நாடாளுமன்ற அரசியலின் சம்பிரதாயப் பொதுத் தேர்தல் முழக்கங்கள் நமது காதுகளைச் செவிடாக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்ற மார்ச் மாதம் இலட்சக்கணக்கான இந்திய மக்களின் எதிர்ப்புக் குரல்களைப் பொருட்படுத்தாது, வெற்றிப் பெருமிதத்துடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் கூறியதை நினைவு கூரல் அவசியம். “பெட்ரொலியப் பொருட்களைப் பெற உலகம் முழுவதிலும் நடைபெறும் போட்டாபோட்டிகளிலிருந்து இந்தியாவை விலகச் செய்வதற்காகவே அதனுடைய எரிசக்தித் தேவைக்கான அணுச்சக்தித் தொழிலை அந்த நாடு பெறுவதற்கு உதவுகிறோம். எங்களது பொருளாதார நலன்களின் பொருட்டே இதைச் செய்கிறோம். பெட்ரோலியப் பொருட்களுக்கான இந்தியாவின் தேவையை எந்த அளவுக்குக் குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அது அமெரிக்க நுகர்வாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்’’.

அணுச் சக்தி தொடர்பாக புஷ்ஷ¥டன் மன்மோகன் சிங் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், இராஜதந்திர மாற்றங்களை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்:

1.சென்ற ஜனவரி -பிப்ரவரியில் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யரிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டு, முரளி தேவ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. எண்ணெய் வளமிக்க மத்தியக் கிழக்கு நாடுகள் கிட்டத்தட்ட அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு அந்த வளம் கணிசமாக உள்ள ஈரானையும் வெனிஸ¥லாவையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்ய மாற்றுவழிகளைத் தேடியவர் மணி சங்கர் அய்யர். ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய்கள் மூலம் இயற்கை வாயுவைக் கொண்டுவரும் திட்டத்தைத் தீட்டியதுடன், சீன, இந்திய அரசாங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெரும் எண்ணெய் நிறுவனங்கள் சிரியாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்களில் கூட்டாகப் பங்குகள் வாங்கவும் அவற்றுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும் முயற்சி மேற்கொண்டார். மேலும், மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்களையே இந்தியா எப்போதும் சர்ந்திருக்கும் நிலைமையை மாற்ற, 'ஆசிய எண்ணெய்த் தொகுப்பு ஏற்பாடு' (கிsவீணீஸீ ளிவீறீ நிக்ஷ£வீபீ) உருவாக்கவும் முயன்றார். இது இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த சிறு பிரிவினருக்கு ஏற்புடையதாக இருந்தபோதிலும், மேற்கு நாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின் பெரும்பகுதியினருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. எனவே வெளிப்படையான அமெரிக்க சார்பாளரும் தீவிர வலதுசாரியுமான முரளி தேவ்ராவிடம் பெட்ரொலிய அமைச்சகம் ஒப்படைக்கப்பட்டது.

2.சென்ற ஜனவரியில் சவூதி மன்னர் அப்துல்லா இந்தியாவிற்கு வருகை தந்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவிற்கு முதன் முதலில் வருகை தந்த சவூதி அரேபிய மன்னர் இவர்தான். இந்தியாவுடன் சவூதி அரேபியா மிக நெருக்கமான தொடர்புகொள்ள விரும்புவதாகக் கூறிய அவர், 'இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில்'(Organization of Islamic Countries-OIC) இந்தியா பார்வையாளர் அந்தஸ்து பெறத் தனது நாடு ஒத்துழைக்கும் என உறுதியளித்தார். இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட அவரது குடும்பம், மத்தியக்கிழக்கில் அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

