ஈழத்தில் நடந்து முடிந்த இறுதிக் கட்டப் போரானது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் எதிராக சிறீலங்காவுடன் மேற்குலக நாடுகளும், குறிப்பாக இந்தியாவும் சேர்ந்தே நடத்திய ஒரு உலக அநீதி என்பதே யதார்த்தம்.

       தமிழ் அல்லது தமிழன் என்ற சொற்பதமே உலகத்தில் இனி இருக்கக் கூடாது என்பதாய் இனவெறியோடு கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழினம் மீது சிங்கள இராணுவம் நிகழ்த்தி வரும் படுகொலைகளின் எண்ணிக்கை ஒன்றல்ல... இரண்டல்ல... பல நூறாக விரிந்து செல்லும்.

       இது போன்ற கொடுமைகளை உலக வரலாறு இதுவரை கண்டதில்லை.

       2009 மே - 18ஆம் நாளுடன் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பேசப்படுகின்ற, நடந்து முடிந்த இந்தப் போர் -

ஒரு மானுட அநாகரிகம்!

மனித குலத்தின் மிகப்பெரிய அவமானம்!!

       ஆக்கிரமிப்பாளர்களும் உலகத்தின் வல்லரசுகளும் தங்கள் சுயலாபத்துக்கான களம்தேடி, நிர்க்கதியாய் நின்ற ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் மீது பிரயோகம் செய்த வஞ்சக வலைவிரிப்பு.

       மக்களின் பாதுகாப்பான வெளியேற்றம் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்த சிங்கள அரசும், அதன் கைக்கூலி ராணுவமும், பாதுகாப்பு வளையம் என ராணுவத்தினாலேயே அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்த பல லட்சம் தமிழ் மக்களுக்கு என்ன விதத்தில் பாதுகாப்புக் கொடுத்தது என்பது உலகம் அறிந்த கசப்பான உண்மை.

       கொத்துக் குண்டுகள், விஷக் குண்டுகள், எறிகணைகள் என்பவற்றை யெல்லாம் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது பொழிந்து உயிர்வதை செய்ததோடல்லாமல் தமிழ்மக்களைத் தாமே மீட்டெடுத்ததாகவும் பிரகடனம் செய்தது.

       தடை முகாம்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்ட சித்திரவதைக் கூடங்களுக்குள் அப்பாவித் தமிழ் மக்களை அடைத்து வைத்தது சிங்களம். சுற்றிவர முட்கம்பி வேலி உள்ளே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கைதிகளாக்கப்பட்ட நிலை.

       விசாரணைக்கென அவ்வப்போது ராணுவத்தினால் கூட்டிச் செல்லப்படுகின்ற இளம் பெண்களுக்கு பாலியல் கொடுமை. இளைஞர்களோ பெரும்பாலும் திரும்பி வருவதில்லை. அவர்கள் எஙகே இருக்கிறார்கள், என்ன நடந்தது? வலியோடு ஒவ்வொரு விநாடியும் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளின் நெஞ்சங்களில் ஆயிரமாயிரம் விடை தெரியாக் கேள்விகள்...

       இந்த நிலையில் 13.05.2009 இணைய தளமொன்றில் "பாதிரியார் சொன்ன அதிர்ச்சித் தகவல்' என்ற தலைப்பின் கீழே - புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தி, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழன் இதயத்தையும் ஒரு நிமிடம் உறைய வைத்ததாய் இருந்தது.

       வன்னியில் உச்சக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதி அது. மானுடம் வெட்கித் தலை குனியும்படியான அந்தக் கசப்பான உண்மையை - அதைக் கண்கூடாகப் பார்க்க நேர்ந்த அனுபவத்தை - குறிப்பிட்ட பாதிரியாரே விவரிப்பதுபோல இந்தக் கதை விரிகிறது....

