இந்திரா காந்தியின் அவசரநிலைக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 42வது சட்டத்திருத்தம்தான் (1976) அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசை மதச்சார்பற்ற மற்றும் சோசலிசக் குடியரசு என்று வரையறுத்தது. எனினும், 1950களில் இருந்தே, அதாவது அரசியலமைப்புச் சட்டம் செயல்படத்துவங்கிய காலம் தொட்டே பெரும்பாலான அரசியல் கருத்தாளர்களின் பார்வை, இந்திய அரசியலமைப்பு மதச்சார்பற்ற ஒன்று என்பதாகவே இருக்கின்றது. மதச்சார்பின்மை ஒரு கொள்கையாகவும் கருத்தாக்கமாகவும் பல பகுதிகளில் பலவாறு வழங்கப்படுகின்றது. எனினும், ஒரு மதச்சார்பற்ற அரசானது குறைந்தபட்சம் அச்சமூகத்தில் வாழும் அனைத்து மதப்பிரிவினரையும் சமதளத்தில் வைத்தே அணுக வேண்டும் என்பதை நாம் அடிப்படையாகக் கொள்ளலாம். மேலும் எண்ணிக்கையில் பின்தங்கியுள்ள மதச்சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பளிப்பதும் ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்பின் கடமையாகும்.

parliament 6001980களில் இருந்து அசுர வளர்ச்சி கண்டு வரும் இந்துத்துவ சக்திகளின் இந்து-இந்தியா கனவைத் தகர்ப்பதற்கு, இந்திய அரசியலமைப்பு ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்பு என்ற பிரச்சாரத்தை, ஒரு கருத்தியல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சில முற்போக்காளர்களும் மதச்சார்பற்ற அரசியல் தலைவர்களும் நம்பிவருகின்றனர். அவர்கள் குறிப்பிடுவது போல் அரசியலமைப்பில் சில முற்போக்கான அம்சங்கள் இருப்பினும், இந்துமதச் சார்புடைய எண்ணற்ற பிற்போக்கான கூறுகள் பரவிக்கிடக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்கான தேசிய இயக்கத்தில் இருந்த இந்து மத ஆதிக்க சக்திகள் மற்றும் காந்தி உட்பட பல்வேறு தலைவர்களின் சித்தாந்தப் பார்வையின் தொடர்ச்சியே அரசமைப்புச் சட்டத்திலும் தீவிர இந்து மதக் கண்ணோட்டம் விரவிக்கிடக்கக் காரணம் என்பதை மறுக்க முடியாது. தற்போது இந்துத்துவ சக்திகள் வளர்ச்சியடைவதை, அந்தச் சார்புநிலையின் நீட்சியாகத்தான் காண வேண்டுமே தவிர, அரசமைப்பு சட்டத்துக்கு முரணான வளர்ச்சியாகக் கருத முடியாது.  இவ்வாறு அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கும் , அதில் காணப்படும் இந்துமதக்கூறுகளை ஒவ்வொரு விதி/ஷரத்து(article) வாரியாகக் காணலாம்.

விதி 1 : ஒன்றியத்தின் பெயரும் அதன் எல்லைகளும். (1) இந்தியா, அதாவது பாரதம் என்பது, மாநிலங்கள் இணைந்த ஒன்றியமாக இருக்கும்.

இந்தியாவை பாரதம் என்று பெயரிட்டதிலேயே அரசமைப்புச் சபையில் இருந்த இந்துத்துவ சித்தாந்தவாதிகளின் ஆதிக்கம் தெரிகின்றது. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் பரத மன்னனால் ஆளப்பட்ட பாரத் வர்ஷம் என்ற பெயருடைய நிலப்பரப்பாக இருந்ததாக இந்து இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே பாரதம் என்று குறிப்பதன் மூலம் ஆங்கிலேய ஆட்சிக்கும் இஸ்லாமிய ஆட்சிக்கும் முந்தைய ஒரு பொன்னான இந்து சாம்ராஜ்யம் இருந்ததாக உணர்த்த முயல்கின்றனர். இது மேம்போக்கான மிதவாத இந்துத்துவப் போக்காகத் தோன்றினாலும், இந்து அல்லாதவர்களின் மீது இது ஏற்படுத்தும் தனிமைப்படுத்தும் விளைவு நிச்சயம் ஆபத்தானது. (ஆகஸ்டு 1949இல் ஓர் இந்து பெண் துறவி இரண்டு கோரிக்கைகளை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக மிரட்டினார். (i) இந்தியை தேசிய மொழியாக அறிவித்தல், (ii) இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்றுதல். நேருவும் மற்றும் சிலரும் அவரை சந்தித்து வாக்குறுதி அளித்த பின்னரே அப்போராட்டத்தைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது).

