மறியலுக்கு முதல் நாள் : பெத்துநாய்க்கன் பேட்டையில் பெரியாரின் சொற்பொழிவு பார்ப்பனரோடு இந்திப் போட்டி பலிக்குமா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததியார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. இந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படியில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் இந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட் ஒரு மொழியை நமது சிறுவர்களின்மீது திணித்து அவர்களைக் கொடுமைப் படுத்தலாமா? என்பதுதான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார் தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என்மீது கோபித்துக் கொள்ள மாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்க ரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்கு பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டி யாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள், சுமார் 10 தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித் தான் எனது மூதாதையரும் தமிழ்நாட்டை அடைந்திருக்க வேண்டும்.

10 தலைமுறைகளாக தமிழ்நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழ நேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்த மொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத் தான் புரியுமே யல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங்கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பழகித் தமிழே பேசி வந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு மறந்து போய்விட்டதென்றால், சரிவரக் கற்க, சரிவரப் பேச முடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் இந்தியை எப்படிப் படிக்க முடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

இப்படிப்பட்ட தமிழ் மாணவர்களால் எப்படி வடமொழி யிலேயே ஊறிய இரத்தம் பாய்ந்து கொண்டிருக்கும் பார்ப்பனச் சிறுவர்களோடு போட்டிபோட முடியும்? இதைத்தான் நான் ரெட்டியாரிடம் எடுத்துச் சொன்னேன். இதையெல் லாம் கேட்டுக் கொண்டு கடைசி யாக ரெட்டியார் கூறினார். (ரெட்டியார் கூறினார் என்றால் சர்க்கார் கூறியது என்று தான் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும்). “நாம் ஹிந்துஸ்தான் யூனியனில் இருக் கிறோம். ஆதலால் ஹிந்துஸ்தான் யூனியன் பாஷையாகிய ஹிந்தியை படித்துத்தான் ஆகவேண்டும்; கண்டிப்பாகப் படித்துத்தான் தீரவேண் டும்” என்று. இதற்குத்தான் “கட்டாயமில்லை” என்று அர்த்தமா என்று கேட்டுவிட்டு, ஹிந்தியை எக்காரணம் கொண்டும் நம்மால் ஏற்கமுடியாது என்று கூறிவிட் டேன்.

எனவே ஹிந்தி நுழைப்பை எதிர்ர்த்துத்தான் ஆக வேண்டும். அவர்கள் ஹிந்தியைக் கைவிடுமாறு செய் யப்படும் வரைக்கும், அந்த அளவுக்கு நமது போராட் டத்தை நடத்தித்தான் ஆகவேண்டும்.

ஆச்சாரியாரின் நேர் தம்பி!

இன்று ஹிந்தி எதிர்ப்புப் பற்றிச் சர்க்கார் அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதைக் கூட்டத்திற்கு வரும் போதுதான் பார்க்க நேரிட்டது. அவ்வறிக்கையில் ரெட்டி யார் கூறுகிறார் : “மக்களுக்குப் பொறுப்பு வாய்ந்த பொதுஜன சர்க்கார், பொதுநலனை முன்னிட்டு ஏதாவ தொன்றைக் கட்டாயமாக்கினாலும் அதை ஆnக்ஷபிக்கக் கூடாதென்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்” என்று, ராஜகோபாலாச்சாரியார்கூட முன்பு இதையே தான் கூறினார். இவர் அவரது நேர் தம்பி. அதனால் தான் பழைய ரிக்கார்டைப் பார்த்து அப்படியே காப்பி யடித்திருக்கிறார். “மக்களுக்குப் பொறுப்பு வாய்ந்த பொதுஜன சர்க்கார்” என்றால், அச்சர்கார் பொது மக்கள் விருப்பப்படி நடக்க வேண்டுமா, அல்லது பொது மக்கள் விருப்பத்திற்கு நேர்மாறாக நடக்க வேண்டுமா? ஓட்டுக் கொடுக்கும் வரைதான் இவர்கள் பொது மக்கள் என்று கருதப்படுவார்களா? அல்லது ஓட்டுக்கொடுத்து விட்டதும் இவர்கள் இறந்துபோய்விட்டார்கள் என்று ரெட்டியார் நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

அறிவா? ஆணவமா?

