நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது; இருப்பினும் சொற்பொழிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மிகப்பெரிய கூட்டம் அலைமோதிக் கொண்டில்லை. ஆனாலும், சொற்பொழிவாளரின் ஆற்றொழுக்கான, நடந்து கொண்டிருப்பது என்ன, நடக்க வேண்டியது என்ன என்பது குறித்த புள்ளிவிவரங்களால் நிறைந்த சலிப்பூட்டக் கூடிய வகையில்லாத பேச்சு, கேட்பவர்களை எழமுடியாதவாறு கட்டிப் போட்டிருக்கிறது. அநாவசிய ஆவேசப்படுதல் இல்லாத அலட்டல் இல்லாத பேச்சு கேட்பவர்களைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், மன்னார்குடி என்று சுயமரியாதை சமதர்ம சமத்துவப் பரப்புரைப் பயணம் தொடர்கிறது. சொற்பொழிவு முடிந்து ஆசிரியர் குழுவுடன் சென்று சொற்பொழிவாளரான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாஸ் மூலம் சந்தித்து நேர்காணலை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். தான் உணவு உண்டுவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் மன்னார்குடி பயணிகள் மாளிகையில் சந்திப்பதாகக் கூறுகிறார். "சாப்பிட்டீர்களா' என்று அன்புடன் விசாரிக்கிறார். "ஆச்சு' என்று கூறிவிட்டு பயணிகள் மாளிகைக்குப் புறப்படுகிறோம். பயணிகள் மாளிகையின் வாசலிலேயே நின்று கொண்டு பலவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். கொசுக்கள் தங்கள் வேலையை கவனித்துக் கொண்டிருக்க, அறையில் சென்று அமர்கிறோம். சிறிது நேரத்தில் மணி அவர்கள் வருகிறார். காலதாமதத்திற்காக வருந்துகிறார். "கருக்கல் விடியும்' இரண்டு மூன்று இதழ்கள் வாசித் திருப்பதாகவும் முயற்சியைப் பாராட்டுவதாகவும் கூறுகிறார். ஆசிரியர் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார். நள்ளிரவு தாண்டியும் முகத்தில் களைப்பில்லை. நேர்காணலின் நடுநடுவே "ஜோக்' அடிக்கிறார்.

கருஞ்சட்டை, நாலுமுழ வேட்டி, தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்தும் கண்களை அலங்கரிக்கும் கண்ணாடி என எளிமையாக "மணி அண்ணன்' என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் கொளத்தூர் மணி அவர்கள் நேர்காணலுக்கு ஆயத்தமாக, ஆசிரியர் அம்ரா பாண்டியன், இணையாசிரியர் பரிதி இவர்களோடு ஆசிரியர் குழு மணிகணேசன், மீனா சுந்தர், செழியரசு, கலைபாரதி கேள்விகளோடு தயாராக... அவற்றை அவர் எதிர்கொண்ட விதமும் எவ்வித தயக்கமும் இன்றி அவர் அளித்த பதில்களும் இனி உங்களுக்கு...

எழுத்து வடிவம் : செழியரசு, கலைபாரதி

ஒருவர் எந்தக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட வேண்டுமானாலும் அக்கொள்கையின் அடிப்படை அம்சங்கள் சில நம்மிடம் இருந்தாக வேண்டும் என்பது உளவியல் நியதி. தாங்கள் பெரியாரிடம் வந்து சேர்ந்தது எப்படி?

பெரியாரை முதலில் நான் நாத்திகமாகத்தான் புரிந்து கொண்டேன். என்னுடைய தமிழாசிரியர் என்னுள்ளே சிறு வெளியை, வெடிப்பை ஏற்படுத்தியவர். புராணக்கதையைப் பற்றி பாடம் நடத்தும் போது, “என்று... ஒரு புராணக்கதை இருந்தது'' என்பார்.

“புராணக்கதை என்பதற்கு பொருள் தெரியுமா?'' என்று கேட்டுவிட்டு, பெரியார் சொல்வதாக, “புராணம் என்றால் பழமை என்று பொருள். நவீனம் என்றால் புதுமை என்று பொருள். செய்தி என்றால் நடந்தது என்று பொருள். கதை என்றால் நடக்காதது. அதாவது கற்பனை என்று பொருள். செய்தி என்றால் உண்மை. கதை என்றால் பொய். புராணக் கதை என்றால் "பழைய பொய்' என்று அர்த்தம்'' என்பார். சில வினாடிகளிலேயே மூளையில் பதிந்த பழைய நம்பிக்கைகள் உடனே சரிய ஆரம்பித்தன.

