2014 செப்டம்பர் 27 அன்று கர்னாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு ஜான் மிச்சல் குன்கா அவர்கள் குற்றவாளிகள் என அளித்த தீர்ப்பும், வழங்கிய தண்டனை ஏற்படுத்திய அதிர்வுகளும், 2015 மே 11 அன்று கர்னாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு குமாரசாமி அவர்கள் அளித்த ‘அனைவருக்கும் விடுதலை’ எனும் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ள எதிர் அதிர்வுகளும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. நீதிபதி, நீதிமன்றம், சட்டம், தீர்ப்பு குறித்த, பாரதீய சனதா தலைமை, இந்திய அரசு குறித்த விவாதங்களைப் பரவலாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பப் போகிறோம் எனச் சொன்னவர்கள் ஒருபுறமும், ஜெயலலிதா, சசிகலா நடராசன், இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகர் ஆகியோர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்றரீதியில் தங்களின் அரசியல் நலனுக்காக ஆளும் கட்சியினருக்கு நிகராக, கூடுதலாகக் கூவியவர்கள் தங்களுக்கானப் பயன்கள் கிடைக்குமா? என மறுபுறமும் கூடிக் கூட்டணிக் கனவில் மிதந்துக் கொண்டுள்ளனர்.

2014 செப்டம்பர் 27க்கும், 2015 மே 11க்கும் இடையில் என்ன நடந்தது? என்ன இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்! நீதிமன்றம்னா சும்மாவா? எனப் பேசப்பட்ட வசனங்கள் பொய்யாகிப் போனது. ”அம்மான்னா சும்மாவா?” எனப் புதிய வசனங்கள் அரங்கேறுகின்றன. மேல்முறையீடு செய்ய வேண்டும் எனும் குரலும், செய்ய வேண்டாம் எனும் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

கர்னாடக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்னும் சட்டப்படியான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பங்கேற்று வாதிட்ட பி.வி.ஆச்சார்யா அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான வலுவான காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.

மனுதாரர்களான பா.ச.க.தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தி.மு.க.வின் பொதுச்செயலாளரான திரு அன்பழகன், மற்றும் வழக்கு நடத்திய கர்னாடக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதில் கர்னாடக அரசு, “நாம் ஏன் செய்ய வேண்டும்?” எனத் தயங்கலாம். கர்னாடகா அரசு மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்புள்ளது என சுப்பிரமணியசாமி சொல்லியுள்ளார். தி.மு.க. மேல்முறையீடு செய்யும் எனத் தி.மு.க. தலைவர் கூறியுள்ளார்.

1991----1996 ஆட்சிக் காலத்தில் தனது பதவியைப் பயன்படுத்தி வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக அப்போதைய சனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி 1996, சூன்14 அன்று அளித்த புகாரின் பேரில் சூன் 18, 1996 இல் தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. 1997, சூன் 4 அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. 2001, மே 14 அன்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க மீண்டும் ஜெயலலிதா முதல்வராகிறார். முதல்வரான ஜெ, சசிகலா குற்றக்கும்பலின் அதிகார ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

2003 தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திரு அன்பழகன் நீதிமன்றத்தில் முறையீட்டதன் பேரில், 2003 நவம்பர் 18 அன்று இவ்வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென உச்ச(!) நீதிமன்றம் உத்தரவிட்டது. 2006 முதல் தி.மு.க. வின் குடும்ப ஆட்சியின் அதிகாரம் தலைவிரித்தாடியது. 2010ல் தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ வழக்கின் விசாரணைத் தொடங்கியது.

2011 இல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மீண்டும் முதல்வரான ஜெ அதிகார பலத்தில் நின்று நீதிமன்றத்திற்குப் போக்குக் காட்டியதால் வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.

2012 அக்டோபர் 29 அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மிச்சல் குன்கா நியமிக்கப்படுகிறார். ஜெயா குற்றக் கும்பலுக்கு எதிராக 34,000 பக்கங்கள் கொண்ட சாட்சியங்கள் முன் வைக்கப்பட்டன. 2014 செப்டம்பர் 27 அன்று ஜெயலலிதா, சசிகலா நடராசன், இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகளெனப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், ஏனைய மூவருக்கும் தலா 10 கோடி அபராதமும் அதைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஜெ வுக்கான அபராதத் தொகை அவரது சொத்துக்களை ஏலம்விட்டு கட்டப்பட வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். தண்டனைக்குப் பின்னர் பத்தாண்டுகள் தேர்தலில் போட்டியிடும் உரிமை கிடையாது.

