இரவில் ஒரு சின்னச் சத்தங்கேட்டாலும் நெஞ்சு விறைக்கத் தொடங்கிடும். இப்ப இருக்கிற நிலையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே? என்னவும் நடக்கலாம். ஆர் கேக்கிறது? ஒவ்வொரு கட்டத்திலயும் தப்பி வந்து கடைசியில ஏதோவொரு கட்டத் துக்குள் சிக்கிச் சீரழிஞ்சிடுவனோ ஆருக்குத் தெரியும்? எந்தப் பக்கந் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக்குள்ளால தான் திரிய விதிக்கப்பட்டவளாய் நான். எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமப்பட்டுத்தான் சொல்லுவாள். எண்பத்தேழாமாண்டில சனமெல்லாம் இடம்பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந் தனாங்கள். அவங்களால எந்தக் கரைச்சலு மில்லை. ‘அவங்கள் தங்கடை பாடு. நாங்கள் எங்கடைபாடு’ அப்ப நான் ஆறு வயதும் நிரம்பாத சிறுமி. ஆனால் இப்ப.... பாக்கிறவையெல்லாம் அம்மாவிடம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள்’ என்கினம். மற்றது அப்ப இருந்த மாதிரியில்ல இப்போ தைய நிலமை. பாக்கிற பார்வை யிலேயே பிடிச்சு விழுங்கியிடுவாங்கள் போலயிருக்கு.

வெளியேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில் இருந்து இறங்கி ஊர்ந்து திரியுற மசுக்குட்டியள் கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கதான். இவங்களின்ரை பார்வைய்ல இருந்து தப்பேலுமே?.. ஒரு நாளைக்கு முறையா அகப்பிடு. அப்ப பாரன் என்ன நடக்குமெண்டு. எண்டு சொல்லுற மாதிரியிருக்கு இவங்களின்ரை பார்வையள். இவங்களைக் கடந்து சைக்கிளில போகேக் குள்ள நெஞ்சு பக்.பக்.. எண்டிருக்கும். ஏதாவது காது கூசுறமாதிரி என்ர அவயவங் களுக்குக் குறிச்சுக் கொச்சைத்தனமாச் சொல்லுறதையே வழக்கமாக வைச்சிருக் கிறாங்க. நான் செவிடு மாதிரிக் குனிஞ்ச தலை நிமிராமல் போக வேண்டியதுதான். இதைத்தவிரப் பாதுகாப்பான வேறை வழியேதுமிருக்கோ? அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமோ? சொன்னாலும் அவையள் என்ன செய்யி றது? இவங்கட்கையில் படைக்கலங்களிருக்கு. எதுவும் செய்வாங்கள். அதனால என்ன நடந்தாலும் பேசாமல் பறையாமல் குனிஞ்ச தலை நிமிராமல் திரிய வேண்டியதுதான்.

கெம்பஸ் பெட்டையள் எண்டால் இவங்கள் வித்தியாசமாகத்தான் பாப்பாங்கள். ஏதோ நாங்கள வெடிபொருட்களைக் கொண்டு திரியறம் என்கிற மாதிரி லெக்சரசுக்கு றூமிலயிருந்து வெளிக்கிட்டுத் தனியப்போறதை நினைச்சால் பயமாயிருக்கு. நானும் சசியும் இருக்கிற றூம்ல இருந்து கூப்பிடு தூரத்திலதான் இவங்கடை முகாமிருக்கு. எப்படியும் அதைத் தாண்டித் தான் போக வேண்டியிருக்கு. உட்பாதைகள் எண்டு எதுமில்லை. நானும் சசியும் சேர்ந்து தான் லெக்சர்சுக்குப் போவம். நாங்கள் போகேக்க இவங்கள் காத்து நிண்டு சீக்கா யடிப்பாங்கள் அல்லாட்டில் ஏதும் காது கூசுகிற மாதிரி நொட்டை சொல்லுவாங்கள். நாங்கள் குனிஞ்ச தலை நிமிராமல் தான் போய் வாறம்.

