காவிரி கர்நாடகத்துக்கு மட்டும் உரியதாகிப் போன பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் தமிழன் காவிரியை இனி மீட்க முடியாது. 1924 ஒப்பந்தம், 1974இல் மைசூர் சமஸ்தானமும், சென்னை ராசதானியும் கூடிப் பேசி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது. கர்நாடகம் அதைப் புறக்கணித்தது. அப்போது கர்நாடகத்தில் காங்கிரசு கட்சித் தலைமையில் ஆட்சி நடந்துகொண்டி ருந்தது. நடுவணரசு இந்திராகாந்தி தலைமையில் அமைந்திருந்தது. காங்கிரசு மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்ததால் ஒன்றுக் கொன்று உதவியாக இருக்க முடிந்தது. இந்திராகாந்தியினுடைய ஒத்துழைப்போடு கர்நாடகம் 1924 ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று அப்போது அறிவித்தது; புதிய புதிய அணைகளையும் கட்டிக்கொண்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டரசும் கர்நாடக அரசும் பலமுறைப் பேசியும் இப்பிரச்னை தீர்வில்லாமலேயே போனது. அதைத் தொடர்ந்து மன்னார்குடி ரெங்கநாதன் உச்சநீதி மன்றத்தில் காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரைப் பெறுவதற்காக வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையிலும், தமிழ்நாட்டரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே தொடர்ந்து பலமுறை பேச்சு நடந்து, தோல்வியிலேயே முடிந்தது.

                கர்நாடகத்தின் அரசியல் கட்சிகள் அவை தேசியக் கட்சிகளானாலும் சரி மாநிலக் கட்சிகளானாலும் சரி தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்த் தரக்கூடாது என்பதிலே ஒன்றாக இணைந்து நின்றன. ஆனால் தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளான தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஒன்று பட்டுப் போராட முன்வரவில்லை.

                மேலும் காங்கிரசும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இவை நடுவணரசுக்குத் துணிவைத் தந்தது. மத்தியில் ஆளும் கட்சிகள் மாறிமாறி வந்தால்கூட தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளைப் பழிவாங்குதல் என்ற பெயரில் காவிரி நீர்ச் சிக்கலானாலும் பாலாற்று நீர்ச் சிக்கலா னாலும் முல்லை பெரியாற்றுப் பிரச்னை யானாலும் அவை தமிழ்நாட்டின் கோரிக் கையைப் பின்தள்ளி கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் நிலைப் பாட்டுக்கே ஆதரவாகச் செயல்பட்டன. இதன்மூலம் தமிழ்நாடு தவிர்த்த மேற் கண்ட மூன்று மாநிலங்களிலும் மத்தியக் கட்சிகள் தங்கள் அரசில் தளத்தைத் தக்க வைத்துக் கொள்ளவோ உயர்த்திக் கொள்ளவோ முடியும் என்பதைப் புரிந்து கொண்டன. இதனால் தமிழ்நாடு எனும் ஒரு மாநிலத்து மக்கள் தொடர்ந்து தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளானாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதே அரசியல் ஆதாயம் என்றிருந்துவிடுகின்றனர். திராவிடக் கட்சிகளோ தமிழ்நாட்டில் மட்டுமே வலுவாக இருக்க முடியும் என்பதால் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வதும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்படுவதும் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தங்கள் அரசியல் தளங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளர். தமிழ் மக்கள் தங்கள் பங்கு நீரை ஒப்பந்தப்படி வழங்க வேண்டும் என்று கோரியபோதெல்லாம் அனைத்திந்தியக் கட்சிகள் அனைத்தும் இனச் சிக்கலை உருவாக்கி விடாதீர்கள் என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்க மட்டும் தவறுவதில்லை. கர்நாடகத்துக்கோ, ஆந்திரத்துக்கோ, கேரளத்துக்கோ இவ்வாறு அறிவுரை வழங்க மாட்டார்கள்.

                எனினும் மத்தியக் கட்சிகளால் மாநிலங்களுக்கிடையேயான ஆற்று நீர்ச் சிக்கல் இனச்சிக்கலாக மாறுவது அல்லது மாற்றப்படுவது இந்திய ஒருமைப் பாட்டுக்கு எதிரானது என்ற செய்தியை அம்பலத்துக்குக் கொண்டுவர திராவிடக் கட்சிகள் தவறுகின்றன. மேலும் தாங்கள் ஊழல் நடவடிக்கை களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் சிக்கிக் கொண்டால் அவதிப்படாமல் விடுபடவும் மத்திய அரசின் மத்தியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாக வேண்டிய நெருக்கடியும் நடுவணரசில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளதை மத்தியக் கட்சிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளன.