“நாம் இவர்களுக்கு ஓட்டுக் கொடுத்தால் இவர்கள் நம் விருப்பத்தை ஈடேற்றி வைப்பார்கள்” என்று தானே ஓட்டுக் கொடுத்தவர்கள் நினைத்திருப்பார்கள். அவர்களுடைய விருப்பப்படி நடப்பதுதானே ஓட்டுப் பெற்றவர்களுக்கு ஒழுங்கும், கடமையும், அறிவுடை மையுமாகும். மக்களுக்குப் பொறுப்பு வாய்ந்த பொது ஜன சர்க்கார் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ரெட்டியார் சர்க்கார், பொது மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்தியைத் திணித்து விட்டு, “பொது நலனை முன் னிட்டு ஏதாவதொன்றைச் சர்க்கார் கட்டாயமாக்கினால் அதை ஆnக்ஷபிக்கக்கூடாது” என்று கூறுகிறதென்றால் அது அறிவுள்ள சர்க்காரா? ஆணவம் பிடித்த சர்க்காரா? மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இம்மந்திரி மார்களின் யோக்கியதை இன்றுதான் எனக்குப் புரிந்தது. பொறுப்பு வாய்ந்த சர்க்காராம்! பொது மக்கள் சர்க்கா ராம்! என்றாலும் மக்கள் விருப்பத்துக்கு விரோதமாக ஏதாவதொன்றைக் கட்டாயமாக்கினால் அதை ஆnக்ஷபிக்கக் கூடாதாம். என்னே அநியாயம்!

ரெட்டியார் மேலும் குறிப்பிடுகிறார், “தென்னிந்தியா இந்திய யூனியனில் ஒரு பகுதியே ஆகும்” என்று, தென்னிந்தியாவை இந்திய யூனியனில் பிணைத்தது காங்கிரஸ்காரராகிய நீங்களா அல்லது திராவிடப் பொது மக்களா? “ஹிந்துஸ்தானி இந்திய யூனியனின் பொதுப் பாஷையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது” என்று மேலும் கூறுகிறார். அங்கீகாரம் செய்தவர்கள் யார்? காங்கிரஸ் காரர்கள்தானே. காங்கிரஸ்காரர்கள் அங்கீகரித்துவிட் டார்கள் என்றால், நாட்டு மக்கள் எல்லோருமே அங்கீ கரித்து விட்டார்கள் என்று அர்த்தமா? அல்லது அதிகார மமதை இப்படி அறிக்கைவிடச் செய்கிறதா?

வெள்ளையனையும் மிஞ்சிவிட்டார்கள்

“இந்தியாவின் பொதுப்பாஷையாகிய ஹிந்துஸ் தானியை ஒரு குறைந்தபட்ச அளவுக்கேனும் கற்றுக் கொண்டிராவிடில் யூனியன் சர்க்காரில் தென்னிந்திய மக்கள் தங்களுக்கு நியாயமாக உரித்தான பங்கைப் பெற முடியாமற் போய்விடும்” என்று குறிப்பிட்டுள் ளார். வெள்ளையன்கூட இப்படிக் கூறவில்லையே, இங்கிலீஷ் கற்றாலொழிய நமக்கு நியாயமான உரிமை கிடைக்காதென்று. இஷ்டப்பட்டவர்களைத்தானே ஆங் கிலம் படிக்கச் செய்தான். அவனையும் மிஞ்சிவிட்டார்களே இந்தச் சுதந்தரவாதிகள். அதுவும் ஒரு திராவிட மந்திரி இப்படிக் கூறுகிறாரே. இந்தி தெரியாததால் நாளை நமது பேர் ஓட்டர் லிஸ்டிலிருந்துகூட எடுபட்டு விடும் போல் இருக்கிறதே.

