இயற்கையின் தவறா? மனிதத் தவறா?

கடவுளின் தேசம் என்று கொண்டாடப்பட்ட கேரளம் ஒருமாத காலமாக சாத்தானின் தேசமாக மாறிக்கிடக்கிறது.

kerala flood2 350கேரளா தனது வரலாற்றில் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய வெள்ளப் பெருக்கை சந்தித்திருக்கிறது. கேரள மக்கள் இவ்வெள்ளப்பெருக்கின் காரணமாக மிக மோசமான பேரழிவை சந்தித்துள்ளார்கள். தங்கள் உடமைகளை, உயிர்களை இழந்து தவிக்கிறார்கள். கேரளா முழுவதும் மொத்தம் 5645 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 12,47,496 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  கேரளா முழுவதும் வழக்கத்தைவிட 41% அதிகமான மழைப்பொழிவும், இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 89% அதிகமாக மழைப்பொழிவும் ஏற்பட்டது.  மொத்தமாக  வெள்ளப்பெருக்கின் காரணமாக  20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளன.

கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கை முதலில் இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. அதன்பின் ஏற்பட்ட மக்களின் போராட்டத்தின் காரணமாகவும், கேரள மக்களின் எதிர்ப்புணர்வின் காரணமாகவும் வேறுவழியின்றி இதனை தேசியப் பேரிடராக அறிவித்தது. ஒரு தேசிய பேரிடர், பேரழிவு ஏற்பட்டால் மொத்த நிர்வாகத்தையும் அதில் முடக்கி சரி செய்ய வேண்டும். ஆனால் மோடி அரசு மீட்பு பணிகளுக்கு வெறும் 400 ராணுவ வீரர்களை மட்டும் அனுப்பியது. இதனுடன் 100 படகுகளை சேர்த்து அனுப்பியது. இப்பேரழிவிற்கு முதலில் 500 கோடியும், அதன்பின் 100 கோடியும் என மொத்தம் 600 கோடி மட்டுமே கொடுத்தது. கேரள முதலமைச்சர் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், முதல் கட்டமாக 2000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தேவை என்று கூறியும் அதனை பொருட்படுத்தாமல் வெறும் 600 கோடி மட்டுமே கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் உதவி செய்வதாக அறிவித்தது.  அந்த நிதியை கூட சட்டப்படி வாங்க முடியாது என்று மறுத்த மோடி அரசு கத்தார், தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உதவ முன்வந்தும் அதையும் மறுத்தது. ஆனால் இதே மோடி தான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2000மாவது ஆண்டில் ஏற்பட்ட குஜராத் நிலநடுக்கத்தின் பாதிப்புகளை சரிசெய்ய அனைத்து  வெளிநாட்டு உதவிகளையும் பெற்றுக்கொண்டார். 

குஜராத்தில் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க 2063 கோடியும், மகாராஷ்ட்ராவில்  சிவாஜி சிலை அமைக்க 3,600 கோடியும் செலவு செய்யமுடிகிறது.  மோடியின் சுற்றுப் பயணத்துக்கு 1000 கோடியும், விளம்பரங்களுக்கு 4300 கோடியும் செலவு செய்யமுடிகிறது. இன்னும் திறக்கப்படாத ஜியோ  யுனிவர்சிட்டி க்கு 5000 கோடி  நிதி ஒதுக்கமுடிகிறது. ஆனால், அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கும் கேரள மக்களுக்கு 2000 கோடி கூட கொடுக்க முடியவில்லை இவர்களால்.

 இருப்பினும்  பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் கொடுத்த தொகை கிட்டத்தட்ட 715 கோடி அளவிற்கு சேர்ந்து உள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக சென்று  கொண்டு உள்ளது.

 இந்தப் பேரழிவிற்கு என்ன காரணம்?

கேரளாவில் கிட்டத்தட்ட 55 பெரிய அணைகளும் 200 சிறு அணைகளும் இருக்கின்றன. பெருமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட அணைகள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டதன் காரணமாகத்தான் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய பேரழிவை கேரளா சந்தித்தது. (ஆனால் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விட்ட நீரின் காரணமாகத்தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூசாமல் உச்சநீதிமன்றத்தில் பொய் கூறியது. இதன் மூலம் தமிழர்களின் பேருதவியினால் தமிழ் மக்கள் மீது மலையாளிகளுக்கு ஏற்பட்ட பற்றுதலை சிதைக்கும் வகையில் இன வாதத்தை விதைத்தது.)