நால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். பிரிவு 13 (1), (ணி) 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை அளித்து 1300 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. 2014 அக்டோபர் 17 அன்று உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. அப்பாவி மக்களுக்கும், மக்களுக்காகப் போராடும் தலைவர்கள்,தோழர்களுக்கும், நிபந்தனைப்பிணை.

இவர்கள் சகல வசதிகளோடு போயஸ் தோட்டத்திலேயே இருக்கலாம். ”ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் எடுத்துக் கொள்கிறேன்” என்று சொன்ன ’ஜெ’ விடம் இருந்த சொத்துக்களும், தோட்டப் பங்களாக்களும், கோடிக்கணக்கானப் பணமும், நகைகளும் முறைகேடாக அல்லாமல் நேர்மையாகச் சம்பாதித்ததா? உடனிருந்த சசிகலா நடராசன் கும்பல் அரசை, அமைச்சர்களைக் கட்டுப்படுத்தும், கோடிகளில் கொள்ளையடிக்கும் அதிகாரம் எப்படி வந்தது? தண்டனை சரிதானே!

தற்காலிகத் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியினரும் பால்குடம், காவடி எடுப்பது, அலகுக் குத்துவது, எச்சில் இலைகளில் புரள்வது, மண் சோறு சாப்பிடுவது, மொட்டை அடிப்பது, தாடி வளர்ப்பது என கோவில் வழிபாடு நிலைக்கு மூட நம்பிக்கையின் அடையாளமாக பா.ச.க. பண்டாரங்களையே தோற்கடிக்கும் வகையில் குற்றக் கும்பலுக்கு விடுதலை வேள்வி நடத்தினர். பொது மக்கள் அச்சத்தில் வாய்மூடி மௌனிகளாக இருக்க, எதிர்க் கட்சிகள் தொடங்கி அனைத்து அரசியல் சக்திகளும் எதிர்க்க முடியாது செயலற்றவர்களாக இருக்கத் தமிழ்நாடே தள்ளாடியது.

’குற்றவாளி’ என தீர்ப்பளிக்கப்பட்டுப் போயஸ் தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை இந்திய அரசின் நிதி அமைச்சர் பா.ச.க. தலைவர் அருண் ஜேட்லி சந்தித்து உரையாடிச் சென்றார். நாடளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு தனது மனப்பூர்வமான ஆதரவை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியதும் நாடறிந்தது. பிறகென்ன! ஜெயலலிதா, சசிகலா குற்றக்கும்பலின் மேல்முறையீட்டு மனுவின் மீதான மறுவிசாரணை அடிப்படையில் கர்னாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

எப்படி? ”வருமானத்திற்கும் அதிகமாக 10% சொத்து வைத்திருக்கலாம்” என உத்திரப்பிரதேசம் கிருஸ்னான்ந்த் அக்னிஹோத்ரி வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவின் சொத்து 8.5% தான் உள்ளது. எனவே, ”அனைவருக்கும் விடுதலை” எனத் தீர்ப்பளித்தார். கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார். 8 மாத மாயத்தோற்றம் கலைந்தது. நீதிமன்றம் தனது ஆளும்வர்க்க ஆதரவு நிலையை எந்த வெட்கமுமின்றி அம்மணமாக வெளிப்படுத்தியது. குற்றவாளிகள் புடம்போட்ட தங்கமாகத் தங்களை அறிவித்துக் கொண்டு இனி தமிழ்நாட்டில் அதிகாரக் கோலோச்சுவர்.

மே 23 இல் மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அம்மானா சும்மாவா? பணம், அரசியல் செல்வக்கு பாதாளம் வரை மட்டுமல்லாமல் அதையும் தாண்டிப் பாயும்! குற்றவாளிகளின் கூட்டணி உருவாகும் சூழல் தெரிகிறது. நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பில் கணக்கு அடிப்படையிலானப் பிழை உள்ளதென சட்ட வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பிழையின்றிக் கூட்டினால் 70% வருவதாகவும், தீர்ப்பே மாறும் எனச் சட்ட வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.