       பீரங்கிச் சத்தங்கள்... எறிகணைகளின் வெடியதிர்வு... துப்பாக்கிகளின் சடசடப்பு... ஒவ்வொரு விநாடியும் மனசை இம்சை செய்து, வவுனியாவுக்கு மிக அருகில் போர் உக்கிரமடைந்து கொண்டிருப்பதை உணர்த்தின. தூக்கம் தொலைந்து போன இரவுகளின் எண்ணிக்கை ஒவ்வொன்றாக அதிகரித்த வண்ணமே இருந்தது.

       அன்றாடம் கிடைத்துக் கொண்டிருந்த போர் முனைத் தகவல்களில் ஒன்று கூட நம்பிக்கை தருவதாக இல்லை.

       இரத்தப் பிசுபிசுப்பில் குற்றுயிர்களாகவும், உடலங்களாகவும் குதறி எறியப்பட்டுக் கொண்டிருக்கும் தன் மைந்தர்களின் விதியை எண்ணி, நொந்துபோன வன்னிப் பெரு நிலத்து மண், தானும் சிவப்பாகிக் கொண்டிருந்தது.

       மனித உயிர்களுக்கு மதிப்பில்லாது போய்விட்ட அவலம் என் உணர்வுகளைச் சுட்டெரிக்க தேவாலயம் நோக்கி நடந்தேன்.

       “கர்த்தரே... மக்களுக்காகச் சிலுவை சுமந்த தேவனே! அல்லல்பட்டுக் கண்ணீரில் தோய்ந்து கிடக்கும் என் மக்களுக்கு ஆறுதல் தாருங்கள்... ஒவ்வொரு நிமிடமும் அநாதைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள்...

       .... சிதைத்துச் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் கண்ணீரும் கூக்குரல்களும், உலக நாடுகளின் அடைப்பட்டுக் கிடக்கின்ற செவிகளில் ஒரு தடவை ஓங்கி அறைய வழி செய்யுங்கள் இறைவா...

       ..... போர் வெறி கொண்டவர்களை அமைதிப் பாதையில் வழி நடத்திச் செல்லுங்கள் .... ஆமென்....''

       விழி மூடி மண்டியிட்டு ஆண்டவனை மன்றாடிக் கொண்டிருக்க, மிக அருகில் ஒரு பெண்ணின் கதறல்.

       “ஆண்டவனே... என்ரை பிள்ளையை ஏதோ செய்து போட்டாங்கள்..... கடவுளே ... என்ரை பிள்ளை எங்கை? நீ ஏன் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறாய்.....?''

       கண் விழித்துப் பார்த்தேன்

       அறுபது அறுபத்தைந்து வயசு மதிக்கத்தக்க ஒரு அம்மா இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கதறியழுதபடி சிலுவையை நோக்கி ஓடுகிறாள்.

       “ஐயோ நான் என்ன செய்வேன்...''

       தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.

       “அம்மா... அழாதேங்கோ... என்ன நடந்தது?''

       “ஏதோ விசாரணைக்கெண்டு என்ரை பிள்ளையை முகாமிலை இருந்து பிடிச்சுக் கொண்டு போனவங்கள், ஃபாதர். ரெண்டு கிழமையாகிப் போச்சு... என்ரை பிள்ளை திரும்பி வரவுமில்லை.... அவன் எங்கையெண்டும் தெரியேல்லை....''

       “யோசிக்காதேங்கோ அம்மா.... வேற ஏதாவது முகாமிலை வைச்சிருப்பாங்கள்...''

       “எல்லா இடமும் தேடிப்பாத்திட்டன் ஃபாதர்... ஒரு இடமும் அவனில்லை... இப்ப நாலு நாளா றோட்டு றோட்டாய் அலைஞ்சு என்ரை பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கிறன்... என்ரை பிள்ளைக்கு ஏதோ நடந்திட்டுது ஃபாதர்... எனக்கு வேறை ஒருத்தரும் இல்லை.... கடவுளே''

       “உங்களை எப்பிடி வெளியே வரவிட்டாங்கள்...?''