சசி றூமில நிக்காத நாளில நான் லெக்சர்சுக்குப் போறேல்லை. ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகுதெண்டு உள்மனம் சொல்லுது. இப்ப பலாலி றோட்டால போகேக்க ஒரு மயானத்துக்குள்ளால போற மாதிரியிருக்கு. முந்தியெண்டா வீதி கலகலப் பாயிருக்கும். நிறைய வாகனங்கள் போய் வரும். இரவு பகலாய்க் கடையள் திறந்த வியாபாரம் நடக்கும். இப்ப அநேகமாக எல்லாக் கடைகளும் பூட்டிக்கிடக்கு. ஒண்டு ரண்டு சைக்கிள் திருத்திற கடையள் தவிர. இவங்கட வாகனங்கள்தான் வலுவேகமாய்ப் போய்வருகுது.

இப்பக் கொஞ்சநாளா ஒரு வழமை என்னெண்டா இவங்கட வானகத் தொடரணி போய்வாறதுக்காக றோட்டில சனங்களை மறிச்சு வைக்கிறாங்கள். மத்தியானம் பன்னிரண்டு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும் றோட்டில அடிக்கொருத்தனா நிக்கிறவங்களில் ஒருத்தன் விசில் ஊதுவான். அதுக்கு பிறகு யாரும் அசையேலாது. நீண்ட இடத்தில நிக்க வேண்டியதுதான். சில நேரங்களில் இ ரண்டு, மூண்டு மணித்தியாலத்திற்கு மேலை நிக்க வேண்டிவரும். இவங்கட வாகனத் தொடரணி போய் முடிஞ்சாப்போலதான் சனம் போகலாம். இதால நானும் சசியும் கனக்க லெக்சேர்சைத் தவறவிட்டிருக்கிறம். என்ன செய்யிறது எது நடந்தாலும் பேசாம லிருக்க வேண்டியதுதான். லெக்சேர்சும் முந்தின மாதிரி கலகலப்பாயில்லை. ஏதோ செத்த வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப்போய் வாற மாதிரியிருக்கு. லெக்சரர்மார் தொடக்கம் பொடியள், பெட்டையள் எண்டு எல்லாரின்ரை முகங்களும் இறுகிப் போய் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கவும் பயந்து, இப்பிடியே காலங்கள் கழியுது.

சில நாட்கள்ள சசி வடமராச்சியில இருக்கிற தன்ர வீட்டுக்குப் போகிடுவாள். றூமில நான்தான் தனிச்சிருக்க வேண்டி வரும். வீட்டுக்கார அன்ரி இருக்கிறாதான். அவ வேளைக்கு வைற்றை நூத்திட்டுப் படுத்திடுவா. படுக்கிறதுக்கு முதல் ஒருக்கா றூமை எட்டிப் பார்த்து பிள்ளை கெதியா வைற் ஓவ் பண்ணிப்போட்டுப் படுபிள்ளை படிக்கிறதெண்டா காலமை எழும்பிப் படியம். நான் படுக்கப் போறன்” எண்டிட்டுப் போய்ப்படுத்திடுவா. மனுசி படுத்ததுதான் தாமதம் குறட்டைவிடத் தொடங்கிடுவாள். அன்ரிக்கென்ன கவலை? வயதும் அறுபதைத் தாண்டியிடுத்து. பிள்ளையள் மூண்டு வெளிநாட்டில. புருஷன் காரன்ரை பென்சனும் கிடைக்குது. அதுக்குள்ளை எங்கடை வாடகைக்காகவும் அவ படுத் தோண்ண குறட்டை விடுகிறதுக்கு என்ன குறை?