அடிப்படை அம்சங்களைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். நானொரு சிறிய கிராமத்திலிருந்து வந்தவன். கிராமங்களில் கடவுள் நம்பிக்கை என்பது ஊரில் நடக்கும் பதினைந்து நாள் திருவிழாவில் மட்டுமே கடவுள் பற்றிய சிந்தனை இருக்கும். அதற்குப் பிறகு கடவுள் பற்றிய சிந்தனையே இருக்காது. அதற்கான நேரமு மில்லை என்பது ஒரு காரணம். இரண்டாவது பெரிய கடவுளைப் பற்றிய நம்பிக்கையும் அவர்களிடம் இருந்த தில்லை. அவர்களுக்கு 15 நாட்கள்தான் கடவுள். மாரியம்மன் ஞி காளியம்மனோடு முடிந்துவிடும். மேல்தட்டு மக்களைப் போல பெரிய கடவுளைப் பற்றிய நம்பிக்கை ஞி பற்றுதல்கள் கிடையாது. ஆனால் சாதியம் பற்றிய சிந்தனை அவர்களிடம் இருந்தது. அதுவும் சிறு வயதில் வெளிப்படையாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. இந்தச் சூழலில் என்னுடைய தமிழாசிரியர் என்னை விடுதலையைப் படிக்கச் சொன்னார். அன்று முதல் நான் விடுதலையைப் படிக்கத் தொடங்கினேன்.

அந்த நேரத்தில் 9,10 வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு என்னுடைய வகுப்புத் தோழர் ஒருவர் ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். பெரியார் பற்றிய நூல்கள் அவர் மூலமாக எனக்கு கிடைக்கின்றது. அப்பொழுது இயக்கம் அல்லது அமைப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆசிரியர் கொடுத்த விடுதலை மூலமாகவும், நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் மூலமாகவும் என்னால் பெரியாரை அறிந்து கொள்ள முடிந்தது. 1928ல் நடந்த சீர்திருத்த மாநாட்டில் பேசியதை, நூல்களின் மூலமாக அறிந்துகொண்டேன். விடுதலை, நூல்கள் எனக்கு சாதி பற்றிய புரிதலை முதன்முதலில் ஏற்படுத்தியது.

1928ல் நடந்த மாநாட்டில்தான் பெரியார் கடவுள் மறுப்பு என்பதை சொல்கிறார். தண்ணீரைத் தொடக் கூடாது. குளத்தில் நீர் எடுக்கக்கூடாது என்று சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தும் அப்படிப்பட்ட உலகத்தை எரிமலையால் எரிக்காமலும், பூகம்பத்தால் சிதறச் செய்யாமலும், பிரளயத்தால் மூழ்கச் செய்யாமலும் இருப்பதைப் பார்த்த பின்னாலும் ஒரு கடவுள் இருக்கிறார் என்றால் அவர் கருணையே வடிவமானவர் என்பதை எப்படி நம்புவது? சாதியக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவர் கடவுளாக இருக்க முடியுமா? அதுதான் சாதிக்கெதிரான பார்வையை எனக்கு கொடுத்தது. முதல்ல... பெரியாரை நான் நாத்திகராகத் தான் ஏற்றுக்கொண்டேன். அதன் பின்தான் இன்னும் தீவிரமாகப் பெரியாருடைய நூல்களை வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தேன். அவருடைய கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். இந்த ஆர்வத்தை எனக்கு தமிழாசிரியர்தான் தருகிறார். ஆனால் அப்பொழுது அவர் தி.மு.க. பெரியாரோ தி.மு.க.வை எதிர்க்கிறார். அவரும்கூட “பெரியாருடைய கூட்டங்களுக்குச் செல்லுங்கள் அவருடைய கருத்துக்களைக் கேளுங்கள். அவர் அரசியல் பற்றி என்னென்னம்மோ பேசுவார். அப்படியே நீங்கள் ஆதரிக்க வேண்டிய தில்லை'' என்பார்.

