agathiyarஅவலோகிதிஸ்வரர் வழிபாடு:

பௌத்தக் கருத்தியலுக்கு மகாயான பௌத்தத்தின் பங்களிப்புகளில் போதிசத்துவர் வழிபாட்டு அறிமுகம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இவ்வழிபாட்டிற்கு ஜாதகக் கதைகளில் குறிப்புகள் இருந்தாலும், இது மகாயான பௌத்தப்பள்ளியைச் சார்ந்த போதிசத்துவரை துன்பப்படும் மக்களிடத்தே வாழ்பவராகவும் அவர்களின் கொடூரமான துன்பத்தையும் வலியையும் அழிப்பவராகவும் சித்திரித்துள்ளது.

இவ்வழிபாட்டின் நோக்கம் பரிநிப்பாணம் அடைவதற்குச் சுயசிந்தனையை உருவாக்குவதாகும் மற்றும் புத்தராக மாறுவதற்குரிய உறுதிமொழியை நிறைவேற்றுவது, உலகத்தில் வாழும் உயிர்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக உலகில் நிலைத்து நிற்க பரிநிர்வாணமடைவதாகும்.

பரிநிர்வாணம் அடைந்த புத்தர் எதிர்கால மைத்ரேய புத்தராக வரும்வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் அவலோகிதிஸ்வரர் போதிசத்துவர்க்குரிய ஆற்றல் பெற்றவராக விளங்குகிறார் என்று நம்பப்படுகிறது. இவர் பண்டைய பிரதிகளில் 33 வடிவங்களில் காட்சியளிக்கிறார், தாந்திரிக் பிரதிகளில் 108 வடிவங்களில் காட்சியளிக்கிறார். இவருடைய மூலவேர் கி.மு. முதல் நூற்றாண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவருடைய உருவங்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி கால்நூற்றாண்டில், குப்தர் காலத்திலிருந்து காணப்படுகின்றன. கி.பி. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் இவருடைய வழிபாடு புகழடைந்தது. மேலும், இது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஜெனித்தை (Zenith) சென்றடைந்தது. கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் இவர் இந்தியாவில் தம் செல்வாக்கை இழந்தார்.

அவலோகிதிஸ்வரரின் முழுப்பெயர் ஆர்ய அவலோகிதிஸ்வரர் போதிசத்துவர் ஆகும். இவ்வழிபாடு சீனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீன மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு பெயர்களைக் கொடுத்தனர். சில பேர் சீனமொழியில் இணையான பெயர்களை வழங்கினர், மற்றவர்கள் சாதாரணமாகப் பெயரை ஒலிபெயர்ப்புச் செய்தனர்.

சீனமொழியில் இணையான பெயர்களை வழங்கியவர்களிடையே பழைய குழு, புதிய குழு என இரண்டு வகைகள் உள்ளன. கோசேயோன் (Koseon), கண்ணோன் (kannon), கன்ஜியோன் (kanzeon), கன்ஜேஜிகை (kanzejizai) ஆகிய பெயர்கள் பழைய குழுப்பெயர்களில் குறிப்பிடத்தகுந்தவையாகும். யுவான் சுவாங் புதிய குழுவைப் பின்பற்றுகிறார். மேலும் அவருக்குக் கன்ஜேஜிகை (kanzejizai) என்று குறிக்கிறார்.

பல்வேறு பெயர்களின் தொடர்பாக யுவான்சுவாங் தன்னுடைய சியீசி2யில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: அவலோகிதிஸ்வரர் சீனாவில் கன்ஜேஜிகை என்று அறியப்பட்டுள்ளார். இவ்வார்த்தை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவலோகித என்பதன் பொருள் 'உற்று நோக்குவது', ஈஸ்வர என்பதன் பொருள் 'செய்வதற்கு முடியும்' அல்லது 'செய்வதற்குத் தகுதி வாய்ந்தது'.

கோசேயோன், கன்ஜியோன் அல்லது கன்ஜேஜிகை போன்ற பெயர்கள் யுவான் சுவாங்கின் கருத்தின்படி தவறான விளங்கங்களாகும். ஆனால் யுவான் சுவாங்கின் கருத்தைப் ஃபாத்சியாங் (Fa & ts’ang, கி.பி. 643  712) எதிர்த்தார்.

மேலும், அவலோகித-ஸ்வர (Avalokita&Svara), அவலோகித-ஈஸ்வர (Avalokita & Isvara) என இரண்டு சமஸ்கிருத வடிவங்கள் உள்ளன என்று தமது கருத்தை வெளிப்படுத்தினார். இங்கு ஸ்வர என்பதன் பொருள் கோசேயோன், கன்ஜியோன் என்பதில் உள்ளவாறு ஒலி எனப்படும்; ஈஸ்வர என்பதன் பொருள் கன்ஜேஜிகையில் உள்ளவாறு 'செய்வதற்கு முடியும்' அல்லது 'செய்வதற்குத் தகுதி வாய்ந்தது' எனப்படும். சமஸ்கிருதப் பிரதிகளில் உள்ள வேறுபட்ட சொற்களிலிருந்து எடுக்கும்போது வேறுபட்ட சீனப்பெயர்கள் வழக்கத்திற்கு வந்தன என்பது இவரின் கருத்தாகும்.

இச்சொற்கள் தொடர்பான வேறுபட்ட கருத்துக்கள் சமீபகாலம் வரை தொடர்ந்தது. 1927 இல், சிதைவுற்றுக் கிடைத்த சில பழைய ஓலைச்சுவடி அவலோகிதீஸ்வரர் போதிசத்துவர் சமந்தா-முக2-பரிவர்த என்னும் பெயரில் கிழக்கு துருக்கிஸ்தானிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் அவலோகிதிஸ்வர என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சான்றாதாரத்தின் அடிப்படையில், பல அறிஞர்கள் அவலோகிதிஸ்வர, அவலோகிதஸ்வர என இரண்டு சமஸ்கிருதப் பெயர் வடிவங்கள் உள்ளன என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றுள் அவலோகிதஸ்வர என்பது பழமையான வடிவமாகக் கருதப்படுகிறது.

பிற்காலத்தில் இது இந்துயிசத்தின் தாக்கத்தாலும், இதனோடு தாந்திரிக் பௌத்தத்தின் தாக்கத்தாலும் அவலோகிதிஸ்வர என்று மாற்றம் பெற்றுள்ளது. இக்கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இதற்கு வேறுவகையில் விளக்கம் தரலாம். இது தொடர்பாக தையூ கோதோ (Taiyu Goto) என்பவர் ஆர்வமூட்டக்கூடிய பரிந்துரையைச் செய்கிறார்.

இவரின் கருத்தின்படி, மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பௌத்தப் பிரதிகளில் அச்சொல் கன்ஜேஜிகை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தரும் சமிக்ஞையால் அச்சொல் இந்தியாவில் ஆதியில் அவலோகிதிஸ்வரர் என்று வழங்கப்பட்டிருக்கும் என்று கருதலாம். இச்சொல் மத்திய ஆசியப்பகுதியில் நுழைந்தபோது, வட்டார மொழியைப் பின்பற்றுவதாலோ அல்லது படியெடுப்பவரின் தவறாலோ அவலோகிதஸ்வர என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவலோகிதிஸ்வர வழிபாடு பெரும்பாலும் அனைத்து மகாயான பௌத்த நாடுகளிலும் மிகவும் புகழடைந்திருந்தது. இவ்வழிபாடு இந்தியாவில் வழக்கிலிருந்தாலும், அவலோகிதிஸ்வரர் திபெத், சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வழிபடப்படுகிறார். அவலோகிதிஸ்வரர் போதிசத்துவர் இரக்கமும் கருணையும் கொண்ட வடிவமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்நம்பிக்கை அவரின் பெயரை ஓதினால் உடனடியாக அவர் பக்தனின் குரலைக் கேட்டு அவனுடைய துன்பத்திலிருந்து அவனை விடுதலை செய்வார் என்றவாறு அமைகிறது.

பொதலக மலை:

மகாயான மரபின்படி, பொதலக மலை அவலோகிதிஸ்வரரின் வாசஸ்தலமாகும் (உறைவிடம்). பொதலக மலை எது என்கிற கேள்விக்கு நீண்ட காலமாக பதிலளிக்கப்படாமல் அப்படியே உள்ளது. பொதலக மலை அவலோகிதிஸ்வரரின் வாசஸ்தலமாக இருந்தது என்பதற்குப் பண்டைய மகாயானப் பிரதியான அவதம்சக சூத்திரத்தின் பகுதியாக விளங்கக் கூடிய கந்தவ்யூகத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இது "தெற்குத் திசையில், அங்கு பொதலக மலை உள்ளது. அங்கே போதிசத்துவர் அவலோகிதிஸ்வரர் வாழ்கிறார். அவரைச் சென்றடைந்த பிறகு, எவ்வாறு ஒருவர் போதிசத்துவப் பயிற்சியைக் கற்க வேண்டும் மற்றும் எவ்வாறு போதிசத்துவர் நிலையின் வழியில் முதுநிலையை அடைவது என்று அவரைக் கேட்க வேண்டும்.

பல துறவிகள் வாழக்கூடிய கடலுக்குமேல் மலையொன்று உள்ளது. தூய்மையான அந்த மலை பல்வேறு பொ ருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இம்மலை பல வகையான மலர்களாலும், கனிகளாலும், மரங்களாலும், நீரூற்றுக்களாலும், ஓடைகளாலும், குளங்களாலும் நிரப்பப்பட்டுள்ளது. வீரமிக்க போதிசத்துவர் அவலோகிதிஸ்வரர் இம்மலையில் வாழும் அனைத்து உயிர்களின் நலன்களுக்காகவும் வாழ்கிறார். நீங்கள் அங்கு சென்று அவரிடம் ஒழுக்கத்தைப் பற்றி கேட்டால் அவர் பரிநிப்பாணம் அடைவதற்குச் சமயப் பயற்சிகளைக் காட்டுவார்''.

இதிலிருந்து பொதலக மலை போதிசத்துவர் அவலோகிதிஸ்வரரின் வாசஸ்தலம் என்று நாம் அறியலாம். இங்கு, இம்மலை தென்திசையில் கடலுக்கு மேல் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. அவதம்சக சூத்ரா சீனமொழியில் மூன்று முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட அவதம்சக சூத்ராவின் பத்தியிலிருந்து சிக்சாநந்தாவால் (கி.பி. 695 - 699) இயற்றப்பட்ட இரண்டாவது மொழிபெயர்ப்பு "எண்பதுத்தொகை அவதம்சக சூத்ரா' என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில், புத்தபத்ரா (கி.பி. 418 - 420) சீனமொழியில் மொழிபெயர்த்தார்.

இது அறுபதுதொகை அவதம்சக சூத்ரா என்று அறியப்படுகிறது. இப்பிரதியில், மேற்குறிப்பிடப்பட்ட மலையின் பெயர் கோம்யோ (Komyo) அல்லது மேதையின் மலை என்று இடம்பெற்றுள்ளது. இப்பெயருக்கு அவதம்சக சூத்ராவின் சீன அறிஞர் ஃபாத்சியாங் என்பவர் (ஹோஜோ, கி.பி. 643 712) "இம்மலை எப்பொழுதும் பூக்கள் மலர்ச்சியுடன் பூத்துக்குலுங்குவதால் கோம்யோ மலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு 'மலர்ச்சியுடன் இருக்கும் பூக்கள் ' பெரும் கருணையை உணர்த்தும் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மலை தென்னிந்தியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது'' என்று கூறுகிறார்.

ஃபாத்சியாங் என்பவரின் கருத்துப்படி, இம்மலை பொதலக மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் பெயருக்கு இணையான சீனமொழிச்சொல் இல்லை, இது பொதலக என்று ஒலிபெயர்ப்பால் குறிக்கப்பட்டுள்ளது.