நாணயமும் தியாகமா?

இந்தி படிக்கப்பட வேண்டிய அவசியத்தை இவ் வளவு வற்புறுத்திக் கூறிவிட்டு அடுத்தாற்போற் கூறு கிறார், “ஒரு மாணவர் தம் பெற்றோர்கள் விருப்பத் திற்கு எதிராகவோ அல்லது தம் விருப்பத்திற்கெதிரா கவோ இந்துஸ்தானியைப் படித்துத்தான் தீரவேண்டு மெனக் கட்டாயப்படுத்தப்படவில்லை” என்று, இது முன்னுக்குப் பின் முரணாக இல்லையா? இந்தி இந் நாட்டுப் பொது மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதை ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண் டியது அவசியம் என்று முதலில் கூறியுள்ள அமைச்சர், பிறகு கட்டாயமில்லை என்று கூறி மக்களை ஏமாற்று வதற்காகத் தம் நாணயத்தைக் கூட கொஞ்சம் தியாகஞ் செய்கிறார்.

இன்னும் ஏதேதோ கூறிவிட்டு கடைசியாக “மறியல் செய்யும் இடங்களில் கூட்டம் கூடாமல் மறியல் செய்ப வர்களைத் தனியே விட்டுவிடுமாறு பொதுமக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மறியல் செய்பவர்களுக்கு அநுதாபிகளும், அவர்களுக்கு விரோதமாக இருப்பவர் களும் மறியல் செய்பவர்களுடன் கூடி நிற்பது அனு மதிக்கப்படமாட்டாது” என்று. இதைக் கூறியதற்காக கனம் முதல் மந்திரியார் ரெட்டியார் அவர்களை மன மார வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துக் கூறுங்கள்! ராமசாமி ரெட்டியார் வாழ்க என்று வாழ்த்தொலி செய் யுங்கள்! (வாழ்த்தொலி அவ்விதமே செய்யப்பட்டது).

மேலும் கூறுகிறார், “மாணவர்களுக்கு எவ்விதத் தடை செய்வதையும் அனுமதிக்க முடியாது. அத்துமீறி நடப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்” என்று. நாளை போராட்டம் துவங்குகிறது. சர்க்காரும் தம் இஷ்டம் போல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும். நீங்கள் மட்டும் ரெட்டியார் அறிக்கைப்படி, சர்க்கார் அறிக்கைப் படி அமைதியாக நடந்து கொள்ளுங்கள். வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று கூறி முடிக்க, அடுத்து தோழர் அண்ணாத்துரை அவர்களும், தோழர் சி.டி.டி. அரசு அவர்களும் பேசிய பிறகு மறுபடியும் பெரியார் அவர்கள் ஹைதராபாத் நிலையைக் குறித்தும் நமது போராட்டத் தைக் குறித்தும் பேசியதாவது:-

“இப்போது ஹைதராபாத்தில் ஒரு பெரும் குழப்பம் நடைபெற்று வருகிறது. அக்குழப்பம் இந்திய சர்க்கா ருக்கும் நைஜாம் சர்க்காருக்கும் இடையே உள்ள அபிப்பிராய பேதத்தால் ஏற்பட்டிருக்கும் குழப்பமாக இல்லை. அங்குள்ள சில குண்டர்களால் நடத்தப்பட்டு வரும் கட்டுப்பாடான காலித்தனத்தை நைஜாம் சர்க் காரால் அடக்கமுடியவில்லை. சரியான சமயத்தில் உள்ளே புகுந்து காலித்தனத்தை அடக்காவிட்டால், அது எங்கு ஹைதராபாத்தையும் தாண்டி இந்தியாவிலும் பரவி விடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.”

