பாரதி பற்றி நாளைக்கு கட்டுரை எழுதணும். அதுக்காகப் படிக்கும் போது வியப்பாக இருந்தது. பாரதி மகாகவி, தேசியகவின்னு சொல்றாங்க... அவரு செத்தப்ப பதினோரு பேருதான் வந்தாங்களாம்... அதையே நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், தாத்தா கூப்பிட்டார். “லே! என்னடா அங்க பண்ற... ஒங்க நடப்பா செத்துப்போயிட்டான்டே”.

                ஒரே ஓட்டமாய் வீட்டுக்கு ஓடினேன். வீட்டில் ஒரே கூட்டம்... அம்மா, நடம்மா, அண்ணன்கள், பக்கத்து வீட்ல உள்ளவங்க எல்லோரும் அழுது கொண்டிருந்தனர். நடப்பாவை நாற்காலியில் உட்கார வைத்திருந்தார்கள். வாயில் வெத்தலப் பாக்கு வச்சி கட்டியிருந்தனர். நெற்றியில் ஒரு ரூபாய் காசு... ஒரே பத்தி நாத்தம்... சுவத்தோட மூலையில் கிழிஞ்ச தப்பு ஒன்று மாட்டி யிருந்தது... அங்கங்கே ஒட்டடை படிஞ்சு.

                “ஏலேய்... சின்னப்பயலே... காலணித் தெருவுல போயி சொல்லிட்டு வாடா... இவன் பண்ணின காரியத்துக்கு எந்தப்பய வரப்போறான்... ஊருலேயும் ஒரே பிரச்னை... இருக்குற வரைக்கும் நமக்கும் நாலு சனஞ்சாதி வேணும்னு இருந்தானா? துக்குரித்தனமா நடந்துக் கிட்டான். இப்ப யாருமில்லா அனாதையா கெடக்கிறான். ஒறமொறைக்கு சொல்லி வுடக்கூட ஒரு பயலும் வரமாட்டானுவ...” இப்படியாய் பெரியப்பா அலுத்துக் கொண்டவுடன், எனக்கு நடப்பா வாழ்க்கையில் ஏதோ சுவாரஸ்யம் இருப்பது போல் பட்டது. அதனைத் தெரிஞ்சுக்கணும் என்ற ஆவலும் அதிக மானது.

                “ஏம்ப்பெரியப்பா... இப்படி அலுத்துக்குறீங்க... அப்படி நடப்பா என்ன தான் செஞ்சிச்சு...”

                “ஏண்டா... அவன் கொஞ்ச நஞ்சம் காரியமா செஞ்சான், வாழ்நாள் முழுக்க ஒரே வம்பு... சண்டை... இப்படித்தான் ஒருமுறை நம்ம சுப்பிரமணி சாராயம் வித்துட்டு இருந்தான். இவன் எங்கையோ எழவு சொல்லிட்டு களச்சு வந்தவன், அவன்ட்ட போயி சாராயம் கேட்ருக்கான்... அவன் கொடுக்க முடியாதுன்னுட்டு மோசமாவும் பேசிருக்கான். அவன்ட்ட கம்முன்னு இருந்துட்டு, ஊருக்குள்ள வந்து சுப்பிரமணி ரூபாய்க்கு ரெண்டு கிளாசு சாராயம் விக்கிறான்னு தண்டோரா போட்டுட்டான். இந்த சேதி ஊரு பூராவும் பரவிடுச்சு... ஒரே திமுதிமுன்னு கூட்டம். நம்மாளுவ எல்லோரும் மண்டிட்டாங்க... விசயம் போலீசுக்கு தெரிஞ்சு சுப்பிரமணிய புடிச்சுட்டு போயிட்டான்ங்கே... கோர்ட், கேசுன்னு அலஞ்சு... ரொம்பவும் திண்டாடிட்டான், ரெண்டு பேரும் ரொம்ப நாளா வஞ்சமால்ல இருந்தானுவ”.

                தெரிஞ்சவுங்க வேண்டியவுங்கன்னு ஒருசில பேரு வந்தாங்க. ஆனால் ஊருக் காரவுங்கதான் யாரும் அதிகமாக வரல, பக்கத்து தெருவுல உள்ள பட்டம்மா மட்டும் ரவா கஞ்சி வச்சி எல்லோருக்கும் கொடுத்துச்சு, பசி நேரத்துல ரவா கஞ்சி ரொம்ப எதமாக இருந்துச்சி.

                “ஏம்ப்பெரியப்பா இதுக்காகவா அத்தனப்பேரும் கட்டுப்பாடா வராம இருக்கான்ங்கே...” இன்னும் தெரிந்து கொள்ளணும் என்பதற்காகவே கேட்டேன்.

