புன்னகை (இருமாத இதழ்)

க.அம்சப்ரியா - செ.ரமேஷ்குமார்

68, பொள்ளாச்சி சாலை,

ஆனைமலை - 642 104

பேச : 9095507547 - தனி இதழ் : ரூ.10/-

                ஒரு முழுமையான கவிதை இதழ் எப்படி வரவேண்டுமோ அப்படி வந்து கொண்டிருக்கிறது “புன்னகை” இருமாத இதழ். “கவிதையை போர்வாளாக்குவதும் போதைப் பொருளாக்குவதும் படைப்பு நேர்மையைப் பொறுத்தது” என்று தலையங்கத்தில் வரையறுத்துப் பேசு வதும், அதற்கேற்ப கவிதைகளை இதழ் முழுக்க வழங்கி யிருப்பதும் “கவிதை கடைசிச்சொட்டு கண்ணீரையும் ஒற்றி யெடுக்கும் கைக் குட்டையாகவும் இருக்கும்” என்பதற் கேற்ப தெறிப்பான கவிஞர்களை அறி முகம் செய்வதிலும் நேர்த்தி தெரிகிறது.

இதழ்தோறும் கவிஞர்கள் சிறப்பிதழ் வழங்கி சிறப்பித்தலில் (சூலை ஆகஸ்டு 2012 : கதிர்பாரதி சிறப்பிதழ்) புன்னகை தனித்து விளங்குகிறது.

***

காட்டுயிர் (மாத இதழ்)

எஸ்.முகமது அலி

65, வேளாங்கன்னி

காரமடை சாலை

மேட்டுப்பாளையம் - 641 301

பேச : 9894140750

விரும்பிய நன்கொடை அனுப்பிப் பெறலாம்.

                வண்ணமயமான நான்கு பக்கங்கள். கானுறை விலங்கினம், பறவைகள், சுற்றுச் சூழல் குறித்த செய்திகளை கட்டுரைகளை படங்களைத் தருமிதழில், படிக்கவும் பாதுகாக்கவும் பரப்பவும் பின்பற்றவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. கோடைக் கானல் : நன்றும் தீதும், புல் ஆராய்ச்சி, உயிரிலக்கியம், வேதியல் உலகு, இற்றைத் திங்கள் என ஏராளமான பகுதிகள்... பண்டை இலக்கியம், சமகால பிரச்னைகள், புகைப் படங்கள் என கண்களுக்கு விருந்தாகவும், மனசுக்கு இதமாகவும், இயற்கையோடு இயைந்த வாழ்வுக்குத் தயாராக மூளைக்குப் பயிற்சியாகவும் என... இதழைப் பிரித்தால் அசந்து போகுமளவு... அப்பப்பா!

***

இனிய நந்தவனம் (மாத இதழ்)

த.சந்திரசேகரன்

8, வெள்ளாளத்தெரு

உறையூர்,

திருச்சி - 620 003

பேச : 94432 84823

தனி இதழ் ரூ.10/-

                 "சிற்றிதழ்கள் நடத்துவது லாப கரமற்ற வெட்டி வேலை' என்பவர் களின் வாதத்தைத் தவிடுபொடியாக்கி, தொடர்ந்தும் லாபகரமாகவும், சிறப்பாகவும் வரும் இதழ் "இனிய நந்தவனம்'. நேர் காணல், சுயமுன்னேற்ற கட்டுரைகள், கவிதை கள், கதைகள் என இதழின் உள்ளடக்கம் பாராட்ட வைக்கிறது. "அலைவரிசைக்குள் அகப்படவை' என்ற தலைப்பில் ஆசிரியர் சந்திரசேகரன் எழுதும் சிறப்புப்பகுதி கடித்த மிளகாயின் காரமாயும், நாவில் கரையும் கல்கண்டின் இனிமையாயும் உண்மையை உரத்துப் பேசுகிறது. நிஜங்கள் நெஞ்சைத் தொட்டாலும், சுட்டாலும், உண்மை உண்மை தானே?

***

பாவையர் மலர் (மாத இதழ்)

வான்மதி

55, வ.உ.சி. நகர், மார்க்கெட் தெரு,

தண்டையார்பேட்டை, சென்னை - 600 087

பேச : 044 - 25964747

தனி இதழ் ரூ.10/-

                கண்டெய்னர் என்கிற இரும்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வெற்றி ஈட்டிய முதல் இரும்புப் பெண் திருமதி.வான்மதி, பாவையர் மலர் என்கிற வெற்றிகர இதழை நடத்துவதன் மூலம் வானத்து மதியின் குளிர்ச்சியையும் வசீகரத்தையும் இன்னொரு பக்கமாக இதம் பதமாகத் தருகிறார். "வசீகரம்' என்ற சொல்லுக்குக் காரணம் இதழின் அனைத்து பக்கங்களும் காண்போரை மயக்கும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருப்பதுதான். கவிஞர் தி.பரமேஸ்வரியின் “சொல்லால் அழியும் துயர்”, பாக்கியம் சங்கரின் “தேநீர் இடைவேளை”, மாற்றுச் சிந்தனை, பாவை பதில்கள், கவிதைப் போட்டிகள், நேர்காணல்கள் என இதழைப் பிரித்தால் படிக்காமல் வைக்க இயலாதபடி நம்மைக் கட்டிப்போட்டு சுண்டி இழுக்கும் இதழ்.

***

கவி ஓவியா (மாத இதழ்)

மயிலாடுதுறை இளையபாரதி,

96, யூனியன் கார்பைடு காலனி,

3-வது தெரு, கொடுங்கையூர்,

சென்னை - 600 118.

பேச : 98409 12010 - தனி இதழ் ரூ.10/-

                வசீகர வடிவமைப்பு, வண்ணமயமான அட்டை, சிந்தையைத் தூண்டும் கட்டுரைகள், கவிதைகள் இதுதான் "கவி ஓவியா'. கார்முகிலோன் எழுதும் புதியபார்வை, துருவன் எழுதும் ஒரு சொல்கேளிர், துளிப்பா உலா, நீங்க நல்லா இருக்கணும் என ஏராளமான பகுதிகள். இருந்தாலும் இளையபாரதி தொகுக்கும் முத்துச்சிதறல் (அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்) பாரதியை முழுமையாக சிறு சிறு துணுக்குகளில் வரிசைப்படுத்தி தருவது தனியானதொரு ஈர்ப்பை உருவாக்குகிறது, நம் மனதில். வீ.கே.டி.பாலன் அவர்களின் கல்விக் குருடர்கள் ஏற்கனவே "சொல்லத் துடிக்குது மனசு' நூலில் இடம்பெற்று, மீள் அச்சாக்கம் செய்யப்பட்டாலும், இதழில் முத்தாய்ப்பாக விளங்கி, படிப்போரின் சிந்தனையைத் தூண்டுகிறது.

Pin It