அன்றைக்கு பெரியார் காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார். அப்போது நடந்த இடைத்தேர்தலில், கந்தப்பன் முதலில் தோற்றுவிடுகிறார். தேர்வு பெற்ற சுப்பராயன் ஆளுநராகிவிட்டதால் கந்தப்பன் மீண்டும் நிற்கிறார். அப்ப ஓட்டுக் கேட்க காங்கிரசுக்காக வரும் போது பெரியார் எந்த இடத்திலும் அரசியல் பேசல. பார்ப்பனரும், பார்ப்பனருடைய சூழ்ச்சியையும் பேசிவிட்டு இப்படிப்பட்ட பார்ப்பனரை ஆதரிக்கின்ற கண்ணீர்த் துளிகளுக்கு ஓட்டுப்போட போகின்றீர்களா? பார்ப்பான் மறுத்த கல்வியைக் கொடுத்த காமராசரின் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?

கல்வி கொடுத்தவர் காமராசர். பள்ளிக் கூடம் கட்டியவர் காமராசர். நம்ம புள்ளங்கள எல்லாம் படிக்கச் சொன்னவர் காமராசர். அவரது ஆதரவு பெற்றவருக்கு ஓட்டளியுங்கள் என்கிறார் பெரியார். அந்த தேர்தல் பிரச்சாரத்தில்கூட அவர் அரசியல் பேசாமல், அதிக சீர்திருத்தக் கருத்துக் களையும், பார்ப்பன சூழ்ச்சியையுமே அதிகம் பேசுகிறார்.

“என்னது ஒரு அரசியலும் பேசலயே... நம் ஆசிரியர் அவர் அரசியல் பேசுவார் கேட்காதீங்கன்னு சொன்னாரே''

என நினைக்கிறேன். எனவே நான் கிராமத் தான் என்ற அடிப்படையில் ஒரு ஆசிரியர் சொன்ன பாடங்களும், பெரியாரது பேச்சுகளும் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக இருந்தது.

உங்களது இளமைப்பருவம் குறித்து...

ன் தந்தை கோயிலுக்குப் போனது எனக்குத் தெரியாது. ஆனா எங்கம்மா சில கோயிலுக்குப் போவாங்க. அப்போ தெல்லாம் பயணம் என்றாலே கோயிலுக்குப் போவதுதான். கிராமங்கள்லேந்து பயணம் என்றாலே திருப்பதிக்குப் போறதுதான். அப்பா எந்த பயணத்திலேயும் போய் பார்த்ததில்லை. அப்பா... ஒரே ஒரு இடத்துல பூசை பண்ணுவாரு... அதுவும் தோட்டத்துல ஒரு கோயில் இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை ஆவணி மாசமோ என்னம்மோ வரும். பூஜையெல்லாம் நான் பார்த்ததில்ல. மற்றபடி கடவுள் சம்பந்தமா எந்த இடத்திலேயும் எதுத்தும் பேசுனது இல்ல. ஆதரிச்சும் பேசுனது இல்ல... அதுதான் எங்களது கிராமத்துச் சூழல். கிராமங்கள் என்றாலே கடவுள் இல்லாத பகுதிதான். நகரத்து வாசமெல்லாம் கிராமத்துக்கு வந்ததாலே இப்பதான் கிராமத்துல கடவுளின் ஊடுருவல் அதிகமா வந்திருக்கு.

கோயில் என்பதே எங்களுக்கு காவல் தெய்வம்தான். (முனியப்பன்) சில பேரு அய்யனாருன்னு சொல்வாங்க. எங்களுக்கு முனியப்பன். அன்னைக்குத் தான் கிடா வெட்டி கறிச்சோறு போடு வாங்க. அப்ப நான் கறி சாப்பிட மாட்டேன். ஆனா என்னை பள்ளி விடுமுறை போட்டு வரச் சொல்வாங்க. திருவிழாவாச்சேன்னு வந்தா... அன்னைக்கு எங்கூர்ல ஒரு பாட்டி செத்துப் போயிட்டாங்க... திருவிழா நின்னு போயிடுது. அடுத்தவாரம் திரும்பவும் திருவிழா. தேர்வு நடக்குது. அதனாலே நான் லீவு போட மாட்டேன்னு சொல்றேன். அப்ப எல்லோரும் கோவமா பேசறாங்க... படிக்கிறப் பய கோயிலுக்கு வராம இருக்கக்கூடாதுனு சொல்றாங்க... அதுக்கு, சாமி பெயிலு போட்டா போட்டுக் கிடட்டுமுனு சொல்லி பரிச்சய நான் எழுதுறேன். இருந்தாலும் அச்சம் மனசுக்குள்ள இருந்துச்சு. ஆனால் அந்த தேர்வுல நான்தான் முதல் மாணவனா வந்தேன். அந்த நிகழ்ச்சி மனசுக்குள்ள இப்பவும் நிக்குது. என் ஆசிரியர் கடவுள் பற்றிய சிந்தனைகளை விதைப்பதற்கு முன்னரே இதை நான் சொன்னேன்.