இம்மலையின் பெயருக்கு விளக்கம் தரும் ஃபாத்சியாங்கின் சீடரான ஹுய்யுவான் (Hui & Yuan) "ஒரு சிறிய மலரின் மலை'' என்று குறித்துள்ளார். இவருடைய கருத்தின்படி, இம்மலை சிறிய வெள்ளை மலர்கள் பூத்திருக்கும் பூமரங்களால் நிரப்பப்பட்டிருக்கும். இம்மலர்கள் மிகவும் வாசனையானது; அதன் இனிமையான வாசனை மூலைமுடுக்கெல்லாம் சென்றடையும். ஹுய்-யுவான் எண்பதுத்தொகை அவதம்சக சூத்ராவின் உரையாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.

buddhaபொதலக மலையைப் பற்றி மேற்குறிப்பிடப்பட்ட குறிப்புகளிலிருந்து, ஃபாத்சியாங்கும், ஹுய்யுவானும் இந்தியா முழுவதும் பயணமாகி கி.பி. 645 இல் சீனாவுக்குத் திரும்பிய யுவான் சுவாங்கின் புகழ்வாய்ந்த பயணக்குறிப்பைப் பார்த்துள்ளனர் என்று நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. தென்னிந்தியாவைப் பற்றிய தன் பயணக் குறிப்பில் யுவான் சுவாங் பொதலக மலையின் அமைவிடத்தைப் பின்வருமாறு ஆவணப்படுத்தியுள்ளார்:

"மொ-லொ-கு-த (மலகூட) நாட்டின் தெற்கில், கடலுக்கு அருகில் மொ-லொ-ய (மலய) மலை சந்தனம், கற்பூரம் மற்றும் ஏனைய மரங்கள் உள்ள உயர்ந்த செங்குத்தான பாறையையும், அதன் மேல் உச்சிகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும், பாறைகளுக்கிடையே பள்ளத்தாக்குகளையும் கொண்டு அமைந்துள்ளது. பு-த-லொ-க (பொதலக) வுக்கும் கிழக்குத்திசையில் செங்குத்தான பாறைகளின் மீது நேரான குறுகிய வழிகளும், ஒழுங்கற்று குழப்பம் தரும் பள்ளத்தாக்கு வழிகளும் கூடிய வகையில் அம்மலை அமைந்துள்ளது; உச்சியில் தெளிந்த நீரால் அமைந்துள்ள ஏரி இருந்தது.

இதிலிருந்து ஒரு ஆற்றில் நீர் செல்லும்போது இது கடலுக்கு செல்லும் வழியில் மலையை இருபது முறை சுற்றுகிறது. ஏரியின் பக்கத்தில் கல்லொன்று அமைந்த தேவ இடம் குவான் – துஜு – துசை - பூச (அவலோகிதிஸ்வரர்) தெய்வத்தின் அமைவிடமாகும். பக்தர்கள், துணிந்த வாழ்க்கை, அற்புதநீர் மற்றும் பூசத்தைக் காண்பதற்குரிய மலையாகும். ஆனால் ஒரு சிலர் மட்டும் அவ்வாசஸ்தலத்தை அடைவதில் வெற்றி கண்டுள்ளனர்.

பூசத்தின் பார்வைக்காக வேண்டும் மலையடிவார மக்களுக்கு அவர் சில சமயங்களில் பாசுபத தீர்த்திகர் அல்லது மகேஷ்வரராக தோன்றுவார். மேலும், தன்னுடைய பதிலால் வேண்டுபவர்களுக்கு ஆறுதல் அளிப்பார். பொதலகத்தின் வடகிழக்கில் கடல்புறத்தில் நகரம் ஒன்று இருந்தது, தென்கடலில் செங் – க - லோ (சிலோன்) வுக்கு வழி, உள்ளூர் கணக்கர்கள் இங்கிருந்து தென்கிழக்குத் திசையில் 3,000லி தூரத்திற்குப் பயணத்தை மேற்கொண்டனர்''.

யுவான் சுவாங்கின் பயணக்குறிப்பின்படி, பொதலக மலை மலய மலைக்கு கிழக்கில் அமைந்துள்ளது, கடலுக்கு மேல் இல்லை. டாங் வம்சத்தைச் சார்ந்த சின் - செங் (chin - shang, கிஷோ, கி.பி. 688 - 740) என்பவரும் அவலோகிதிஸ்வரரின் பொதலக மலை மலய நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது என்று குறித்துள்ளார்.

பு-த-லொ-க மலையைப் பற்றிய யுவான் சுவாங்கின் சித்திரிப்பு பல வெளிநாட்டு அறிஞர்களை இதன் அமைவிடத்தைத் தேடுவதற்கு ஆர்வமூட்டியது. யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ஆர்.எஃப்.ஜான்ஸ்டோன் (R.F. Johnstone) இது மலய மலைக்குக் கிழக்கில் உள்ள குன்றின் மீது கேப்கொமரின் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது என்று இதன் அமைவிடத்தைச் சுட்டினார். கோமகிசி தககுவா (Komakichi takakuwa) என்னும் ஜப்பானிய அறிஞர் பாபநாசத்திலிருந்து அகத்திய மலைக்கு இடையில் மலய மலைக்குத் தெற்கில் இது அமைந்துள்ளது என்கிறார்.

இராபர்ட் கால்டுவெல் அவர்கள் பெட்டிகோவைப் பின்வருமாறு விவரித்துள்ளார்: "இம்மலை ஆங்கிலேயேர்களால் பொதுவாக அகஸ்தியர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பொதிகை என்பதே அதன் உண்மையான தமிழ்ப்பெயராகும், பொதெகை (pothegei, புலவர்களின் பொதியம்) அல்லது பெரிய பொதிகை என்று இதற்குப் பக்கத்தில் உள்ள சிறிய மலையோடு ஒப்பிட்டு அழைக்கப்படுகிறது''.

தனது உச்சிமுனையோடு 2072.6 மீட்டர் உயரம் கொண்ட பொதிகைமலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசத்திலிருந்து 80 கி.மீ தொலைவிலுள்ளது. இது மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மேலும், மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமம் (அம்பாசமுத்திரத்தில் தெற்கு இரயில்வேயைப் பயன்படுத்தும் இடம்) இதன் நுழைவாயிலாக அமைந்துள்ளது.

அடர்ந்த காடுகள் வழியாக, 1067 மீட்டர் வரை சாய்வாக அமைந்துள்ள மலையைக் கடந்த பிறகு செங்குத்தாக நிற்கும் இம்மலையின் உச்சியை அடைவதற்கு அழகிய குன்றுகளையும் நீரோடைகளையும் கடந்து செல்ல வேண்டும்.

பண்டைய தமிழ் செவ்வியலில் பழைய இலக்கியச் சொல்வடிவமாக பொதியில் என்னும் சொல் அமைந்திருந்தாலும், பொதிகை என்னும் பெயரே இன்றைய வழக்கில் உள்ளது. மேலும், பரவலான பயன்பாட்டில் உள்ளது. பொதிகை என்னும் பெயருக்கு மனநிறைவான விளக்கம் ஒன்றும் இல்லை.

இராபர்ட் கால்டுவெல் அவர்கள் பொதிகையின் சொற்பிறப்பியலைத் தன்னுடைய திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பங்களின் இலக்கண ஒப்பாய்வு என்னும் நூலில் பொதி என்பதற்கு "மூடுவதற்கு', "மறைப்பதற்கு' என்னும் பொருளாகும், பொதிகை என்பது "மறைவின் இடம்' என்னும் பொருளைத் தரலாம் என்று கூறுகிறார்.

அனைத்துத் திசைகளிலிருந்தும் (பக்கங்களிலிருந்தும்) பார்வைக்குரியதாக இருக்கக்கூடிய இம்மலையின் செங்குத்தான உச்சியில் "மறைவின் இடம்' என்று ஏதுமில்லையாதலால் மேற்குறிப்பிடப்பட்ட விளக்கத்தை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இ.ஈ. மெக்லியன் (Maclean ) மாறுபட்ட சொற்பிறப்பியலைத் தருகிறார்: "பொதிகை என்பது கூட்டுச் சொல்லாகும், பொதி என்றால் தமிழில் யானைகளின் காடு என்று பொருள், கை என்றால் தமிழில் இடம் என்று பொருள்''. இச்சொல் மிகவும் நவீன காலத்தைச் சார்ந்தது என்பதாலும் பண்டைய இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்பதாலும் இவ்விளக்கம் வெகுதூரத்தில் உள்ளது.

இம்மலையின் பண்டைய பெயர் பொதியில் என்பதையும் பொதிகை இல்லை என்பதையும் குறிப்பிடுவது மிகவும் ஆர்வத்திற்குரிய ஒன்றாகும். மரபுசார்ந்த தமிழறிஞர்கள் பொதியில் என்பதை பொது+இல் என்று பிரித்து பொதுவான இடம் என்று பொருள் கொள்கின்றனர். இது சரியானதல்ல, தமிழ்ப்புணர்ச்சி விதியின்படி பொது+இல் என்பது பொதுவில் என்று மாறும், பொதியில் என்று மாறாது. உதாரணத்திற்கு, பொது இடம் சங்க செவ்வியல் இலக்கியத்தில் பொதுவில் என்று குறிக்கப்பட்டுள்ளது (புறநானூறு: 89).

பொதியில் என்ற வார்த்தையைப் பற்றிய தமிழிலக்கிய குறிப்புகள்:

tamil statueதமிழிலக்கியம் பற்றி கூறுகையில், கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தத்தின் வருகைக்குப் பிறகே, இன்றைக்குக் கிடைக்கக்கூடிய பழமையான இலக்கியத்தொகுப்புகள் தோன்றியுள்ளன என்று நாம் கூறலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் தென்மலையைக் குறிப்பதற்குப் பொதியில், பொதியம் என்ற இரண்டு வடிவங்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் புனிதத்திற்கு வடக்கில் உள்ள இமயம் மலையோடு தெற்கில் உள்ள பொதியம் மலையை இணையாக பேசுகையில் புறநானூற்றின் இரண்டாம் பாடலில் மட்டும் பொதியம் என்ற சொல் அரிதாக இடம்பெறுகிறது. இமயம் என்பதில் உள்ள "யம்' பின்னொட்டைப் போலச்செய்தல் பண்பாக பொதியம் என்பதிலும் செய்திருப்பதற்குச் சாத்தியம் உள்ளது.

பலமுறை வரும் பொதியில் என்ற வார்த்தையைப் போதி+இல் என்று பிரித்து பௌத்தர்கள் தங்கிய மலையைக் குறிக்கிறது அல்லது பௌத்தர்களின் இருப்பிடத்தைக் குறிக்கிறது அல்லது பௌத்தத் துறவிகளின் இருப்பிடத்தைக் குறிக்கிறது என்பதற்கு கீழே குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பௌத்தம் அல்லது பௌத்தத் துறவிகளைக் குறிப்பதற்குப் போதி என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இல் என்னும் பின்னொட்டு இருப்பிடத்தைக் குறிக்கிறது, "வீடு' தமிழ்ப்பாட்டில் பொதுவானதாகும். கோ (அரசன் அல்லது கடவுள்) + இல் (வீடு) என்பது கோயில் (மாளிகை) என்று மாறுவதைப் போல பொதி+இல் என்பது பொதியில் என்று மாற்றம் பெற்றுள்ளது.

போதி+இல் என்பதை அவலோகிதிஸ்வரர் மற்றும் போதிசத்துவர்களின் இருப்பிடத்தின் மலையின் பெயராக எடுத்துக்கொண்டு இதன் மூலத்தை ப் பார்த்தல், நாம் போதி+இல்=போதியில் என்று இருந்தது பின்பு பொதியில் என்று மாற்றம் பெற்றிருக்கலாம் என்று அனுமானிக்கலாம். இது பௌத்தர்களின் புனிதத்தலமாக விளங்கியவுடன் மேற்குறிப்பிடப்பட்ட மலையின் பெயராக விளங்கியது.

இச்சொல்லின் பொருள் அதன் தன்மைக்கு ஏற்ப விரிவாக்கம் பெற்றது மற்றும் இச்சொல் பொதுவாக பௌத்த விகாரைக் குறிக்கிறது. எனவே, இச்சொல் நியமம், பள்ளி ஆகிய பாலிச்சொற்களைப் போல செவ்வியல் தமிழிலக்கியத்தில் மாற்றம் பெற்றுள்ளது. மேலும், பொது இடங்களுடன் அனைத்து கோயில்களையும் குறிப்பதற்குப் பொதியில் என்ற சொல்லைப் பொதுமைப்படுத்துவது, அவைகளுக்கு சங்க இலக்கியத்தில் காணப்படும் மன்றப்பொதியில் போன்ற சொற்களில் உள்ள வெளிப்பாடுகளில் காணலாம்.

