துரை.குணா.பெருமாள் முருகன். இருவருமே எழுத்தாளர்கள்தான். "மாதொருபாகன்' எழுதியவரை மன்னிப்புக் கேட்கச் சொன்னது ஜாதி இந்து கூட்டம். "ஊரார் வரைந்த ஓவியம்' எழுதியவரை ஊரை விட்டே விரட்டியடித்தது அக்கும்பல். பெருமாள் முருகனின் நூல் பிரச்சனை ஆக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே துரை. குணா தாக்குதலுக்கு ஆட்பட்டார். இருவருக்குமே தங்கள் எழுத்தால் ஆபத்து நேர்ந்திருக்கிறது என்றாலும் சமூகம் அவர்களை ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவில்லை!

சரி, முற்போக்குவாதிகளுமா அப்படி நடந்து கொண்டார்கள் என்ற கேள்வி எழலாம்.பெருமாள் முருகன் பிரச்சனையில் பழமைவாதிகள் மூர்க்கமாக எதிர்த்ததற்கும்; துரை. குணா பிரச்சனையில் முற்போக்குவாதிகள் மவுனம் சாதித்ததற்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு – பெருமாள் முருகனை மய்யப்படுத்தி – கருத்துச் சுதந்திரத்தின் எல்லை விரிவுபடுத்தப்பட்டபொழுது துரை. குணா, ம.மு.கண்ணன், சாக்கிய முகிலன் ஆகியோர் தேவைப்பட்டனர்.

அந்த வகையில் கருத்துச் சுதந்திரவாதிகளின் பார்வை சற்று குணா மீதும் திரும்பியது. ஆனாலும் மன்னிப்பு கேட்ட பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஆர்ப்பரித்தவர்கள், தான் எழுதிய எழுத்திற்காக இன்றுவரைதுணிந்துநிற்கும் குணாவிற்காக, அவருடைய ஊரான குளந்திரான்பட்டுக்குச் சென்று அவருக்கு ஆதரவாக எவரும் ஆர்ப்பரிக்கவில்லை. இவை எல்லாம் கசப்பானவையாக இருப்பினும் உண்மைகளே! துரை. குணாவின் நேர்காணல் இதுவரை வெளிவராத மேலும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

சந்திப்பு : மா. பொன்னுச்சாமி

உங்களுடைய கிராமத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில்தான் குளந்திரான்பட்டு பஞ்சாயத்து உள்ளது. இங்கு சுமார் 120 தலித் குடும்பங்கள், 30 வெள்ளாளர் குடும்பங்கள் மற்றும் 50 கள்ளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். ஜாதிக் கொடுமைகளில் ஊறிப்போன கிராமம் இது. கள்ளர் ஜாதியை சார்ந்தவர்கள் இங்கு ஆதிக்கம் செய்கின்றனர். எங்களுடைய கிராமத்தைச் சுற்றி ராங்கியன் விடுதி, மணிக்கிரான் விடுதி, காடுவெட்டி விடுதி என ஊர்ப் பெயர்களில் தங்கள் பெயர்களை வைத்திருப்பார்கள்.

இங்குள்ள ஆதிக்க ஜாதியினர் சின்னசாமி குளந்திரான், கோபால்சாமி ராங்கியர், வேலு மணிக்கிராயர் என தங்களுடைய பெயருக்குப் பின்னால் ஊர்ப் பெயர்களை அடைமொழியாக வைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த ஊரிலேயே பிறந்த நான் குளந்திரான், ராங்கியர் என என்னுடைய பெயருக்குப் பின்னால் ஊரின் அடைமொழியை சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் நான் சேரிக்காரன். ஒரு தலித்துக்கு ஊர்ப்பெயரை இணைத்துக் கொள்ள இங்கு இன்றுவரை அனுமதி இல்லை.

இங்கு "குடிகள்ளவூடு' என்றொரு முறை இருக்கிறது.இங்குள்ள அய்ந்து கள்ளர் ஜாதி வீடுகளுக்கு ஒரு "பறக்குடி' குடும்பம் – சாகும் வரை – கொத்தடிமை யாக வேலை செய்ய வேண்டும். இந்த ஜாதிய அடிமை முறை இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது. கள்ளர்களின் தோட்டம், காடு, மாட்டுப் பண்ணை, வீடு என அவர்களுடைய எல்லா இடங் களிலும் இங்குள்ள தலித்துகள் வேலை செய்கிறார்கள். மிச்சம் மீதியுள்ள காய்கறி, தேங்காய், பழைய சோறு மற்றும் அவர்களாகப் பார்த்துக் கொடுக்கும் கொஞ்சம் பணம் தான் இதற்கான கூலி. தலித்துகளிடையே சண்டை சச்சரவு என்று வந்தால் தலித்துகளே அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது.