ஹைதராபாத் குண்டர் ஒழிப்பு அக்கறை நமக்கில்லையா?

அதனால் இந்திய சர்க்காருக்கும் கலகக்காரருக்கும் போராட்டம் நடைபெற இருக்கிறது. அப்போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக வளர்ந்துவிடவும் கூடும். அது பெரிய யுத்தம் மாதிரியே நடக்க நேர்ந்தாலும் நேரிடலாம். அப்படிப்பட்ட நிலை நேரக்கூடுமானால் அதில் நாம் சம்மந்தப்படாமல் இருக்கமுடியாது. அப்படிப் பட்ட சமயத்தில் நமது போராட்டத்தை ஒருவேளை நிறுத்த வேண்டி ஏற்படலாம். அதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நமது சார்பும் நம்மக்கள் சார்பும் கட்டாயம் இந்திய சர்க்கார் சார்பாகத்தான் இருக்கும்.

ஹைதராபாத்தில் நடக்கும் போராட்டம் நவாப்பின் சர்க்கார் சார்பாக நடத்தப்படும் போராட்டமாக இல்லை. நவாப்பையும் சேர்த்தழிக்கக் கூடிய போராட்டமாகத் தான் அது காணப்படுகிறது. இதைத் திராவிட நாட்டு முஸ்லிம்கள் நன்கு மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நைஜாம் எதிர்க்கப்படுகிறார். எனவே முஸ்லிம்கள் எதிர்க்கப்படுகிறார்கள் என்று கருதி யாரும் ஹைதராபாத் போராட்டத்தை இந்து முஸ்லிம் போராட்டமாக ஆக்கி இந்நாட்டில் குழப்பத்தை உண்டாக்கிவிடக்கூடாது.

ஹைதராபாத்தைச் சுற்றி திராவிடர்களாகிய நாம் தான் இருக்கிறோம். தெற்கே நம் மாகாணமும் வடக்கே மைசூரும் தான் ஹைதராபாத்தைச் சுற்றி இருக்கும் பிரதேசங்களாகும். எனவே நாம் தான் ஹைதராபாத் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆவோம். நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஹைதராபாத் பிரச்சனையைக் காட்டி ஏதாவது விஷமத் தனத்தைக் கிளப்பிவிட்டுத்தான் நமது முயற்சியைக் கெடுக்க ஆட்சியாளர்கள் சூழ்ச்சி செய்வார்கள். அதற்கு நாம் ஆளாகிவிடக்கூடாது; நாம் ஏமாந்து போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு கூறகிறேன்.

இந்துஸ்தான் நைஜாம் சண்டையுமல்ல; இந்தி முஸ்லிம் சண்டையுமல்ல

மறுபடியும் சொல்லுகிறேன். இது இந்து முஸ்லிம் சண்டையல்ல. இந்துஸ்தான் சர்க்கார், நைஜாம் சார்க் கார் சண்டையுமல்ல. பின் என்ன? குண்டர்களின் காலித் தனத்தை அடக்க, அவர்கள் காலித்தனத்திலிருந்து ஹைதராபாத் மக்களை மீட்க, இந்திய சர்க்காரால் ஹைதராபாத் குண்டர்களோடு நடத்தப்படும் போராட்ட மாகத் தான் அது அமையும். நைஜாம் மன்னர் இந்திய சர்க்காருடன் ராசியாவதைத் தடுத்து நிற்பவர்கள் இக்குண்டர்கள்தான் என்று கூறப்படுகிறது. எனவே குண்டர்கள் மீது நடத்தப்படும் போராட்டத்தில் நாம் கட்டாயம் இந்திய சர்க்காரின் பக்கத்தில் தான் இருப் போம்.

