கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதுவே சாதி ஒழிப்பிற்குச் சரியான நடவடிக்கை என்ற தந்தை பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த பெரியாரின் தொண்டரான அறிஞர் அண்ணா அவர்களால் 1967-ஆம் ஆண்டு சூன் மாதம் அரசின் நிதிநிலை அறிக்கைத் தொடரில் கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தும் திட்டம் தமிழகச் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.  கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 24 கேரட் கொண்ட 1 பவுன் தங்கப் பதக்கமும் தமிழக அரசின் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும் என்று அன்றைய தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்.

wedding 600அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே முதல்முறையாக இந்து திருமணச் சட்டம் திருத்தப்பட்டு சடங்குகள் இல்லாமல் நடத்தும் சீர்திருத்தத் திருமணங்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று சுயமரியாதைத் திருமணச் சட்டத்தையும் அறிஞர் அண்ணா அவர்கள் சட்டம் இயற்றி இந்திய ஒப்புதலையும் பெற்றார்.  மேற்கண்ட திருமணத் திட்டத்திற்காக முதன்முதலாக ஒவ்வொருவருக்கும் உருவா.1000/- வழங்க மாநில நிதிநிலை அறிக்கையில் தொகை (பட்ஜெட்டில்) ஒதுக்கினார்.   

மேற்கண்ட திருமண உதவித் தொகை பெற தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கும் மற்றும் முற்பட்ட/ பிற்பட்ட/ மிகவும் பிற்பட்ட வகுப்பினரிடையே நடக்கும் திருமணங்கள் மட்டுமே தகுதியுடையவை ஆகும் என அறிவிக்கப்பட்டது.

1970-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் மேற்கண்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு தங்கப் பதக்கம் அல்லது உருவா 200/- திருமண உதவித் தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. 1973-ஆம் ஆண்டு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டு 1 பவுன் தங்கப் பதக்கத்துடன் உருவா. 200/- திருமண உதவித் தொகை மற்றும் சிறுதொழில் தொடங்க வட்டியில்லா கடன் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கும் இலவச வீட்டு மனைகளில் ஒரு மனை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேற்கண்ட சலுகைகள் சிறுதொழில் கடன் உதவி இலவச வீட்டு மனை போன்ற சலுகைகள் கலப்புத் திருமண இணையர்களுக்கான சிறப்பான சலுகைகள் எதுவும் இல்லை.  மாறாகத் தம்பதிகள் ஒருவர் தாழ்த்தப்பட்டவரோ அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடியினராக இருந்தால் அவர்கள் பெயரில் மேற்கண்ட சலுகைகள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தின் முதல்வராக ஆனதும் கலப்புத் திருமண இணையர்களுக்கான சலுகைகள் புதிய வேகமும், சிறப்புத் தன்மைகளும் பெற தொடங்கியது. உரு. 200/-க்கான திருமண உதவித் தொகையை உரு. 1000/-மாக உயர்த்தியும் கூடுதலாக ரூ.4000/-க்கான தொகை இணையர்களின் பெயரில் தேசிய சேமிப்புப் பத்திரமாக அளிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து அதன் முதிர்வுற்ற தொகை சுமார் ரூ.8000/-த்தை பெறும் வகையில் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆணையிட்டார்.

இந்நிலையில் சேலத்தில் கலப்புத் திருமண இணையர்களுக்காகத் தனியாக எங்களால் சங்கம் தொடங்கப்பட்டு இந்தியாவிலேயே முதன்முறையாக 1984-ஆம் ஆண்டு மே-21ஆம் நாள் கலப்புத் திருமண இணையர்களின் முதல் மாநில மாநாடு சேலத்தில் நடத்தப்பட்டது.  மேற்கண்ட மாநாட்டில் கலப்புத் திருமண இணையர்களின் கோரிக்கைகள் அரசுக்குத் தீர்மானமாக அளிக்கப்பட்டது.