                அதே வேளையில் தமிழ்நாட்டு மக்கள் திராவிடக் கட்சிகளின் தலைவர் களுக்கு இடையேயான குரோத விரோதங் களைத் தங்களுடையதாகக் கருதித் தங்களைப் பாதிக்கும் ஆற்றுநீர்ச் சிக்கலைக் கூடப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது எதிரும் புதிருமாக இருக்கும் போக்கு நீடித்து வருகிறது. இதனால் திராவிடக் கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து அரசியல் நடத்தாமல் அரசியல் விரோதங்களையே அரசிய லாக்கும் அவலம் தொடர்கிறது. இந்த நிலை முல்லைப் பெரியாற்று நீர்ச்சிக்கலில் மாறியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாயுள்ளது. காவிரிப் பாசனப் பயிராளிகள் இடையிலும் இந்நிலைப்பாடு வரவேண்டும். இந்த ஒற்றுமைதான் காவிரியை மீட்டுக்கொள்ள நமக்கு உதவும்.

                மேற்கண்ட நிலைமைகளை நன்கு புரிந்து வைத்துக் கொண்ட இந்தியாவின் முதன்மை அமைச்சர் இந்திராகாந்திதான், காவிரி நீர்ச்சிக்கலைத் தனது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்ட முதல் நபராவார். ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரே ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி 1967-இல் தி.மு.க.விடம் தோல்வி யடைந்ததற்குப் பழிவாங்குவதற்கான உரியகாலம் 1973க்குப் பிறகே உருவானது. தமிழ்நாட்டின் புரட்சி நடிகர், புரட்சித் தலைவரானபின் இந்நிலை தோன்றியது. எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு எதிராக ஊழல் பட்டியலைக் கொடுத்தார். தி.மு.க. பிளவு உறுதிபட்டு, அ.தி.மு.க. உருவாகி வலுவானது.

                கருணாநிதியின்மீது நீதிபதி சர்க்காரியாவைக் கொண்டு ஊழல் விசாரணை மன்றம் அமைக்கப்பட்டது. கருணாநிதி நடுவணரசின் இழுப்புக் கெல்லாம் வளைந்து கொடுக்கத் தொடங்கினார். தமிழ்நாட்டு முதலமைச் சராகவிருந்த கருணாநிதி தமிழ் மக்கள் நலனைவிடத் தமது மற்றும் தமது குடும்ப நலனே முதன்மையானது எனக் கருதத்தொடங்கினார். அதன் காரணமாக காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மக்களைத் திரட்டிப் போராட முடியாமல் போனது.

     மன்னார்குடி ரெங்கநாதன் வழக்கைத் திரும்பப் பெற்றால் பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பேற்படும் என்று இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதாகக் கூறி, கருணாநிதி மன்னார்குடி ரெங்க நாதனை வழக்கைத் திரும்பப் பெறச் செய்தார்.

     ஆனால் அதன்பின் இந்திரா காந்தியோ கர்நாடகத்து முதலமைச்சர் இதுபற்றி பேச முன்வரவில்லை எனக் கைவிரித்துவிட்டார். தமிழ்நாட்டு காங்கிர சார் இந்திராகாந்தியின் "தொட்டிலையும் ஆட்டிவிட்டுத் தொடையையும் கிள்ளி விடும்' இந்தக் கேடுகெட்ட அரசியலைக் கண்டிக்க முன்வரவில்லை. இது கர்நாடகத்துக்கு மேலும் ஊக்கம் தர, இந்த நிலையில் தான் மீண்டும் காவிரி நீருக்காக உச்ச நீதிமன்றத்தில் தனி நபர் வழக் கொன்று தாக்கல் செய்யப்பட்டது. அது விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாட்டரசு தன்னையும் ஒரு வாதியாகச் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்தது. அப்போது வி.பி.சிங் இந்தியாவின் முதன்மை அமைச்சராக இருந்தார்.