3.கடந்த ஆண்டு நவம்பரில் 'வோல்கர் ஆணையத்தின் அறிக்கை' என்னும் பெயரில் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்குப் பணிந்து ஐ.நா.அவை ஒரு அறிக்கை தயாரித்தது. சதாம் உசேன் ஆட்சியின் போது ஐ.நா.சபையால் ஈராக்கின்மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை 'மனிதாபிமான நோக்கத்தின்' பொருட்டுத் தளர்த்தப்பட்டு ஈராக் தனது எண்ணெயில் ஒரு சிறு பகுதியை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு எண்ணெய் விற்கப்பட்டதில் கையூட்டு பெற்றவர்களில் ஒருவராக வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்கின் பெயரும் போதுமான ஆதாரங்கள் ஏதுமின்றி அந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தது. அப்படியே அவரோ பிறரோ கையூட்டு பெற்றிருந்தாலும், பொருளாதாரத் தடையை விதித்த ஐ.நா.பாதுகாப்பு அவைதான் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்க வேண்டும். மேலும், அந்தப் பொருளாதாரத் தடையின் காரணமாக ஈராக்கில் இலட்சக்கணக்கான குழந்தைகளும் கர்ப்பிணிகளும் இன்றியமையா உணவுப் பொருட்களும் மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் மாண்டுபோனதற்குக் காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலைபாதகச் செயலை ஒப்பிடுகையில், நட்வர் சிங் போன்றவர்கள் கையூட்டு வாங்கியிருந்தாலும் அது ஒருவகையில் மனிதாபிமானச் செயல்பாடு என்றே கருதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா ஈராக்கிடமிருந்து எண்ணெய் வாங்கியதால், சில ஆயிரம் குழந்தைகளேனும் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும். ஆனால் ,மன்மோகன் சிங் அரசாங்கமோ, அமெரிக்காவின் நிர்பந்தத்திற்குப் பணிந்து நட்வர் சிங்கை முதலில் வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்தும், பின்னர் அமைச்சரவையிலிருந்துமே பதவி விலகுமாறு செய்தது.

4.2003ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் சில மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வருகை புரிந்தார். தென்னாசியப் பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவில், அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்துவதுதான் அந்த வருகையின் நோக்கம். அர்மிடேஜ் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதேவேளை, அப்போதைய 'தேசிய ஜனநாயகக் கூட்டணி' அரசாங்கத்தால் 'தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக' நியமிக்கப்பட்டிருந்த பிரஜேஷ் மிஸ்ரா, அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கோண்டலீஸ்ஸா ரைஸ¤டன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவின்' முக்கியத்துவம்' கருதி ஜார்ஜ் புஷ்ஷ¥ம் மிஸ்ராவை அழைத்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாகத்தான் 2003 ஜூன் மாதம் இந்தியத் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி அமெரிக்கா சென்றார்.

இந்தியத் துணைக்கண்டத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளையும் தனது கூட்டாளிகளாக வைத்திருக்க அமெரிக்க விரும்பும்போதிலும், அது இந்தியாவின் மீதே கூடுதலான அக்கறை கொள்ளத் தொடங்கியதை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமுள்ள சர்ச்சைகள்- குறிப்பாக காஷ்மீர் -தொடர்பாக அர்மிடேஜ் கூறிய கருத்துகள் உறுதிப்படுத்தின. காஷ்மீரில் 'எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்களை' மேற்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் ஆதரவு தருவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இஸ்லாமாபாத்தில் எச்சரிக்கை விடுத்த அர்மிடேஜ், புதுடில்லி வந்து சேர்ந்ததும் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் வாஜ்பாயியின் 'இராஜதந்திரத்தை' வெகுவாகப் புகழ்ந்தார். இத்தனைக்கும், அன்றைய இந்திய அரசாங்கம், காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தடுக்க பாகிஸ்தான் மீது முன்னறிவிப்பு இல்லாத போரை நடத்தப் போவதாக அப்போது கூறியிருந்தது.

காஷ்மீரைச் சொந்தமாக்கிக் கொள்வதற்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் 1948இல் நடந்த முதல் யுத்தத்திற்குப் பிறகு, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் சேர விரும்புகிறார்களா அல்லது பாகிஸ்தானுடன் சேர விரும்புகிறார்களா என்பதை முடிவு செய்ய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 1949இல் ஐ.நா.சபை தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை முதலில் ஏற்றுக்கொண்ட இந்தியா சில ஆண்டுகளுக்குப் பிறகு 'எல்லைப் பாதுகாப்பு' கருதி அதை ஏற்க மறுப்பதாகக் கூறிவிட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர்ந்துவிடும் என இந்திய ஆட்சியாளர்கள் கருதியதால்தான் ஐ.நா .தீர்மானத்தை எதிர்க்கத் தொடங்கினர். இதே காரணம் கருதியே பாகிஸ்தான் அத்தீர்மானம் நடைமுறைபடுத்தப்பட் வேண்டும் என மிக அண்மைக்காலம் வரை இடைவிடாது வற்புறுத்தி வந்தது (உண்மையில், அப்படி ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினால், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருக்கவே விரும்புவார்கள் என்பதுதான் உண்மை.)பாகிஸ்தானின் நிலைப்பாட்டையே அமெரிக்காவும் ஆதரித்து வந்தது.

