"ஊர்"- தமிழ் பற்றிய ஒரு வீடியோ கட்டுரை, பாகம்-1- 26 நி. இப்பொழுது அமெரிக்காவில் யூஜீன், ஓரிகான் மாநிலத்தில் உள்ள லாப நோக்கம் அற்ற ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் 'ஆர்க்கியாலஜிகல் லெகசி இன்ஸ்டிடியூட்" செயலாக்கும் "ஆர்க்கியாலஜி சேனல்" (archaeologychannal.org) எனும் இணைதளத்தில் காணப்படுகிறது.

எம்.வி. பாஸ்கர் தயாரித்து, கே.டி.காந்திராஜனுடன் இணையாக இயக்கிய 'ஊர்" வீடியோவை முதல் நாள் (ஜூலை 19, 2006) 8639 பேரும், இரண்டாம் நாள் 9942 பேரும் கண்டதாக சேனலின் நிறுவனர் டாக்டர் ரிச்சார்ட் பெட்டிக்ரூ கூறுகிறார். ''தினசரி சுமார் பத்தாயிரம் பேர் வருகையாளர் பதிவில் இந்தியா 10ஆம் இடத்தில் பின் தங்கியுள்ளது ஏன்?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் பேராசிரியர் பெட்டிக்ரூ.

ஜூலை 18 வரை இந்த வீடியோவை ஆர்க்கியாலஜி சேனலின் முன்பக்கத்திலும், அதன் பிறகு இணைதளத்தின் உள் பக்கத்திலும் (http://www.archaeologychannal.org/content/vedio/ur.html) காணலாம். இந்தப் பக்கத்திற்கு இந்தியாவின் ஐ.டி. நிறுவனமான ஹெச்.சி.எல் (ஏஇக) நிதி உதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஒரு வீடியோவை உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தை டாக்டர் ஈ.அண்ணாமலை (முன்னாள் இயக்குனர், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் லேங்குவேஜஸ், தற்கால விசிடிங் புரொஃபசர், எமெரிடஸ், யேல் யுனிவர்சிடி, அமெரிக்கா) எடுத்துக் கூறியதின் மூலம் தயாரிக்கப்பட்டது ஊர்.

இயல், இசை, நாடகம், மேலும் தொல்பொருளியல் மற்றும் இலக்கிய வரலாற்று அம்சங்களை உட்கொண்டு, தமிழின் அறிந்த சரித்திரத்தை, அதன் மூலம் 800 வருடங்களை, அறிமுக பூர்வமாக வர்ணிக்கிறது ஊர்.

செம்முதாய் - தென் ராமநாதபுரத்தின் தேரிக்காட்டு செம்மணற் குவியல்களுக்கு இடையில், டாக்டர் முருகபூபதியும் அவரது மணல் மகுடி நாடகக் குழுவினரும் அரங்கேற்றிய ஒரு நாடகம் - இந்தக் கட்டுரையின் முன் உரை, முதல் ஓசை.

இழந்த கண்டம், அழிந்த நகரம், இவை தாண்டிய பண்டைத் தமிழகம், திணைக் கோட்பாடு, இலக்கிய சகாப்தங்கள், தமிழ் பிராமி, அசோக் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், நவீன லிபி, சிந்து லிபி, சமணத் தொடர்பு மற்றும் இந்துத்துவத்தின் தொடக்க காலம், இந்த வீடியோவின் சில அம்சங்கள்.

காவேரி சங்கமத்தில் பூம்புகார் செல்லக்குஞ்சு அம்பா முறையில் பாடியிருக்கும் சிலப்பதிகாரம், இப்பெருங்காப்பியத்தை பரத நாட்டிய பாணியில் வழங்கும் ஸ்ரீலதா வினோத், மேல் சித்தாமூர் ஜீனாலயத்தில் சமணத்தாய்களின் கணிதம் தோய்ந்த நாமாவளி வழிபாடு, திருப்பனந்தாள் தியாகராஜ ஓதுவாரின் திருமுறை, கரிக்கியூர் இருளரின் புகிரி மற்றும் குவாள் இசை - இவை, இந்த வீடியோவின் மற்ற பகுதிகள் இல்லாவிட்டாலும்கூட, தனித்து ரசிக்கக் கூடியவை.

''சொல்லிலும் உணர்விலும் ஆழ்ந்த கருத்துகளை, இசை மற்றும் பிம்ப வடிவங்களில் ஈர்க்கும் வகையில் பதிவாக்குகிறது ஊர்" என்கிறார், பேராசிரியர் அண்ணாமலை. ''அருமையான தயாரிப்பு. இது உலக அளவில் குறிப்பாக மேல் நாடுகளில், பெரும்பாலோர் அறியாத விஷயம் என்ற காரணத்தால், இந்த வீடியோவின் மதிப்பு மேலும் அதிகம். நான் திராவிட இயல் நிபணர் இல்லை, ஆனாலும் இதன் பின்னணி ஆராய்ச்சியின் ஆழ்மையை உணர முடிகிறது," என்று எடுத்துச் சொல்லியுள்ளார் டாக்டர் பெட்டிக்ரூ.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஊர் வீடியோவின் டிவிடி (ஈயஈ) நகல், கல்வி மற்றும் கலாச்சார சம்மந்த உபயோகங்களுக்கு (கருத்தரங்கக் காட்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்கள், அரசு இலாக்கா ஆவணங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆகியவைக்கு) தமிழிலும் ஆங்கிலத்திலும், அணுகுவோர்க்கு, இயன்ற வரை விநியோகம் செய்யப்படும்.

எம்.வி.பாஸ்கர்,
91 - 44 - 2445 1594, 093805 - 60921.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It