கோரிக்கை நிறைவேறாததால் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் எனது சங்கத்தால் நடத்தப்பட்டுக் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அதனையடுத்து அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து அணுகியதில் கலப்புத் திருமண இணையர்கள் சலுகைகளில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டது.  அதாவது 1986-இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணி அளிப்பதில் கலப்புத் திருமண இணையர்களுக்கு முன்னுரிமை அளித்து ஆணை பிறப்பித்தார். சமூகத்தாலும், குடும்பத்தாலும் வெறுக்கப்பட்டும், விலக்கி வைக்கப்பட்டும், அவமானப் படுத்தப்பட்டும் வாழ்ந்த கலப்புத் திருமண இணையர்கள் மேற்கண்ட அரசாணையின்படி அரசு வேலை பெறத் தொடங்கினர். அது இன்றைய நாள்வரை தொடர்கிறது.

கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 1988-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த பெரியாரின் தொண்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த முதல் முன்னுரிமையை நீக்கி 2-வது இடத்திற்குத் தள்ளி வைத்தார். அதன் விளைவாகக் கலப்புத் திருமணத் தம்பதிகள் வேலைவாய்ப்பினைப் பெறுவதில் ஒரு பின்னடைவைச் சந்தித்து வருகிறது. 

1987-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கலப்புத் திருமணத் தம்பதிகளின் மகன், மகள்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.இ. போன்ற தொழிற்படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எமது சங்கத்தின் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது.  கோரிக்கையை உடனே ஏற்று 6 மருத்துவ இடங்களையும், 5 பொறியியல் இடங்களையும், 2- சித்தமருத்துவ இடங்களையும் எம்.ஜி.ஆர். அவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகளின் மகன், மகள்களுக்கு வழங்கி ஆணை பிறப்பித்தார்.  எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்குமாறு அளித்த கோரிக்கையை ஏற்று 12 இடங்கள் அளித்து ஆணை பிறப்பித்தார். மேற்கண்ட சிறப்புச் சலுகையின் அடிப்படையில் கலப்புத் திருமணத் தம்பதிகளின் மகன், மகள்களுக்கு ஆண்டுதோரும் 12 இடங்களைச் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் பெற்றனர்.  தன் தகப்பன் அல்லது தாயின் சாதியின் அடிப்படையில் சலுகை பெறாமல் சிறப்புச் சலுகையில் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற்றனர்.

2000-ஆம் ஆண்டு நடந்த மருத்துவப் படிப்பு ஒதுக்கீடு செய்வதில், மருத்துவக் கல்வித் துறையால் மேற்கண்ட சிறப்பு ஒதுக்கீட்டை அளிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் முற்பட்ட வகுப்பினருக்கும் இடையே திருமண உறவின் மூலம் பிறந்தவர்களுக்கு முதலில் எம்.பி.பி.எஸ். அளித்து மீதி இருக்கும் இடங்கள் மட்டும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கும் இடையே திருமண உறவின் மூலம் பிறந்தவர்களுக்கு அளித்து குழப்பத்திற்கு தீர்வு வேண்டி மேற்கண்ட 12- இடங்களுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசையில் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  வழக்கின் முடிவில் குரங்கு அப்பத்தைப் பங்கிட்டதைபோல வழக்கிற்குச் சம்மந்தமில்லாத வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஒதுக்கீடு 69% இடஒதுக்கீட்டிற்கு அப்பால் உள்ளதால், அதுசட்டப்படி செல்லுபடியாகது என்று 12 இடங்களையும் நீக்கம் செய்தது.  மேற்கண்ட தீர்ப்பினை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  வழக்கு இன்றுவரை நிலுவையில் உள்ளது. 

அடுத்து, எமது கோரிக்கைகளில் ஒன்றான முற்பட்டவருக்கும், பிற்பட்ட/ மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கும் நடக்கும் திருமணங்களையும் கலப்புத் திருமணத் தம்பதிகள் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மேற்கண்ட வகைத் திருமணமும் கலப்புத் திருமணம் எனத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  இப் பிரிவினருக்குத் திருமண உதவித் தொகை மட்டுமே வழங்கப்படும்.  வேலைவாய்ப்புச் சலுகைகள் பெற இன்னும் ஆணைகள் பிறப்பிக்கப் படவில்லை.

