உயிர் எங்கே உயிர் எங்கே
உண்ண வேண்டும்.
யானைத் தீ நோய் எரிக்கும்
காய சண்டிகை நான்.
வேளைதோறும் பசிப்பது இயற்கை
போதுமான அளவு உயிர் கொடுங்கள்.
உயிர் ருசி தெரிந்தது
இயந்திர நாக்கு.
தருபவள் தின்பதா ஐயம் எழலாம்.
பெயரில் என்ன இருக்கிறது?
எதிர்த்தாய் என்று வேண்டுமானால்
வைத்துக்கொள்ளுங்கள்.
நஞ்சு கொணர்ந்துள்ளேன் பூதகி
கண்ணன்கள் எங்கே?
பசி - நோயா, நலமா?
அச்சடித்த அழைப்பு சிலருக்கே வரும்.
அவர்கள் சொல்லிக் கொண்டுபோவர்.
அதிகார அகப்பை அள்ளி விழுங்குகிறது.
பலி ஆடுகள் தேடி நாவுகள் மொய்க்கின்றன.
பகத்சிங்குக்குத் தியாகிப் பட்டம்
மகாத்மா தாராளம்.
புகழின் விலை உயிர் - அவர் கணிதம்.
இரங்கற்பாக்கள் வேண்டுமானால்
இறக்குமதி செய்துவிடுவோம்.
தம் உயிர் ருசி: சாதாரணர்க்கு.
பிறர் உயிர் ருசி : அதிகார வர்க்கத்துக்கு
பசி எந்த உறுப்பில்?
காப்பியா டீயா மனிதரா?
தலைவர்கள் ருசி வித்தியாசமானது.
சட்டப் புத்தகப் பக்கங்களிடை
பூட்டும் சாவியும் கண்ணாமூச்சி.
நீதி வேறு சட்டம் வேறு
இது வரலாறு.
உங்கள் பசி தீர
எத்தனை உயிர்கள் தேவை?
அசோகன் மறு ஆய்வு
கலிங்கக் கொள்கை ரத்து.
மேய்ச்சல் தொடங்கச்
சிங்கங்கள் கட்டவிழ்ப்பு.
சதுக்க பூதங்களுக்குப்
பார்வைக் கோளாறு.
குற்றவாளிகள் கிடைக்காவிடில்
நிரபராதிகளையும் விழுங்குவோம்.
கற்பும் கறுப்பும்
வெறுக்கப்பட்டவை.
இப்போது நாம்
வல்லரசு ஆகிவிட்டோம்.
ஆய்வுக் கூடங்களே -
அருவருப்பு உணர்ச்சி மரக்க
மருந்து ஒன்று கண்டுபிடியுங்கள்.
இந்தியாவில் நிறையத்
தேவை இருக்கிறது.
Pin It