தமிழ்நாட்டில் வண்ணார் எனப்படும் சாதியினர் குறித்து பேராசிரியர்.ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் ’தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்’ எனும் நூல் எழுதியுள்ளார். புதிரை வண்ணார் சமூகம் மட்டும் தாழ்த்தப்பட்ட சாதியாக ஒதுக்கப்பட்டு அச்சாதியினர் அல்லது வகுப்பினர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.

மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சுருக்கமாக 41 சாதியினர் உள்ளனர். அதிலே வண்ணார், மருத்துவர் சாதிகளும் உண்டு. வண்ணார் சாதியினர் மடிவலா, ஏகாலி, ராஜகுலா, வெளுத்தாடர், ராஜாகா உட்படப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். 1954ஆம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வர் திரு.காமராஜ் அவர்களிடம் தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சம்மேளனம் தாழ்த்தப்பட்ட (அட்டவணை) வகுப்பினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மனுக்கொடுத்தது. கல்வியில், பொருளியலில் எப்பங்கும் இல்லாத காலம் என்றாலும் முற்றிலும் தீண்டத்தகாதவர்களாக இல்லை என்பதால் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அதன் பிறகு அதே சலுகைகள் மிக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வேண்டும் எனவும் மனு கொடுக்கப்பட்டது.

காலம் கடந்து இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ்நாடெங்கும் உடல் உழைப்பாளர்களாக, சலவைத் தொழிலாளர்களாக இருந்து வரும் இச்சமூகத்தினரை பற்றியும் சட்டநாதன் குழு ஆய்வு செய்தது. இன்றைக்கு தமிழ்நாடெங்கும் சலவைத் தொழிலாளர்கள் முறையாகக் கூட்டம் கூட்டி விவாதமும் நடைபெறுகிறது. .மத்திய சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் உண்டு. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வண்ணார் பேரவை மதுரையில் மாநாடு நடத்தியது. தென் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டது. குறிப்பாகக் கோரிக்கைகளில் மிக முக்கியமானதாக மிகப் பிற்படுத்தப்பட்டோரில் மருத்துவர், வண்ணார் உள்ளிட்ட சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கும் அனுப்பப்பட்டது. 

சட்டநாதன் குழுப் பரிந்துரைகளில், வண்ணார் சமுதாயம் காலை முதல் மாலை வரை ஆற்று நீரில் நின்று, சோப்புகள் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதால் தோல் நோய் ஏற்படுகிறது, மரணமும் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சமூக அடிநிலைக் காப்புறுதித் திட்டம் (Social Basic Insurance) வேண்டுமென்று கூறியது. மிகக் குறைந்த வட்டிக் கடன் மூலமும் கூட்டுறவுக் கடைகள் மூலமும் சலவை சோப், வாஷிங் சோடா கொடுக்கவும் வலியுறுத்தியது. அதன் படி அப்போது கிடைத்தது இப்போது இல்லை. அது சலவைத் தொழிலாளர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் கோரியது. 1970களில் சட்ட நாதன் குழு தந்த பரிந்துரை இது வரை கண்டு கொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டில் இன்று எக்கட்சியும் மருத்துவர், வண்ணார் சாதியிலிருந்து யாரையும் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கோ ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கோ நிறுத்துவதில்லை. இது அப்பட்டமான சமூகப் புறக்கணிப்பு ஆகும். ஒதுக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் இயக்கங்கள் வேலை செய்த தமிழ் நாட்டின் இன்றைய நிலைமை இது. சமூக நீதி இச்சமூகங்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1991இல் உலகமயம், தாராளமயம் வந்த பிறகு வண்ணார், மருத்துவர், சமுதாய மக்களின் நிலைமை இன்னுங்கூட மோசமானது. பெரும் வணிக நிறுவனங்கள் நவீன சலவைக் கூடங்கள் நடத்தி மிகப் பெருமளவு வருவாய் ஈட்டுகின்றன, மருத்துவ சமுதாயத்தினர் நடத்தி வந்த சலூன் கடைகளுக்கு மாறாக தனிப் பெரும் முதலாளிகள் முடித்திருத்தகங்கள் நடத்திப் பெருத்த இலாபம் ஈட்டி வருகின்றனர். இதன் விளைவாக இம்மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது.

ஒருபுறம் வருணாசிரமத் தொழில் முறை ஒழிகிறது என நினைத்தாலும் மாற்றுவேலை, மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்யப்படவில்லை. இச்சமூகங்கள் கல்வியிலும் பின்தங்கிய நிலையில் உள்ளன. 

இரண்டாம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நிலைக்குழு பிற்படுத்தப்பட்ட நிலையினைத் தீர்மானிக்க மூன்று அளவுகோல்களைப் பின்பற்றியது.

  1. சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்டது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதி/வகுப்பு.
  2. தொழில் ரீதியில் பிற்படுத்தப்பட்ட நிலை.
  3. தன் பிழைப்பிற்கு உடலுழைப்பை அல்லது ’அசுத்தமான; அல்லது ’இழிவான’ தொழிலை நம்பியுள்ள சாதி/வகுப்பு.

சாதித் தொழிலுக்குச் செல்லும் பெண்களின் சதவீதம் மாநில சராசரி அளவை விட 10 சதவீதமாவது அதிகமாவது உள்ள சாதி வகுப்பு 

குடிசைகளில் வாழ்கின்ற குடும்பங்களின் சதவீதம் மாநில சராசரி அளவை விட குறைந்து 10 சதவீதம் அதிகமாக உள்ள வகுப்பு/சாதி.

வாழ்க்கைச் செலவுக்குக் கடன்கள் வாங்குகின்ற குடும்பங்களின் சதவீதம் மாநில சராசரி அளவை விட குறைந்தது 10 சதவீதமாவது அதிகமாக உள்ள சாதி/வகுப்பு அல்லது லேவாதேவிக்கார்ர்கள்/அடகு பிடிப்பவர்களிடமிருந்து கடன்கள் வாங்கும் குடும்பங்களின் சதவீதம் மாநில சராசரி அளவை விட குறைந்து 10 சதவீதமாக உள்ள வகுப்பு.

இது தவிர கல்வி ரீதியில் 1) எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். 2) படிப்பை இடையில் நிறுத்தியவர்கள். 3) ஏனைய எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என நிர்ணயம் செய்யலாம் எனவும் அளவுகோல்கள் உள்ளன.

இது தவிர மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இந்நிலையைப் போக்க, மிக பிற்படுத்தப்பட்ட பிரிவில் உட்பிரிவு செய்ய ஆணையம் (Commission) அனுமதிக்கப்பட்டு ஆணைய அறிக்கை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, அந்த அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது. கடந்த 19.09.2019இல் திருச்சி உழவர் சந்தைத் திடலில் தமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய மாநாட்டில் அந்த ஆணைய அறிக்கையை வெளியிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழக அளவில் மேற்சொன்ன அறிக்கை வெளியிடப்படல் வேண்டும். மானிய அடிப்படையில் தொழில் தொடங்க வண்ணார், மருத்துவ வகுப்பினருக்கு உயர் கல்வி உட்பட கல்வி கட்டணமில்லாக் கல்வி வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகையும் அளிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் உள்ளன. 

வண்ணார், மருத்துவர் சமூகங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுவது தமிழ்த் தேசிய சமூக நீதி ஆற்றல்களின் கடமை ஆகும்.

Pin It