அந்த தலித் எந்த வீட்டில் வேலை செய்கிறாரோ அந்த கள்ள வீட்டு முதலாளிகள்தான் பேசி தீர்ப்பு சொல்வார்கள். இன்றைக்கும்கூட கல்யாணம் முடித்து சாதி இந்துக்களின் காலில் விழுவது, திருவிழாவில் பறையடிப்பது, ஊரை சுத்தம் செய்வது, வீட்டு வேலை செய்வது என காலங்காலமாக இங்குள்ள தலித் மக்கள் அடிமை வேலை செய்யவே பல கிராமங்களில் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இதே குளந்திரான்பட்டு கிராமப் பஞ்சாயத்தில்தான் சி.பி.எம். கட்சிக்கு எட்டு கிளைகள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரேயொரு பஞ்சாயத்தில் எட்டு கிளைகள் உள்ள கிராமம் வேறெங்கும் இல்லை. மாநிலங்களவை உறுப்பினரான டி.கே. ரெங்கராஜன் (சி.பி.எம்.) இக்கிராமத்தை ஆய்வு செய்து, ஒரு பேருந்து நிறுத்தத்தையும் ஒரு திருமண மண்டபத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் ஊரில்தான் மோட்டார் வண்டியில் ஏறிப் போகத் தடை, தலித்துகள் வெள்ளை வேட்டி கட்ட அனுமதி இல்லை, சாதி இந்துக்களுக்கு முன்னால் கைலியை மடித்துக் கட்டக் கூடாது என இன்னும் சொல்ல முடியாத கொடுமைகள் நிறைய இருக்கின்றன.

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

எங்க அப்பாவுக்கு சொந்த ஊர் காடு வெட்டிவிடுதி. அம்மா பிறந்த ஊர் குளந்திரான்பட்டு. எங்க அப்பா 1967 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (சி.பி.அய்.) இருந்தவர். 1979க்குப் பிறகு கட்சி பிளவுபட்டதால் சி.பி.எம்.க்கு வந்து 2013 வரை அந்தக் கட்சியில்தான் செயல்பட்டு வந்தார். கடந்த ஓராண்டாகத்தான் மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சியில் இருக்கிறார். ஏறக்குறைய 46 ஆண்டுகளாக ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் வாழ்ந்து வருகிறார். நான் எழுத்தாளரானதற்கு எங்க அப்பாதான் காரணம். எங்க அம்மாவை திருமணம் முடித்து குளந்திரான்பட்டு கிராமத்திற்கு வந்த உடனேயே (1977) குடிகள்ளவூட்டு ஆட்கள் காலில் விழுந்து கும்பிடச் சொன்னாங்க.

எங்க அப்பா கள்ளர்களைப் பார்த்து கேட்டார்: “இந்த ஊர்ல நான் பொண்ணு எடுத்தது தப்புன்னு சொல்லி காலில் விழவா? இல்ல கல்யாண செலவு பத்தாயிரம் இருபதாயிரம் ஆயிடுச்சு; அந்தக் கடன கட்டுங்கன்னு சொல்லி காலில் விழவான்னு'' கேட்டு, இந்த கிராமத்திலேயே ஜாதி இந்துக்களின் காலில் விழுந்து கும்பிட மறுத்த முதல் கம்யூனிஸ்ட் எங்க அப்பாதான்! இங்குள்ள ஒட்டுமொத்த தலித்து களும் இந்துக்களின் வீடுகளில் அடிமை வேலை செய்தால்தான் சாப்பிட முடியும். இல்லை என்றால் பட்டினிதான். ஆனால், இதைச் செய்ய மறுத்து அய்ஸ் வண்டி மிதித்து தன் சொந்த உழைப்பில் சுயமரியாதையோடு எங்களை வளர்த்தவர் எங்க அப்பா. குளந்திரான்பட்டு ஊராட்சியில் சி.பி.எம். கட்சியை வளர்த்தவரும் எங்க அப்பா துரைசாமிதான்.

நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினராக இருந்தும் நீங்கள் எழுதியுள்ள "ஊரார் வரைந்த ஓவியம்' என்ற நூல் வெளியான பிறகு உங்கள் குடும்பம் கடும் அச்சுறுத்தலை சந்தித்துள்ளதே?