       “அறுபது வயசுக்கு மேலே எண்டதாலை கெஞ்சி மண்டாடி வெளியிலே வந்திட்டன்.... அதுவும் எவ்வளவோ பாடுபட்டுத்தான்.... எல்லா ஆமி காம்ப்லையும் போய்க் கேட்டிட்டன்... அப்பிடி ஒரு பேர் தங்கடை லிஸ்டிலையே இல்லை எண்டு என்னைத் துரத்திப் போட்டாங்கள் ஃபாதர். இனி நான் எங்கை போவன்.....? ....என்ரை பிள்ளை இல்லாமை நான் உயிர் வாழமாட்டன்... நான் செத்துப் போயிடுவன்... அவனில்லாமை எனக்கு ஒரு வாழ்க்கையா....? என்ரை பெத்த வயிறு கொதிக்குது ஃபாதர்.. என்ரை பிள்ளை என்னன்டை வருவானா ஃபாதர்....?''

       குலுங்கிக் குலுங்கி அழுத அந்தத் தாயை நான் எப்படித் தேற்ற முடியும்?

       “அம்மா உங்கடை துன்பம் எல்லாவற்றையும் கர்த்தரிடம் ஒப்படையுங்கோ... நம்பிக்கையோடை இருங்கோ...''

       வேறெதையும் சொல்ல என்னால் முடியவில்லை.

       எனக்குத் தெரியும், இந்த ஒரு அம்மா மட்டுமல்ல ஆயிரம் ஆயிரம் தமிழ் அம்மாக்களின் கண்ணீருக்கும் கதறல்களுக்கும் இந்தப் போர் காரணமாய் நிற்கிறது என்ற வேதனைமிக்க, கசப்பான, உண்மை.

       இரண்டு நாட்களின் பின்னர், ராணுவ உயர் அதிகாரி என்னைச் சந்திக்க வேண்டுமென்று வண்டி அனுப்பி இருந்தான்.

       "என்னவாயிருக்கும்?'

       பலவகை ஊகங்களுடன் வவுனியாவின் ராணுவத் தலைமைய கத்தினுள் போனேன்.

       அதிகாரி ஆங்கிலத்திலேயே உரையாடினான்.

       தன்னுடைய மகளுக்கு ஞானஸ்நானம் செய்து வைக்க, என்னைத் தன்னோடு பொலநறுவைக்கு (தென் இலங்கை) வரும்படி அவன் சொன்னபோது என் விருப்பமின்மையைத் தெரிவிக்க முடியாமலும், பதில் எதுவும் கூற முடியாமலும் மௌனமாய் நின்றேன்.

       ஏனெனில், நான் தமிழன். அவனோ, உயர் ராணுவ அதிகாரி.

       “நாளை மறுதினம் புறப்படத் தயாராகுங்கள்... உடனையே திரும்பி விடலாம்'' கட்டளையிடுகின்ற தொனியில் அவன் சொல்ல, நான் எதுவும் பேசவில்லை.

       போரின் அதிர்வுகளிலிருந்து விலகி, நாங்கள் பயணித்த ராணுவ ஜீப் வண்டி வவுனியாவிலிருந்து மதவாச்சி, அனுராதபுரம் எல்லாம் கடந்து, பொலநறுவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அந்த ராணுவ அதிகாரியின் முகாமும் வாழ்விடமும் பொலநறுவையில் தான் இருந்தன.

       வழிநெடுக அவன் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தான். நான் சின்னதாய் தலையசைப்புடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்க திடீரென என்னிடம் கேட்டான்.

       “இந்தப் போரைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் ஃபாதர்?''

       “...................................''

       “ஏறக்குறைய முக்கால் பங்கு விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம்... இன்னும் சில தினங்களுக்குள் மொத்தமாய் அழித்துவிடுவோம், பிரபாகரன் உட்பட'' கூறிவிட்டு என்னை ஒரு விதமாகப் பார்த்தான்.

       “...........................''

       “ஏன் மௌனமாயிருக்கிறீர்கள்....? ஏதாவது சொல்லுங்கள்....?''

       “....... ஆண்டவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்.''

       நான் சொன்னதைக் கேட்டதும் மௌனமாகிப் போனான்; உதடுகளில் ஒரு நமட்டுச் சிரிப்பு தெரிந்தது.

