யாருக்குச் சேவகம் செய்ய இந்த ஏற்பாடு?

2013 ஆம் ஆண்டு காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட "ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் மசோதா" நுகர்வோருக்கு சாதகமான சில அம்சங்களைக் கொண்டிருந்தது. தற்போது 2015 ஆம் ஆண்டு ஆளும் பா.ச.க அரசு, அம்மசோதாவில் 118 திருத்தங்களைச் செய்திருக்கிறது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு பெருமளவில் ஆதரவாகவும், குடியிருப்பு வாங்கும் நுகர்வோருக்கு எதிராகவும்அமைந்திருக்கிறது.

இதனால் சாமானிய, நடுத்தர வர்க்க மக்கள் வீடு வாங்கும் வாய்ப்புகளை மழுங்கடித்திருக்கிறது பா.ஜ.க அரசு. இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரசு கட்சி, தில்லி ஜந்தர் மந்தரில் வீடு வாங்குபவர்களைத் திரட்டி, ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது. மேலவையில் பெரும்பான்மை இல்லாத மத்திய அரசு, இச்சட்டத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பையும் விவாதத்தையும் எதிர் நோக்க வேண்டியிருக்கிறது. தொடர்ந்து மக்கள் நலனைப் புறக்கணித்து, அதானி, அம்பானி போன்ற பெருமுதலைகளைக் குளிர்விக்க அரும்பாடுபட்டு வருகிறது மோடி அரசு.

கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கும், தற்போது கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

‘ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டட வரைபடத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது’ என்கிற 2013 ஆம் ஆண்டு சட்டத்தில், மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலின் பேரில் "சிறிய மாற்றங்கள்" செய்து கொள்ளலாம் என்று தற்போது திருத்தப்பட்டிருக்கிறது. குடியிருப்பு வாங்குவோரிடமிருந்து வாங்கும் பணத்தில், கட்டுமான நிறுவனங்கள் 70% ஐ வங்கியில் செலுத்த வேண்டும் என்றிருந்த பழைய சட்டத்தை, 50% வங்கியில் செலுத்தினால் போதும் என்று மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் குடியிருப்பு வாங்கும் நுகர்வோரின் ப‌ண‌த்திற்கான‌பாதுகாப்பு குறைந்திருக்கிற‌து.

அதாவ‌து, பாதி ப‌ண‌த்தை வ‌ங்கியில் செலுத்திவிட்டு, எஞ்சிய‌ ப‌ண‌த்தை வெவ்வேறு திட்ட‌ங்க‌ளில் கட்டுமான நிறுவனங்கள் முத‌லீடு செய்து கொள்வார்க‌ள். இதனால் குடியிருப்பு வாங்குவோர், முன்பணம் செலுத்தி வெகுகாலம் தங்கள் வீடு கட்டி முடிய காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மேலும் வீடு கட்டும் திட்டம் ஒருவேளை நிறுத்த‌ப்ப‌ட்டாலும் கூட‌, 70% நுக‌ர்வோரின் ப‌ண‌ம் திரும்பக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற ‌ந‌ம்பிக்கையிலும் த‌ற்போது ம‌ண் விழுந்திருக்கிற‌து. அதாவ‌து 50% நாம் க‌ட்டிய‌ப‌ண‌த்திற்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.

வாங்குவோருக்கும் விற்போருக்குமான அனைத்து ஒப்பந்தங்களும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டுமென்ற பழைய 2013 ஆம் ஆண்டு சட்டம் திருத்தப்பட்டு,விற்கும் (Agreement to sell)) ஒப்பந்தத்தைத் தவிர மற்ற ஒப்பந்தங்கள் எதற்கும் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று தற்போது திருத்தம் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

இந்தியாவில் வேளாண் தொழிலுக்கு அடுத்தப் படியாக, அதிக மக்கள் ஈடுபடும் தொழிலாக கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது. இச்சட்டத் சீர்திருத்தங்கள் நுகர்வோருக்கு மட்டும் தான் எதிராக இருக்கிறது, மற்ற கட்டுமான நிறுவனங்கள் அனைத்திற்கும் ஆதரவாக இருக்கிறது என்று மட்டும் நாம் தப்புக் கணக்குப் போட்டுவிட முடியாது. இச்சட்டத்தின் முழு பலனையும் தனியார் பெருமுதலாளிகள் மட்டுமே அனுபவிக்கப் போகின்றனர். அதாவது, சிறிய அளவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இச்சீர்திருத்தங்கள் இன்னும் சுமையைத்தான் ஏற்படுத்தப் போகின்றன.

விவசாயிகளுக்கு எதிராக நில அபகரிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது போலவே, நடுத்தர வர்க்கத்திற்கு எதிராக இந்த "ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல்" சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது பா.ச.க. அரசு. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு வசதியாக, தொழிலாளர் நலனை கருத்தில் கொள்ளாது, தொழிலாளர் நலச்சட்டங்களைத் தளர்த்தியது போல, கட்டுமானத் தொழிலில் நுகர்வோருக்கு எதிராக இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம், கட்டுமானத் தொழிலையும் ஒட்டு மொத்தமாக தனியார் பெருமுதலாளிகளின் இலாபவெறிக்கு அடகு வைக்க எத்தனிக்கிறது.