இது தனிய நான் றூமுக்குள்ளை முடங்கினபடியே யன்னலையும் கதவையும் பூட்டியிட்டு இருள் விழுங்கின அறைக் குள்ளை புழுங்கி அவிய கண்ணோடை கண் மூடேலாமலுக்குப் பயந்து செத்தொண் டிருப்பன். வெளியில ஆரோ கனபேர் நடக்கிற மாதிரியிருக்கும். நாயள் வலுமோச மாகக் குலைக்கும். முத்தத்துப் பிலாவால உதிர்ந்த சருகுகள் நொருங்குகிற மாதிரியும் சத்தம் கேக்கும். இண்டைககு நான் துலையப்போறன் எண்டு நினைப்பன். என்ன நடந்தாலும் ஆருக்கும் தெரியாது. கதவு தட்டுற சத்தம் ஏதும் கேக்குதோ எண்டு காதைத் தீட்டிக்கொண்டு நெஞ்சுக்குள்ளை தண்ணியில்லாமல் உடல் விறைக்க அங்கால இங்கால அசையவும் பயந்து மல்லாந்து கிடப்பன். இரவு எனக்குப் பாதகமாய் நீண்டுகொண்டிருக்கும். வெளியில கேட்கிற சின்னச் சத்தமும் பீதியைக் கிளப்பும். பிலா மரத்தால ஏறி ஓட்டில நடந்து திரிகிற பூனை ரீய்ய்ய்ய.. எண்ட சத்தத்தோட தொடர்ந் திரையிற நிலக்கறையான். எங்கையோ இருந்து தேக்கம் பழங்களைக் கவ்விக் கொண்டு ஓட்டுக்கு மேல விழுதியிட்டு படக¢ படக் கெண்டு செட்டையடிச் சொண்டு போற வவ்வால். கிடக்கிற துக்கிதமாய் முத்தத்து மண்ணை வறுகிற அன்ரியின்ரை செல்லப் பிராணி ரொமி நாய். எல்லாம் எளிய மூதேசியள். திட்டம் போட்டுத் தாக்கிற விரோதியளப் போல இருள் விழுங்கியிருக்கிற இரவின்ர கனதியைக் கூட்டி என்னை வெருட்டிச் சாகடித்துக் கொண்டிருக்குங்கள்.

ஒரு கோழித்தூக்கம் மாதிரித்தான் என்ர நித்திரை. இடையில கெட்ட கனாக்களும் வரும். கண்முழிச்சா நான் ஆஸ்பத்திரிப் பிரேத அறைக்குள் கிடக்கிற மாதிரியிருக்கும். நெஞ்சு வேகமா அடிச்சுக்கொண்டிருக்கும். போதாக்குறைக்கு அன்ரி விடுற குறட்டைச் சத்தம் இன்னும் பயத்தைக் கிளப்பும். றோட்டில வாகனங்கள் இரையிற சத்தம் கேக்கும். என்ர உடம்பு தன்பாட்டிற்கு விறைக்கத் தொடங்கிவிடும். பிறகு பாத்தா வானங்கள் வீட்டை நோக்கி வார மாதிரியிருக்கும். இனியென்ன அவங்கள் வந்து கதவைத் தட்டப்போறாங்கள். அடையாள அட்டையைப் பாத்திட்டு நீ வன்னியில இருந்தா வந்தினி? உன்னில எங்களுக்குச் சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும் கெதியா வா? என்பாங்கள். நான் போக வேண்டியதுதான். நடந்தது ஆருக்குத் தெரியும். நான் துலைஞ்சு போகிடுவன். பிறகு பேப்பரில் செய்திவரும் என்னைக் காணேல்லயெண்டு. வரிக்கு வரி கடிதத்தில் பிள்ளை கவனம். பிள்ளை கவனம் எண்டு எழுதுகிற அம்மா தவிச்சுப் போவா. எதுக்கும் அன்ரியை எழுப்புவமோ? அப்படி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே சசி உனக்கினி வைதேகி எண்டொரு சிநேகிதி இல்லையடி. அவள் துலையப் போறாள். நடக்கப்போற அசம்பாவிதம் உனக்குத் தெரியாது. நீ உன்ர அம்மாவோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாய் எனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கு...

நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில் இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் புலம்பி¢க் கொண்டிருக்கிறன். பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில் என்ன நடக்குமோ? எண்டு மனம் தவிக்கத் தொடங்கிவிடும். எல்லாம் உலரத் தொடங்கும். வெக்கை தோலைக் கருக்கிக் கொண் டிருக்கும். ஒரு சொட்டு மழைவந்து இந்த இறுக்கத்தைத் குலைக்காதா? எண்டு மனம் ஏங்கும். மழை வாறதுக்கான எந்தவொரு அறிகுறியுமிருக் காது. ஹர்த்தல், கடை யடைப்பு நாள்களில் பகல் முழுக்க றூமுக்குள்ளதான் ஒடுங்க வேண்டியிருக்கும். உடம்பெல்லாம் வேர்த்தொழுக வெறுந் தரையில் மல்லாந்து கிடக்க வேண்டியது தான். ஏதும் நோட்சை எடுத்துப் படிக்கவும் ஏலாது. மனதில் எப்பிடிப் பதியும்? கண்கள் எழுத்துகளில் தாவிக்கொண்டிருக்க மனதில பயந்திருக்கும் காட்சியா ஓடிக் கொண் டிருக்கும். முகத்தைக் கறுப்புத் துணியளால்.... மறைச்சுக் கட்டிக்கொண்டு நிக்கிற அவங்கட உருவங்கள்தான் அடிக்கடி வரும். வெறிபிடிச்சு அலையிற நாயளாக அவங்கள் சனத்தை வெட்டியும் சுட்டும் கருக்கிக் கொண்டிருப்பார்கள். சனங்கள் எல்லாம் அவங்களால அடிச்சு நொருக்கப்படவும் சுட்டுக் கொல்லப்படவும் பிறந்ததுகள் மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு நிக்குங்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னம் மதியத் திரும்பினாப் போல நானும் சசியும் லெக்சர்ஸ் முடிஞ்சு வாறம். அண்டைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து அவங்களில இரண்டு பேர் செத்திட்டார்கள். பலாலி றோட்டால வந்த ஒரு பஸ்ஸை மறிச்சு இளந்தாரியள் இறக்கி கேபிள் வயறுகளாலையும், துவக்குச் சோங்குகளாலையும் நாலைஞ்சுபேர் வெறிபுடிச்ச நாயள் மாதிரி மாறி மாறி அடிச்சுத் துவைச்சுக்கொண்டிருந்தாங்கள். அப்பதான் நான் முதன்முதலா அவங்கள அடிச்சுத் துவைக்கிறதைப் பாக்கிறன். இப்பிடித்தான் என்னையும் சசியையும் போலப் பெட்டையள் தனியப்போய் அகப்பட்டால் சட்டையளக் கீலங் கீலமாகக் கீழிச்சி வாயால சொல்லேலாத வேலையள் எல்லாம் செய்வாங்கள் எண்டு நினைச் சோண்ண எனக்கெண்டால் தலை விறைக்கத் தொடங்கியிடுத்து. ஓரு மாதிரி தப்பித் தவறி றூமுக்கு வந்து சேந்தாப் போலயும் எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அண்டைக்கு இராமுழுக்க அவங்களட்ட நானும் சசியும் இன்னும் சில பெட்டையளும் தனிய அகப்படுறதும் அவங்கள் எங்களைக் குழறக்குழற இழுத்தொண்டு போய்ச் சட்டயளக் கிழிச் செறிஞ்சிட்டு சின்னா பின்னப்படுத்துறதுமா ஏதோ கனவெல்லாம் வந்து நான் படுக்கை யில் குழறியிட்டன். அடுத்த நாள் சசி என்னடி இரவிரவாக் கத்திக் கொண்டி ருந்தாய்? எண்டு கேட்டிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

எனக்கு உண்மையில் கோபம்தான் வந்தது. பேய்ச்சி இன்னும் நிலமை விளங்காமல் செல்லங் கொட்டுறாள் எண்டு. இவளை மாதிரித்தான் இங்கை கன பெட்டையளுக்கு நிலமை விளங்கிறதில்லை. நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக்கொண்டு வருகிறது. இனிமேல் பெண்ணாய்ப் பிறந்தனாங்கள் என்ன செய்யப்போறம்? எண்ட அச்சத்துக்குரிய பெரிய கேள்வி யண்டிருக்கு. ஆரிட்டையும் இந்தக் கேள்விக்கு விடையில்லை. திறந்த வெளியில் திரியிற செம்மறியாடுகள் மாதிரித்தான் எங்கடை நிலை. ஆரும் குளிருக்குப¢ போர்க்க எங்கடை மயிரை கத்தரிக்கலாம் அல்லாட்டில் இறைச்சிக்காக எங்களை வெட்டி பிளக்கலாம் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமலுக்குத் தலையக் குனிஞ்சு கொண்டு நிப்பம். அவ்வளவுதான் நான் அடிக்கடி நினைப்பன் இந்தக் கம்பஸ் படிப்பை விட்டுப்போட்டு ஊரில போய் இருப்பமெண்டு. பிறகு மூண்டு வருசமாக் கனக்கக் காசு செலவழிச்சாச்சு. படிப்ப முடிய இன்னும் ஒரு வருசங்கிடக்கு. பல்லைக் கடிச்சொண்டு பேசாமல் இருப்பம் எண்ட முடிவுக்குத்தான் வாறன். என்ன செய்யிறது.