சங்கத்தொகையின் அகநானூறு தென்னவன் பொதியில் என்று குறிக்கிறது. "எட்டிவிட முடியாத உச்சியைக் கொண்ட தென்னவனின் பொதியில் மலை, பேரிரைச்சலுடன் இறங்கும் அருவி (138: 710); பாலை பொதியில் அல்லது கோயிலில் தங்குதலின் மகிழ்ச்சியற்ற தலைவனின் பேச்சு (மேலது 167ஆம் பாடல்). பழைய ஆலமரத்துடன் பொதியில் தோராயமாக பழைய வலிமையான ஆலமரத்துடன் கூடிய பொதியில் மலையைக் குறிக்கிறது (மேலது 251 ஆம் பாடல்). பொதியில் மலையில் தங்கியிருந்த தெய்வம் சென்றுவிட்டது.

ஆனால் பழைய புறா தன் இணையுடன் சேர்ந்து வாழும் இடமான தூணிலமைந்த கோயிலையும் காட்சியாக நாம் கொண்டிருக்கிறோம் (மேலது 307: 115). காட்டு மிருகங்களையும் மலைவாழ் மனிதர்களையும் கொண்டுள்ள பொதியமலையின் உயர்ந்த உச்சியில் ஏறுவதற்குக் கடினமானது என்று தலைவி கூறுகிறாள் (மேலது 322: 915). இங்கு மலையின் உச்சி செங்குத்தான உயரமாகவும் அடைய முடியாததாகவும் இருப்பது வலியுறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

பொதியில் பெயரின் கீழ் அழிவுற்றதில் பொதுவானதில் பாலைத்திணைக்குப் பொருத்தமாக கோயில்களின் உருவங்களை நாம் கொண்டிருக்கிறோம் (மேலது 373377). வறண்ட நிலத்தின் வழிகளில் அருகில் உள்ள கோயில்கள் வறண்ட காட்சியாய் நிற்கின்றன, நில அமைப்பின் காட்டுத்தன்மையைக் காட்டுகிறது, என்பதெல்லாம் பௌத்தக்கோயிலாக இருக்கலாம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி புறநானூற்றில், வடக்கிலுள்ள பொன் இமயம் உச்சி மற்றும் தெற்கிலுள்ள பொதியம் போல சேர மன்னன் நீண்ட காலத்திற்கு வாழவேண்டும் என புலவர் வாழ்த்துகிறார், இம்மலைகளின் அடிவாரத்தில் தனது குட்டியுடன் ஓய்வெடுக்கும் தாய்மானின் மகிழ்ச்சியில் மூன்று நெருப்புகளின் தியாகங்கள், தங்களுடைய மாலைப்பொழுது சடங்குகளின் பகுதியாக பிராமணர்கள் நிகழ்த்துவதாகக் கூறப்பட்டுள்ளார்கள் (பாடல் 2: 17 24). பொதியில் என்பதன் புனிதம் இங்கு வேதச்சூழலில் இமயம் என்பதுடன் பொதியம் என்று அழைக்கப்படுகிறது என்பது இங்கு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

புறநானூற்றில் கந்து (தூணால் அமந்த விகாரில் உள்ள தெ ய்வம்) அழிவுற்றதிலி ருந்து பயன்படுத்தாமல் இருந்தது மற்றும் படையல் ஏதுமில்லை; யாருமற்ற கோயிலில் சாம்பல் நிறத்தில் முடியைக்கொண்ட முதியவர்கள் பகடையை உருட்டி விளையாடினார்கள் (52: 817) என்று கூறப்பட்டுள்ளது. பொதியில் மலையின் மீது மேகங்கள் ஓடுவது பற்றி குறிக்கப்பட்டுள்ளது (மலை தாவல் பொதியில்) (மேலது 128: 17). சாய்வுற்ற வலிமையில் பல தூண்களுடன் உள்ள கோயில் என்று பொதியில் என்பதை எடுத்துக்கொள்ளலாம் (மேலது 375: 110). பொதியில் என்ற சொல்லைக் கோயில் என்று எடுத்துக்கொள்ளலாம் (மேலது 390).

அகநானூற்றில் இரண்டு பாடல்கள் (251, 281) கோசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொதியில் மலையின் மீது மௌரியர்கள் நிகழ்த்திய படையெடுப்பு தொடர்பாக சில தகவல்களைத் தருகின்றன. மௌரியப்படை தென்னாட்டில் உள்ள அறைவாய் என்னும் குறிப்பிட்ட கணவாய் வழியாக பொதியில் மலையை வந்தடைந்தனர்.

அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அறைவாய் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரம்போலி கணவாய் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த கணவாயைக் கடந்து மௌரியப்படை பொதியில் மலையை அடைந்தது. மௌரிய வம்சம் பௌத்தத்தோடு தொடர்பு பெற்றிருந்ததால், பொதியில் மலைக்கு மௌரியர்களின் வருகை அம்மலையில் பௌத்தத்துடன் தொடர்புடைய புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்க வேண்டும்.

குறுந்தொகையில் 15 ஆம் பாடலில், கோசர்கள் தோன்றிய பண்டைய ஆலமரங்களுடன் கூடிய பொதியில் என்பது பொதியில் மலையைக் குறிக்கிறது என்று நுண்ணறிவுடன் விளக்கப்பட்டுள்ளது. 84 ஆம் பாடலில் வேங்கை, காந்தள் ஆகிய மலர்களின் நறுமணத்துடன் மேகங்கள் மலையின் மீது ஓடும் பொதியில் மலையைப் பற்றிய மற்றொரு குறிப்பு (புறநானூறு 128ஆம் பாடலில் மேற்குறிப்பிட்டவாறு) நமக்கு கிடைத்துள்ளது.

பொதியில் "மலையை மக்கள் அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் இதனுடைய மனம் தடுமாறும் தோற்றமும் அதன் உயரமும் ஆகும்; சரிவுகளின் மீது / சாய்வுகளில் பேய்கள் வாழ்கின்றன' என்று நமக்கு மறைமுகமாக சுட்டுகின்றன (376 ஆம் பாடல்).

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் (வரி 225-227) மன்றம், பொதியில் ஆகிய சொற்கள் தனித்தனியாக குறிக்கப்பட்டு இணக்கமான சொற்களாகக் கையாளப்பட்டுள்ளது ஒன்று பொது இடம், மற்றொன்று பொது இடத்தின் அருகில் உள்ள கோயில். மதுரைக்காஞ்சியில் (வரி 156-163) பொதியில் என்பது சங்கம் சந்திக்குமிடம் என்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது கோயில் அறையாகவும் இருக்கலாம்; மன்னர்களின் வெற்றிகளால் அழிவுசெய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பெண் பேய்கள் (பேய் மகளிர்) அங்கு நடனமாடும். பட்டினப்பாலையில் (வரி 249-251) "தூண் தெய்வத்துடன் கோயிலாக இருக்கும்' கந்துதைப் பொதியில் பற்றிய குறிப்புள்ளது; இக்கோயில் மற்ற தூண்களையும் கொண்டுள்ளது, இது யானைகள் ஓய்வெடுக்கும் இடங்களாக மாறியுள்ளது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை எழுபது (பாடல் 31) பொதியில் என்பது ஒரு வறண்ட / பாலைநில கிராமத்தில் உள்ள கோயில் என்று அர்த்தம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் (பதிகம்: 38-43) மன்றப்பொதியில் என்பதன் வெளிப்பாடு மன்றம், பொதியில் ஆகிய இரண்டின் கூட்டிணைவு என்பதைக் காட்டுகிறது.

மேலும், இக்காப்பிய பாடலால் (I.I.I. 14-20) இமயத்திற்கு இணையாக பொதியிலின் தெய்வீகத்தன்மை கொண்டாடப்பட்டுள்ளது. இது மேற்குறிப்பிடப்பட்ட புறநானூற்றின் 2ஆவது பாடல் போற்றிப்பாடுவதோடு ஒத்திருக்கிறது. மன்னன் சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலையை அமைக்க தன்னுடைய நகரத்திற்கு அருகில் உள்ள பொதியில் மலையிலிருந்து ஒரு கல்லை எடுப்பதற்கு

முன்னுரிமை அளிப்பதைவிட இமயத்திலிருந்து ஒரு கல்லைப் பெறுவது என்பது அவனை ஒரு மன்னனாக தகுதிப்படுத்துகிறது என்று தீர்மானமாக அறிவிக்கிறான்: இது அவரின் பெருமையோடு

வலிமையான தமிழ் ஆட்சியாளர் என்பதைக் கருதச்செய்கிறது. மேலும், இது பொதியில் என்பது தமிழ்த்தேசியம் மற்றும் கலாச்சாரத்தின் குறியீடு என அவரின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது, இவருடைய விருப்பத்தில் அதிக பேரார்வமுடைய திட்டத்திற்காக இம்மலையைக் கடந்து செல்ல வேண்டும். சிலப்பதிகாரத்தில் (காதை

27: 67 - 71) மாடலன் பொதியில் மலையை வலம்வந்து அழகான குமரியின் கடல் துறையில் குளித்ததாகக் கூறுகிறான். இந்நூலின் ஆசிரியர் பொதியிலின் தெய்வத்தைப் பௌத்த சொல்லாடலில் குறிக்கவில்லை என்றாலும் அங்கு அவரின் காலகட்டத்தில் அவலோகிதர் மற்றும் சில இந்து தெய்வங்கள் ஆகிய இரண்டும் இம்மலையில் இருந்திருக்க வேண்டும்.

மணிமேகலையில் இடம்பெறும் பொதியில் என்ற சொல்லைப் பொதியில் மலை என்ற பொருளிலும், பௌத்தத்திற்குச் சிறப்பாகவும் பொதுவாக கோயில் என்ற பொருளிலும் இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். இக்காப்பியத்தில் (காதை 2: 5559) பொதியில் பொதுவாக கோயிலைக் குறிக்கிறது (இதன் உள்கூடாரத்துடன்): (மேலது 15 - 2: 79-86) பொதியில் மலையின் அருகில் நீரோடையின் கரையில் துறவிகள் தவமிருப்பர்.

(மேலது 27 - 22-26) காயசண்டிகை மற்றும் கந்தர்வர்கள் சமய நோக்கங்களுக்காக வடக்கிலிருந்து இம்மலைக்குப் பயணங்கள் மேற்கொண்டது தொடர்பாக பௌத்த யாத்ரிகர்களின் புனிதத்தலம் பொதியில் மலை என்று குறிக்கப்பட்டுள்ளது. சாலி போன்ற பிராமணப் பெண்கள் குமரிக்கடலுக்கு ( cape comorin ) யாத்ரீகம் செல்வதாக காட்டப்பட்டுள்ளது, மாறாக பௌத்த நம்பிக்கை கொண்ட பெண்கள் தங்களுடைய புனித யாத்திரைக்கு, அந்நாட்களில் மகாயான பௌத்தர்களின் புகழ்வாய்ந்த புனிதத்தலமாக இருந்த பொதியிலுக்கு செல்கின்றனர் என்று குறிப்பிடுவது ஆர்வமுடையதாகும்.

(மேலது 20 – 2: 13-18, 28-32) இவ்விரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளது நிச்சயமாக பௌத்த விகாராகும், இக்கதை பௌத்த நம்பிக்கை கொண்ட கதாபாத்திரங்களுடன் சிந்தனைசெய்யப்பட்டுள்ளது. (மேலது 212: 59) தூணில் அமைந்துள்ள ஒரு கந்திற்பாவை தெய்வம் தூணால் அமைந்த அரங்கு மற்றும் திறந்தவெளி மைதானத்துடன் கூடிய ஒரு பௌத்தக் கோயிலான மன்றப்பொதியில் தங்கியிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது; கடந்தகால உண்மைகளையும் எதிர்கால நிகழ்வுகளையும் வெளிப்படுத்துவதாக உருவாக்கப்பட்ட இத்தெய்வம் (கந்திற்பாவை) பொதியிற்பொருந்தியதெய்வம் (பொதியிலில் அல்லது பௌத்தக் கோயிலில் தங்கியிருக்கும் தெய்வம்) என்று அழைக்கப்பட்டுள்ளது.

பௌத்தக்கோயில் என்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொதியில் என்ற சொல்லைக் கடந்து, இம்மலை அவலோகிதருடன் ஒருங்கிணைந்துள்ளது என்பதை கி.பி.10 ஆம் நூற்றாண்டில் பௌத்த இலக்கணி புத்தமித்திரனாரால் இயற்றப்பட்ட தமிழிலக்கண நூலான வீரசோழியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; 'தமிழ் முனிவர் அகத்தியர் தன்னுடைய தமிழை மாபெரும் அவலோகிதனிடமிருந்து பயின்று உலகத்திற்குப் பரப்பினார்'.