ஆனால், 2003ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்களது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. 1`949ம் ஆண்டு ஐ.நா.தீர்மானத்தைத் இனிமேல் ஆதரிக்கப் போவதில்லை என பாகிஸ்தான் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்னும் போதிலும், 2003மே மாதம் ஐ.நா.பாதுகாப்பு அவைத் தலைமைப் பதவியை சுழற்சிமுறையில் பெற்ற ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர், அந்தத் தீர்மானம் பற்றிய பேச்சையே எடுக்காததுடன், காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை உருவாக்கத் தொடங்கிய அமெரிக்காவும் அத்தீர்மானம் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டது. வாஷிங்டனைத் திருப்திப்படுத்த, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் 'ஆசாத் காஷ்மீரில்' நடந்த பேரணியொன்றில் கலந்து கொள்ள ஜெய்ஷ் -இ-முகமது' என்னும் தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு அனுமதி கொடுக்க மறுத்ததன் மூலம் ஜெனெரல் முஷார•பின் அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டது! (இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது 2001 டிசம்பரில் தாக்குதல் நடத்திய இரண்டு அமைப்புகளில் ஜெய்ஷ்- இ- முகமது என்னும் அமைப்பும் ஒன்று எனக் கருதப்படுகிறது.)

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தந்த மேற்சொன்ன 'சலுகை'களுக்குப் பதிலாக, பாகிஸ்தானுக்குத் தான் கொடுத்த மொத்தக் கடன்களில் 1.8பில்லியன் டாலர் வரை இரத்து செய்வதாக அமெரிக்கா வாக்களித்தது. இஸ்லாமாபத்திலிருந்து புதுடில்லி வந்த அர்மிடேஜ், வாஜ்பாயி, அத்வானி, வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சின்கா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் சின்கா, பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதால்தான் ஈராக் மீது படையெடுத்ததாக அமெரிக்கா சொல்லும் நியாயவாதங்களை விட அதிகமான நியாயவாதங்கள் முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தான் மீது படையெடுக்க விரும்பும் இந்தியாவிடம் இருக்கிறது எனக் கூறியிருந்தார். ஆனால், 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை' கட்டுப்படுத்த வேண்டுமென அமெரிக்கா பாகிஸ்தானை எச்சரிக்கத் தொடங்கியதும், சின்கா அடக்கி வாசிக்கத் தொடங்கினார். அர்மிடேஜ் தன் பங்கிற்கு வாஜ்பாயியின் 'இராஜதந்திரத்தை'ப் புகழ்ந்ததுடன், அமெரிக்கா ஈராக் விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோதிலும், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவே தன்னை புஷ் அனுப்பி வைத்ததாகக் கூறினார். வாஷிங்டனில் புஷ்ஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிரஜேஷ் மிஸ்ராவும் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்குமுள்ள நட்பை ஆழப்படுத்த வேண்டும் என புஷ் விரும்புவதாகக் கூறினார். இந்தப் பேச்சுவர்த்தைகளின்போதுதான் அமெரிக்க- இந்திய வர்த்தகம், அமெரிக்கத் தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குதல், இராணுவ நோக்கத்திற்கல்லாத அணுசக்தித் தொழிலில் ஒத்துழைப்பு ஆகியன விவாதிக்கப்பட்டன. இவை அனைத்துமே, 1998இல் போக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அல்லது வரம்புக்குட்படுத்தப்பட்ட விஷயங்களாக இருந்து வந்தன.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதற்குப் பிரதியுபகாரமாக, இந்தியாவை தனது நெருக்கமான இராணுவக் கூட்டாளியாக்கிக் கொள்ள அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி இப்படித்தான் தொடங்கியது. தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது முழுமையான தலையீட்டை உருவாக்கிக்கொள்ளும் திட்டத்தின் பகுதியே இது.' அமெரிக்க யூதக் குழு' (American Jewish Committee) என்னும் அமைப்பின் கூட்டமொன்றின் பேசிய பிரஜேஷ் மிஸ்ரா, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்' அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் ஆகியன கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். இதற்கிடையே இந்திய இணையதளங்களிலொன்றான rediff.com இந்திய அமெரிக்க இராணுவ உறவுகள் குறித்த ஒரு ஆவணமொன்றை வெளியிட்டது. அமெரிக்க இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த ஆவணம் கூறிய முக்கிய செய்திகள்: 1.ஆசியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மத்தியக் கிழக்கையும் கிழக்கு ஆசிய நாடுகளையும் இணைக்கும் கடல் வழிப்பாதைகள் இந்தியக் கடற்கரையோரம் உள்ளன. எனவேதான் அமெரிக்க இராணுவத்தை இந்தியா கவர்ந்திழுக்கிறது; 2.அமெரிக்கக் கப்பற்படைக்கு, உலகின் எதிர்திசையில் உள்ளதும் மத்தியக் கிழக்கில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவக்கூடிய துறைமுகங்களைக் கொண்டதுமான ஒப்பீட்டு நோக்கில் நடுநிலையான நாடு ஒன்று தேவைப்படுகிறது. இந்தியாவிடம் நல்ல அகக்கட்டுமானம் இருப்பது மட்டுமின்றி, அமெரிக்கப் போர்க் கப்பல்களைப் பழுதுபார்க்கவும் அவற்றுக்கு எரிபொருளை நிரப்பவுமான ஆற்றல் இந்தியக் கப்பற்படையிடம் இருக்கிறது. அதேபோல, மத்தியக் கிழக்கில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும், இந்திய விமானத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க விமானப் படை விரும்புகிறது.

இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டணி உருவாக்க விரும்புவதன் நோக்கங்கள்:1. மத்தியக் கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல்; 2.சீனாவின் வளர்ச்சியையும் பலத்தையும் குறைக்க இந்தியாவைப் பயன்படுத்துதல். Foreign Policy in Focus என்னும் அமெரிக்க ஏடு 2003ம் ஆண்டு வெளியிட்ட 'அமெரிக்காவும் இந்தியாவும்:அபாயகரமான கூட்டணி' என்னும் கட்டுரையில், மேற்சொன்ன நோக்கங்கள் கருதி மலாக்கா நீரிணையில் அமெரிக்க- இந்தியக் கப்பற்படைகள் கூட்டாக ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல், இராணுவப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பு, ஏவுகணைகளைப் பயன்படுத்துதல் ஆகியனவற்றை உள்ளடக்கும் வகையில் அமெரிக்க -இந்திய இராணுவப் பிணைப்புகள் விரைவாக உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியது. அமெரிக்க இராணுவ ஆவணமொன்று, எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொருளாதாரரீதியாகவும் இராணுவரீதியாகவும் சவாலாக உருவாகிவரும் சீனா எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அரசியல் ஆலோசகரொருவர் கூறியதை இந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு இந்தியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்பியது என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகித்த பாரதிய ஜனதாக் கட்சியோ 'இஸ்லாமிய' பாகிஸ்தானை நசுக்கவும் இந்துக்களின் மேலாதிக்கத்தை நிறுவவும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு பயன்படும் எனக் கருதியது. எனினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்திய ஆளும் வர்க்கங்கங்களின் இரு முதன்மையான அரசியல் கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டுமே ஒரு முதன்மையான நோக்கத்தில் ஒன்றுபடுகின்றன. உலகச் சந்தையில் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு ஒரு கணிசமான பங்கை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக இந்தியாவை அமெரிக்காவின் இளங்கூட்டாளியாக்கிவிட வேண்டும்.