எங்கை சண்டை தொடங்கினாலும் எங்களைப் போல பொம்பளையளுக்குத்தான் ஆபத்துக் காத்திருக்கும். ஆர்மிக்காறவங்களின்ர மிருகத்தனமான உணர்ச்சிகளுக்கு இரையாகிறதெல்லாம் நாங்கள்தான். அவங்கள் மாமிசத்தை நுகர்ந்த நாயள் கணக்காக அலைஞ்சு திரிவாங்கள். எப்ப சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்ப கடிச்சுக் குதறிப்போட்டுப் போவாங்கள். பேப்பருகளில் பெரிசாச் செய்தியள் வரும். பலர் கண்டனம் தெரிவிப்பம். மருத்துவப் பரிசோதனை அறிக்கையைப் பலரும் ஆவலோட எதிர்பார்த்திருப்பினம். பாலுறுப்புகளில் நகக்கீறலும், கடிகாயமும் அவதானிக்கப் பட்டிருப்பதான அறிக்கை வெளியாகும். வழக்குப் பதிவு நடந்து விசாரணையள் தொடங்கும். சாட்சியங்கள் இருக்காது. சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டனை வழங்கப்படும் எண்டொரு கூற்று வெளியாகும். பிறகு கொஞ்ச நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. அவங்கள் நல்ல பிள்ளையளாத் திரிவாங்கள்.

எல்லாம் ஓய்ஞ்சு நடந்த சம்பவத்தை மறந்தாப் போல திரும்பவும் தங்கடை வேலையளத் தொடங்கி யிடுவாங்கள். காலப்போக்கில் அறிக்கை வெளியிட விரும்புகிற சிலர் எழுதுவினம். ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இப்படி நடக்கத்தான் செய்யும். கொங்கோவைப் பாருங்கோ, வியட்நாமைப் பாருங்கள். ஈராக்கைப் பாருங்கள் இதெல்லாம் தவிர்க்ககேலாது எண்டு கனக்க ஆதாரங்கள் காட்டி விளக்குவினம். இதெல்லாத்தையும் நாங்கள் வாசிச்சுக் கொண்டு செம்மறியாடுகளாகத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரிய வேண்டியதுதான். என்னைப்போலப் பெட்டையளில அக்கறை யுள்ள ஒரு கடவுள் இருந்தால் அவர் கனவில யெண்டாலும் வரோணும். வந்தால் நான் கேக்கிற வரம் இதுதான். எங்களில உண்மையான அக்கறையுள்ள கடவுளாக நீர் இருந்தால் எங்களை உடன கிழவியாக்கி விடும். இல்லாட்டில் பால்குடிக் குழந்தை யாக்கி விடும். உம்மில நாங்கள் விசுவாசமா யிருப்பம். இதுகும் முடியாட்டில எங்களைக் கல்லாக்கி விடும் அல்லது சாக்காட்டிவிடும். உமக்குப் புண்ணியங்கிடைக்கும். நாங்கள் நிம்மதியில்லாமல் எவ்வளவு காலத்துக்குச் செத்துக்கொண்டிருக்கிறது?

(குறிப்பு: சென்ற வருடம் இச்சிறுகதை எழுதப்பட்டது. இப்பொழுது ஈழப் பெண்களின் நிலைமை இதைவிடக் கொடுமையாகச் சீர்குலைந்து போய்கிடக்கிறது.)

- பா.கார்த்திகா

Pin It