அரசியலமைப்பின் வேறு எந்தப் பகுதியிலும் பாரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆகவே அதனை முதல் ஷரத்திலேயே புகுத்தி வைத்திருப்பது ஒரு மிக முக்கிய அடையாளமாகப் படுகின்றது. அந்த அடையாளம் இந்துக்களுக்கு புதிய இந்தியாவின் மீது இருக்கும் உரிமையைக் குறிப்பால் உணர்த்துவதே ஆகும். அரசியலமைப்புச் சபையில் பீகாரில் இருந்து வந்த லால் நரேன் பாரதம் என்ற வார்த்தை இந்தியாவிற்கு முன்னதாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று பேசுகிறார். பல நூறு ஆண்டுகள் அந்நிய ஆட்சியில் இருந்து தன்னாட்சியை அடைந்ததாகக் கருதப்பட்ட இந்தியாவிற்கு, பாரதம் என்று பெயரிட்டதன் மூலம் இந்துக்கள் அந்த அரசோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள உதவியது.

கூட்டாட்சி என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றியம் என்று பயன்படுத்தப்பட்டிருப்பதும் ஒரு நோக்கத்துடனேயே நடந்தேறியுள்ளது. ஒன்றியம் என்ற வார்த்தையின் பயன்பாட்டினை நாம் புரிந்து கொண்டால் அதனோடு இணைந்துள்ள இந்துத்துவ நோக்கங்களையும் நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்திய சுதந்திரத்திற்கு மற்றும் பிரிவினைக்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, 1946 இல் பிரிட்டிஷ் அமைச்சர்களின் தூதுக்குழு (Cabinet Mission) சுதந்திர இந்தியாவின் வடிவத்தைப் பற்றி தங்கள் பார்வையை முன்வைத்திருந்தனர். பலம் குறைந்த மையத்தையும் ,அரசமைப்பில் குறிப்பிடப்படாத அதிகாரங்களை தங்களிடத்தே கொண்ட பலம்வாய்ந்த மாநிலங்களையும் கொண்ட ஒரு கூட்டாட்சி அரசாகவும் இருக்க வேண்டும் என்று அக்குழு கருதியது. மைய அரசு பலமாக இருப்பின் இந்து ஆதிக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று முஸ்லிம் லீக் கருதியது.

எனவே, அதற்கு தீர்வாகவே அமைச்சர்களின் தூதுக்குழு இவ்வகையான கூட்டாட்சி அமைப்பை நிறுவ எண்ணியது. ஆயினும் கூட்டாட்சி அமைப்பு அமையவில்லை என்பதை நாம் அறிவோம்.இத்திட்டம் நிறைவேறாமல் போக பல்வேறு காரணங்கள் உண்டு. மிக முக்கியமாக, கூட்டாட்சி முறைக்கு காங்கிரஸின் எதிர்ப்பு. இதன் தொடர்ச்சியே பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்தது. பெரும்பாலான இந்திய வரலாற்றாளர்கள் பிரிவினைக்கு ஜின்னாவையும் முஸ்லிம் லீகையும் காரணம்கூறி காங்கிரஸின் பங்கை மறைக்கின்றனர்.

பிரிவினைக்குப் பின்னர், இந்திய அரசியல் தலைமைகள் தங்கள் திட்டமான பலமான மையத்தை அமைப்பதற்கு இருந்த தடை நீங்கியதாக எண்ணி நிம்மதி அடைந்தனர். 1947 இல் கே எம் பணிக்கர் எழுதியதாவது இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட மாகாணங்களை அகில இந்தியத் தலைமையின் கீழ் வைத்திருப்பது என்பது பலவீனமான மையத்தை கொண்ட கூட்டாட்சி அரசு என்ற தவிர்க்கமுடியாத தீங்கையே விளைவித்திருக்கும். அவர்கள் பிரிந்து சென்றபின் மற்ற மாகாணங்களுக்கும் அதுபோன்ற அதிகாரத்தைக் கொடுப்பது அவசியமற்றதாகிறது. பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் பேரம் பேசும் அதிகாரம் முற்றுப் பெற்று விடுவதால், தங்களுடைய நோக்கமான பலம்வாய்ந்த மைய அரசை அமைப்பதற்கு இருந்த தடையும் நீங்கியதாகவே அரசியலமைப்புச் சபையில் இருந்த பலர் கருதினர். நேருவின் பார்வையும் இவ்வாறாகவே இருந்தது.

அரசியலமைப்பு சபையிலிருந்த வேறுசிலர் பலமான மையம் அமைப்பதற்கு இந்துத்துவ பார்வையிலான வரலாற்றைக் காட்டி நியாயப்படுத்தினர். எப்போதெல்லாம் இந்நாட்டில் பலமான மையம் இல்லையோ அப்போதெல்லாம் அந்நியர்களிடம் அடிமைப் படுகிறோம். அரசமைப்பின் இரண்டு முக்கியமான விஷயங்கள் ,நாட்டின் ஒற்றுமையும் பலமான மத்திய அரசாங்கமும் ஆகும். அவற்றை கேள்வி கேட்போர் அந்நிய அரசாங்கத்தின் கைக்கூலிகளாகவே இருப்பார்கள் என்று ஜஸ்பத் ராய் கபூர் கூறுகிறார்.