இதிலிருந்து ஏற்கனவே நாம் குறிப்பிட்டது என்னவென்றால், கிறித்து பிறப்பதற்கு முன்பாகவே தென்னிந்தியாவிற்குள் பௌத்தம் நுழைந்த பிறகு மகாயான பௌத்தம் அவலோகிதிஸ்வரரைப் பொதலகபொதியில் மலையின் மீது சிம்மாசனத்தில் அமரவைத்தது. ஆனால் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவாக்கில் இத்தெய்வத்திற்கு இம்மலையின் மீதுள்ள மூலவர் (இவ்விடத்திலேயே தோன்றியெழுந்த மூலவர்) என உள்ளூர் மயப்படுத்தப்பட்ட புதிய வடிவம் கொடுக்கப்பட்டது. மேலும், தமிழ்மொழியின் ஆசிரியர், இதன் தொன்ம பரப்புரையாளர் அகத்தியர் என்று உள்ளூர் வடிவம் பெற்றது.

போதிசத்துவர்களின் மகாபோதிசத்துவர் (தலைமை போதிசத்துவர்) அவலோகிதிஸ்வரருடன் தமிழ் முனிவர் அகத்தியரின் தொடர்பு, இம்முனிவர் பௌத்தத்தின் சகோதரத்துவ துறவி என பௌத்த வழக்காற்றியலோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒருங்கிணைந்ததன் விளைவாக இருக்கலாம்: ஆர். இராகவ ஐயங்கார் அஹித்த ஜாதகம் (அஹித்த என்பது அகத்திய என்று மாற்றப்பட்டுள்ளது) அகத்தியரைப் பற்றி ஒரு கதையைக் கொண்டுள்ளது, இம்முனிவர் புத்தருக்கு முன்பு வாழ்ந்ததாக தெரிகிறது. அகத்திய மரபு அவர் போதிசத்துவர் என புனிதத்தலமான பொதியில் மலையில் தன்னுடைய துணைவியார் தாராவுடன் குடிக்கொண்டிருக்கும் அவலோகி ஸ்வரரிடம் தி அகத்தியர் தமிழைக் கற்றார் என்கிற அனுமானத்திற்கு வழிவகுத்தது.

இச்சான்றாதாரங்களிலிருந்து பொதியில் தொடக்கத்தில் பௌத்தர்களின் புனித மலையின் பெயரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. பின்பு பௌத்தக்கோயிலையும் அதோடு கோயில் என பொதுவாக குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையாகும்.

சமஸ்கிருத நூல்கள் பொதலக அல்லது பொதியில் என்பதை பொதலகிரி என்று குறிக்கிறது என்பதை குறிப்பிடுவது ஆர்வத்திற்குரியதாகும். தாராசுக்கம் என்னும் ஒரு பௌத்தநூல் அவலோகிதரை பொதலகிரி நிவாசினீ என்று குறிக்கிறது. இந்நூலின்படி, அவலோகிதிஸ்வர போதிசத்துவர் தன்னுடைய  துணைவி தாராவுடன் இம்மலையில் அமர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் தாரா வழிபாடு புகழ்பெற்றிருந்தது என்பது திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ஊர்ப்பெயர்கள் தாராவின் பெயரை முன்னொட்டாகக் கொண்டு தாராபுதூர், தாராவிளை என்று வழங்கப்படுவதிலிருந்து நிரூபணமாகிறது.

தஞ்சாவூரின் தாராசுரத்தில் இப்பொழுதுள்ள கோயில் முதலில் தாராவிற்கு வழங்கப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்று வாதிடலாம். இத்தெய்வத்திற்குப் பிறகு பொதியில் மலையின் அருகில் உள்ள பாறை தாராவட்டம் பாறை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த தாரா மணிமேகலைக் காப்பியத்தில் சிந்தாதேவி என்ற பெயரால் குறிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது, பொதியில் மலையைக் குறிப்பதற்குச் சீனநூல்களில் காணப்படும் பொதலக என்பது எவ்வாறு வந்தது என்பதை விளக்குவது அவசியமாகும். S. பீல் (Beal) என்பவர் பொதலக என்பதை பொத+ல அல்லது லக என்று பிரிக்கிறார். இங்கு, பழைய சமஸ்கிருதத்தில் பொத என்பதன் பொருள் படகு, பின்னொட்டு ல அல்லது லக என்பதன் பொருள் நடத்து அல்லது கொண்டிரு என்பதாகும். எனவே பொதல அல்லது பொதலக என்பது கடல்படகாக இருக்கலாம்.

அனுமானத்தின் அடிப்படையில் S. பீல் பொதலகவை இலங்கையில் உள்ள புத்தளத்தின் கடல்துறைமுகம் என்று அடையாளப்படுத்துகிறார். இந்த அடையாளம், யுவான் சுவாங் பொதலக மலகுட நாட்டில் காஞ்சிபுரத்திலிருந்து 300லி தூரத்தில் அமைந்துள்ளது என்று மிக தெளிவாக அவ்விடத்தைக் குறிப்பதால் பீல் கூறும் அடையாளம் பொருத்தமற்றதாகும். இது பொதலகவின் அமைவிடம் இலங்கையில் இல்லை, தென்னிந்தியாவில் உள்ளது என்று காட்டுகிறது.

தன்னுடைய ஆய்வு நெறியாளர் மற்றும் ஒரு குழுவுடன் பொதியில் மலைக்கு இந்நூலின் ஆசிரியர் சமீபத்தில் சென்றது அவரை யுவான் சுவாங்கின் ஆவணத்திற்கும் இப்பொழுதிருக்கும் பொதியில் மலைக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைக் காணச்செய்தது. பொதியில் மலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது (அட்சரேகை 8,36': தீர்க்கரேகை 77,17').

இங்கு தாமிரபரணி (Tamraparani) ஆறு தொடங்குகிறது. பொதியில் மலைக்குப் பக்கத்தில் உள்ள சிறிய மலையான ஐந்துதலை பொதிகையிலிருந்து (ஐந்து தலைகளைக் கொண்டுள்ள பொதிகை) வேறுபடுத்த உள்ளூர்ப்பகுதியில் இது பெரிய பொதிகை என்றழைக்கப்படுகிறது.

மலைத்தொடரில் திருநெல்வேலியில் பொதியில் 2076.6 மீட்டர் கொண்ட மிக உயரமான மலையாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து பொதியில் மலையைக் காணமுடியும் . மேலும் மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ள கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து (Trivandrum) அதிக வேறுபாட்டுடன் பொதியில் மலையைக் காணலாம்.

பொதலகவிற்கு "ஒரு சிறிய மலரின் மலை'' என்று ஹுய்யுவான் பெயர் கொடுத்ததை இங்கு மீண்டும் நாம் நினைவில் கொள்ளலாம். இவருடைய விளக்கம் தவறானதாக இருந்தாலும், நறுமணமுடைய ஒளிரும் சிறிய மலர்களுடன் பொதியில் மலை சேர்ந்திருப்பதை நாம் மறுக்க முடியாது. இங்கு குற்றாலம் மலைகள் சண்பகம் என்றழைக்கப்படும் நறுமணமுடைய சிறிய மலர்களால் நிரம்பியுள்ளது என்று ஒருவர் குறிப்பிடலாம். சண்பகம் காட்டின் நடுவில் உள்ள குற்றாலத்தின் நீரருவி தமிழில் சண்பக அருவி என்று அறியப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலை, ஆரியங்காவு மலையின் கணவாயிலிருந்து உயரமாக வளர்ந்து குற்றாலம் மலை வரை பத்துமைல் தூரத்திற்கு விரிந்துள்ளன.

பல இடங்களில் பொதியில் ஆலமரத்துடம் இணைந்து சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது. பொதியிலுக்கு அருகில் உள்ள இடத்தின் பெயர் குற்றாலம் என்பதன் பொருள் "சிறிய ஆலமரம்' என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

குற்றாலத்தின் ஐந்தருவியில் (ஒரே இடத்தில் ஐந்து நீர்வீழ்ச்சி) இவை 1524 மீட்டர் உயரமாகும்; பிறகு 1565 மீட்டர் உயரத்திற்கு நீண்டு பஞ்சந்தாங்கிமொட்டை என்று அறியப்படுகிறது. இச்சிகரத்தைச் சுற்றி பௌத்தத்துறவிகள் வாழ்ந்ததாகக் கூறப்படும் குகைகளைக் காணலாம். இந்நூலாசிரியர் 9 மீட்டர் நீளமுள்ள குகையைக் கண்டார், மலைக்காட்சியின் மாட்சிமையால் அமைந்துள்ளது; இது சுவரில் உருவ எழுத்துக்களைக் (கீழுள்ள படத்தைக் காண்) கொண்டுள்ளது; இதை உள்ளூர் மனிதர்கள் பாலி எழுத்துக்கள் என்று நம்புகின்றனர். ஆனால் இவை நிச்சயமாக பாலியும் இல்லை சிந்துவெளியின் முத்திரையிலுள்ள உருவ எழுத்துக்கள் போன்றதும் இல்லை. இவை பற்றிய சரியான ஆய்வு அறிவார்ந்த ஆய்வாகும் மற்றும் இவ்வாய்வு ஆச்சர்யமான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும்.

இக்குகையை உள்ளூர் மக்கள் பரதேசிகுகை (அயல் நாட்டவர்களின் குகை) என்றழைக்கின்றனர் மற்றும் அவர்கள் இது ஒரு துறவியின் இருப்பிடமாக இருந்ததென்று எண்ணுகின்றனர் (அவர்கள் பௌத்தர்களாக இருந்திருக்க வேண்டும், அவ்வளவு பௌத்தர்கள் இங்கு அயல்நாட்டிலிருந்து வந்து தங்கியிருக்க வேண்டும். இத்துறவியைப் பற்றி அங்குள்ள மக்கள் பேசுகிறபோது லாடசாமியாகிய அவர் தன் காலில் குதிரையின் லாடத்தைப் பெற்றிருந்தார் என்று கூறுகின்றனர்.

வட இந்திய துறவிகளும் (இதில் உள்ள லாடதேச அல்லது லாடநாடு அமைந்துள்ளது) லாடசாமிகள் என்று தமிழ்நாட்டில் அழைக்கப்பெறுகிறார்கள். அத்துறவியின் குகையின் அருகில் அங்கு நீரூற்றிலிருந்து ஒரு ஆறு தோன்றுகிறது, இது பொதலக மலையில் அவலோகிதிஸ்வரருக்கு அருகில் நீரூற்றிலிருந்து ஆறு தோன்றி இம்மலையைச் சுற்றி வருகிறது என்று யுவான் சுவாங் குறிப்பிட்டதை ஞாபகப்படுத்துகிறது.

இக்குகை அமைந்திருக்கும் மலைப்பகுதி சீட்டுப்பேரை என்றழைக்கப்படுகிறது. இவ்விடத்திற்கு சென்றடைய தேனருவி வழியாக தெற்கு மலைக்கு வந்து, மேலும் பாறையும் மணலும் அமைந்த பகுதியைக் கடக்க வேண்டும். குகை கிழக்கு நோக்கியும் ஆற்றின் இடதுப்பக்கத்திலும் இருப்பதைக் காணமுடியும்; இக்குகையில் ஐந்தடி உள்ளே சென்று 15 பேர் இதனுள் ஓய்வெடுக்க முடியும், குகையின் இடதுபக்கத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் உள்ள உருவ எழுத்துக்களைக் காணலாம்.

தற்செயலாக, குகைக்கு அருகில் உள்ள ஆறு சித்திரா நதி என்றழைக்கப்படும் இது குற்றாலம் மலையுடன் ஓடும் சில அழகிய நீர்வீழ்ச்சிகளின் விளைவால் ஆனதாகும், தேனருவி நல்ல உயரத்திலிருந்து வீழ்கிறது, சண்பக அருவி சண்பக மரங்களின் காடுகளின் நடுவில் இரண்டு நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட வட அருவியில் ஒன்று பொங்குமாங்கடல், மற்றொன்று குற்றாலம் என்றழைக்கப்படும் இவை சமவெளிப்பகுதியைச் சென்றடைகிறது.