  1. இதை உத்திரவாதம் செய்வதற்காகத்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க வெளியுறவு அமைச்சராகப் புஷ்ஷால் பதவி உயர்வு தரப்பட்ட கோண்டலீஸ்ஸா ரைஸ் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்குவதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்னும் உறுதிமொழியை வழங்கினார்.
  2. 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி' அரசாங்கத்தின் பிரதமர் மன்மோகன் சிங் சென்ற ஆண்டு ஜூலையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் இந்தியா முற்றிலுமாக அமெரிக்கா பக்கம் சாய்ந்து வருவதை உறுதிப்படுத்தியது. வாஜ்பாயி ஆட்சியின்போதுகூட சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்தன. உலகின் எண்ணெய் வளங்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா முழுக் கட்டுப்பாடு செலுத்துவதைத் தடுப்பதற்காகவும் தங்களுடைய எரிசக்தித் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காகவும் சீனாவும் ரஷ்யாவும் உருவாக்கிய '"ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில்' (Shanghai Cooperation Organization) சேர்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மன்மோகன் சிங், இந்தியாவை இந்த அமைப்பில் சேர்ப்பதற்குத் தயக்கம் காட்டி வந்த போதிலும், உலக விவகாரங்களில் ஒரு தலைப்பட்சமான முடிவுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை விமர்சித்துவந்தார். ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இயற்கை வாயுக் குழாய்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு அமெரிக்கா செய்து வந்த நிர்பந்தத்தை வன்மையாகக் கண்டனம் செய்யும் அளவுக்குக்கூடச் சென்றார். ஆனால், சென்ற ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷ்யாம் சரண், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எத்தகைய மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை பகிரங்கப்படுத்தினார்:"ஆசியாவில் சரியான சமநிலை ஏற்பட வேண்டுமானால், இந்தியா அமெரிக்காவுடன் சேர வேண்டும்''.
  3. இதைத்தான் சென்ற ஜூலையில் மன்மோகன் சிங் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவின் தேசியப் பத்திரிகையாளர் சங்கத்தில் பேசிய மன்மோகன் சிங், ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரைப் பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "அது கடந்தகால விஷயம்' எனக் கூறினார். அவரும் ஜார்ஜ் புஷ்ஷ¥ம் விடுத்த கூட்டறிக்கை, "இரு நாடுகளுக்கிடையிலான நட்பை உலகளாவிய கூட்டுப்பங்காண்மையாக மாற்ற இருவரும் உறுதிபூண்டுள்ளதாக' கூறியது. ஆ•ப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் ஆக்கிரமிப்புப் போரை நடத்திய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் புஷ்ஷை 'சர்வதேச பயங்கரவாதம் உருவாக்கும் சவால்களை எதிர்கொள்வதில் உறுதியும் தீர்மானமும் மிக்க தலைமையை வழங்குபவர்' என மன்மோகன் சிங் வர்ணித்தார். அந்தக் கூட்டறிக்கை, கீழ்க்காணும் விஷயங்களையும் கோடிட்டுக் காட்டியது: 1.இந்திய -அமெரிக்க வர்த்தகம், தொழில் ஆகியவற்றை மேம்படுத்த இருநாட்டுத் தொழிலதிபர்களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்; 2.இந்தியாவில் அமெரிக்க முதலீடுகள் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் (அதாவது தனியார்மயமாக்கலுக்கும் தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுவதற்கும் வழிகோல வேண்டும்); 3.இந்தியாவில் ஸ்திரமானதும் திறமைமிக்கதுமான எரிசக்திச் சந்தை உருவாக்கப்பட வேண்டும்; 4.விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் தனியார்- பொதுத்துறை கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டும்; 5. உலகளாவிய ஜனநாயக முன்முயற்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும். இதில் அமெரிக்காவும் இந்தியாவும் முக்கியப் பங்கு வகித்து, 'ஜனநாயக நிறுவனங்களை' உருவாக்க விரும்பும் அரசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
  4. இந்தக் கூட்டறிக்கை ,2005ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இரு நாடுகளும் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது. 'அமெரிக்க-இந்திய பாதுகாப்பு உறவுக்கான புதிய சட்டகம்' (New Framework for the US-India Defence Relationship) என்னும் பெயரிலமைந்த இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டவர்களில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜியும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்•பீல்டும் அடங்குவர். இந்திய இடதுசாரிகளால் மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பிலும் இராணுவ வலிமையிலும் அக்கறையுள்ள பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், ஐ.நா.சபையால் ஒப்புதல் தரப்படாத இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க இராணுவத்துடன் இந்திய இராணுவமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும் அந்தக் கூட்டறிக்கையில் உள்ள மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம் அணுசக்தி தொடர்பானதாகும். இந்தியாவின் எரிசக்திக்குத் தேவையான அணுசக்தித் தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் ((Fuel) விற்பனை செய்வதற்கு எதிரான சர்வதேசத் தடையை அகற்றுவதே இந்தக் குறிப்பிட்ட அம்சத்தின் நோக்கம். இந்தியா 1974இல் முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய பிறகு இந்தத் தடை விதிக்கப்பட்டது. 1998இல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைக்குப் பிறகுதான் இந்தியா பகிரங்கமாகத் தன்னை அணுயுத நாடு, அதாவது அணு ஆயுதங்களை வைத்திருக்க சட்டரீதியான உரிமை உள்ள நாடு (இது 1968ம் ஆண்டு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை) என அறிவித்தது. இந்தியா உரிமை கொண்டாடும் இந்தத் தகுதியை மேற்சொன்ன கூட்டறிக்கை நேரடியாக அங்கீகரிக்கவில்லை என்னும் போதிலும், 'இந்தியா, மேம்பட்ட அணுசக்தித் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் பொறுப்பு மிக்க நாடு' எனக் கூறியது. அணுசக்தித் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச ஒப்பந்தத்திலும் அணுசக்தித் தொழில்நுட்பம், அணுசக்தி எரிபொருள் ஆகியனவற்றை விற்பனை செய்தல் குறித்த ஒழுங்குமுறை ஏற்பாட்டிலும் இந்தியாவிற்கு ஒரு சிறப்புத் தகுதி வழங்கப்படுவதை அமெரிக்கா ஆதரிக்கும் என்று கூறிய அந்த அறிக்கை சில நிபந்தனைகளையும் விதித்தது. அதாவது, இந்தியா தனது எரிசக்தித் தேவைக்கான அணுசக்தித் திட்டத்திற்கு சில வரம்புகளையும் சர்வதேச மேற்பார்வையயும் ஒப்புக்கொள்ளவேண்டும்; இதர அணு ஆயுத நாடுகளும் அமெரிக்க நாடாளுமன்றமும் (காங்கிரஸ்) ஒப்புதல் வழங்கவேண்டும்.