தங்களுக்கு பெரியாருடைய அறிமுகம் எப்பொழுது கிடைத்தது, யாரால் கிடைத்தது?

முதலில் கூட்டங்களின் மூலமாக பெரியார் அறிமுகமாகிறார். 1962ல் நான் முன்பே சொன்னதுபோல இடைத் தேர்தலில் அவரது பேச்சைக் கேட்டேன். மீண்டும் 1965ல் எங்கள் ஊருக்கு வருகிறார். அது திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த கூட்டம். அந்த கூட்டம் நடந்த அன்றைக்கு லால்பகதூர் சாஸ்திரி இறந்துவிட்டார். எனவே அதை இரங்கல் கூட்டமா மாற்றி விடுகிறார். அதற்கப்புறம் 70களின் தொடக்கத்தில் அவருடைய பேச்சுகளைத் தொடர்ச்சியாகக் கேட்கின்றேன். பிறகு 1971ல் அவரை கூட்டத்திற்கு கடிதம் எழுதி அழைக்கின்றேன். அதுல கூட "நீங்க வந்து போற செலவு எவ்வளவுன்னு எனக்குத் தெரியல...' என்று சொன்னவுடன், ஒரு மிகக் குறைவான தொகையை வாங்கிக் கூட்டத்திற்கு வர சம்மதிக்கிறார். இந்தக் கட்டத்தில்தான் பெரியாரை நேரடியாக சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

திராவிடக் கட்சிகள் உடைய உடைய நீர்த்துப் போகிறது. பொதுவுடமைக் கட்சிகள் உடைய உடைய இறுக்கமாகிறது. இதனை எப்படி பார்க்கின்றீர்கள்?

கட்சி அரசியல்னு வந்தாலே எல்லாரும் நீர்த்துதான் போகின்றார்கள்... திராவிடக் கட்சிகளில் நீர்த்துப் போதல் என்பது அண்ணாவுலேந்தே ஆரம்ப மாகுது... அவரு தான்... பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்... பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் வாக்கு அரசியலுக்காகப் பெரியாரிய கொள்கையிலிருந்து முதலில் விலகிச் செல்கின்றார். ஆனால் ஓட்டு அரசியல் இல்லாத திராவிட அமைப்புகள் சிறுசிறு முரண்பாடுகள் இருந்தாலும் இன்றும் சரியாகத்தான் இருக்கின்றது. உதாரணத்திற்கு மார்க்சிய பெரியாரிய இயக்கத் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் எண்ணிக்கையில் குறைவான தோழர்களை வைத்திருக்கின்ற போதும் காத்திரமாகவே செயல்படுகின்றார். வாக்கு வங்கி அரசியல் என்றாலே பொதுவுடமைக் கட்சிகளும் விதிவிலக்கல்ல... ஆனால் மார்க்சிய லெனினிய குழுக்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் இறுக்க மாகவே செயல்படுகின்றார்கள்.

பெரியாருடைய சிந்தனையில் தங்களைப் பெரிதும் ஈர்த்தது எது?

பெரியாருடைய தத்துவங்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக அவரது பேச்சுகள்... அவருடையது எழுதப்பட்டதைவிட பேசியதை எழுத்தாக்கியதே அதிகம். அவர் அறிஞரை நோக்கி எழுதியவர் அல்ல... பாமர மக்களை நோக்கிப் பேசியவர்... அதுவும் அவர்களுடைய மொழியில் பேசியவர். எளிமையாகப் பேசினாலும் அழுத்தமான கருத்துக்களைச் சொன்னவர். கம்யூனிஸ்ட் அறிக்கையினை வெளியிடும் போது, ஒரு முன்னுரை எழுதுகிறார். அதுல "இந்தியாவைப் பொறுத்தவரை ஏழ்மை இருந்தாலும் கூடுதலாக சாதி என்ற ஒன்றும் இருக்கின்றது. அதுவே முதன்மையானதாகவும் பிரதானமாகவும் இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டே இதனைப் படியுங்கள்' என்கிறார். இதிலிருந்து சாதியத்தை முதன்மையானது என பெரியார் அழுத்தம் கொடுத்து பார்க்கும் போது, சாதி யொழிப்பு பற்றிய கருத்துகளே எனக்கும் அவருடையதில் மிகவும் பிடிக்கின்றது.