     உச்ச நீதிமன்றம் இந்திய அரசைச் சில கேள்விகள் கேட்டது. “இது நாள்வரை ஏன் காவிரிக்காக நடுவர் மன்றம் அமைக்க வில்லை? நடுவணரசு நடுவர் மன்றத்தை அமைக்கப் போகிறதா? உச்சநீதி மன்றமே நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டுமா?” அதற்கு நடுவணரசு வழக்குரைஞர் "நடுவணரசே அமைக்கும்' என உறுதி யளித்தார். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நடுவணரசுக்கு நடுவர் மன்றம் அமைக்கக் காலக்கெடு விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து வி.பி.சிங். தலைமையிலான நடுவணரசு வேறு வழியின்றி காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து, நீதிபதி சித்ததோசு முகர்ஜியை நடுவர் மன்றத் தலைவராகவும் வேறு இரண்டு நீதிபதிகளை உறுப்பினர் களாகவும் அமர்த்திய உத்தரவை அரசிதழில் வெளியிட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தை, தனது பரிந்துரையை ஏற்று தான் வி.பி.சிங். அமைத்தார் என்று அப்போது கருணாநிதி பரப்புரை செய்தார்.

     இதன் பிறகு நடுவர் மன்றம் காவிரிப் பாசன மாவட்டங்களைப் பார்வையிட நாள் குறித்தது. காவிரிப் பாசன மாவட்ட மக்கள் மனித சங்கிலியாக நின்றதை நடுவர் மன்றம் அப்போது பார்த்தது; பாசனப் பரப்புகளையும் ஆங்காங்கே பார்வையிட்டது. இவற்றுக் கிடையே இம்மன்றம் சீரங்கம் காவிரியில் குளித்து அரங்கனைத் தரிசித்ததும் திருநள்ளாற்றில் குளித்து சனியைத் தரிசித்ததும் நிகழ்ந்தது. இதெல்லாம் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியின் தனி விருப்பம் என்னும் அடிப்படையிலேயே அரசு நிறை வேற்றித்தரவேண்டும். அது அரசின் கடமை. அதைத்தான் அன்றும் அரசுகள் கடைப் பிடித்தன. ஆனால் அப்போது தேவகவுடா தான் ஓர் இந்தியன் என்னும் உணர்வில்லாமல், கர்நாடகத்தான் என்னும் உணர்வுடன் "காவிரி நடுவர் மன்றத்தின் தலைவர் சித்ததோசு முகர்ஜி ஆன்மிக ஊழலில் ஈடுபட்டார்' என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். அடுத்த விநாடியே சித்ததோசு முகர்ஜி தமது நடுவர் மன்றப் பதவியை விட்டு விலகினார். அதற்காகக் கருணாநிதியோ மூப்பனாரோ தேவகௌடா வைக் கண்டிக்கவில்லை.

     பின்னர் கருணாநிதி கூட்டணியில் செய்த பரிந்துரையின் காரணமாக இந்திய முதன்மை அமைச்சராக தேவகௌடா தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு மூன்றாண்டுகள் காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாமல் செயல்பாடும் இல்லாமல் இருந்தது. நடுவணரசும் இதனை கண்டு கொள்ள வில்லை. காவிரி பாசனப் பயிராளிகளுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. மக்கள் போராட்டம், நடுவர் மன்றத்துக்கு மீண்டும் ஒரு தலைவரை நடுவணரசு அமர்த்துவதற்கு நிர்பந்தித்தது. வேறு வழியில்லாமல் நடுவர் மன்றம் மீண்டும் ஒரு தலைவரைப் பெற்று செயல்பட, பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.

     அதன்பிறகு ஆணையத்தை உருவாக்குவதற்கான கோரிக்கை வலுத்த தால் வரைவறிக்கையை உருவாக்கு வதற்காக நடுவணரசால் குஜ்ரால் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அக்குழு நடுவு நிலைமையோடு அந்த வரைவறிக்கையை உருவாக்கி யிருந்தது. கர்நாடகம் அந்த வரைவறிக் கையில் தனக்குச் சாதகமாகத் திருத்தம் கோரியது. அப்போது நடுவணரசின் முதன்மை அமைச்சராக வாஜ்பேயி இருந்தார். தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக கருணாநிதி இருந்தார். குஜ்ரால் வரைவறிக்கை படியே காவிரி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சென்னைக் கடற்கரையில் ஜெயலலிதா உண்ணா நோன்பை மேற்கொண்டார். கருணாநிதியோ ஆணையத் தலைவராக இந்தியாவின் முதன்மை அமைச்சரே இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டார். நடுவணரசுக் கையில் காவிரிப் பாசன மாவட்ட மக்கள் சிண்டு வசமாக சிக்கியது. கர்நாடகம் கொடுத்த திருத்தங்கள் ஏற்கப்பட்டுக் காவிரி ஆணையமே கர்நாடகத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் ஆணையமாக அமைக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரி ஆணையம் கூடாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது கருணாநிதியின் கூட்டணி தர்மத்தால் வந்த வினை. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பையும் இதுவரை நடுவணரசு தனது அரசிதழில் வெளியிடாமல் வைத்துள்ளது. இது தமிழ் நாட்டுக்குப் பாதகத்தையும் கர்நாடகத்துக்குச் சாதகத்தையும் செய்யும் செயலாகும். இது நடுவணரசின் ஓரவஞ்சனையை உறுதி செய்வதாகும்.

