1

“சொல்வது எதையும்
 கேட்க மாட்டேன் என்கிறான்
ஓடாதே என்றால் ஓடுகிறான்.
புழுதியில் புரள்கிறான்
 ரெண்டு போட்டால்
மீண்டும் புரள்கிறான்.

அடுக்களையில் வேலையாய்
 இருக்கையில்
தண்ணீர்த் தொட்டியை
 எட்டிப் பார்க்கிறான்.
கொண்டையை அவிழ்த்து விடுவதும்,
 பொட்டை அழிப்பதும்,
போதும், போதும் என்றாகிவிடுகிறது.

காணோமே, காணோமே
 என்று தேடுகிறேன்
கட்டிலுக்கடியில் தூங்கிக்கிடக்கிறான்
 எவ்வளவு பாடு அக்கா
தாங்க முடியவில்லை எனக்கு”
திருமணம் முடிந்து
எட்டாண்டு ஆகியும்
குழந்தை இல்லாத அக்கா
கண்களைத் துடைத்துக்
கொள்கிறாள், இவளறியாது.

2

வாக்கிங் போகும்போது
புன்னகை , சிறு தலை அசைப்பு
அவ்வளவே,
எப்போதாவது கடைவீதியிலோ
எங்கேயோ பார்க்கும் போது
கொஞ்சம் அகலப் புன்னகை
அவ்வளவே.
நேற்று வாக்கிங் போகும்போது
“குட்மார்னிங் சார்,
மகளுக்குக் கல்யாணம்
வர்ற வியாழக்கிழமை
அவசியம் வந்து ஆசீர்வாதம்
பண்ணணும்”
திருமணப்பத்திரிக்கை திணிப்பு.
என்ன மாதிரி எரிச்சல் படுத்துகிறார்கள்
இந்த ஜனங்கள்.

3

எங்களூர் செங்கமலத்தாயார்
படிதாண்டா பத்தினி.
அவளுக்கும்
தேர் இழுக்க, தெப்பம் பார்க்க,
ராட்டினம் சுற்ற, சவ்வு மிட்டாய்
கடிகாரம் கட்ட
ஆசை இருக்காதா?
படிதாண்ட விட்டால் தானே!

4

“மன்னா, களத்தில்
உன் தந்தையை நோக்கி வந்த
வேலினைத் தன் மார்பில் தாங்கி
இறந்துபட்டவனின் மகன் இவன்.
இவனும், உன்னை நோக்கி எறியப்படும்
வேலினைத் தாங்கும் நெஞ்சுரம் மிக்கான்.
இவனுக்கு ஒரு கலயம் கள்ளினைக்
கூடுதலாக அருள்! வாழ்க நின் கொற்றம்!”
“தலைவா, தந்தை சிறைபட்டபோது
தீக்குளித்து செத்தவனின்
மகன் இவன் "கொள்கைச் சுடர்!'
இவனும் நீ சிறைபடும் போது
தீக்குளிக்க மண்ணெண்ணெய்யும்
டின்னுமாக அலைகிறான்.
இவனுக்கு ஒரு குவாட்டர்
கூடுதலாகக்கொடு! வாழ்க பல்லாண்டு!”

Pin It