வணக்கம்.

                கி.ரா. நான் மதிக்கிற மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, மனிதரும் கூட. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சண்டைபோட்டதாக ஒரு தகவலை “இனிய நந்தவனம்” இதழில் ஆசிரியர் நண்பர் சந்திரசேகரன் குறிப்பிட்டதனால் தான் இந்த என்நிலை விளக்கம் அளிக்க வேண்டியதாகிறது...

                கி.ரா.வை புதுவையில் சந்தித்த போது, “கவிதை எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து எழுதுவதால் நேரம்தான் வீணாகிறது. பல ஆண்டுகளாக நாம் எழுதி எதையும் சாதிக்கவில்லை. ஒரு விளையாட்டு விளையாடு கிறோம். ஏற்கனவே இருந்த இலக்கை முறியடித்து அடுத்த இலக்கை தொட முயற்சித்து விளையாடுகிறோம். ஒருவர் 100 மீட்டர் தாண்டி சாதனை செய்திருந்தால் அதைவிட அதிகமாகத் தாண்ட அடுத்தவர் முயற்சி செய்வார். ஆனால் எழுத்தில் வள்ளுவரையும் கம்பரையும் தாண்டி எந்த இலக்கியமும் படைக்கவில்லை. பின் எதற்காக எழுதி நேரத்தையும் தாள்களையும் வீணடிக்க வேண்டும். வள்ளுவனும் கம்பனும் தொட்ட இலக்கைத் தாண்ட முடியாத போது நாம் ஏன் இலக்கியம் படைக்க வேண்டும்? எனவே தயவு செய்து எழுதுவதை நிறுத்துங்கள்” என்று கூறியதாக “நந்தவனம்” இதழில் எழுதப்பட்டு இருந்ததை, படித்தேன். உடன் கி.ரா.வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

என் ஆதங்கத்தை, குமுறலை, வேதனையை பகிரும்போது “நீங்கள் எப்படி இவ்வாறு கருத்துச் சொல்லலாம்? உங்கள் பார்வையில் வேண்டுமானால் வள்ளு வனையும் கம்பனையும் தாண்டி யாரும் செல்லவில்லை என்பதான கருத்து இருக்கலாம். அடுத்து பாரதி வர வில்லையா? பாரதிதாசன் வரவில்லையா? பின் தொடர்ச்சியாக இன்னும் பல கவிஞர்கள் சிறப்புற எழுதி வருகிறார்களே... நாளையே இவர்கள் வள்ளுவனையும் கம்பனையும் தாண்டி இலக்கியம் படைத்திடலாகாதா? அப்படித் தாண்ட வேண்டுமென்றாலும் கூட எழுதித்தானே சாதிக்க முடியும்? (விளையாட்டில் ஒரு சாதனையை முறியடிக்க மற்றொருவர் விளையாட்டுப் பயிற்சி செய்துதானே அதனை விஞ்ச இயலும்?) 90 வயது ஆகும் உங்களை எவரும் புண்படுத்த என் மனசு சம்மதிக்கவில்லை. எனவேதான் இனி வருபவர் களிடம் இத்தகு கருத்துக்களை வலியுறுத்த வேண்டாம்” என்பதாக உரிமையுடனும் அன்புடனும் தான் பேசினேன். அவரும் காது கொடுத்து கேட்டுக் கொண்டார். இதனை ஒரு தகவலாக “நந்தவனம்” சந்திரசேகரிடம் கூறியதை, அவர் தவறுதலாக புரிந்து கொண்டு நான் கி.ரா.விடம் சண்டை போட்ட மாதிரியாகப் பிரசுரித்துவிட்டார்.

                இருக்கட்டும். கி.ரா. மேல் ஆரம்ப முதல் பற்றும் பாசமும் நேசமும் மிக்க எனக்கு அவரிடம் சண்டை போடக்கூட உரிமை உண்டுதான். அந்த அளவு அன்றும் இன்றும் என்றும் அவரை நேசித்தே வருகிறேன்; வருவேன்.

                ஒரு நாள் காலை 11 மணிக்கு தொலைபேசியில்கவிஞர் கரிகாலனும், சு.தமிழ்ச் செல்வியும் பேசினார்கள். “மன்னார்குடிக்கு அருகே ஒரு நிகழ்வுக்காக வருகிறோம். இயன்றால் சந்திப்போம்” என்று கூறினார்கள். “அவசியம் வாருங்கள்” என அழைப்பு விடுத்தேன்.