பெரியாருடைய பேச்சு எந்தவிதமான தாக்கத்தை மக்களிடம் எற்படுத்தி இருக்கிறது?

பெரியார் கொள்கையால் அறியப் படுகிறார். காங்கிரஸ்காரர்கள் பெயர்களால் அறியப்படுகின்றார்கள். காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்காரர்கள் மது அருந்தும் போதும், கதர் சட்டை அணியாத போதும் யாரும் ஏனென்று கேட்பதில்லை. ஆனால் பெரியாரியவாதிகள் கோயிலுக்குப் போக முடியாது. சடங்குகள் செய்ய முடியாது. பொது மக்களே கேள்வி கேட்பார்கள். ஏனென்றால் பெரியாருடைய கருத்துகள் பொதுமக்களிடம் ஆழமாக வேரூன்றியதே காரணம் ஆகும். பெரியாரை ஏற்றுக் கொள்வது என்பது அவருடைய சிந்தனைகளை ஏற்றுக் கொள்வதுதான்.

பெரியாரை யார் போற்றி, புகழ்ந்து கொண்டாட வேண்டுமோ, அவர்களே மோசமாக விமர்சிக்கின்றார்களே?

யார் பெரியார் என்பதை மக்களிடம் சரியாக அறிமுகப்படுத்தவில்லை. அவருடைய அனைத்து எழுத்துகளும் பேச்சுகளும் மக்களிடம் போய் சேர்ந்தால், அவரை யாரும் விமர்சிக்க முடியாது. போகவே இல்லை... கொண்டுபோகவே இல்லயே... (ஆதங்கம்) திராவிடர் கழகம் எல்லாம் பழைய மந்திரவாதிபோல... நாட்டு மருந்து மாதிரி கசக்கி கொடுத்துரு வாங்க. என்ன தழைன்னு தெரிஞ்சுக்க கூடாது என்பது போல. திராவிட கழகத்துல பேசுறது மூலமாகத்தான் நாம தெரிஞ்சுக்க முடியும். படிச்செல்லாம் தெரிஞ்சுக்க முடியாது. பெரியாரை ஒரு மூடுமந்திரம் போல வச்சிகிட்டு அவுங்க படிச்சுட்டு வர்றததான் ரொம்ப காலமா கேட்டோம். ஆனால் ஆனைமுத்து என்ற அந்த ஒன்றை மனிதர் இல்லை என்றால் பெரியாரை இன்னும் மோசமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருந்திருக்கும். அவரும் முழுமையாகச் சொல்லவில்லை. அவர் விரும்பின பகுதிகள் மூலமாகத்தான் நம்மால் பெரியாரை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும்கூட ஓரளவுக்கு அவருடைய முக்கிய பங்களிப்பு இருக்கிறது.

பெரியார் காங்கிரசில் இருக்கும் போது கோயம்புத்தூரில் தேர்தல். அதில் நீதிக்கட்சி வெற்றி பெற்று, காங்கிரஸ் தோல்வியை சந்திக்கிறது. காங்கிரஸ்டு தோற்றமைக்கான காரணத்தைச் சொல்லும்போது “காங்கிரஸ் காரன் ஓட்டுக் கேட்டதாலதான் காங்கிரஸ் தோற்றது... இதுதான் காங்கிரஸ் யோக்கியதை'' என்கிறார். "இவன் மட்டும் கேட்காமல் இருந்தால் ஜெயித்திருக்கலாம்' அப்பொழுது காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளராக பெரியார் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்புறம் காஞ்சிபுரம் மாநாடு. அதற்கு முன்னதாக ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். அதில் தமிழர் மாநாடு நடத்தணும் - பார்ப்பனர் அல்லாதவர் எல்லாம் கலந்துக்கணும் - பார்ப்பனர் அல்லாதவர் யார் என்று சொல்லும் போது “தீண்டாதவர் வலி தான் பார்ப்பனர் அல்லாதவர் வலி. தீண்டாதவர் மேம்பாடு பார்ப்பனர் அல்லாதவர் மேம்பாடு'' என்கிறார்.