எண்பதுத்தொகை அவதம்சக சூத்திரா "எப்பொழுது அவன் (சுதன-ஷ்ரேஷ்டி-தாரக (suddhana & sresthi & daaraka) மேற்குத் திசையை நோக்கியிருக்கும் பள்ளத்தாக்கு நீரோடையைப் பார்த்தபோது, அவன் அங்கு ஒளிரும் நீரோடைகளுடன் நீரூற்றுகளைப் பார்த்தான், அங்கு அடர்ந்த காடு, மெல்லிய மணம் வீசும் புற்கள் வலப்பக்கத்திலும் பூமியில் படர்ந்திருப்பதையும் கண்டான். பரதேசி குகை கிழக்கு நோக்கி ஆற்றின் இடப்புறத்தில் அமைந்துள்ளது என்பது மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் ஒன்றை விளக்குகிறது (திசைகளில் மட்டும் மாற்றத்துடன்).   

அகநானூற்றின் 138 ஆம் பாடலும் இரைச்சலுடன் கீழிறங்கும் அருவியையுடைய தென்னவ மன்னனின் வெற்றிக்கொள்ள முடியாத உச்சியுடைய பொதியில் மலையைப் பற்றி பேசுகிறது. இதில் தெளிந்த நீர் வேகமாகப் பாயும் அருவியில் ஓடுகின்றது என்று விளக்கப்பட்டுள்ளது (மேலது, 251). பொதியிலின் அருவிகளின் விளக்கங்களைத் தருகிறது. காயசண்டிகையும் அவளுடைய கணவனும் தெற்கில் உள்ள பொதியில் மலைக்கு யாத்ரீகம் சென்றனர்.

சிறிது நேரம் அவர்கள் காட்டருவியின் மணல்களில் நின்றனர். அங்கு இரைச்சலுடன் நீரருவி இருந்தது. தேக்கு இலையில் பழுத்த ஒரு நாவல் பழத்தை வைத்து, அதை மணல்மீது வைத்துவிட்டு, சற்று தொலைவிலிருந்த குளிர்ந்த நீரையுடைய குளத்தில் குளிப்பதற்காக விருஞ்சிகன் என்னும் துறவி சென்றார். இவ்விளக்கமும் பொதியில் மலையைச் சுற்றி அருவிகள் இருந்ததை நம் மனக்கண்முன் கொண்டுவருகிறது.

பொதலக மலைக்கு மூலப்பெயர் பொதியில் என்பதாக இருந்தால், பிறகு பொதியில் மற்றும் பொதலக ஆகிய சொற்களுக்கு இடையே உள்ள உறவை எவ்வாறு விளக்குவது? பொதியில் என்னும் பெயர் பௌத்த நூல்களில் பொதலக என்று வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மையாகிறது. ஏற்கெனவே, போதிசத்துவரின் ஸ்தலமாக பொதியில் என்று தமிழில் வழங்கியதை விவாதித்தோம்.

பொதியில் மலை தமிழ்நாட்டில் பௌத்தர்களிடையே பெரும் புகழைப் பெற்றது. மகாயான சூத்ரா கந்தவ்யூகம் இயற்றப்பட்ட காலத்தில், இம்மலையின் பெயர் வட இந்தியாவில் முக்கியமான பௌத்த நூல்களை இயற்றியவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. அக்காலத்தில் இவர்கள் இப்பெயரைப் பிராகிருத மொழியில் புத்தலோக என்று வழங்கியிருக்க வேண்டும்.

பொதியில் சொல் பின்வருமாறு மாற்றங்களை அடைந்திருக்க வேண்டும். முதலில் இது சமஸ்கிருத கலப்பு வடிவமாக இருந்தது, போதி+இல் என்பது தமிழில் உள்ளூர் மயப்படுத்தும்போது பொதியில் என்றாக்கப்பட்டது. தொடர்ந்து, இது போதி+லோக அல்லது புத்த+லோக என்ற வடிவத்தில் சமஸ்கிருதத்தில் நுழைந்தது; இதன் பொருள் பௌத்தர்களின் உலகம் அல்லது இடம் என்று பொருள். இது பொதலக என்று பாலியிலும் சீனமொழியிலும் வழங்கியது. பொதலக என்னும் இவ்வடிவம் சமஸ்கிருதத்திலும் கிடைக்கிறது. அழுத்தமான ஈரிதழ் ஒலி "பி' (b) ஒலி அழுத்தமற்ற "பி' (p) ஒலியாக சீனமொழியில் மாறுகிறது. உதாரணத்திற்கு, இந்திய பிக்கு போதிருசியின் பெயர் சீனமொழியில் புதிலிவ்சே என்று எழுதப்பட்டுள்ளது. புத்தலோக மற்றும் பொதலோக ஆகிய இரண்டு வடிவங்களும் சீனமொழியில் கிடைக்கின்றன.

பொதியில் மலையின் சுருக்கமான வரலாறு

நினைவற்ற காலத்திலிருந்து பொதியில்மலை புனிதத்தலமாக இருந்துள்ளது. வரலாற்றியல் கண்ணோட்டத்திலிருந்து பொதியில் மலையை அணுகுகிறபோது, காலங்களின் ஊடாக இதன் சமூகம் மற்றும் சமயங்களின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். இது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சமயங்களின் வரலாற்றில் பொதுவாகவும் குறிப்பாக பௌத்தத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளது. இது இந்திய கலாச்சாரத்திலும் குறிப்பாக தென்னிந்திய கலாச்சாரத்திலும் ஏனைய ஆசிய பகுதிகளிலும் கலாச்சாரத்திலும் மையத்தில் அமைந்துள்ளது.

மகேந்திரகிரி

இந்திய இலக்கியத்தில் பொதியில் மலையின் குறிப்பின்படி, சமஸ்கிருதத்தின் முதல் காவ்யமாகிய வால்மீகியின் இராமாயணம் ராமனின் செய்தியாளர் அனுமன் மகேந்திரகிரியிலிருந்து தாவி கடல் வழியாக பறந்து கடந்து லங்காவிற்குச் சென்றார் என்று குறிப்பிடுகிறது.

மகேந்திரகிரி பொதியில் மலை என்று அடையாளப்படுத்தப்படுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்தத்தைப் பரப்ப இலங்கைக்குச் சென்ற அசோகரின் மகன் "மஹிந்த'வின் (சமஸ்கிருதம் - மகேந்திர) பெயரை இம்மலைக்கு வைத்துள்ளனர். சிலோனியர்களின் காலவரிசையைப் பற்றி பேசும் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள்கூட மஹிந்த மற்றும் அவருடைய சீடர்கள் எங்கிருந்து இலங்கைக்கு வந்தனர் என்று எதைப் பற்றியும் பேசவில்லை என்றாலும், அவர்கள் இலங்கைக்குத் தமிழ்நாட்டின் வழியாக வந்திருக்க வேண்டும் என்பது உண்மையாகும்.

இலங்கைக்குச் செல்லும் வழியில் மஹிந்த பொதியில் மலையைக் கண்டிருக்க வேண்டும். எனவே, இது மஹிந்தவின் பெயருக்குப் பிறகு வைக்கப்பட்டது மற்றும் மகேந்திரகிரி என்று வட இந்திய மக்கள் அறிந்திருந்தனர். சங்கமுத்திரை என்றழைக்கப்படும் பீடபூமியைப் போன்ற பகுதியிலிருந்து பொதிகையின் சிகரம் செங்குத்தாக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பெயர் பேரரசர் அசோகரின் மகளும் பௌத்தப் பிக்குணியுமான சங்கமித்ராவின் பெயரை நமக்கு நினைவூட்டுகிறது. இவ்விரண்டு சங்கத்தார்களைத் தொடர்ந்து, பிற்காலத்தில்கூட பல இலங்கைப் பிக்குகள் இம்மலையை வழிபாட்டிற்காக வந்து கண்டுள்ளனர்.

தாமிரபரணி (Tamraparni)

இம்மலையைப் பற்றி வியாசரின் மகாபாரதத்தின் ஆரண்ய பருவத்தில் ஒரு குறிப்பு உள்ளது. இது பின்வருமாறு அமைகிறது: "மேலும், நான் உன்னை நினைவூட்டுகிறேன், தாமிரபரணியின் புகழ்பெற்ற குந்தியின் மகனே (பாண்டவ சகோதரர்களில் மூத்தவர் யுதிஷ்திர) கடவுள்களின் ஆசிரமத்தில், சொர்க்கத்தின் விருப்பத்தில், தவங்கள் நிகழ்த்தப்பட்டன''.

தாமிரபரணி என்னும் இப்பெயர் பொதியில் மலையுடனும், இதன் ஆறு தாமிரபரணியுடனும் அடையாளப்படுத்தி இங்கு விளக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட குறிப்பு பொதியில் மலை மகாபாரதத்தின் காலகட்டத்தில் புனிதத் தலமாகக் கருதப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

இங்கு சங்க நூல்களுள் ஒன்றான அகநானூற்றிலிருந்து ஒரு குறிப்பை நாம் கொண்டு வரலாம். இந்நூல் பொதியில் புனித மலையாக இருந்த இவ்விடத்தில் மக்கள் கைகளை மடித்து வணங்கினர் என்று கூறுகிறது. காளிதாசரின் ரகுவம்சத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: "அவர்கள் (பாண்டியர்கள்) தாங்களாக முன்வந்து ரகுவை வணங்கி தாமிரபரணி ஆறு கலக்கும் கடலில் சேகரிக்கப்பட்ட அற்புதமான முத்துக்களைத் தங்களுடைய புகழென வழங்கினர்.

இதிலிருந்து தாமிரபரணி ஆறு பாண்டியர்களின் நாட்டிலிருந்தது என்பதை நாம் காணலாம். இங்கு கொற்கையில் முத்துக்குளிப்பது புகழ்வாய்ந்ததாகும், கடல்துறைமுகம் உள்ள இவ்விடத்தில் தாமிரபரணி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இலங்கையின் பண்டைய பெயர் தாமிரபரணியாக இருந்தது என்பதைக் குறிப்பிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இப்பெயராலேயே இலங்கையைத் தொடக்ககால கிரேக்க வரலாற்றாய்வாளர்களும் பௌத்தப் பிக்குகளும் அழைத்தனர். கிர்னார் என்னுமிடத்திலுள்ள அசோகரின் பாறைக் கல்வெட்டில் தமிழ்நாட்டின் நான்கு அரசர்களின் பெயர்களுடன் தாம்பண்ணி (தாமிரபரணி) என்னும் பெயருக்குக் குறிப்புகள் உள்ளன. இத்தீவை மாவீரன் அலெக்ஸாண்டரின் போர்வீரர்கள் கிரீக் மொழியில் தப்ரோபேன் என்றழைத்தனர்.

இராபர்ட் கால்டுவெல்லின் கருத்துப்படி, தாமிரபரணி என்னும் பெயர் இரண்டு வடிவங்களின் கூட்டாகும். தாம்ர என்பதன் பொருள் சிவப்பு, பர்ணி என்பதன் பொருள் - பர்ண என்பதாகும். பர்ண என்பது ஒரு வகையான இலையையோ அல்லது அது ஒரு வகையான மரத்தையோ குறிக்க வேண்டும். ஆனால் சிவப்பு இலையுடன் பொதியில் மலை அல்லது தாமிரபரணி ஆறு என்பதை நாம் அதோடு ஒருங்கிணைந்து பார்க்கும்போது இது வழக்கமில்லாததாகும் அல்லது பொருள் புலப்படாமல் அமைந்துள்ளது எனலாம்.

எனவே, தாமிரபரணி பெயர் இவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இவ்விடம் பௌத்தப் பிக்குகளால் தங்களுடைய பிறப்பிடத்தின் நினைவு நிலைத்திருப்பதற்கு வழங்கப்பட்டது. தாமிரபரணியின் அர்த்தத்தை மனதில்கொள்ளும்போது "எரித்ரேயன் கடலின் பெரிப்ளூஸ்' என்னும் வழிகாட்டி நூல் பொதியில் மலையை "சிவப்பு மலை' என்றழைக்கிறது.

தாலமியின் காலத்தில் கிரேக்கர்கள் தாமிரபரணி ஆற்றை சோலென் என்னும் பெயரால் அழைத்தார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டது போல, கிரேக்க வரலாற்றாசிரியர்கள் இலங்கையைப் பல நூற்றாண்டுகளாக தப்ரேபேன் என்று அழைத்தனர். ஆனால் தாலமியின் காலத்தில் சிலோன் என்னும் பெயரில் இத்தீவு அழைக்கப்பட்டபோது, அவர்கள் தாமிரபரணி ஆற்றை சோலென் என்னும் பெயரால் அழைக்கத் தொடங்கினார்கள். தாலமியின் கருத்துப்படி, சோலென் ஆறு பெட்டிகோ என்றழைக்கப்படும் ஒரு மலையிலிருந்து தொடங்குகிறது.