       இரவு 10மணிக்கு பொலநறுவை போய்ச் சேர்ந்தோம். தங்குமிடம் ஒன்றில் என்னை இறக்கிவிட்டு, மறுநாள் காலை 8 மணிக்குத்தயாராய் நிற்கும்படி கூறிவிட்டுப் போனான்.

       காலை எட்டு மணிக்கு வண்டி வர, அரை மணி நேரப் பயணத்தில், வீட்டுடன் முகாமாகவும் இருந்த (ஏறக்குறைய ஒரு மாளிகை) இடத்தை அடைந்தேன்.

       கீழ் தளத்து வரவேற்பறையில் உட்கார வைக்கப்பட்டேன். அரை மணி நேரத்தில் எல்லோரும் கீழே வருவார்கள் எனவும், அதன் பிறகு தேவாலயத்துக்குப் போக வேண்டும் எனவும் ஒரு பணியாள் அரைகுறை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு மேலே போனான்.

       அந்நியமான உணர்வொன்று மனசை அலைக்கழிக்க, நிமிடங்களை எண்ணியபடி காத்திருந்தேன்.

       திடீரென அந்த மாளிகைக்குள் ஒரு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. மேலே போன பணியாள் கீழே அவரசமாய் வந்தான். அதிகாரியின் உறவினர் ஒருவருக்குப் பாம்பு கடித்துவிட்டதாகச் சொல்லி வெளியே ஓடினான். சிறிது நேரத்தில் ராணுவ அதிகாரியும் அவசரமாய் புறப்பட்டு வெளியே போக, ஜீப் வண்டி உறுமிக் கொண்டு புறப்படுவது கேட்டது.

       நிமிடங்களையல்ல... மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியவனானேன்.

       ஒரே இடத்தில் எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும்?

       உள்ளே வரவேற்பறையில் வலது பக்கமாக நடந்தேன். குறுகலான நீண்ட வராந்தா தெரிந்தது.

       "போய்த்தான் பார்ப்போமே...'

       நீண்ட தூரம் சென்று, இரண்டு கிளைகளாய் பிரிந்த இன்னும் மிகக் குறுகலான பாதைகளில் இடது புறமிருந்த பாதையில் நடந்தேன்.

       அடுக்கடுக்காய் அறைகள், கண்ணாடி யன்னல்கள், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கதவுகள்... எல்லாமே தூசிபடிந்து மூடிக்கிடந்தன.

       அந்த அமானுஷ்யம் ஒருவித பயத்தை உண்டு பண்ணியது.

       ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ள, ஒரு யன்னலுக்கு மிக அருகில் போய் கண்களை வைத்து உள்ளே உற்றுப் பார்க்கிறேன். எதுவும் புலனாகவில்லை. தூசியைத் துடைத்துவிட்டு மீண்டும் பார்த்தபோது....

       அதிரச்சியில் உறைந்து போனேன்.

       நெஞ்சத்தை நடுங்க வைத்த அந்தக் காட்சியை நம்ப முடியாமல் இன்னும் அதிகமாக ஊன்றிப் பார்க்க, தரைமீது அங்குமிங்குமாய் கிடந்தவை -

       மனித உடல்கள்!

       கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, குழிகளாய், மார்பிலிருந்து உடலின் அடிபாகம் வரை கீறிப் பிளக்கப்பட்டு, உள்ளே இயல்பாக இருக்க வேண்டிய உறுப்புகள் ஈரல், இருதயம், சிறுநீரகம் எதுவுமே இல்லாத வெற்றுப் பைகளான உடல்கள்.

       மனசுடன் உடலும் எனக்கு நடுங்கியது.

              "யேசுவே... இங்கே என்ன நடக்கிறது...?'

       புலிகளுடன் போர் என்ற பெயரில் ஆயுதக் கொள்வனவில் ஊழல் செய்கின்ற அதிகாரிகளின் கதைகள் அறிந்திருக்கிறேன்.

       ஆனால் இது....?

       எங்கள் பிள்ளைகளின் உடல் உறுப்புகளில் வியாபாரமா?

       எத்தனை காலம் நடக்கிறது இந்தக் கொடுமை?