இடைநிலை ஆசிரியப் பயிற்சியில் சேர வயது வரம்பு தளர்ச்சி, கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு அளிக்க வேண்டும் என எங்கள் சங்கம் கோரிக்கை விடுத்ததையடுத்து அரசு ஏற்று கீழ்க்காணுமாறு ஆணை பிறப்பித்துள்ளது.

  1. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரின் வயதுவரம்பில் இருந்து கலப்புத் திருமணம் செய்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ஆண்கள் பெண்களுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பு தளர்ச்சி.
  2. பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு உள்ள பொதுவான வயது வரம்பில் இருந்து கலப்புத் திருமணம் செய்துகொண்ட பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பு தளர்ச்சி.
  3. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள பொதுவான வயது வரம்பில் இருந்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வகுப்பினருக்கு 2 ஆண்டுகள் வயது வரம்புத் தளர்ச்சியை அரசு அளித்துள்ளது.

விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்இணைப்பில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு அறிவித்துள்ளது. 

நாடெங்கும் பரவலாக நடந்துவரும் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் முயற்சியாக உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை இடத்திலும், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  பாதுகாப்புக் கோரிய கலப்புத் திருமணத் தம்பதிகள் மேற்கண்ட அலுவலர்களையோ அல்லது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரையோ அணுகி பாதுகாப்பினைப் பெறலாம்.

ராசசுதான் மாநில அரசு, கலப்புத் திருமண இணையர்களுக்கு உரு.5,00,000/- வழங்கி வருகிறது.  மேலும் இந்தியாவில் பல மாநிலங்களும் கலப்புத் திருமண இணையர்களுக்கு குறைந்தது உரு.1,00,000/-இற்குமேல் வழங்கிவருகின்றன.  ஆனால், தமிழக அரசு கலப்புத் திருமண இணையர்களுக்கெனத் தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யாமல் பெண்களுக்கென பொதுவாக அளிக்கப்படும் திருமண உதவியினைக் கலப்புத் திருமண இணையர்களுக்கும் அளித்து பட்டம் பெற்ற பெண் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் உரு.50,000/-மும் ஒரு பவுனும், பட்டம் பெறாமல் உள்ள பெண் கலப்புத் திருமணம் செய்துகொண்டால் ரூ.25,000/-மும் ஒரு பவுனும் வழங்கி வருகிறது. கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களில்கூட பட்டம் பெற்ற பெண்கள், பட்டம் பெறாத பெண்கள் என 2 வகையாகப் பிரித்து இந்தியாவிலேயே மிகக் குறைவான திருமண நிதி உதவிகள் வழங்குவது தமிழ்நாடு மட்டுமே என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும்.  ஆனால், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரின் ஆதரவு பெற்ற கலப்புத் திருமணம் இப்போது எல்லா வகையிலும் ஓரங்கட்டப்படுவது நாம் அனைவரும் வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்திய அரசு சமூகநீதி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் அப்பேத்கர் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள மொத்தமாக 500 பேர்களுக்கு மட்டும் உரு.2,50,000/-ம் 2013-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.  தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கேற்ப 36 பேருக்கு மட்டும் வழங்குகிறது.  மேற்கண்ட நிதி வழங்குவதிலும் தமிழ்நாடு அரசுப் பதிவுத் துறை வழங்கும் இந்துத் திருமணப் பதிவுச் சான்று 1955-ஆம் ஆண்டு இந்துத் திருமணச் சட்டத்தின்படி உள்ளதா எனத் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது,  இதனால், கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மேற்கண்ட நிதிஉதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டியதாகும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு,

மு. அழகேசன்,

தலைவர், கலப்புத் திருமணத் தம்பதிகள் சங்கம்,

தலைமை அலுவலகம், சேலம் - 636008

பேசி: 9442927157