இதிலிருந்து பொதியில் மலையும் தாலமியின் காலத்தில் பெட்டிகோ என்றழைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிகிறோம். இத்தகைய அனைத்து சான்றுகளும் பொதியில் மலை மிகவும் நெருக்கமாக பௌத்தத்தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இலங்கையிலிருந்து பௌத்தப் பிக்குகளுக்கும் மற்ற ஆசிய நாடுகளின் பௌத்தப் பிக்குகளுக்கும் இம்மலை மிகவும் நெருக்கமானது என்பதை வெளிப்படுத்துகின்றது.

பொதியில் ஏற்கெனவே காட்டப்பட்டுள்ளதன்படி, பொதியில் என்னும் பெயர் சங்க காலத்திலும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையின் காலத்திலும் மிகவும் பரவலாக வழங்கப்பட்டது. இக்காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தமும் புகழ்பெற்றிருந்தது. இயற்கையில் மதச்சார்பற்று இருக்கும் சங்க இலக்கியம் பொதுவாக பௌத்தம் தொடர்பாகவும் குறிப்பாக பொதியில் மலையோடு தொடர்புடைய பௌத்தம் தொடர்பாகவும் சில குறிப்புகளை மட்டும் வழங்குகிறது. புறநானூற்றிலிருந்து (2, II. 17 - 24) ஏற்கெனவே நாம் கண்டபடி,

இம்மலைகளின் அடிவாரத்தில் அந்தணர்கள் (பிராமணர்கள்) மூன்று நெருப்புகளின் பலியிடலின் மாலை நேரச் சடங்கை நிகழ்த்தினர். இந்த பிராமணர்கள் வேதச்சடங்குகளைப் பொதியில் மலையின் அடிவாரத்தில் நிகழ்த்தினர். இதற்கு மாறாக யுவான் சுவாங்கின் கருத்தின்படி, அவலோகிதிஸ்வர போதிசத்துவர் மலையின் சிகரத்தில் / உச்சியில் குடிகொண்டிருந்தார்.

இம்மலையின் அடிவாரத்தில் அவலோகிதிஸ்வரரைக் காண வேண்டும் என்கிற பக்தர்களுக்கு அவர் சிலசமயங்களில் பாசுபத தீர்த்திக அல்லது மகேஷ்வரர் வடிவத்தில் காட்சியளிப்பார் மற்றும் இறைஞ்சி வேண்டுபவர்களுக்குத் தன் மொழிகளால் ஆறுதலளிப்பார்.

இது பௌத்தத்தின் பக்தர்கள் அவலோகிதிஸ்வரரை மலையின் அடிவாரத்தில் வணங்கினாலும் நிறைவேறும். ஆனால், முழுவதும் வழக்கமற்ற முறையில், யுவான் சுவாங் பக்தர்களின் வேண்டுதலின்படி, அவலோகிதிஸ்வரர் பாசுபத தீர்த்திக அல்லது மகேஷ்வரரின் வடிவத்தில், சிவாவின் வெளிப்பாடாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

பொதியில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு வேதத்துறவி விருஞ்சிகன் தபசு செய்துகொண்டிருந்தார் என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மேலும் இது வித்தியாதர லோகத்திலிருந்து காஞ்சனன் போன்ற பௌத்தர்கள் பொதியில் மலையின் சிகரத்தையும் பார்த்தனர் (மணி. காதை 20. II. 22). தாரநாதரின்படி, திக்நாகரின் காலத்தில் சாந்திவர்மன் இம்மலைக்கு நேரில் வந்து பார்த்தார் மற்றும் மன்னன் சீலத்ய அவர்களின் காலத்தில் கேண்ட்ரகோமின் இம்மலையின் மீது ஏறினார் மற்றும் தான்யகதகம் கோபுரத்திற்கு பூசை செய்தார்.

இவர் நூறு சிறிய அவலோகிதிஸ்வரர் கோயில்களைக் கட்டினார் மற்றும் அம்மலையில் பரிநிர்வாணம் அடைந்தார். இவர் மன்னன் தர்மபாலரின் பகுதியில், பொதலக மலையில் ஏறிய சுத்தகுஹ்ய, புத்தசாந்தி ஆகிய இரண்டு பிக்குகள் இருந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். அவர்கள் அங்கு அவலோகிதிஸ்வரரின் கற்சிலையிடம் வேண்டினர், அவர்கள் இருவரும் ஆன்மிக ஆற்றலைப் பெற்றனர்.

இந்த சான்றாதாரங்களிலிருந்து வேதத்துறவிகள் மற்றும் இந்து பக்தர்கள் சமயச் சடங்குகளைப் பொதியில் மலையின் அடிவாரத்தில் நிகழ்த்தினர். மாறாக, இந்துக்கள் வழிபட்ட இடத்தையும் தாண்டி பௌத்தப் பிக்குகளும் பக்தர்களும் அவலோகிதிஸ்வரரை பொதியில் மலையின் உயர்ந்த இடத்தில் அல்லது சிகரத்தில் வழிபட்டனர் என்று தருவித்துக்கொள்ளலாம்.

அவலோகிதிஸ்வரர் - சிவன் ஒருங்கிணைவு

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அவலோகிதிஸ்வரர் என்னும் பெயர் அவலோகித+ஈஸ்வரர் ஆகிய சொற்களின் கூட்டுச்சொல்லாகத் தோன்றுகிறது. இப்பெயரின் பிற்பகுதி, ஈஸ்வரர் என்பது சிவனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றான மகேஷ்வரரை வழக்கமாகக் குறிக்கும். இது அவலோகிதிஸ்வரரின் பௌத்த வழிபாட்டிற்கும் ஈஸ்வரரின் இந்து வழிபாட்டிற்கும் இடையே உள்ள உறவைக் காட்டுகிறது. மேலும், யுவான் சுவாங் பாசுபத தீர்த்திக அல்லது மகேஷ்வரருடன் உள்ள பொதலொகாவின் அவலோகிதிஸ்வரருடன் இணைந்துள்ளார். அவலோகிதிஸ்வரரும் தன்னுடைய இணை தாராவுடன் அமர்ந்த நிலையில் இருப்பதாக விளக்கப்பட்டுள்ள இது சிவன் மற்றும் உமாவை நினைவுறுத்துவதாக உள்ளது.

சில இடங்களில் சிவன் அர்த்தநாத(ரீ)ஸ்வரர் வடிவத்தில் உள்ளதைப் போல ஆண், பெண் இணைந்த வடிவத்தில் அவலோகிதர் உள்ளார் என்று விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய வடிவம் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மிகவும் புகழ்வாய்ந்துள்ளதாக தோன்றுகிறது. இதற்கு தமிழ்நாட்டின் நாகபட்டினத்தின் அவலோகிதிஸ்வரரின் வெண்கலசிலை ஒன்று (இங்கு மீண்டும் பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் புனிதத் தலமாக இருக்கக் கூடிய பொதியில் மலையில் அவலோகிதிஸ்வரர் மற்றும் மகேஷ்வரரின் இணைவு பற்றி பேசுவதற்கு அனைத்து சாத்தியக் கூறுகளும் உள்ளன.

மேலும், இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் துறவியும் புலவருமான மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டை கடவுள் சிவனின் நிலமென உரிமை கொண்டாடினார். அலெக்ஸாண்டரின் காலத்திலும்கூட கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ் பாண்டிய அரசைத் தன்னுடைய மகள் பாண்டியாவின் ஆட்சியின் கீழ் நாட்டை வைத்திருந்த கடவுள் சிவனின் நாடெனக் குறிக்கிறார்.

கி.பி.406 இல் சீனமொழியில் குமாரஜீவா மொழிபெயர்த்த சத்தர்மபுண்டரீகம் என்னும் நூல் பிரம்மா, இந்திரர், சிவன் உள்ளிட்ட அவலோகிதிஸ்வரரின் 33 வேறுபட்ட வடிவங்களைப் பற்றி பே கிறது. இத்தகைய வேறுபட்ட வடிவங்களில் செய்யப்பட்டவையாகும். இது தொடக்கக் காலத்தில் பக்தர்களால் கல்குறியீடு என வழிபடப்பட்டது.

இவ்வகையான வழிபாட்டிற்குப் பௌத்தம் மற்றும் தமிழ் மூலங்களிலிருந்து / ஆதாரங்களிலிருந்து பல சான்றுகளை நாம் கொண்டிருக்கிறோம். "அவலோகிதிஸ்வர போதிசத்துவர் வைர பாறையின் மீது கால்களை மடித்து அமர்ந்துள்ளார்; இவரைச் சுற்றி எண்ணற்ற போதிசத்துவர்கள் கற்கள் போன்ற ரத்தினங்களில் அமர்ந்து அவலோகிதிஸ்வரை வழிபடுகின்றனர் என்று கந்தவ்யூகம் கூறுகிறது.

இங்கு அவலோகிதிஸ்வரர் வைரப்பாறையின் மீது தியான வடிவத்தில் / தோற்றத்தில் (அங்கஸ்திதி) அமர்ந்துள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளார். யுவான் சுவாங் தன்னுடைய ஸியூசியில் "ஏரியின் பக்கத்தில் ஒரு கல்லால் அமைந்த தேவமாளிகையில் அவலோகிதிஸ்வரர் வீற்றிருப்பார்' என்று குறிப்பிடுகிறார். பிற்காலத்தில், தாந்திரிக் பௌத்த நூல்களில் இக்கல் தேவமாளிகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையாக விளக்கப்பட்டுள்ளது. இவர்களின்படி, பொதலக மலையின் அவலோகிதிஸ்வர மாளிகையில் இருந்து புத்தர் தன் போதனைகளைச் செய்தார்.

இது அகநானூற்றில் உறுதிப்படுத்தப்பட்டு வலுவடைகிறது. அகநானூறு (307. ஐஐ. 1.15) பொதியில் மலையின் வேகத்தையும் தூண்கோயிலில் (கந்து) குடியிருந்த தெய்வம் ஏற்கெனவே சென்றுவிட்ட காட்சியையும் அங்கு நாம் கொண்டிருக்கிறோம். தமிழ் மக்கள் கந்து என்பது தெய்வம் குடியிருக்கும் கல்தூண் என்று நம்பினர்.

கந்திற்பாவை தெய்வம் கல்தூணில் வரையப்பட்டுள்ளதாக மணிமேகலை கூறுகிறது. இந்த கந்திற்பாவை மக்களின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பேசுகிறது. இது பொதியிலில் தெய்வமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பொதியிலில் உள்ள கந்துவிற்கும் அவலோகிதிஸ்வரருக்கும் இடையே உள்ள உறவு குறித்த மேலாய்வு தேவைப்படுகிறது.

சமீபத்தில் இந்நூலாசிரியரால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேரூர் என்னும் கிராமத்தில் உள்ள அவலோகிதிஸ்வரர் வழிபாட்டின் மீது அதிக வெளிச்சம் வீசப்பட்டுள்ளது. இக்கிராமம் பௌத்தர்களின் இடம், குறிப்பாக தேராவாதப் பள்ளியைச் சேர்ந்த பௌத்தர்களின் இடம் என்பதைக் குறிக்கும் தேரனூர் என்றே பழைய ஆவணங்கள் அனைத்திலும் குறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது ஆர்வத்திற்குரியதாகும்.

கன்னியாகுமரி மாவட்ட கோயில்கள் மீது ஆழ்ந்த ஆய்வை நிகழ்த்திய உள்ளூர் அறிஞர் டாக்டர் பத்மநாபன் அவர்களுடன் இந்நூலாசிரியர் இக்கிராம மக்களால் இளைய நயினார் கோயில் என்று அழைக்கப்படும் அவலோகிதிஸ்வரர் கோயிலை நேரில் சென்று பார்த்தார்.

