இரவுக் கதவுகளை
உதயவிரல்கள் தட்டும் போது
வெளிச்சப்பெண் இருட்டுத்
துணியுதறி
சூரிய திலகமிட
வானத்து வாசலில் வந்து நிற்பாள்!
பூமிப் பாயில்,
புல்லின் மடியில்
பச்சைக் கனாக்களுடன்
படுத்துறங்கிய பனிக் காதலன்
விலகிக்கொள்ள,
சிகப்புக் கொண்டையினை
சிலுப்பிக் கொண்டு
கூரையில் நின்று
குரலுயர்த்தி பொழுது புலர்ந்ததாக
சேதி சொல்லும் சேவல் ஒன்று!
ராத்திரிகள் படிந்த
நீலச் சுவர்களுக்கு
புலர் தூரிகைள்
வெளிச்ச வர்ணம் பூசும்போது
தண்ணீரில் நிற்கும்
தாமரைக் கன்னிகள் வெட்கமில்லாமல்
மொட்டாடை அவிழ்த்து
பூத்துச் சிரிப்பதை சப்தமில்லாமல்
பார்த்து ரசிக்கும் தவளைகளெல்லாம்!
சாலையோரத்து
ஆலமரத்துக்கிளை அறைகளில்
தங்கியிருந்த பறவைகள்
சிறகை விரித்து
சோம்பல் முறித்துப் பறக்கும்!
சலங்கை சப்தங்களில்
சங்கீதம் பரவ
தலையசைத்துத்
தாளமிட்டு நடைபோடும்
மாடுகளுடன், பனி ஈரத்தில்
தெம்மாங்கு ராகம் நனைய
தேசத்துக்கே சோறுபோட
தேகம் கருத்த
எம்தோழர்கள் நடப்பார்கள்!
அவர்கள்,
களத்துமேட்டைத் தாண்டி
வரப்பை மிதித்து
வயலில் கால்வைத்துக்
கலப்பைப் பேனாவால்
பூமித்தாளில் முதல்வரி
எழுதும் போதுதான்
நகரத்து வானத்தில்
வெளிச்சம் கூட
இருட்டாகவே உதயமாகும்!