     மதியம் 1.30க்கு வந்தார்கள். கவிஞர் கரிகாலனின் நிறைய கவிதைகளை வாசித் திருக்கிறேன். அத்தோடு அவரது மனைவி எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் மண் மணம் கமழும் பல நாவல்களை (அளம், கீதாரி) படித்து வியந்துமிருக்கிறேன். எனினும் நேரில் பார்த்தது மில்லை; பேசியது மில்லை. அன்றுதான் பார்த்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏற்கனவே சு.தமிழ்ச்செல்வியின் "கீதாரி' நாவலை (என்.சி.பி.எச். வெளியீடு) வாசித்து அந்நாவலின் நாயகி கரிச்சாவின் துயரங்களை என் துயராக எண்ணி அழுதுமிருக்கிறேன். அதனை அவரிடம் பகிர்ந்து கொண்டிருந்தபோது, அருகிருந்த என் மனைவி அந்நாவலை உடனே வாசிக்க விரும்பினார் (எடுத்துக் கொடுத்தேன்). அன்றிரவே முழுவதும் படித்து, தொலை பேசியில் அவரிடம் “உங்களால் எப்படி இப்படி நேரில் பார்த்தது போல கீதாரிகளின் வாழ்வை எழுத முடிந்தது?” என்று பேசியிருக்கிறார்; ஆரம்ப முதலே கண்களில் திரண்ட கண்ணீர் கசியச் கசிய படித்து முடித்ததாக, என்னிடமும் கூறினார். நீண்ட நாட்களுக்குப்பிறகு "கீதாரி' எனும் அந்நாவலை மீள் வாசிப்பு செய்தேன். அதே உணர்வு நிலை... அதே கண்ணீர்... அதே தவிதவிப்பு... அதே துடிதுடிப்பு... கி.ரா.வின் "கிடை' குறுநாவலில் கீதாரிகளின் வாழ்வு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கும் மேலே... அதற்கும் மேலே... முழுமையாக அவர்களின் வாழ்வினைப் பதிவு செய்த நாவல் கீதாரி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

     இப்போது கி.ரா.விடமே வருகிறேன். உங்கள் சாதனையை சகோதரி தமிழ்ச்செல்வி முறியடிக்கவில்லையா? இப்படி யாராவது ஏன் கவிஞர்களிலும் வரமாட்டார்கள்? பொறுத்திருங்கள்...

* * *

     கருக்கல் வாசகர்கள் நிரம்ப எதிர் பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் ரசனையோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது... ஓரிரவு என்னிடம் தொலை பேசியில் பேசிய கவிஞர் மற்றும் வாசகர் ஒருவர் “முன்னிதழ் போல இவ்விதழ் (ஜூலை-ஆகஸ்டு 2012) இல்லையே” என பதறினார். காரணம் கேட்டேன். “அரசியல் தூக்கலாக இருக்கிறது” என்றார். இன்னொரு வாசகர் மற்றும் எழுத்தாளர், கடிதத்தில் "தலையங்கம் நாட்டு நடப்பைப் பற்றி எழுதலாகாதா' என கருத்துரைத்திருந்தார்.

     இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து... ஓராயிரம் எண்ணங்கள். அரசியலை ஒதுக்கிவிட்டு வெறும் இலக்கியம் படைப்பதில் எங்களுக்குச் சம்மதமில்லை. உண்ணும் உணவிலிருந்து படைக்கும் கவிஞனின் சுதந்திரம் வரை எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.

     அதனால்தான் இதழின் முகப்பில் தெளிவாக "கலை, இலக்கிய, அரசியல் பண்பாட்டு இருமாத இதழ்' என்பதாகக் குறித்திருக்கிறோம். கருக்கல் வாசகர்கள் கலை இலக்கியம் மட்டுமல்ல நாட்டு நடப்புகளையும் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என விரும்புவதில் என்ன தவறிருக்கிறது? கலை, இலக்கியம் மற்றும் அரசியல் என எல்லாவற்றுக்குமான இடங்களையும் கருக்கல் இட்டு நிரப்பியே வருகிறது. முதல் இதழில் தலையங்கம் அரசியல் குறித்தே எழுதி இருந்தேன். இரு மாதம் கழித்து இதழ் வரும் போது அரசியல் சூழலே மாறி, தலையங்கமே அர்த்த மற்றதாக ஆகிவிட்டிருந்தது. அதனால் தான் தற்காலிகமாக அரசியல் தலையங்கம் எழுதுவதை அப்போதைக்கு ஒத்தி வைத்தேன். விரைவில் கருக்கல் மாத இதழாக வர இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டுள்ளோம். அப்போது நீங்கள் எதிர்பார்த்தபடி அரசியல் தலையங்கம் உறுதியாக இடம் பெறும். அதுவரை இந்த "உங்களோடு நான்' பகுதி தொடரும். உங்களோடு உரையாடுவதும் மகிழ்வாகத்தான் இருக்கிறது....

Pin It