எனக்கு இலக்கியம் வரலாறெல்லாம் தெரியாது. நான் 25 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் உறுப்பினராக இருக்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்திலும் (த.மு.எ.க.ச.) இருக்கிறேன்.இடதுசாரி சிந்தனையின் அடிப்படையில்தான் எம் மக்களின் துயரங்களையும் அவர்கள் சந்திக்கும் சாதிக் கொடுமைகளையும் இந்த நூலின் முலம் வெளிப்படுத்தி இருக்கிறேன். எத்தனையோ பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், தமுஎகச கூட்டங்கள் என நிறைய கலந்து கொண்டிருக்கிறேன்.

எங்கெங்கேயோ நடக்கும் கொடுமைகளைப் பற்றி எல்லாம் சி.பி.எம். பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். ஆனால் எங்க ஊரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி எழுத மறுக்கிறார்களே என்று நீண்ட காலம் யோசித்துதான் நாமே அதை எழுதி வெளியிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். குளந்திரான்பட்டில் ஒரு தலித் சாதிக் கொடுமையினால் எப்படி செத்துப் போகிறான்; அதற்குப் பிறகு அவனுடைய குடும்பம் எப்படி நிலைகுலைந்து போகிறது என்ற என் குமுறலின் வெளிப்பாடுதான் "ஊரார் வரைந்த ஓவியம்' என்ற என்னுடைய முதல் குறுநூல்.

ஆதிக்க சாதிக்காரனை அடித்த காரணத்திற்காக நடக்கப்போகும் பஞ்சாயத்து, தண்டனை, ஊரை விட்டு இரவோடு இரவாக ஓடிப்போவது, நம்ம சொந்த பந்தங்கள் காப்பாற்றும் எனச் சொல்லும் பங்காளிகளின் வீராப்புப் பேச்சு, இங்குள்ள தலித் கட்சிகள், இயக்கங்கள் ஆதிக்க சாதிக்காரனுடன் சமரசம் செய்து கொள்வது, கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் ஜாதியவாதியாக நடந்து கொள்வது, ஒரு கிளாஸ் சாராயத்திற்காக சுய மரியாதையை இழப்பது, தலித் பெண்களை ஆதிக்க சாதிக்காரன் எப்படி பயன்படுத்துகிறான்; பண்ணையில் அடிமையாக வேலை செய்கிற தலித்துகள் ஆதிக்க சாதி பெண்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என எல்லாவற்றையும் என் கதை வெளிப்படையாகப் பேசுகிறது.

கீழத்தெரு, மேலத்தெரு, மாடிவீட்டுக்காரன், மச்சு வீட்டுக்காரன் என்று புனைவில் எந்த ஒரு பெயரை எழுதினாலும், அது எங்களைத்தான் குறிக்கிறது. அது நேரடியாக எங்களைத்தான் தாக்குகிறது என்கிறார்கள். உண்மையில் கதையின் சம்பவங்கள் உயிரோட்டமாய் இருப்பதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கு வக்காலத்து வாங்க வந்த எங்க கட்சிக்காரங்க "இதில் என்னய்யா தப்பு இருக்கு?' என்று எதிர்த்து கேட்காமல் சாதி இந்துக்களிடம் "ஆமாம் சாமி' போடுவதுதான் இன்றுவரை வாடிக்கையாக இருக்கிறது.

"கீழாண்ட வீடு' வெளியீட்டகம் யாருடையது?

என்னுடைய கதையை எழுதி முடித்து – நான் உறுப்பினராக இருக்கும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பு இயக்கங்கள் முதல் இப்பகுதியில் உள்ள உஞ்சை அரசன் வரை –எல்லாரையும் வெளியிடச் சொல்லி கேட்டுப் பார்த்தேன். யாருமே கண்டு கொள்ளவில்லை.எங்களுடைய ஊருக்கு கிழக்குப்புறமாக கடைசியாக இருக்கிற என் வீடுதான் "கீழாண்ட வீடு'. அதனால் அதையே வெளியீட்டகமாக வைத்து இந்நூலை வெளியிட்டேன்.சி.பி.எம். கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தான் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். வெளியீட்டு விழாவுக்கு நிறைய பேர் வர வில்லை. வந்தவர்களும் நூலைப்பற்றி பேசவில்லை.