இவர்கள் அல்லாமல் அம்பேத்கர் உட்பட வேறு பலரும் மையப்படுத்தலை ஆதரித்தனர். இந்து தேசியவாதிகள், மதசார்பற்ற இந்திய தேசியவாதிகள் (நேரு) மற்றும் அம்பேத்கர் இம்மூவரும் வேறு வேறு காரணங்களுக்காக பலமான மைய அரசு வேண்டுமென்ற கருத்தில் ஒன்றிணைந்தனர். அம்பேத்கர் மையப்படுத்தலை ஆதரித்தாலும், நேருவின் தீவிர மையப்படுத்தும் அரசியலை எதிர்ப்பதிலும் முதலாக நின்றார். எடுத்துக்காட்டாக, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை போதும் என்ற நேருவின் பார்வையை எதிர்த்தார். மேலும் முன்மொழியப்பட்ட அரசமைப்பு சட்டத்தில் இருக்கும் மையப்படுத்தும் கூறுகள், மாகாணங்களின் தன்னாட்சியில் வரம்பு மீறி ஆதிக்கம் செலுத்துவதையும் ஒப்புக்கொண்டார்.

மையப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தென்மாநிலங்கள் முதன்மையாக நின்றன. என்.ஜி. ரங்கா, கே. சந்தானம், மகபூப் அலி பைக் மற்றும் ராமலிங்கம் செட்டியார் ஆகியோர் மையப்படுத்தலை தீவிரமாக எதிர்த்தனர். மகபூப் அலி ஒன்றிய அரசியலமைப்பில் மத்திய அரசாங்கம் விரும்பினால் சர்வ அதிகாரங்களையும் எடுத்துக்கொள்ள இந்த வரைவு அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கிறது என்று கூறுகிறார்.

டிடி கிருஷ்ணமாச்சாரி, பலமான மையம் என்பது மைய அரசின் மொழியைப் பேசாத மக்களை அடிமை நிலைக்கு இட்டுச் செல்லுமோ என்ற அச்சம் இருப்பதாக கூறுகிறார். மையப்படுத்தலின் விளைவாக இந்தி ஏகாதிபத்தியமும் சர்வாதிகார அரசும் அமைந்து விடுமோ என்றும் அச்சப் படுவதாக குறிப்பிடுகிறார். ஹெச்.வி.காமத் குறிப்பிடுகையில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற வழிமுறை ஜனநாயகத்திற்கு இருக்கும் ஆபத்து. அது வரும்காலங்களில் ஹிட்லரை போன்ற சர்வாதிகார நடைமுறைக்கே இட்டுச் செல்லும் என்றும் குறிப்பிடுகிறார்.

சீக்கியர்களின் எதிர்ப்பை பார்க்கையில், ஜஸ்டிஸ் அஜித் சிங் அரசியலமைப்பு சபையில் இருந்த சீக்கிய பிரதிநிதி, மாநிலங்களுக்கு தன்னாட்சி வழங்கவில்லை என்ற காரணத்திற்காக இந்திய அரசியலமைப்பில் கையெழுத்திடவில்லை என்ற ஒரு வரலாற்று உண்மையை மேற்கோள் காட்டுகிறார் .

ஹுக்கம் சிங்  கூறுகையில் இந்திய அரசியலமைப்பின் மீது சீக்கியர்களுக்கு பெரும் விரக்தி ஏற்படுகிறது. அரசியலமைப்பிலுள்ள ஒவ்வொரு ஷரத்தும் மாநில அரசுகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் விதமாக இருக்கின்றன. மேலும் சிறுபான்மையினர், குறிப்பாக சீக்கியர்கள் முழுவதுமாக நிராகரிக்கப் பட்டுள்ளனர். மாநில அலகுகள் சாதாரண நகராட்சி மன்றங்களைப்போல பாவிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சேர்ந்து ஒரு பாசிச அரசு அமையவே வழிவகுக்கும் என்கிறார். 1947லிருந்து, குறிப்பாக 1980களில் மற்றும் 1990களில் பஞ்சாபில் ஏற்பட்ட கலவரங்களுக்கு காரணம், மையத்தை பலமாக வைத்திருக்கும் இந்த ஒன்றிய அரசியல் அமைப்பே ஆகும் என்று பெய்ன்ஸ் குறிப்பிடுகிறார்.

1947க்கு முன்னரும் பின்னரும் இந்துத்துவ சக்திகளே தீவிர மையப்படுத்தலுக்கும், ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்திற்கும் குரல் கொடுத்து வருகின்றனர். வேறு பலரும் மையப்படுத்தலை ஆதரித்து இருந்தாலும், பலமான மையம் கொண்ட இந்திய அரசியலமைப்பு என்பது இந்துத்துவ சக்திகளின் நோக்கமான இந்து-இந்தியா தேசிய வாதத்தையே முன்வைக்கிறது.

தொடரும்...

(ப்ரீத்தம் சிங் ஆக்ஸ்போர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்துறைப் பேராசிரியராக உள்ளார். இவர் கூட்டாட்சி, தேசியவாதம் மற்றும் வளர்ச்சி, இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட மதவாதம் போன்ற குறிப்பிடத்தக்க புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதி  Hindu Bias in Indias Secular Constitution என்ற பெயரில் வெளியான தொகுப்பின் மொழியாக்கமே இக்கட்டுரைத் தொடராகும்).