கத்து உரக்கக் கத்து

பாஸிஸ்டுகள் ஒழிக

தீப்பிடிக்கும் குரலால் கத்து

பாஸிஸ்டுகள் ஒழிக

தொண்டை நரம்புகள் அறுபட கத்து

பாஸிஸ்டுகள் ஒழிக

நாம் கத்தவேண்டும்

கூச்சமில்லாமல்

மனத்தடையில்லாமல்

நம் பொறுமையின் சுமையை

நம்மால் தாங்க முடியவில்லை

நம் சகித்துக் கொள்ளுதலின் முடை நாற்றம்

நம்மை குமட்டச் செய்கிறது

கத்தினால் நம் கோபம் சற்றே எடை குறையும்

நம் மன நிலை சற்றே சீரடையும்

கத்து

பாஸிஸ்டுகள் ஒழிக

நிராயுதபாணியான ஒரு பெண்

எப்படி துணிச்சலாக உரத்துக் கத்தினானோ

விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் எப்படி உரத்துக் கத்தினாளோ அப்படிக் கத்து

பாசிஸ்டுகள் நம்மை

தெருவில் பிச்சைகாரர்களாய்

அலைய வைத்தார்கள்

பாசிஸ்டுகள் மனிதர்களை

தெருவில் நிற்கவைத்து சுட்டார்கள்

பாசிஸ்டுகள்

மாட்டுத்தோலுக்குபதிலாக

நம் தோலை உரித்தார்கள்

பாசிஸ்டுகள்

எழுத்தாளர்களை கொலை செய்தார்கள்

பாசிஸ்டுகள்

நீதி கேட்பவர்களை

பொய் வழக்குகளில்கைது செய்தார்கள்

பாசிஸ்டுகள்

ஊடகங்களின் வாயை மூடினார்கள்

ஹிட்லர் அப்படித்தான் செய்தான்

முசோலினி அப்படித்தான் செய்தான்

இந்த உலகை

இருளில் மூழ்கடித்த

பற்பல கொடுங்கோலர்கள்

அப்படித்தான் செய்தார்கள்.

நீ குரலை உயர்த்து

பாஸிஸ்டுகள் ஒழிக

நம் குரல்தான் நம் ஆயுதம்

நம் குரல்தான் நமக்கு பாதுகாப்பு

நம் குரல்தான் நம் வழித்துணை

ஒன்றை நீ புரிந்துகொள்

நாம் யாருமே இங்கே பாதுகாப்பாக இல்லை

நீ முதலில் கத்து

பாஸிஸ்டுகள் ஒழிக

புதர் மறைவிலிருந்து

ஒவ்வொருவராக வெளியே வந்து

பலரும் கத்துவார்கள்

நீ கத்துவதைப் பார்த்து

உன் குழந்தைகள் உன்னோடு சேர்ந்து கத்துவார்கள்

உன் பக்கத்துவீட்டுக்காரன்

பிறகு கத்துவான்

பிறகு தெருவாசிகள் கத்துவார்கள்.

பிறகு நகரவாசிகள் கத்துவார்கள்

பிறகு சிறுநகரவாசிகள் கத்துவார்கள்

பிறகு சிற்றூர்வாசிகள் கத்துவார்கள்

ஞானகூத்தன் கவிதை

இன்றுதான் புரட்டிப்போட வாய்த்தது

நாம் நாய்களல்ல மனிதர்கள் என்றுசொல்ல

உரத்துக் கத்து

கோழைத்தனம் ஒரு ரகசிய நோய்

பயத்தின் சேற்றில் அதிகநேரம் நின்றால்

நம் பாதங்கள் அழுகிவிடும்

தீமையின் பக்கம் இருப்பவர்கள்

அந்தத் தீமையாலேயே அழிவர்

இந்த இரவில்

நமது இந்தக் குரல்

இந்த நகரத்தின் வெற்றிடங்கள்

அனைத்தையும் நிரப்பட்டும்

பாஸிஸ்டுகள் ஒழிக