நானும் எங்கப்பாவும் இத்தனை ஆண்டுகள் கட்சியில் இருந்தும் "தீக்கதிர்' மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிற "வெண்மணி' போன்ற பத்திரிகைகளில் கூட என்நூலுக்கு ஓர் அறிமுகம்கூட வெளியிடவில்லை. வேற ஜாதிக்காரன் கவிதை நூல் எழுதினால் அதை வெளியிட்டு கொண்டாடும் கம்யூனிஸ்ட் கட்சி என்னை கம்யூனிஸ்ட்டாகப் பார்க்கவில்லை; கீழ்ஜாதிக்காரனாகத்தான் பார்க்கிறது. எழுத்தையும் எழுத்தாளரையும் ஜாதியாகப் பார்க்கிற உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமுக மாற்றம், தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமை எதிர்ப்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

"ஊரார் வரைந்த ஓவியம்' வெளிவந்த பிறகு நீங்களும் உங்கள் குடும்பமும் எத்தகைய அச்சுறுத்தல்களை சந்தித்தீர்கள்?

என் புத்தகம் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து, காட்டுக்குள்ள வச்சி "காட்டுவிடுதியான் மவன் குணா எழுதின புத்தகம் நமக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்திடுச்சு. அதனால அவன கொண்ணு நடந்த தடம் தெரியாமே பண்ணிப்புடனும்னு' கூட்டம் போட்டுப் பேசியிருக்காங்க. இதை மாடு மேய்க்கப் போன இடத்தில் எங்க அம்மா கேட்டு விட்டு வந்து ஒப்பாரி வைச்சி அழுதுச்சி. பிறகுதான் என்னை என் குடும்பத்தோடு வெளியேற்றினார்கள். நான் என் மனைவியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு 3 மாதங்கள் தலைமறைவாக இருந்தேன். மனைவி, குழந்தைகளைக் கூட பார்க்க முடியவில்லை.நான் வெளியேறிய உடனே என் பெற்றோரை மிரட்டியிருக்கிறார்கள்.

உங்களை மிரட்டியவர்கள் யார்?

குளந்திரான்பட்டு (சி.பி.எம்.) கிளைச்செயலாளர், பஞ்சாயத்து தலைவர் தங்கராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கே. தங்கப்பா (சி.பி.அய். எம்.எல்.) மற்றும் ஏழு பேர் அடங்கிய குழுதான் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டுத் தள்ளி வைத்தது. அதுவரைக்கும் சி.பி.எம். கட்சியும் சி.பி.அய்.எம்.எல் கட்சியினரும் "பார்த்துக்குவோம் தோழா' என்று சொல்லியே சமாளித்தார்கள். எங்களை ஊரை விட்டு விரட்டியதில் முக்கியப் பங்கு இங்குள்ள சி.பி.எம்.க்கும், சி.பி.அய்.எம்.எல்.க்கும், கட்சித் தோழர்களுக்கும் உண்டு.

உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு எங்கப்பா எஸ்.பி. அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.ஆனால் அதற்குப் பிறகும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. இதுபற்றிய செய்திகள் ஆங்கில நாளேடுகளில் வந்த பிறகுதான் வெளியில் தெரியவந்தது. செய்தியைப்பார்த்ததும் "தலித்முரசு' மற்றும் "தமிழ்நாடு மாற்றுப்பத்திரிகையாளர் எழுத்தாளர் சங்கம்' என்னை சென்னைக்கு வரவழைத்து வழக்குரைஞர் சத்தியச்சந்திரன் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நாங்கள் மீண்டும் ஊரில் நுழைய அனுமதி வாங்கிக் கொடுத்தார்கள். நான் ஊருக்குத் திரும்பிய பிறகும் எங்கள் மீது சாதி இந்துக்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தினார்கள். அதில் கடும் பாதிப்புக்குள்ளாகி எங்கப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊரைவிட்டுப் போகவில்லை என்றால் சாதி இந்துக்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று எல்லாரும் கைவிரித்து விட்டார்கள்.

“புத்தகம் எழுதுனது உங்க கட்சிக்காரன். அணிந்துரை எழுதியது உங்க கட்சி மாவட்டச் செயலாளர். ஊரை விட்டு விரட்டுறதும் உங்க கட்சிக்காரங்க தான். இங்க என்னதான் நடக்குது''ன்னு எஸ்.பி. கேட்கிறார்.ஆக, இவர்கள் யாரும் கம்யூனிஸ்ட்டாக இல்லை.எல்லாரும் ஜாதியிஸ்டாக இருக்கிறார்கள்.இங்குள்ள சாதி இந்துக்கள் தீண்டாமையை மறைப்பதற்கு கம்யூனிஸ்ட் என்ற போர்வையை மூடிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்! உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மநுநீதிநாள் அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அது செய்தியாக வந்த பிறகுதான் காவல் துறை விசாரணைக்கு வருகிறது.