அணு ஆயுதப் பரவலைத் தடை செய்யும் விதிகளை (இவ் விதிகள் அணு ஆயுத அரசுகள் என அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவற்றுக்குப் பொருந்தா!) மீறும் எந்தவொரு நாட்டிற்கும் இராணுவ, இராணுவ நோக்கமில்லாத பயன்பாடுகளுக்கான அணுச்சக்தித் தொழில்நுட்பத்தை விற்பனை செய்யக்கூடாது என அமெரிக்க, சர்வதேசச் சட்டங்கள் கூறுகின்றன. ஆனால், மேற்சொன்ன கூட்டறிக்கை, இந்த விதிகளிலிருந்து இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்குத் தருவதற்காக இந்த விதிகளையே மாற்றுவதற்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொள்ளும் என்பதைத் தெளிவாக்கியது. 1974இல் இந்தியா அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்திய பிறகு நவீனரக ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. மன்மோகன் சிங்கின் அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு அத்தடைகள் நீக்கப்பட்டு வருகின்றன. புஷ்ஷின் நோக்கம் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்க வைப்பது மட்டுமல்ல; இந்தியா, அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பத்தையே என்றென்றும் சார்ந்திருக்க வேண்டும் என்னும் நிலையை உருவாக்குவதுமாகும்.