அவர் அவலோகிதிஸ்வரர் தன்னுடைய இணை தாராவுடன் அமர்ந்துள்ள ஒரு அழகான கற்சிலையைக் கண்டுபிடித்தார். இத்தெய்வத்திற்குச் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்  மே) முழு பௌர்ணமி நாளில் விழா கொண்டாடப்படுகிறது. இந்நாள் புத்தர் பிறந்த நாளாகும். கி.பி.1919 இல் கூட இலங்கையிலிருந்து பௌத்தப் பிக்குகளின் ஒரு குழு இக்கோயிலுக்கு வந்து இத்தெய்வத்தை வணங்கினர் என்பதை இம்மண் கற்றறிந்திருக்கிறது.

இக்கோயில் அழிவுற்ற நிலையில் உள்ளது. பிற்கால சோழர்காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் கோயிலின் பின்பகுதியில் உள்ளன. உள்ளூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இக்கோயிலின் மூலத்தையோ அல்லது பின்னணியையோ அறியாமல் இத்தெய்வத்தை வணங்குகின்றனர். அவர்கள் இதுவரையும் இத்தெய்வத்தை (அவலோகிதிஸ்வரர்) சைவத் தெய்வங்களில் ஒன்றாக நம்புகின்றனர். இந்நம்பிக்கையுடன் ஒரு லிங்கத்தையும் நந்தியின் சிலையையும் அவலோகிதிஸ்வரரின் சிலைக்கு அருகில் பிற்காலத்தில் வைத்துள்ளனர்.

அகத்தியர்

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு அல்லது 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலவுடைமை சமூகத்தின் சீரான எழுச்சியால் சமூகத்தின் உயர்வுநிலையை அடைந்தனர்; பக்தி இயக்கத்தின் தோற்றத்தால் பௌத்தம் வீழ்ச்சியுறத் தொடங்கியது; சைவமும் வைணமும் மிகவும் வலிமையானதாக உருவாயின.

இக்காலத்தில் பௌத்தத்தின் புனிதத் தலமான பொதியிலின் முக்கியத்துவம் மெல்லச் சரிந்துபோனது. இது அகத்தியரின் ஒரு இடமாக உருமாறியது. இப்படிப்பட்ட காலத்தில் அவலோகிதிஸ்வரர் வழிபாட்டிற்கும் அகத்தியர் வழிபாட்டிற்கும் இடையே மற்றொரு இணைவு / சேர்க்கை தொடங்கியது. பௌத்தர்கள் அகத்தியரை அவலோகிதிஸ்வரரின் சீடராக ஏற்றுக்கொண்டனர்; இந்துக்கள் அகஸ்தியரின் குருவாக அவலோகிதிஸ்வரரை ஏற்றுக்கொண்டனர். அவலோகிதிஸ்வரரும் அகத்தியரும் ஒருங்கிணைந்த புதிய மரபுகள் வழக்கத்தில் வந்தன.

இது பௌத்த இலக்கண புத்தமித்திரனாரால் (புத்தமித்ரா) கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூலான வீரசோழியத்தில் பிரதிபலித்தது. இவர் அகத்தியன் (அகஸ்தியன்) எனும் தமிழ் முனிவர் மகா அவலோகிதனிடமிருந்து (அவலோகிதிஸ்வரர்) தமிழைக் கற்று உலகிற்கு அறிவித்தார் என்று கூறுகிறார். எனவே, கி.பி. 10 ஆம் நூற்றாண்டில், பொதியில் மலை யிலுள்ள இத்தெய்வத்திற்குப் புதிய பரிமாணம் கொடுக்கப்பட்டது. அவலோகிதர் அகத்தியரின் (அகஸ்தியர்) குரு என்று போற்றிப்புகழப்பட்டார்.

போதிசத்துவர்களின் தலைமைப் போதிசத்துவராகிய அவலோகிதிஸ்வரருடன் தமிழ் முனிவர் அகத்தியருடனான தொடர்பு, சமயத்தின் சகோதரத்துவத் துறவி என பௌத்தத்தின் உள்ளூர் மரபுடன் தன்னைத்தானே இணைத்துக்கொண்டதன் விளைவால் உருவானதாகும்.

இராகவ ஐயங்கார் அகித்த ஜாதக (அகித்த என்பது அகத்திய என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது) அகத்தியரைப் பற்றி ஒரு கதையைக் கொண்டுள்ளது; ஒரு முனிவர் புத்தருக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்ததாகத் தோன்றுகிறது என்கிறார். அகத்தியரின் இந்த மரபு புனித ப்பெயரில் மலையில் ஒரு போதிசத்துவர் என குடிக்கொண்டிருந்த அவலோகிதிஸ்வரரின் கீழ் அகத்தியர் தமிழைக் கற்றார் என்ற அனுமானத்திற்கு இட்டுச்சென்றிருக்கலாம்.

இதிலிருந்து பொதியில் மலை மிக நீண்ட காலத்திற்கு அவலோகிதிஸ்வரரின் புனிதத் தலமாக இருந்தது என்பது நிரூபணமாகிறது . தமிழ்நாட்டில் பௌத்தம் சரிவுறத் தொடங்கியதுடன், குறிப்பாக கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இம்மலை அகஸ்தியரின் இடமாக ஆனது.

பொதியில் மலையுடன் அகத்தியரின் ஒருங்கிணைவு ஒப்பீட்டளவில் பிற்காலத்தில் தோன்றியதாகும். பொதியில் மலையின் அகத்தியர் வேத ஆரிய மயப்படுத்தலால் முன்னிறுத்தப்பட்ட சமஸ்கிருதமயமான அகத்தியரா? அல்லது புறநானூற்றில் (பாடல் 201) குறிக்கப்பட்டுள்ள தமிழர்களின் கற்பனையாக்கத்தில் உருவான அகஸ்தியரா? (அகத்தியர்) என கண்டறிவதும் மிகவும்

அவசியமானதாகும். தமிழ் மரபின்படி, கடைசி அகத்தியர், வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குப் பெயர்ந்திருந்தாலும்கூட, எண்ணற்ற ராக்ஷசர்களைக் கொன்ற மற்ற மூன்று அகத்தியர்களிடமிருந்து மாறுபட்ட வேளிர்குடியின் தலைவராவார். மற்ற மூன்று அகஸ்தியர்கள் இந்தோஆரிய அல்லது சமஸ்கிருத மொழியைப் பேசியவர்கள், மாறாக கடைசி அகத்தியர் தமிழ்மொழியின் மாபெரும் பிரதிநிதியாகவும் முதல் தமிழிலக்கண நூலின் ஆசிரியராகவும் உள்ளார். திராவிட ஆளும் வர்க்கங்களின் இந்திய வரலாற்று மரபுக்குத் தொடர்புடையவராகவும் உள்ள இவரை, அவ்வகுப்புகள் ஒரு ஜாடியிலிருந்து வந்தவர் என்று கூறுகின்றனர்.

மேலும், இராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகியின் காலத்தில் அகத்தியரைப் பற்றி நாசிக்கிலும் (மகராஷ்ட்ராவில் உள்ளது) விந்திய மலைத்தொடருக்குத் தெற்கில் உள்ள பஞ்சவாடியிலும் உள்ள தண்டகாரண்யத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு பேசப்பட்டுள்ளது. இப்பொழுது (இக்காலத்தில்) இங்கு சங்க இலக்கியம் அகத்தியர் பொதியில் மலையில் ஒருங்கிணைந்ததாகக் கூறவில்லை. மணிமேகலை கூட, காவிரி ஆறு தொடங்கும் கர்நாடக மாநிலத்திலுள்ள கூர்க் மலையுடன் மட்டும் அவரை ஒருங்கிணைத்துப் பேசியுள்ளது.

பரிபாடலில் (பாடல் 11: 11) பொதியில் மலையின் துறவியைப் பற்றிய குறிப்புள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு நூல்களிலும் பொதியில் மலையில் ஒரு மாபெரும் துறவி, பொதியின் மாமுனியைப் பற்றி குறிப்புள்ளன. இங்கு எவ்வாறாயினும், அவை அகத்தியரைக் குறிப்பதாக நிரூபணம் செய்ய சான்றாதாரம் இல்லை. இவற்றை அவலோகிதிஸ்வரரைக் குறிப்பதாக எடுத்துக்கொள்வதற்கு ஞாயமான காரணங்கள் உண்டு.

தமிழ் இலக்கணம் மீதான அகத்தியரின் நூல் பற்றிய புராணக்கதை முதன்முதலாக கி.பி. எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளுக்கு எழுதப்பட்ட இறையனார் அகப்பொருளுரையில் இடம்பெறுகிறது. இதில் அகத்தியர் 4,440 ஆண்டுகள், 3700 ஆண்டுகள் முறையே இருந்த முதல் மற்றும் இரண்டாம் சங்கத்தின் உறுப்பினர் என்று கூறப்பட்டுள்ளது. அகஸ்தியரின் அகத்தியம் என்னும் நூல் முதல் சங்கத்தைச் சேர்ந்த இலக்கண நூல் என்று கூறப்படுகிறது, மாறாக தொல்காப்பியம் மற்றும் ஏனைய மூன்று இலக்கண நூல்கள் இரண்டாம் சங்கத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இப்புராணக்கதையின் அடிப்படையில் தமிழ் மக்கள் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் / சீடர் என்ற நம்பிக்கைக்கு வந்தனர். உண்மையான நிகழ்வின்படி, எவ்வாறாயினும், அகஸ்தியரைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்திலேயோ பனம்பாரனாரின் பாயிரத்திலேயோ குறிக்கப்பெறவில்லை. அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில், அகத்தியர் என்னும் மாபெரும் துறவி பொதியில் மலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதிலிருந்து பொதியில் மலையில் அகத்தியர் வழிபாடு அடியார்க்கு நல்லாரின் காலத்தில் புகழ்பெற்றிருந்தது என்பதை நாம் காணலாம். பெரும்படையைக் கொண்டிருந்த பாண்டிய மன்னனுடைய திருவாலங்காடுகள் அங்கிருந்தன. பாண்டியன் அச்சத்தில் தன் இருப்பிடத்திற்கு செல்லாமல் அகத்தியர் குடிகொண்டிருக்கும் பொதியில் மலையில் (மலய மலை) தஞ்சம் புகுந்தார். இது அகத்தியரின் இடைக்கால மரபை சுட்டிக்காட்டுகிறது.

பொதியில் மலையுடன் தொடர்புடைய அகத்தியர் மீதான திமணம் செதுகொண்ட நிகழ்வோடு தொடர்புடைய புராணக்கதையாகும். வடக்கில் அனைத்து கடவுள்களும் தேவர்களும் (முனிவர்களும்) கூடியிருந்ததால் சமனிலையை இழந்த பூமியை சரிசெய்வதற்கு அகத்தியர் தெற்குத் திசைக்கு அனுப்பப்பட்டார்.

மற்றொ ரு புராணக்கதை சிவன் தனது உடுக்கையைத் திருப்பியபொழுது இரண்டு ஒலிகள் (சமஸ்கிருதமும் தமிழும்) எழுந்தன. இவை முறையே சிவனால் பாணினிக்கும் அகஸ்தியருக்கும் கற்பிக்கப்பட்டது என்று கூறுகிறது. தொடர்ந்து பாணினி சமஸ்கிருத இலக்கணத்தை எழுதினார்; அகத்தியர் தமிழுக்கு இலக்கணத்தை இயற்றினார். இம்மரபின்படி, பொதியில் மலையில் அகத்தியர் அகத்தியம் என்று அழைக்கப்படும் தமிழ் இலக்கண நூலை எழுதி தமிழ் மக்களுக்குத் தமிழைக் கற்பித்தார். இப்புராணக் கதைகள் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காஞ்சிப்புராணத்தில் மட்டும் இடம்பெறுகிறது.

மேலுள்ள விவாதத்திலிருந்து, தென்னிந்தியாவில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மட்டுமே பொதியில் மலையுடன் அகத்தியரின் ஒருங்கிணைவு ஏற்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது; மேலும் இம்மலை தமிழர்களால் அகத்திய மலை (அகஸ்திய மலை) என்றழைக்க துவங்கப்பட்டுள்ளது.

