வணக்கம்.

       கருக்கல் விடியும்... முதல் இதழ் பரவலான கவனம் பெற்றுள்ளது. அறிமுகத்தின் பொருட்டு முதல் இதழை பரவலாக அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தோம். மிகப்பலர், இதழ் படித்து, கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள், எங்களுக்கு உற்சாகம் தருவதாகவே அமைந்திருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு படைப்பை விமரிசித்து, உடன் தொலைபேசியில் பேசினார்கள். பேசியதை எழுதி அனுப்புங்கள் என்ற போது கிடைத்த பதில் மௌனமே.

       எழுதவும், எழுதியதை கடிதமாக்கி, அஞ்சலில் சேர்க்கவும் ஏற்படுகிற அலுப்பும் சோர்வும் விரைவு உலகில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. அதையும் மீறி வந்த கடிதங்களில் சிலவே "உரைகல்'லில் இடம் பெற்றுள்ளன.

       படைப்பாளியின் படைப்பு விமரிசிக்கப்படும் போது தான், அவன் மேலும் படைப்புச் சூழலில் ஈடுபட ஆர்வமும், அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள இயலும். எங்களிடம் நீங்கள் படைப்பு பற்றி தொலைபேசி வழியாக பகிர்ந்து கொண்ட கருத்துக்களை, சம்பந்தப்பட்ட படைப்பாளிகளிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்க முனைந்தாலும், உங்கள் எண்ண ஓட்டங்களை அச்சில் வடித்து உங்கள் மொழி நடையிலேயே வாசிக்க தந்தால்தான், அதன் முழு திருப்தியையும் அவர்கள் உணர முடியும் என நம்புகிறோம். எனவே இதழில் வரும் படைப்புகள் பற்றிய கருத்துக்களை எழுதி அனுப்புவது, எங்களுக்கும், எங்கள் படைப்பாளிகளுக்கும் மேலும் சிறப்போடு செயல்பட ஊக்கமளிக்கும். செய்வீர்கள்தானே?

= = =

       "கருக்கல்' கிடைத்த மறுதினமே தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித்தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் குறைநிறைகளை அலசி கருத்துச் சொல்லியதும், பின் அவரது நேர்காணலுக்குக் கிடைத்த பரவலான கவனிப்பைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டதும் நெகிழ்வைத் தந்தன. தஞ்சைக்கு ஒரு நிகழ்வின் பொருட்டு வந்த போராளி கொளத்தூர் மணி அவர்கள், பசு.கவுதமனிடம் "கருக்கலை'ப் பார்த்து "இதழ் படிக்க வேண்டும்' என உரிமையோடு கேட்டு, வாங்கி, பத்திரப்படுத்தி எடுத்துச் சென்றதை கேட்க நேரிட்டபோது, இதழின்பால் அவர் கொண்ட நேசமும் விருப்பமும் அறியக் கிடைத்தது. தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி பொதுச்செயலர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் மே தின நிகழ்வில் பங்கேற்க வேதாரண்யம் வரை செல்ல வந்தவர், வழியில் நம்மை சந்தித்த போது பரிமாறிக் கொண்ட தகவலில், பெ.ம.வின் அரசியல் பணிகள் அவரது கட்சியின் அணுக்கத் தோழர்களுக்கே புதிய விஷயங்களாயும், தெரியாத நிகழ்வுகளாகவும் இருந்தன என்பது அறிய ஆச்சரியமாயும், நேர் காணலின் வெற்றியாயும் உணர முடிந்தது.

       இதழ் கிடைத்ததும், அதிகாலை 5 மணிக்கே எழுந்து முழு மூச்சுடன் படித்து முடித்து, சுடச்சுட 7 மணிக்கு நம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட கரிசல்காட்டு கதை சொல்லி மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் விரைவு, நம்மை பிரமிக்க வைத்தது. ஆயிசா இரா.நடராசன் அவர்கள் தொலைபேசியில் "கருக்கல் இன்னும் கைக்கு வரவில்லையே, ஏன்? உடனே கொரியரிலாவது அனுப்புங்கள், தோழா!' என்று பரபரத்ததும், அதன் பின் அவரை நேர்காணலின் பொருட்டு சந்தித்தபோது "கல்வி பற்றிய கருத்துக்களை "கருக்கல்' மட்டுமே பேசும், பேச முடியும்' என நம்பிக்கையோடும், உறுதியோடும் தெரிவித்ததும், கருக்கல் மீது அவருக்குள்ள நேசமாயும், புரிதலாயும் உணர முடிந்தது.