ஹைதராபாத் குண்டர்கள் முஸ்லிம்கள் என்பதற் காக, நாம் இந்நாட்டு முஸ்லிம்களைச் சண்டைக்கு இழுக்கப் போவதில்லை. இந்நாட்டு முஸ்லிம்கள் யாவரும் நம்மவர்கள், திராவிடர்கள், திராவிடக் கலாச்சாரத்தில் பற்றும், அநுதாபமும், நம்பிக்கையும் உடையவர்கள். அவர்கள் எல்லோரும் நம் நண்பர்கள். நண்பர்களா கவே நாம் எப்போதும் அவர்களைக் கருதிவருவோம். எனவே இந்நாட்டு முஸ்லிம்களும் நம்முடன் சேர்ந்து இந்திய சர்க்காரை ஆதரித்துக் குண்டர்களின் ஆதிக் கத்தை ஒழிக்க முற்பட வேண்டியது அவசியம்.

அது தான் நன்மையுங்கூட. ஹைதராபாத் குண்டர்கள் மீது போர் இன்றோ நாளையோ துவக்கப்படலாம். நாளை இந்திப் போர், நாளை மறுநாள் ஹைதராபாத் போர் என்று நேரிட்டாலும் நேரிடலாம். இன்றைய ஹைதராபாத் குழப்பத்தால் நைஜாமே உயிரை இழக்க நேர்ந்தாலும் நேரிடலாம், அவரைக் காப்பாற்றும் பொறுப்பு இந்திய சர்க்காருக்கு ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று ஒரு முக்கியமான பிரமுகர் என்னிடம் கூறினார்.

சமீபத்தில் சென்னையில் மறுபடி ஏ.ஆர்.பி. துவக்கப்படவும் கூடும். அப்படி நேர்ந்தால் நமது கலாச்சாரப் போராட்டத்தை ஒரு சிறிது காலம் ஒத்தி வைக்க நேரிட்டாலும் நேரிட லாம் என்பதைத் தவிர்த்து, வேறு எந்தக் காரணத்திற் காகவும் வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் நிறுத்தப் பட மாட்டாது. வெற்றி கிடைக்க வேண்டுமானால் அது சீக்கிரத்திலேயே கிடைக்க வேண்டுமானால் நமக்கு அளவற்ற பொறுமை வேண்டும். கட்டுப்பாடு வேண்டும். சாந்தமும் சமாதானமுமாக நாம் நடந்து கொள்ள வேண்டும். இவைதான் நம் வெற்றிக்கு அடிப்படை.

பொது மக்கள் அனுமதி இல்லையாம்

மறியல் நடத்தும் தொண்டர்களுக்கு அருகாமையில் இருக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரெட்டியார் கூறியிருக்கிறார்.இதற்கு இரண்டு அர்த்தம் கொடுத்துக் கொள்ளலாம். ஒன்று “நாங்கள் தொண்டர் களை நன்றாக அடிக்கப் போகிறோம். அதில் ஏன் நீங்கள் பங்கு கொள்ளப்போகிறீர்கள்” என்று கூறுவதாக இருக்கலாம். அல்லது “நாங்கள் அவர்களைச் சிறை செய்யப்போகிறோம். எனவே அருகில் இருந்து ஏன் கலகத்தை விளைவிக்கப் போகிறீர்கள், எட்டி நில்லுங்கள்” என்று கூறுவதாக இருக்கலாம். நாம் நல்ல அர்த்தத் தையே எடுத்துக் கொள்வோம். அடிக்கமாட்டார்கள் அடிபடாமலே பதவிக்கு வந்த காரணத்தால் என்றே கொள்வோம். எப்படியேயாயினும் மறியல் தொண்டர்கள் தவிர்த்து, மற்றவர்கள் அருகில் வராமல் இருப்பது தான் நல்லது.

அடிபடவும் சிறைபுகவும் ஆசையா?

அவற்றைப் பார்ப்பதற்கு ஆசையா?