இப்பொழுதும் எப்பொழுதும் பொதியில் ஒரு கலாச்சார குறியீடு

பொதியில் மலை இந்துயிசம் மற்றும் பௌத்த சமய மரபுகளின் மையமாக மட்டும் விளங்கவில்லை; மதுரை பாண்டியர்களைப் போல ஆட்சிபுரிந்த மன்னர்களின் கலாச்சார குறியீடாகவும் விளங்கியது. அவர்கள் உருவாக்கிய தமிழ் (அம்மலையிலிருந்து) குளிர்ந்த நறுமணத்துடன் தென்காற்று வீசும் பொதியில் மலையில் அகத்தியராகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

வரந்தருவர் (வில்லிபாரதத்தில்), குமரகுருபரர் போன்ற புலவர்களின் பிற்கால தமிழிலக்கியத்தில் பொதியில் மலையில் தென்காற்று விளையாடுகிறது, தமிழ் முனிவர் வாழ்கிறார், நுரை ததும்பும் நீரோடைகள் வீழ்கின்றன, தமிழே அங்கு பிறப்பெடுத்தது என்று அம்மலையைப் போற்றிப்புகழ்ந்து கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். பொதியில் தமிழ் மொழியின் வீடென்றும் தமிழ்

முனிவர் பெரும் நிறையைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் இம்மலையைப் போற்றிப்புகழ்ந்து ஒரு தெய்வ நிலைக்கு உயர்ந்தது மற்றும் இதன் தொடர்பு மகாயான பௌத்தத்தின் தெய்வம் அவலோகிதிஸ்வரருடன் (இத்தெய்வத்தின் புனித மொழி பாலி ஆகும்) ஏற்பட்ட பிறகு இம்மதத்தின் முக்கியத்துவம் சரிவுபெற்று முடிவடைகிறது. இம்மலை எப்பொழுதும் தெய்வீகமானது, சொர்க்கத்தின் குடியிருப்பு, இறப்பற்ற இருப்பைக் கொண்ட சித்தர்கள் (சமஸ்கிருதம்; சித்தர்கள் உணர்ந்த மனிதர்கள்) சூழ்ந்துள்ள பகுதி என கருதப்பட்டது.

இம்மலையில் சித்தர்கள் குடியிருந்தனர் என்னும் பழங்கால நம்பிக்கையைப் புகழ்பெற்ற புலவர் திரிகூடராசப்பக் கவிராயர் தன்னுடைய குற்றாலக் குறவஞ்சியில் குறித்துள்ளார். இன்றைக்கும்கூட மலையடிவாரத்தில் வாழ்ந்துவரும் காணிகார பழங்குடி இனமக்கள் நவீன தாக்கத்திற்கு உள்ளாகி வாழ்ந்து வருகின்றனர். கிறித்தவ நிறுவனத்தின் பெருமுயற்சியால் பெருமளவிற்கு மதமாற்றம் நிகழ்ந்தது.

மாபெரும் ஆளுமைக்காக தங்களுடைய அடிமனதில் அவர்களால் பேசமுடியாத மரியாதையைத் தக்கவைத்துக்கொண்டு உணர்ந்தார்கள் இணையற்ற வலிமை மிக்க முனிவர், தெய்வீகத்தன்மை மீறமுடியாத புரிதல், மலை உச்சியின் மீது தியானம், யாருடைய இருப்பு இருப்பதாக அவர்களால் உணரப்பட்டதோ, அந்த காணமுடியாத வலிமை அவர்களைப் பாதுகாக்கிறது.

மலைமேல் இருக்கும் மாபெரும் சக்தி அவர்கள் தவறு செய்தால் கோபமடையும் என்பது மட்டும் அவர்கள் அறிந்திருந்தனர். அவருடைய அமைதியான தியானத்தைக் கலைக்கும் சப்தமான பேச்சைப் பேசுவதற்கு அவர்கள் அச்சம் கொண்டனர். பழங்குடி இனமக்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொண்டால், அவர்கள் முனிவரை அழைத்து அவர்தன் சாபத்தால் தாங்கள் ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் மலையின் உச்சிக்கு சென்று அகத்தியரை வணங்கி தங்களுடைய பெருமதிப்பிற்குரிய காணிக்கையை செலுத்தி வருகின்றனர். இம்மலையில் (பொதியில்) வாசம் செய்யவும் தன்னுடைய அற்புதமான இருப்பின் மூலம் அவர்களுடைய காணிக்கையைப் பெறும் அகத்தியர் பற்றிய சந்தேகத்திற்கு இடமான கதைகளைக் கேட்பதனாலேயோ இத்தெய்வத்தின் அடையாளத்தினாலோ இம்மக்கள் அவரை வழிபடுவதற்குரிய காரணமில்லை.

பொதியிலில் இன்றைய நிலை

தமிழின் மூலவர் என்று புகழ்பெற்று வணக்கக்கத்திற்குரியவராக விளங்கிய அகத்தியரை இன்று பொதியில் மலையில் முக்கியமாக மலையாள மொழியைப் பேசும் மக்கள் கேரளத்திலிருந்து பெரும் எண்ணிக்கையில் மலைத்தொடருக்கும் மேற்குப் பகுதியிலிருந்து இம்மலைக்கு வந்து வழிபடுகின்றனர். அவர்கள் தங்கள் வழிபாட்டை அகத்தியகூடம் (இம்மலையில் உள்ள ஓர் இடம்) என்னும் இடத்தில் மாபெரும் முனிவர் அகத்தியருக்கு செலுத்துகின்றனர்.

இந்துக்கடவுள் என்ற முழுப்பொருளில் அவர்கள் வழிபடவில்லை. அகத்தியரை அல்லது மலையைத் தமிழர்கள் உரிமை கோருவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் உரிமையால் அகத்தியகூடம் தங்களதென்றும் பொதியமலை (தமிழ் பிறந்ததாக கூறப்படும் மலை) தங்களுடைய மலை என்றும் வலியுறுத்துகின்றனர்.

அகத்திய வழிபாடு மிகவும் பரவலாக திருநெல்வேலி பகுதியில் உள்ளது. பாபநாசத்திற்கு அருகில் அகத்தியர்  அருவி, அகத்தியர்  நகர் போன்ற இடங்கள் உள்ளன. இம்முனிவருக்கு குற்றாலம், பாபநாசம் ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன. அகத்தியர் பற்றிய புராணக் கதைகள் சிவனின் திருமணம் வைணவக் கோயில்களை சைவமாக மாற்றுகின்றது. தலபுராணங்கள், கோயில் உலாக்கள் போன்றவை உள்ளூர் கலாச்சாரத்தில் அகத்தியரின் தழுவியுள்ள அனைத்து இருப்புகளும் சாட்சியாய் அமைந்துள்ளன. பொதிகை (பொதியில்) மலையின் சிறப்புகள் எல்லாம்

முடிந்துவிட்டன. இது ஒரு வார்த்தையால் தமிழுக்காக இருந்தது, இது மாபெரும் புலவர் நக்கீரர் தமிழை சாபமிட்ட வடவர் ஒருவரை சாபமிட்டதால் இருந்தது; இது "தென்மலை' என்று போற்றப்பட்டது, இனிமையான தெற்குக் காற்று இனிப்புக்கு நிகரானது, இனிமையாக இல்லையென்றால், அது தமிழ் வரலாற்றில் பழைய காலத்திலிருந்து இடைக்காலத்திற்கு வந்த தமிழாகும். இது இப்பொழுது கண்டுபிடிப்பதற்கு மனிதர்கள் கேட்கும் நிலையில் இரங்கத்தக்க அளவில் உள்ளது.

பொதிகை என்றால் என்ன? பொதிகை எங்கு உள்ளது? இதை மேம்படுத்துவதற்கு அரசாங்கமோ தனிமனிதர்களோ ஆர்வம் காட்டவில்லை. மேலும், பல்வகையான கலாச்சார மேன்மையைத் தனித்தன்மையோடு இருந்து நினைவூட்டும் வகையில் நிற்கும் இம்மலையைப் பற்றி மேலும் ஆய்வு செய்யும் வகையில் ஊக்கப்படுத்தவும் இல்லை.

சிகரத்தை அடைவதற்குப் பாபநாசத்திலிருந்து குன்றுகளின் மீதுள்ள அணைகட்டு வழியாக, காட்டு விலங்குகளின் பாதிப்புள்ள காடுகளின் வழியாக, பேயாறு என்றழைக்கப்படும் ஒரு காட்டாற்றுக்கும் அப்பால், பொதிகைச் சிகரம் செங்குத்தாக எழும் இடமான சங்கமுத்திரை என்றழைக்கப்படும் ஒரு பீடபூமியைப் போன்று உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும்.

பொதிகை சிகரத்தின் கீழ்ப்பகுதிகளுக்கும் மேலே உள்ள உச்சி 557 சதுரமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டுள்ளது, இதுவும் பாறை நிலப்பரப்பாகும் ¬உச்சியில், நிலையாக இருக்கும் மூடுபனியால் பார்வை தடைபடும். இவ்வுச்சியின் மீது நிற்பவர்களுக்குக் கடுமையாக வீசும் காற்று பலத்த வலிமையோடு வாழ்க்கையைப் பேராபத்திற்குள்ளாக்கும். இந்த பௌத்தத் துறவிகள் அத்தகைய இடத்தைத் தேர்ந்தெடுத்த தங்களுடைய தனித்திருக்கும் வாழ்க்கையானது உறுதியான ஆற்றல்களைக் கொண்டே அவர்களுக்கு உண்மையில் சிறிய காணிக்கை / அஞ்சலி கூட இல்லை.

இம்மலையின் கீழ் உள்ள இஞ்சிகுளி, பூங்குளம் போன்ற கிராமப்பகுதிகளில் உள்ள பழங்குடி இனமக்கள் தமிழ், மலையாளம் கலந்த வட்டார மொழியைப் பேசுகின்றனர். புவியின் மீது மிகவும் பழங்காலத்துத் தொல்பொருட்கள் சான்றுக்கு இல்லையென்றாலும், தொல்பொருள் ஆராய்ச்சியின் களத்தில் ஆழமான பணிசார்ந்த ஆய்வு மற்றும் நாட்டார் வழக்காற்றுப் பகுப்பாய்வுகள் ஆகியன உயர்ந்த சான்றாதாரங்களைப் பெற்றே தீரும்.

பொதிகை மலை இழந்துவிட்ட புகழை இன்று சில உறுதியான பணியாளர்கள், தடைகள் இருந்தபோதிலும் தொழிலாளர்களாக உள்ள அவர்கள் இம்மலையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர புனரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

80 வயதைக் கடந்துவிட்ட பாபநாசத்து M.S. சுந்தரம் பிள்ளை இப்பொழுதும் வலிமையோடு செல்கிறார். மலைக்கு மேல் பல நபர்களை அகத்தியரை வழிபடுவதற்காக அழைத்துச் செல்கிறார், மலையின் உச்சியில் இம்முனிவரின் ஒரு சிலையை வைக்க வேண்டும் என்கிற இவருடைய முயற்சிகள் வெற்றியடையவில்லை என்றாலும், பொதியில் மலையோடு தொடர்புடைய பாரம்பரியத்தைப் புதுப்பிப்பதற்கு ஒரு நிறுவனத்துடன் அவர்களோடு தொடர்ந்து செல்கிறார்.

அவருடைய முயற்சிகள் இனிமையாக அமையும் என்று எண்ணுகிறேன். பெங்களூர் டாக்டர் குமார் அவர்கள் பொதியிலுக்குப் பலமுறை ஆராய்வதற்காகச் சென்றுள்ளார். மேலும் அகத்தியர் ஜோதியின் (முனிவர் அகத்தியருக்குப் பின் ஒளிரும் ஜோதிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) புகைபடங்களை வெளியிட்டுள்ளார். இவர் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்மே) பௌர்ணமி நிலவில் சிகரத்தில் சாட்சியாய் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதியில் மலையைப் பற்றி ஆய்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நமக்கு வரலாறு, தமிழ்க் கலாச்சார மூலங்களைப் பற்றிய அறிவொளியை வழங்குவதோடு மட்டும் இல்லாமல், இவை கிழக்காசிய நாடுகளிலும் பொதுவாக தமிழகத்திற்கும் இதன் சகோதரத்துவ ஆசிய நாடுகளுக்கும் இடையே கலாச்சார வணிகத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விரிவடைந்துள்ள உறவை முன்னிலைப்படுத்தும் பணியை செய்கிறது. 

(முனைவர் ஷு ஹிகோசாகா அவர்கள் எழுதிய Buddhism in Tamilnadu a new perspective என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘பொதிகை மலையும் அவலோகிதிஸ்வரர் வழிபாடும்’ பற்றிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் முனைவர் இ. ஜெயபிரகாஷ் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இலயோலா கல்லூரி, சென்னை)

முனைவர் ஷூ ஹிகோசாகா

தமிழில்: முனைவர் இ. ஜெயபிரகாஷ்