மேல்முறையீட்டுக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாகக் கர்னாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகிறார். மேல்முறையீடு செய்யப்படலாம், செய்யாமல் விடப்படலாம். மேல்முறையீடு செய்து குற்றவாளி எனவோ, இல்லை எனவோ உச்சநீதிமன்றம் முடிவுக்கு வரலாம். ஊழலுக்கு எதிராக வழக்குத் தொடுத்த சுப்பிரமணியசாமிக்கு என்ன வருமானம்? எங்கிருந்து கிடைக்கிறது? வழக்குப்பதிவு செய்த தி.மு.க. வினர் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதெனும் குடும்பச் செயல் ஜெயலலிதா கும்பலுக்குச் சற்றும் குறையாதது.

அதற்காக ஜெயலலிதாவைத் தப்பவிடுவது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டில் கொள்ளையடித்த ஜெயலலிதா, சசிகலா கும்பலைக் குற்வாளிகள் எனவோ, நிரபராதிகள் எனவோ முடிவு செய்ய கர்னாடக அரசுக்கு, உயர் நீதிமன்றத்திற்கு என்ன அவசியம் உள்ளது? மே 25 அன்று கூடிய கர்னாடக காங்கிரசு அமைச்சரவைக் கூட்டத்தில் ” நாம் ஏன் ஜெயலலிதாவைப் பகைத்துக் கொள்ளவேண்டும்? கர்னாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. மேல்முறையீடு செய்து தமிழர்களின் வாக்குகளை இழக்க வேண்டாம்” எனப் பேசியுள்ளார்கள். புனித தேவதை காங்கிரஸ் தலைவர் சோனியாஜியிடம் பேசி முடிவுக்கு வரலாம் என முடிவு செய்துள்ளனர்.

பா.ச.க - காங்கிரஸ் தேர்தல் சதுரங்கத்துக்கு இடையில் ஜெயலலிதா, சசிகலா கும்பலின் மீதான மேல்முறையீடு உள்ளது. மேல் முறையீடு செய்யவும் , செய்யாமல் தடுக்கவும் என தி.மு.க, அ.தி.மு.க. இரு கட்சித் தலைமைகளும் முறையே சோனியாவிடம் முறைவாசல் செய்து கொண்டிருக்கின்றன.

பா.ச.க வின் மதுகோடா ஜார்கண்ட், எடியூரப்பா -கர்னாடகா, காங்கிரசு கட்சியின் ஏ.ஆர்.அந்துலே மகாராஷ்டிரா, ஜெகனாத் மிஸ்ரா, ராஸ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் லல்லு பிரசாத் யாதவ் - பீகார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சிபுசோரன் ஜார்கண்ட், இந்தியன் நேசனல் லோக்தளக் கட்சியின் ஓம்பிரகாஷ் சௌதாலா - அரியானா, சிரொன்மணி அகாலிதளக் கட்சியின் பிரகாஸ்சிங் பாதல் -பஞ்சாப் என தண்டனைப் பெற்றவர்கள் எல்லோரும் சிறையிலா உள்ளனர்.

ஊழல் குற்றங்களும், தண்டனைகளும், தப்பித்தல்களும் நிரம்பி வழிவதுதான் இந்திய அரசியலும், அரசியல் தலைவர்களும். லஞ்சமும், ஊழலும் பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியோடுப் பிரிக்க முடியாத அம்சங்களாகும். கார்ப்பரேட் சுரண்டலை எதிர்க்காமல், கார்ப்பரேட் - அரசியல் கள்ளக் கூட்டை எதிர்க்காமல் ஊழல் எதிர்ப்பு என்பது நிழலோடு யுத்தம் நடத்துவது போலாகும். ஆளும் வர்க்க நிறுவனங்களான நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு, அதிகார வர்க்கங்கள், அரசியல் தலைமைகளுக்கு எதிரான சக்திகளை ஒடுக்கத்தானேயொழிய அரசியலில் ஊழலை ஒழிக்க அல்ல.

ஊழலுக்கு எதிரான தண்டனை அறிவிப்புகள் தினசரிச் செய்திகளாக வந்தாலும் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையைப் புதுப்பிக்க இயலவில்லை. மக்கள் இயக்கங்களும், மக்கள் மன்றங்களில் தண்டனைகளும் எனும் நிலையை உருவாக்குவதுதான் நம் முன்னே உள்ள கடமையாகும். கார்ப்பரேட் சுரண்டலும் வளர்கிறது. ஊழலும் வளர்கிறது. மக்கள் எதிர்ப்பு இயக்கங்களும் வளரக் கடமையாற்றுவோம்.