1926ல் பார்ப்பனர் அல்லாதவர் என்றால் 100க்கு 5 பேர்கூட இல்லாத மிராசுதாரர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் இல்லை. 100க்கு 95 பேராக இருப்பவர்கள் என்பதை கருதிக்கொண்டு வாருங்கள் என்கிறார். அவருடைய பார்வை என்பது அப்போதே சாதியொழிப்பை பற்றியதாக இருந்தது. காரைக்குடி ஜில்லா மாநாடு நடக்குது. அதுலகூட சாதி ஒழிப்பு தான் பேசுறாரு. தாழ்த்தப்பட்டவன சுத்தமில்லாதவன்னு சொல்றே. ஆனால் அவன் குளிக்கக்கூட அனுமதிக்க மறுக்குற நீ அவனை சுத்தமில்லாதவன்னு சொல்றதுக்கு என்ன யோக்கியத இருக்கு என்கிறார். அப்புறம் மாட்டுக்கறி சாப்புடுறான்னு சொல்றே. மாட்டுக்கறி சாப்புடுற வெள்ளைக்காரனத்தான் எசமான், துரைன்னு அவன் பின்னாலே நிக்கிற... இப்படி ஒவ்வொன்னா விமர்சனம் செய்யுறார். கோழிக்கறி சாப்புடுற நீ மாட்டுக்கறி சாப்புடுறவன கீழான சாதி என்கிற. மாடு புல்லும், புண்ணாக்கும் தவிடும் தான் சாப்புடுது. ஆனால் கோழி, மலத்தையும் சளியையும் சாப்புடுது. எனவே பிறப்பை வைத்துதான் நீ மேலானவன், கீழானவன்னு சொல்ற. உணவை வைத்து அல்ல. இதை காங்கிரஸ் மாநாட்டுலதான் பேசுறாரு. இதை யெல்லாம் பார்க்காமல்தான் நம்மாளுங்க பேசுறாங்க. ரவிக்குமார் போன்றவர்கள் படித்திருந்தால் பெரியாரை விமர்சித்து எழுதியிருக்க மாட்டாங்க.

பெரியார் சுயமரியாதை திருமணம் பற்றி பேசும்போது, சாதி மறுப்பு, சடங்கு மறுப்போடு சிக்கன திருமணங்களையும் பேசுகிறார். ஆனால் நடைமுறையில் பகுத்தறிவாளர்களே இதனை மீறுகின்றனரே...?

ஒவ்வொரு விசயத்துலயும் பெரியார் உயர்ந்து கொண்டே போகிறார். முதலில் பார்ப்பனர் அல்லாத திருமணம், அடுத்து சடங்கு மறுத்த திருமணம். அதுல கூட மாப்பிள்ளை கதர் சட்டையில்தான் இருப்பார்; மணமகள் நகையில்லாமல் இருப்பார். 1930ல் பெரியார் சொல்றாரு சுயமரியாதை திருமணம் என்பது மகிழ்ச்சி. ஆனால் அது சாதி மறுப்பு திருமண மாகவும், விதவைகள் மறுமணமாகவும் இருக்க வேண்டும். நமது திருமணத்திற்கு 10 நாள் வருமானத்திற்கு மேல் செலவு செய்யக்கூடாது. ஒரு அரைமாத சம்பளத்துக் குள்ள திருமணத்தை முடிச்சுக்க என்கிறார். ஆனாலும் அதெல்லாம் இப்ப இல்ல... பல இடங்கள்ல தோழர்கள் முரண்பட்டு தான் செய்யுறாங்க. ஆனால் துரை. சக்கரவர்த்தி தன் திருமணத்தை பதிவு செய்துவிட்டு அதை விளரம்பரமா மட்டும் கொடுத்தார். மேலும் நம்முடைய நாகரீகமே பங்காளி நாகரீகம்தான். பங்காளி என்ன செய்யுறானோ அதை தான் செய்யணும்னு நெனெக்கிறான். அவனவிட நல்லா செய்யணும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கு... திருமணத்தை ஒலிபெருக்கி இல்லாமல், ஆடம்பர மில்லாமல் பல பெரியாரியவாதிகள் இன்றும் நடத்துகிறார்கள். தகவல் பரிமாறுதல் இருந்தாலே போதுமானது. ஆடம்பரத் திருமணத்தை பெரியார் போன்றே நானும் கண்டிக்கிறேன்.

(நேர்காணல் அடுத்த இதழிலும் தொடர்கிறது)

Pin It