உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சாதாசிவம் தலைமையிலான அமர்வு, 18-2-2014 அன்று அளித்த தீர்ப்பு, இராசீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் விடுதலைக்கான விடியலாக அமைந்தது. அத்தீர்ப்பு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-இன்படி “உரியஅரசு” (Appropriate Government) இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரையும் விடுதலை செய்யலாம் என்றும் அத்தீர்ப்புக் கூறியது.

rajivideath 600 copyஇதன் அடிப்படையில், 19-2-2014 அன்று முதலமைச்சர் செயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஏழு பேரையும் விடுதலை செய்வது என்றும், நடுவண் அரசு மூன்று நாள்களுக்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது. 20.2.2014 அன்று மன்மோகன் சிங் தலைமையிலான நடுவண் அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி, மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நடுவண் அரசின் ஒப்புதலைப் பெறாமல் ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று கூறி இடைக்காலத் தடை ஆணை பெற்றது.

மேலும் தமிழக அமைச்சரவையின் முடிவை எதிர்த்து, இராசீவ் காந்தி கொலையுண்டபோது உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சார்பில் அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம், காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம.சுகந்தன் உள்ளிட்டோர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தமிழக அரசு மறுஆய்வு செய்யக்கோரி விண்ணப்பித்த வழக்கில், உச்சநீதிமன்றம் 7.2.2017 அன்று எழுவரை விடுதலை செய்வதற்கான தடை ஆணையை மீண்டும் உறுதி செய்தது. எழுவர் விடுதலை என்னவாகுமோ என்று தமிழர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

அந்நிலையில், இருபது ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் ஏழுவரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு அனுப்பிய விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு 6.9.2018 அன்று தீர்ப்பளித்தது. அத் தீர்ப்பில் “இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக் கப்பட்டு 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், இராபர்ட் பயஸ், நளினி, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய எழுவரைத் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் விடுதலை செய்யலாம்” என்று கூறப்பட்டது. மேலும் நடுவண் அரசு குற்றவியல் நடைமுறைச்சட்ட விதி 435-இன் கீழ் தொடுத்த வழக்கும் முடித்து வைக்கப்படுவதாக அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எழுவர் விடுதலையில் நடுவண் அரசின் குறுக்கீடும் ஒரு முடிவுக்கு வந்தது. பேரறிவாளன் மேற்கொண்ட சட்டப் போராட்டம் எழுவர் விடுதலைக்கான கதவைத் திறந்தது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் தண்டனையைக் குறைக்கவோ, மன்னிக்கவோ அரசமைப்புச் சட்ட விதி 72 குடியரசுத் தலைவருக்கும், விதி 161 மாநில ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. குடியரசுத் தலைவர் நடுவண் அரசின் அமைச்சரவை முடிவின்  பேரிலும், ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவின்  பேரிலும் முடிவு எடுக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத் தின் விதி 161 என்பது கூட்டாட்சி அரசமைப்பில் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இறையாண்மை அதிகாரமாகும்.

6.9.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று கூடி, இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின் கீழ் ஏழுவரையும் விடுதலை செய்வதாகத் தீர்மானித்தது; அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால் கடந்த ஒன்பது மாதங்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் பொதுமக்களும் எழுவர் விடுதலைக்கு ஆளுநர் உடனடி யாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இராசீவ் காந்தி கொலையுண்டபோது இறந்தவர்களின் குடும்பத்தினரும் மற்றவர்களும் எழு பேரையும் விடுதலை செய்வது என்று 19.2.14 அன்று தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆளுநர் எழுவர் விடுதலை மீது முடிவெடுக்காமல் இருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு 9.5.2019 அன்று வெளிவந்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அளித்த இத்தீர்ப்பை, “இந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரித்து உச்சநீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்துவிட்டதால், இனி விசாரித்து முடிவெடுக்க வேண்டிய எந்தப் புதிய அம்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றம் இவ்வளவு தெளிவாகத் கூறிய பிறகும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் தராமல் அமைதி காத்து வருகிறார்.

பேரறிவாளன் தொடர்ந்து நடத்தி வரும் சட்டப் போராட்டங்களின் மூலம் எழுவர் விடுதலையில் ஆட்சி யாளர்களும், நிர்வாகமும் அரசமைப்புச் சட்டப்படியோ, இயற்கை நியாயப்படியோ நடந்து கொள்ளவில்லை என்பதை அம்பலப்படுத்தி வருகிறார். 2016 சனவரியில் பேரறிவாளன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தண்டனைக் குறைப்பு தொடர்பாகப் பெறப்பட்ட விண் ணப்பங்கள் மீது உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவுகள் குறித்து தெரிவிக்குமாறு மடல் எழுதினார். நீண்ட இழுபறிக்குப்பின் அண்மையில் பேரறிவாளனுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற இந்தி நடிகர்களான சுனில்தத்-நர்கீஸ் இணையரின் மகன் சஞ்சய் தத். இவரும் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார்.

1993இல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச் சட்டத்தின்கீழ் சஞ்சய் தத்துக்கு அய்ந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விரும்பிய போதெல்லாம் இவர் பரோலில் வெளிவர அனுமதிக்கப் பட்டார். இவரை மன்னித்து விடுதலை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேயகட்சு உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் சஞ்சய்தத் சார்பில் குடியசுத் தலைவருக்கு வேண்டுகோள் மடல் அனுப்பினர்.

நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் 2015 திசம்பரில் இவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. ஆனால் சஞ்சய்த் தன்னுடைய தண்டைக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே 2016 பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். நன்னடத்தையின் பேரில் சிறை அதிகாரிகளே விடுதலை செய்துள்ளனர் என்கிற தகவல் பேரறி வாளனுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுவர் விடுதலைக்கு மட்டும் ஏன் இத்தனைத் தடைகள்?

அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஆளுநர் இவ்வளவு காலத்திற்குள் ஒப்புதல் வழங்கவேண்டும் என்கிற விதி இல்லை என்பது உண்மைதான். 28 ஆண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்தவர்கள் என்பதாலும், எழுவரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றமே கூறியிருப்பதாலும், எட்டுக் கோடித்  தமிழரின் விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருப்பதாலும், மனிதநேய அடிப்படையிலும் தமிழக ஆளுநர் எழுவர் விடுதலை குறித்த தமிழக அமைச் சரவையின் முடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுவே மக்களாட்சி மாண்பினைக் காப்பதாக அமையும். அதன்மூலம் பன்வாரிலால் புரோகித் தமிழர் நெஞ்சில் நீங்கா இடம் பெறுவார்.