                “ஏது... இந்தப்பய நம்மள வுடமாட்டான் போலிருக்கே... இந்த நோண்டு நோண்டிட்டிருக்கான்... மாரியக்கா கிட்ட போயி நானு ஒரு தரம் பொலவு கேட்டேன்னு வாங்கிட்டுவா” என்றார். ஒரே ஓட்டமும் நடையுமாக போயி வாங்கியாந்து கொடுத்தவுடன் சொல்ல ஆரம்பிச்சார்.

                “அவன் கொஞ்சம் ராங்கிக் காரன் தான்... ஒதட்டுல ஒன்னு மனசுல ஒன்னுன்னு வச்சிப் பேசமாட்டான். எது நியாயமாப்படுதோ, அத பட்டுன்னு போட்டு ஒடச்சுடுவான். அதனால அவன யாருக்கும் புடிக்கிறதுல்ல... ஒரே கெட்ட பேரு... அப்ப வெட்டும வேல இவன்தான் பார்த்துட்டு இருந்தான். அறுப்புக் காலத்துல கூலிப்பிச்சையா காப்படி நெல்லும் ஒரு அரி கதிரும் தான் கொடுத்துட்டு இருந்தான்ங்கே... ஒரு முறை இவன் பஞ்சாயத்துல,

                “எங்களுக்கு கூலிப்பிச்சையா ஒரு படி நெல்லும் ரெண்டு கோட்டு கதிரும் வேணும்... காப்பொன்னுலயும் மாப்பொன்னாக் கொடுக்குற இந்த சம்பளத்துக்கெல்லாம் எங்களால வேலப் பார்க்க முடியாது”.

                “ஏலே... பழனி... யாருக்கு எதிர்ல திமுரா பேசுறேன்னு தெரியுதா... ஒழுங்கு மரியாதையா பேசுனது தப்புன்னு நாட்டாம கால்ல விழுந்து மன்னிப்புக் கேளு...” தடிக்கம்பை ஓங்கிக்கொண்டு வந்தார் வைத்தி.

                “எதுக்குய்யா... எதுக்கு நான் மன்னிப்பு கேட்கணும்? நானும் எங்க சாதி சனங்களும் இந்த வூருக்காக ஒளக்கிறோம். ஒங்க பொணம் நாறக்கூடாதுன்னு... ராத்திரில பொணத்தோட பொணமா கெடந்து நாங்க நாறுறோம், வூருல எவன் செத்தாலும் முன்னமே வந்து நாங்க நிக்கிறோம். ஆனா இந்த வூருல எந்த நிகழ்ச்சிலேயும் எங்களுக்கு பங்கும், மரியாதையும் கெடையாது. கோயில்ல மண்டாப்படி செய்யுற உரிமைகூட எங்களுக்கு கெடையாது. இத நான் கேட்டா நீங்க தடிக்கம்ப ஓங்கிட்டு வர்றீங்க, இந்த ஊருக்கு இனியும் நான் வெட்டும வேல பார்க்கல... ஒரு மயிரும் பார்க்கல...”பக்கத்துல சாச்சி வச்சிருந்த தப்ப ரெண்டா கிழிச்சு கழுத்துல மாட்டிட்டு கௌம் பிட்டான்.

                “ஏய் பழனி...

போடா... போ...

ஒன்ன நான்

அப்புறம் பின்னாடி

பாத்துக்குறேன்”.

                “யோவ்... நீ என்ன அப்புறம் பின்னாடி பார்க்கப் போற... இப்பயே போறேன்... பின்னாடி என் சூத்தப் பாத்துக்கோ” அப்படின்னுட்டு அவன் வந்துட்டான்.

                அன்னக்கி... இந்த ஊரு பூராவும் வச்சான்ங்கே, எவனும் இங்க வர்றது மில்லே... இவன் கூட பேசறதுமில்லே... கடைசி வரைக்கும் அதுக்காக இவன் கவலைப்பட்டதும் கெடையாது... ஊரு சாவுக்கெல்லாம் தப்படிச்சான். இவன் சாவுக்குத் தப்படிக்கக் கூட எவனும் வரல”.

                நாலு பேரு பாடைய தூக்கிட்டு முன்னாடி போக... பத்தோடு பதினோரு பேரா நானும் அவர்கள் கூடவே நடந்து கொண்டிருந்தேன். அன்றைக்கு யாரோ பேசுனது ஞாபகம் வந்துச்சு... மிகப்பெரிய போராளியோட சாவுக்கெல்லாம் கூட்டம் அதிகம் வராதாம்.

Pin It