     இந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாட்டின் சார்பில் ஒரு வழக்குத் தாக்கலாகியுள்ளது. காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது. இந் நிலையில் நடுவண் அமைச்சர் நாராயணசாமி, "உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இப்போது காவிரி ஆணையத்தைக் கூட்ட முடியாது' என்று கூறியுள்ளார்.

     இதற்கு முன்னால் காவிரி ஆணையம் கூடி தமிழ்நாட்டின் கோரிக்கையை ஆய்வு செய்து முடிவு செய்தது போலவும் இப்போது உச்ச நீதிமன்றத்திலுள்ள வழக்கு அதற்குத் தடையாய் இருப்பது போலவும் இது உள்ளது. கர்நாடகத்தில் பாரதிய சனதாக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் நடுவணரசு தமிழ்நாட்டுக்கு எதிராகவும் கர்நாடகத் துக்கு ஆதரவாகவும் இருக்கும் போக்கை மூடிமறைக்கும் உத்தியாகவே நாராயண சாமி பேச்சு அமைந்துள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. தமிழன் பதவியைப் பிடித்துவிட்டானானால் தமிழனாக இருப்பதில்லை என்பதுதான் அது. இதை என்றைக்குத் தமிழ்மக்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

     முன்பெல்லாம் கர்நாடகத்து அணையின் திறப்புகளுக்குக் கீழாக வரும் தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு உரிய பங்காகக் கருதப்பட்டது. தற்போது அணை நிரம்பி வழிந்துவரும் தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு உரிய பங்காகக் கருதப் படுகிறது. இது தமிழ் மக்களுக்குக் காவிரியில் உள்ள உரிமையை மறுப்பது மட்டுமல்ல தமிழகத்தைக் காவிரியின் வடிகால் நிலமாக மட்டும் வைத்திருப்பதும் காவிரியைக் கர்நாடகத்தின் சொத்தாக மாற்றி விடுவதுமான சூழ்ச்சியுமாகும்.

     இதற்கெல்லாம் கர்நாடகத்துக்குத் தொடர்ந்து நடுவணரசு உடந்தை. இதைப் புரிந்துகொள்ள ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிடுவது உதவியாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீர்த் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வந்தது. உச்ச நீதிமன்றம் காவிரியில் தண்ணீர் விடும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு தமிழ் நாட்டரசு வழக்கொன்றைத் தொடர்ந்தது. அதற்கு உச்ச நீதிமன்றம், “கர்நாடகத்துக்கு உத்தரவிட நடுவர் மன்றத்துக்கே அதிகாரம் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டரசு காவிரி நடுவர் மன்றத்தையே அணுகலாம்” என்று அறிவுறுத்தியது. அதனால் தமிழ்நாட்டரசு நடுவர் மன்றத்தில் விண்ணப்பித்தது. நடுவர் மன்றமும் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