       சுதாரித்துக் கொள்கிறேன்.

       இனி, தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து.

       யாருக்கும் இதுவரை தெரியாத, நான் மட்டுமே இன்று கண் கூடாகக் கண்ட, இந்தக் கொடூர உண்மையை உலகம் அறிய வேண்டும்.     எனது கைபேசியில் நிழற்பட வசதி இருப்பது சட் என்று நினைவில் பளிச்சிட... விரைந்து செயல்பட்டேன்.

       அந்தக் கோரக் காட்சியை அப்படியே பதிவு செய்து கொண்டு, அவரசமாய் மீண்டும் வரவேற்பறையில் முன்னர் இருந்த அதே இருக்கையில் அமர்ந்து கொண்டேன்

       பதட்டம் அடங்கவில்லை.

       தமிழனுடைய விடை தெரியாக் கேள்விகள் பலவற்றுக்கான பதில், சிங்கள ராணுவ அதிகாரி ஒருவனுடைய முகாமில், உடலங்களாய் வீசப்பட்டுக் கிடக்கின்ற பெருங்கொடுமையை நினைத்து எனக்குள் அழுதேன்.

       அன்று தேவாலயத்தில் தன் மகனைத் தேடிக் கதறியழுத அம்மாவின் குரல் இப்போது என் நெஞ்சில் ஓங்கி அறைந்து, ரத்தம் கசிய வைப்பது போன்ற உணர்வில் துடித்துப் போனேன்.

       மிருக வெறி கொண்டவர்களுக்கு ஒரு தாயின் உணர்வுகள் எப்படிப் புரியும்?

       தான் தேய்ந்து தன் பிள்ளைகளை வளர்த்ததெடுக்கின்ற ஒரு அன்னையின் தியாகம் பற்றி இந்தக் கயவர்கள் அறிவார்களா? வெறியர்களே எங்கள் பிள்ளைகளின் கண்கள் உங்கள் கனவு மாளிகைக்கு அத்திவாரமா?

       தமிழனுடைய உடல் உறுப்புகளை உல்லாச வாகனங்களாக்கி, ஊரெல்லாம் பவனி வருகின்ற சிங்களத்து உயிருண்ணிகளே...

       எங்கள் அன்னையரின் உதிரங்களில் இன்று வளர்கின்ற பெருந்தீ, உங்களை விரைவில் சுட்டெரிக்கும்.

       இறைவனுடைய திருச்சபையில் நீங்கள் கைதிகளாய் நிறுத்தப்படுவீர்கள். 

       விரைவில் - மிக விரைவில்.

       இன்று நான் கண்ட இந்த உண்மையை உலகம் அறியும்போது, அதற்குக் காரணமாயிருந்த நான் கைது செய்யப்படலாம். சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம். அல்லது கொல்லப் படலாம்.

       எது நடந்தாலும் இனி எனக்குக் கவலையில்லை. ஆனால் இந்த சாட்சியத்தை, உலகம் அறியச் செய்யக் கூடிய ஒரு நம்பகமான இடத்தில் ஒப்படைக்கும் வரை ஆண்டவரே, என்னைக் காப்பாற்றி அருளும். எனது அங்கியினுள்ளே, சட்டைப்பையில் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைபேசியை ஒருதரம் தொட்டுப்பார்த்துக் கொள்கிறேன்.

       இணையதளம் வெளியிட்ட மேற்படி தகவல்களின் கீழே, பின் குறிப்பாகக் காணப்பட்ட விடயம் அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.

       “இந்த வெற்றுடல்கள் யாவும் வவுனியாவில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போய்க் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுடையவை என்பதும் இவ்வாறு உடலுறுப்புகள் அகற்றப்பட்ட பின், அந்த உடல்கள் பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு மலையகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு அங்கே ரகசியமாய்ப் புதைக்கப்படுவதாயும் நம்பகமாத் தெரிகிறது''.

       (விரைவில் வெளிவர இருக்கிற “போரும் வலியும்'' நூலிலிருந்து ஒரு பகுதி).

Pin It