  1. ஈரான், தனது எரிசக்தித் தேவைக்காக வைத்திருக்கும் அணுசக்தி நிலையங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (International Atomic Energy Agency) மேற்பார்வைக்கும் ஆய்வுக்கும் சரிவர உட்படுத்தப்படவில்லை என்னும் வாதத்தை முன்வைத்து அவற்றை ஐ. நா.பாதுகாப்பு அவையின் மேற்பார்வைக்கும் சோதனைக்கும் உட்படுத்த வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக சென்ற ஆண்டு செப்டம்பரின் இந்தியா வாக்களித்ததையும் ஈரானுடன் இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்துவரும் நல்லுறவைக்கூட அது கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் மேற்காணும் பின்னணியிலேயே பார்க்க வேண்டும். இதிலுள்ள முரண் என்னவெனில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா கையெழுத்திடவில்லை. ஏராளமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் மீது இத்தகைய நிர்பந்தம் ஏதும் கொண்டுவரப்படவில்லை.
  2. இவ்வாண்டு மார்ச் மாதம் புஷ் இந்தியாவிற்கு வந்தபோது அணுசக்தி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்) ஒப்புதல் அளிக்குமேயானால், அணுசக்தித் தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து வாங்குவதற்கு இந்தியா அனுமதிக்கப்படும் என இந்த ஒப்பந்தம் கூறுகிறது. உலகில் அணுசக்தித் தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை விற்பதையும் வாங்குவதையும் கட்டுப்படுத்தும் நாற்பத்தைந்து நாடுகளும் (Nuclear Supplier Group) இந்தியா மீதான தடையை அகற்றினால் இந்தியாவிற்கும் அணு ஆயுத நாடுகளுக்குமிடையில் அணுசக்தி தொடர்பான வர்த்தகம் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் அணுசக்தித் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு விற்க இந்த ஒப்பந்தம் வழி கோலுகிறது. இந்த ஒப்ப்ந்தத்தைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய எரிசக்தி மசோதாவுடன் (Bush Energy Bill) தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அந்த மசோதாவின்படி, புதிய அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கு அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு 12 பில்லியன் டாலர் மான்யமாகக் கொடுக்கப்படும். அதாவது இந்தியாவிற்கு அணுசக்தி தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் விற்பதன் மூலம் இந்த நிறுவனங்கள் கொழுத்த இலாபங்கள் ஈட்டும்.

அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்துடன் புஷ்ஷ¥டன் இந்திய அரசாங்கம் வேறு சில (துணை) ஒப்பந்தங்களையும் செய்துகொண்டுள்ளது: 1.விண்கலங்களை ஏவுவதற்கான ஒப்பந்தம். இது அமெரிக்காவால் உரிமம் தரப்பட்ட விண்கலங்களையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பாகங்களைக் கொண்டுள்ள மூன்றாம் நாட்டு விண்கலங்களையும் ஏவுவதற்கு அனுமதிக்கிறது;2.உலகளவில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் இதில் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறவும் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும்; 3.கதிரியக்கத்தின் மூலம் பதப்படுத்தப்பட்ட மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை அனுமதிக்கும் ஒப்பந்தம்; 4.உயிரியல் தொழில்நுட்பம், உணவுப்பொருட்களைப் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்புதல், நீர் சேமிப்பும் பயன்பாடும், கல்வி ஆகியவற்றில் இரு நாடுகளும் கூட்டாகப் பணியாற்ற இந்தியாவிலுள்ள நாற்பது பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன; 5.சில்லறை வாணிபமும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன; 6.சர்வதேச அணுமின் சக்தி ஆராய்ச்சியில் பங்கேற்க இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது;7.ஒன்றிணைந்த பெருங்கடல் ஆராய்ச்சித் திட்டத்தில் சேர இந்தியா அனுமதிக்கப்படுகிறது; 8.மின் உற்பத்திக்குத் தேவையான அணுசக்தித் துறையில் மட்டுமல்லாது, பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி போன்ற பிறவகை எரிசக்தித் துறைகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாகச் செயல்படும்; 9.எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவும் இந்தியாவும் உலகம் முழுவதிலும் ஜனநாயகத்தைப் பரப்பும். மேலோட்டமாகப் பார்க்கும்போதே இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவை அமெரிக்காவின் மாகாணங்களிலொன்றாக மாற்ற முனைகின்றன என்பது தெளிவாகிறது. உலகில் ஜனநாயகத்தை ஊக்குவிக்க ஒரு ஒப்பந்தமாம்! அதாவது •ப்கன், ஈராக் பாணி ஜனநாயகத்தை உருவாக்க அமெரிக்கப் படைகளுடன் இந்தியப் படைகளும் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