     உடனே கர்நாடக அரசு மக்களைக் கிளப்பிவிட்டு "கபினியிலிருந்து தண்ணீர் திறக்க விடமாட்டோம்' என முற்றுகை இடச் செய்தது. ஒருவர் கபினி நீர்த் தேக்கத்தில் குதித்துத் தற்கொலையும் செய்து கொண்டார். இந்நிலையில் கர்நாடக அரசு நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை முடக்குவதற்கு "காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்' எனும் பெயரில் ஒரு சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்தது. "இந்தச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு முரணானது' என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியது. உச்ச நீதிமன்றமும் கர்நாடக அரசின் சட்டம் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. அது மட்டுமல்லாமல் “கர்நாடகத்தில் அரசு செயல்படுகிறதா? இல்லையா?” என்று நடுவணரசையும் கேட்டது. இதனால் இனி நடுவணரசால் வேடிக்கைப் பார்த்திருக்க முடியாது என்ற நிலை தோன்றியது. இதன் பின்பே கர்நாடக அரசு இரண்டாம் பேருக்குத் தெரியாமல் கபினியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட்டது. இதுதான் இந்தியாவில் நடைமுறையாகும் சட்ட ஆட்சியின் லட்சணமாகும். தன் அரசியல் எதிரிகளாகக் கருதியபோ தெல்லாம் மாநில அரசாங்கங்களை அடாவடியாகக் கலைத்த நடுவணரசு தமிழகத்துக்குத் தண்ணீர் விட தொடர்ந்து மறுத்து வந்த கர்நாடக அரசை மட்டும் கண்டிக்கவோ கலைக்கவோ முன் வரவில்லை. நடுவணரசுக்குச் சட்டம் பெரிது இல்லை; அப்போதைய அடாவடி அரசியல் தான் பெரிது. ஆற்றுநீர்ச் சிக்கலை இனச் சிக்கலாக்கி அரசியல் ஆதாயம் பெறும் தந்திர முயற்சியே இது. இதனால் நடுவணரசுக்கு அல்லது நடுவணரசைக் கையில் வைத்திருக்கும் அனைத்திந்தியக் கட்சிகட்கு அரசியல் ஆதாயத்தைவிட இந்திய ஒருமைப்பாடு அவ்வளவு முக்கியம் இல்லை என்பது தெளிவாகி விட்டது இல்லையா?

     இந்தப் புரிதலைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையைக் கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும். கடந்த 13.8.2012ல் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக் கிடையேயான ஆற்றுநீர்ச் சிக்கலில் பொறுப்பான பதிலைத் தருவதற்கு மூத்த வழக்குரைஞரை அனுப்பி வைக்காத நடுவணரசைக் கடுஞ்சொற்களால் உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

     மேலும் உச்சநீதிமன்றம் “கடந்த ஒன்பது ஆண்டுகளாக காவிரி ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் கூடவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விக்கான சரியான விடையை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். "காவேரி கண்காணிப்புக்குழு' என்று ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. அது வறட்சிக் காலத்தில் இரு மாநிலங்களும் காவேரி நீரை எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வகுத்துள்ளது. அதை கர்நாடகம் ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் காவேரி ஆணையம் கூடினால் வறட்சிக் காலத்து நீர்ப்பங்கீட்டுத் திட்டத்தை ஏற்றாக வேண்டிவரும். அவ்வாறு நடந்துவிட்டால் அது தமிழ்நாட்டுக்குச் சாதகமாக அமைந்து விடும் என்பதாலேயே கடந்த ஒன்பதாண்டு காலமாக காவிரி ஆணையத்தைக் கூட்ட வில்லை என்று புரிந்துகொள்ள முடியும்.

     காவிரி ஆணையம் அமைவதற்கு முன்பாகவே இந்தியாவில் பல ஆற்று நீர் ஆணையங்கள் நன்றாகவே செயல்பட்டு வருகின்றன. காவிரி ஆணையம் மட்டுமே அமைக்கப்பட்ட காலமுதல் செயல் படாமலே உள்ளது.

     முல்லைப் பெரியாற்றுக்காக மூன்று தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியும், தீர்வு நடைமுறைக்கு வரவில்லை. காவிரி நீர்ப் பங்கீட்டு வழக்கிலும் உச்சநீதி மன்றம் நடுவணரசைக் கண்டித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவும், கண்டிக்கவும், தண்டனை வழங்கவும் கூட முன்வரலாம். ஆனால் அரசுதான் அதன் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியும். இதுவரை சண்டித்தனம் செய்து வந்த நடுவணரசு இனி என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்தே தீர்ப்புகள் நடைமுறையாவதும் நடைமுறைக்கு வராமல் இருப்பதும் உள்ளது.

     எனவே தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் (தற்போதுள்ள அரசியல் கட்சிகளைப் புறக்கணித்த ஒற்றுமை) மட்டுமே காவிரியை மீட்டுத்தரும். காவிரியை மட்டுமல்ல....... நம் அனைத்து உரிமைகளையும்!

Pin It