மேலும்  சமவெளிகளில் நெல்வயல்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் கட்டட காடுகளாக்கப்பட்டிருப்பதால்  எங்கும் வெள்ளக்காடானது. மேற்கு மலைத் தொடர் பாதுகாக்கப்படாமல் வளர்ச்சி மற்றும் சுற்றுலா என்ற பெயர்களில் அரசு அதிகாரிகளும் முதலாளிகளும் அரசியல் புள்ளிகளும் நடத்தும் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாகவும் தேவைக்கு அதிகமான அணைக்கட்டுகளின் காரணமாகவும் பெரும் நிலச்சரிவுகளை கேரளம் சந்தித்து உள்ளது. உருப்படியாக நீர்மேலாண்மையை செய்திருந்தாலோ, வானிலை முன்னெச்சரிக்கையை கவனத்தில் கொண்டு அணைகளில் முறையாக நீரை திறந்துவிட்டிருந்தாலோ இத்தகைய பேரழிவிலிருந்து கேரளா தப்பியிருக்கலாம். ஆனால், தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களுக்கு சேர வேண்டிய தண்ணீரை கொடுக்காமால் பேராசையுடன் செயல்பட்டு வருகிறது கேரள அரசு.  மழைநீர் அதன் போக்கில் சென்று கடலில் கலக்கவிடாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

kerala flood1 350இவை மட்டுமில்லை கேரள வெள்ளப் பெருக்கிற்கு அடிப்படையான காரணமாக பருவநிலை மாற்றமும் ஆகும். அதாவது  மிகக் குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மழை பொழிவு. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் ஏற்பட்டது போலவே தைவான் நாட்டிலும் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய பருவநிலை மாற்றத்திற்கு  முதன்மையான காரணமாக உள்ளது புதைபடிவ எரிபொருட்களான டீசல், பெட்ரோல், மீத்தேன் மற்றும் நிலக்கரி போன்றவையாகும். இப்புதைப்படிவ எரிபொருட்களை தடை செய்ய வேண்டும் என்று உலகம் முழுதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்திய அரசு  பெட்ரோல், டீசல், மீத்தேன் மற்றும் நிலக்கரி போன்றவற்றில் பல லட்சம் கோடிகளை பல்வேறு தேசிய இனங்களின் நிலப்பரப்பிலிருந்து  கொள்ளை   அடித்துக்  கொண்டு செல்கிறது.  மக்களுக்கு  இதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், இந்திய அரசுக்கு எதிரான மிகப்பெரிய அளவு மக்கள் போராட்டம் ஏற்படும். ஆகவே இதுபோன்ற விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. மேலும் உலகம் முழுவதும் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள் போல, இந்தியாவில் நிதி ஒதுக்கி ஆய்வுகள் எதையும் செய்யவில்லை. காரணம் இந்தியா முழுக்க கிடைக்கும் புதைபடிவ எரிபொருட்களை கொள்ளையடிப்பதும் அதனை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதும் தான் இந்திய அரசின் நோக்கம். இதை எதிர்த்து தனது வளங்களைப் பாதுகாக்க மாநில அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

இந்திய அரசு தேசிய இனங்களின் மீது ஜிஎஸ்டி உட்பட பல்வேறு வகையான வரிகளை விதித்து, அவற்றின்  இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கொண்டு செல்கிறது. மக்கள் புயல், வெள்ளம்  போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும்போது அதனை கண்டுகொள்வதில்லை. உண்மையில் கேரளா பேரழிவு ஒரு தெளிவான அரசியலை கேரள மக்களுக்கு கொடுத்துள்ளது. அதாவது அவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் இந்திய அரசின் கொடூர முகத்தை அறிந்து கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தங்களுடைய நிலத்தையும் வளத்தையும் பாதுகாக்க இறையாண்மை அதிகாரம் உள்ள சொந்த தேசிய அரசு தேவை என்பதை  இந்த வெள்ள பேரழிவுகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும்,மக்களுக்கு உணர்த்தியுள்ளது.