யாராவது தொண்டர்களாக வர, அடிவாங்க அல்லது சிறைப்பட ஆசைப்பட்டால் எங்கள் மூலமாக வாருங்கள். அடிபடவோ, சிறைப்படவோ வசதி செய்து கொடுக்கி றோம். அவர்களுக்கும் ஆசை தீர அடிக்க வசதி செய்து கொடுக்கிறோம். வேடிக்கைப் பார்க்க வேண்டுமா னாலும் வாருங்கள். வந்தால் பேசாமல் அமைதியாக எட்டி நின்று கொண்டு பாருங்கள். எல்லா நடவடிக் கைகளும் பேசாத படக்காட்சியேபோல் நடைபெறட்டும். ஏராளமான இராணுவத்தைத் தருவித்து வைத்துள் ளார்கள். அவர்களை ஏற்றிவர நிறைய வண்டிகளும் வைத்துக் கொண்டுள்ளார்கள். எனவே பயமில்லை. உங்கள் ஒத்துழைப்பிருந்தால் போராட்டம் மிக வெற்றி கரமாகவே நடைபெறும்.

தனலட்சுமியாரைத் தடுத்தோம்

நாளை போராட்டம் துவங்குகிறது. தாய்மார்களும் அவ்வப்போது போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். நாளையே கூடத் தோழர் வேலாயுதம் மனைவியார் தனலட்சுமி அம்மையார் அவர்கள் மறியல் செய்யப் போகிறார்கள். அம்மையார் தனித்தல்ல, மற்ற தொண்டர் களோடு தானும் தன் வயிற்றிலுள்ள 7 மாதச் சிசுவும், தன் இடுப்பில் 3 வயதுக் குழந்தையும் ஆக மற்றும் இருவருடன் அம்மையார் மறியல் செய்ய முற்பட்டுள் ளார்கள். அவருக்குச் சமாதானம் சொல்லிப் பார்த்தோம். ஒப்புக்கொள்ளாததால் அவர்களின் வேண்டுகோளுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. எனவே நாளைப் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

வெற்றி உங்கள் கையில்தான்

எனவே போராட்டத்தின் வெற்றி இனி உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். ஊர்வலத்தில்கூட அதிகமான பேர்கள் கலந்துகொள்ளாதீர்கள். ஒருவேளை அதையே சாக்காக வைத்துக்கொண்டு இயக்கத்தைத் தடை செய்யத் துணிவார்கள் சர்க்காரார். எனவே அமைதியும் கட்டுப்பாடும் உங்களிடையே நிலவட்டும். குழந்தைகள் இதுசமயம் ஆத்திரப்பட வேண்டியதில்லை. அவசிய மான போது அழைக்கிறோம். அப்போது வாருங்கள். சென்னை முடிந்த பிறகு தான் வெளியூர்களிலிருந்து ஆட்களைத் தருவிக்க நினைக்கிறோம். அழைப்பு வரும்வரை பொறுமையோடு இருங்கள். கண்டிப் பாய்க் கலவரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள், “இந்தப் போராட்டத்தைப் போன்ற ஒரு சாத்வீகப் போராட்டத்தை நான் இதுகாறும் கண்டதே இல்லை” என்று பார்ப்பனர்கள் தமக்குள்ளாகவே பேசிக் கொள்ளும் அளவுக்குப் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள், வடநாட்டான், தென்னாட்டன் என்ற பேச்சே தலைதூக்கி நிற்கட்டும். வடநாட்டானை எதிர்ப்பதிலேயே, ஒழிப்பதி லேயே உங்கள் முழுக் கவனத்தையும் முயற்சியையும் செலுத்துங்கள். உங்கள் முயற்சியை வடநாட்டான் பக்கம் திருப்பி விட்டு விட்டுப் பார்ப்பனர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அவர்களுடைய தந்திரம் உங்களுக்குப் பதிலாகக் கிடைக்கும். வடநாட்டானும் சீக்கிரம் ஒழிய வழி பிறக்கும் என்று கூறி முடித்தார்.

(குடிஅரசு 21-10-1948)

தொடரும்