       "கருக்கல்' இதழ் கிடைத்து, இரவே படித்து, அதிகாலை நம்மை தொடர்பு கொண்ட கவிஞர் கிருஷாங்கினி அவர்கள், நீண்ட நேரம் இதழ் பற்றி விவாதித்த விதம் நமக்கான பயண இலக்கை தெளிவு படுத்துவதாய் இருந்தது. கல்வியாளர் பிரபாமணி அவர்களை இதழ் அனுப்பிட வேண்டி, முகவரியின் பொருட்டு தொடர்பு கொண்ட சில நிமிடங்களிலேயே தொடர்புக்கு வந்து, அவராகவே ஆவலோடு "கருக்கல்' பற்றி விசாரித்து, முகவரியும் தந்து, கல்விபற்றிய அவரது புதிய வெளியீடுகள் மூன்றையும் பார்வைக்கு அனுப்பி, மதிப்புரை வேண்டிய பாங்கு சிலிர்க்க வைத்தது.

       பரிதியின் சுட்டுவிரலில் பேசப்பட்ட மனுஷ்யபுத்திரனின் சாகித்ய அகாதெமி விஷயங்களைப் படித்து, நம்மை தொடர்பு கொண்ட சாகித்ய அகாதெமி தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான கவிஞர் சேலம் தமிழ்நாடன் அவர்கள், சாகித்ய அகாதெமி தேர்வுநிலை பற்றி தான் எழுதி வெளிவந்த (தமிழ்நேயம் வெளியீடு) நூலைப் படித்து, மேலும் ஒரு முடிவுக்கு வாருங்கள் எனக் கூறிய விதம், நம் இதழின் கட்டுரைக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருத நேரிட்டது. தென்காசி முகவரிக்கு கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு இதழ் அனுப்பிய உடன், அவரது கவிதைகளை அனுப்பித் தந்ததோடு, தொடர்பிலும் வந்து, "உங்கள் இதழ் காலத்தின் தேவை', எனக் கூறி, இதழ் செல்லாத (வண்ணதாசன், கலாப்ரியா, வித்யாசங்கர், தளவாய் சுந்தரம்) பலரைத் தொடர்பு கொள்ள உதவியும் புரிந்தார்.

       இப்படியே நம்மீது அக்கறையும், விருப்பும் கொண்டு "கருக்கல்' வெளியீட்டிற்கு ஆதரவும், வரவேற்பும் நல்கியோர் பட்டியல் மிகப்பெரிது. இடமின்மைக் காரணமாக சிலரை மட்டும் தொட்டுக் காட்டி இருக்கிறோம். நன்றி என்ற ஒற்றைச் சொல் மூலம் அந்நியப்படுத்த விரும்பாமல் "கருக்கல்' பயணத்தில் நீங்களும் நாங்களும் கைகோர்த்தே செல்வோம் வாருங்கள் என அழைக்கிறோம். தவறிருந்தால் தட்டுங்கள் - சிறப்பிருந்தால் சுட்டுங்கள்.

= = =

       சென்ற இதழில் சொல்லியபடி, தமிழின விடியல் கருக்கலின் இலக்காக இருந்தாலும், பலராலும் பேச நினைக்கிற - பேச இயலாத விஷயங்களையும் தொடர்ந்து உங்களுக்காகப் பேசுவோம் - அதுவும் உரக்க, துணிந்து! ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் இலக்கிய வரலாற்றை திரும்பிப் பார்ப்போர் "இப்படியுமா?' என ஆச்சரியப்பட்டு அருவருக்கும் வகையில், தனக்கும் புரியாது - பிறருக்கும் புரியாது, கலை கலைக்காகவே என மேலைநாட்டைக் காட்டி மிரட்சிப்படுத்தும் இலக்கியப் போக்குகளை, இவைகளை நிர்மாணிக்கிற அதிகாரம் படைத்தவர்களாக தங்களை நினைத்துக் கொண்டு அடாவடித்தனங்களை, அத்துமீறல் களை தொடர்ந்து செய்யும் நவீன இலக்கிய கர்த்தாக்களை, அவர்களது சுயரூபங்களை அம்பலப்படுத்த நாங்கள் அச்சப்படப் போவதில்லை.

       அதற்கான கடமையும், உரிமையும் சராசரி தமிழ் வாசகர்களாகக் கூட எங்களுக்கு உண்டு.“

 அன்புடன்,

அம்ரா பாண்டியன்

Pin It