மன்மோகன் சிங்-- - ஜார்ஜ் புஷ் ஒப்பந்தத்தின் முதன்மையான அம்சம் அணுசக்தி தொடர்பானது என்பதைப் பார்த்தோம். இதன்படி இந்தியாவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்பட்டு வருகிற மொத்தம் இருபத்தி மூன்று அணுசக்தி ஆலைகளில் இராணுவ நோக்கத்திற்கான (அதாவது அணுகுண்டு தயாரிப்பதற்கான) ஆலைகள் யாவை, இராணுவ நோக்கத்திற்கல்லாத (அணுமின் நிலையங்கள் போன்றவை) ஆலைகள் யாவை என்பன அடையாளம் காணப்பட்டு 2014ம் ஆண்டுக்குள் வகைப்படுத்தப்படும். இராணுவ நோக்கத்திற்கல்லாத பதினான்கு ஆலைகளை இந்தியாவே முன்வந்து சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (மிகிணிகி) மேற்பார்வைக்கும் சோதனைக்கும் உட்படுத்த வேண்டும். இப்போது கட்டப்பட்டு வருகின்ற எட்டு ஆலைகள் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வரா. அணு ஆயுதங்கள் தயாரிக்க அவை புளூடோனியத்தை வழங்க அனுமதிக்கப்படும். ஏற்கனவே அணுசக்தி ஆலைகளில் பயன்படுத்தப்பட்டுவிட்ட எரிபொருளுக்கும் பாதுகாப்பு விதிகள் பொருந்தா. இந்தப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் ஆயிரம் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் அளவுக்கு புளுடோனியம் இருக்கிறது. யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வசதி இந்தியாவிடம் உள்ளது. இதுவும் அணு ஆயுதங்களுக்குப் பயன்படும். வருங்காலத்தில் இந்தியா கட்டும் அணுசக்தி ஆலைகள் இராணுவ நோக்கத்திற்கானவை, இராணுவ நோக்கத்திற்கானவையல்ல என வகைப்படுத்தும் உரிமை இந்தியாவிற்கே உண்டு.

பொதுவாக புஷ்ஷின் வருகை குறித்தும் குறிப்பாக புஷ்-மன்மோகன் சிங் ஒப்பந்தம் குறித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சி சானல், கருத்துக் கணிப்பு நடத்தி இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யுமாதலால், அதை எதிர்ப்பவர்கள் நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்கள் எனப் பெரும்பாலானோர் கருதுவதாக ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. முதலாவதாக, இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய மக்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். இரண்டாவதாக, இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அரசு இந்தியா மீது வேறு சில நிபந்தனைகளை விதித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மூன்றாவதாக, அணுமின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகள், அணுமின் நிலையக் கழிவுகளின் கதிர்வீச்சு (இந்தக் கழிவுகளை எரித்தோ புதைத்தோ ஒழித்துக் கட்டிவிட முடியாது. அவற்றைப் பாதுகாப்பான முறையில் சேமித்துவைக்கவும் முடியாது. அவற்றைப் பயன்படுத்தி நாமே அணு ஆயுதங்கள் தயாரிக்கலாம் அல்லது அணுமின் உற்பத்தி செய்யும் அல்லது அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அனுப்பலாம். அப்படி அனுப்புகையில் ஏற்படும் ஆபத்துகள் பயங்கரமானவை. அவை பயங்கரவாதிகள் கைகளில் சிக்கிவிடலாம். மற்றோர் புறம், அமெரிக்கா எப்போதும் இந்தியாவின்மீது கரிசனம் காட்டிக் கொண்டே இருக்கும் என்பதற்கான் எந்த உத்திரவாதமும் இல்லை. நாளை, இந்தியா அமெரிக்காவின் ஆணைகளுக்கு பணிய மறுத்தால் அமெரிக்கா இந்தியாவின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கக்கூடும். ஏனெனில் எந்த ஒரு நாட்டின்மீதும் படையெடுக்கும் ஒருதலைப்பட்சமான உரிமையை அமெரிக்க வைத்திருக்கிறது.

மன்மோகன் சிங் - புஷ் ஒப்பந்தத்தில் வெளிப்பாடு கண்டிருக்கும் இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையைப் போலவே, இந்தியாவை பன்னாட்டு மூலதனங்களின் வேட்டைக்காடாக மாற்றிவிடும். இதில் அமெரிக்க மூலதனம் பெரும் பங்கு வகிக்கும். ஆக, இந்தியா இப்போது அமெரிக்காவின் காலடியில்.

Pin It