப் பாதுகாப்பு . தீவிந்தர் சர்மா கட்டுரைகள்

5. விவசாயிகள் தற்கொலை . உணவுப்பஞ்சம் குறித்த சாய்நாத் கட்டுரைகள்

6. இயற்கைச் சூழல் குறித்த நம்மாழ்வார் கட்டுரைகள்

7. ஒற்றை வைக்கோல் புரட்சி . மாசானு புக்கோகா

8. மெளன வசந்தம் . ரேய்சல் கார்சன்

9. கலாச்சாரம் . அ.கலாச்சாரம் . எதிர் கலாச்சாரம் . அக்னி ஏவுகணை குறித்த நாகார்ஜுனன் கட்டுரைகள்.

10. ஓ.பி.டி.ஆர்..ன் மக்கள் X ஏவுகணை என்ற உண்மை அறியும் குழுவின் அறிக்கை.

11.இலங்கைக்கு இந்தியாவின் வேளாண் உதவி குறித்த வான்முகிலின் கட்டுரை.

- கோபித்திரு

 

Pin It