சூலை 12 அன்று புத்தகம் வெளியிட்டு, மூன்று மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி, கொலை வெறித்தாக்குதலுக்கு ஆளாகி, ஊருக்குள் வருவதற்கு நீதிமன்றத்தில் ஆணை வாங்கி வந்த பிறகும் எங்களை ஊரைவிட்டுத் தள்ளிதான் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள யாரும் எங்களிடம் பேசமாட்டார்கள். ஆனால் எங்கப்பா அடிவாங்கி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த மறுநாளே சி.பி.அய்.எம்.எல். கட்சி கந்தர்வக் கோட்டையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதானார். நான் இன்றுவரை சி.பி.எம். கட்சியில்தான் இருக்கிறேன். ஆனால் இந்தக் கட்சிகள் எங்களுக்காக இல்லை.

கட்சிக்குள்ளே எப்பொழுதுமே மைனாரிட்டி, மெஜாரிட்டி என்றுதான் பார்ப்பார்கள். நாங்கள் எப்பவுமே மைனாரிட்டிதான். பலர் கட்சிக்காக உழைக்கிறார்கள். சிலர் தரகு வேலை பார்த்து பிழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்காகத்தான் கட்சி வரிந்து கட்டிக் கொண்டு போராடுகிறது.இங்குள்ள தலித்துகள் எல்லாம் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறார்கள். கட்சிக்கு ஆள் தேவை, அவர்களின் வாக்குகள் தேவை, உழைப்பு தேவை. நான் உங்கள் தத்துவங்களை எல்லாம் கேள்வி கேட்டு புத்தகம் எழுதவில்லை. நாங்கள் சந்திக்கும் கொடுமைகளை அப்படியே எழுதினேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்?ஒரு கம்யூனிஸ்ட்டாக நான் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தால்தான் தவறு. ஆனால் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களால் இதை சீரணிக்க முடியவில்லை.

அண்மையில் த.மு.எ.க.ச. சார்பில் ஒரு கிளை மாநாடு இங்கு நடந்தது. ஆனால் என் நூல் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என் நூல் குறித்த விளக்கக் கூட்டத்தை இவர்கள் ஏன் நடத்தவில்லை?ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பிறகு கட்சி அல்லவா சமரசம் செய்து இணக்கமாக வாழ முயற்சி எடுத்திருக்க வேண்டும்?ஆனால் எதுவுமே நடத்தவில்லை.பெருமாள் முருகனின் "மாதொருபாகன்' நாவலை இந்து அமைப்பினர் எரித்த உடனே த.மு.எ.க.ச. உள்ளிட்ட அனைத்து எழுத்தாளர்களும் வீதிக்கு வந்து கண்டித்தார்கள். ஆனால் ஒரு கதை எழுதியதற்காக மூன்று மாதங்களாக ஊரைவிட்டே விரட்டப்பட்டிருக்கிறேன். எங்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடந்திருக்கிறது. ஆனால் கருத்துச்சுதந்திரவாதிகள் ஒரு சிறு அசைவைக்கூட ஏற்படுத்தவில்லை. பெருமாள் முருகனுக்கு ஒரு நீதி; குணாவுக்கு ஒரு நீதியா?

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் உடையப்பன், என்னுடைய நூல் வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை. அவரிடம் நூலைக் கொடுத்து 5 மாதங்கள் ஓடிவிட்டன. இதுவரை அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பரமக்குடி, உத்தப்புரம், தருமபுரி என எந்த மூலைமுடுக்கில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தது என்றாலும் கறம்பக்குடியில் கூட்டம் போட்டு வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் இங்குள்ள ஜாதி இந்துக்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டாங்க. ஏனெனில் அவனிடம் போய்த்தானே உண்டியல் ஏந்தணும். ஓட்டு கேட்கணும்.

இங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5 முறை டாக்டர் அம்பேத்கர் போட்டோவை ஜாதி இந்துக்கள் உடைத்திருக்கிறார்கள். நாங்கள்தான் புகார் மனு கொடுத்தோம். அதற்காக யாரும் போராட வரவில்லை.அம்பேத்கரை முன்னிறுத்தாமல் தீண்டாமை ஒழிப்பு குறித்து பேச நினைக்கிறார்கள். இத்தனை வருஷமாக நானும் எங்கப்பாவும் கட்சிக்காக உழைத்தும்; நானே கடன் வாங்கி, வீட்டைப் பதிப்பகமாக்கி, எதிர்ப்பையும் சந்தித்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

மற்ற ஜாதி எழுத்தாளர்களை தூக்கிப் பிடிப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியை அடிச்சுக்கவே முடியாது. அதுமட்டுமல்ல; இந்தப் பகுதியைச் சுற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. ஆனால் அவர்கள் தலித் விடுதலைக்குப் போராட மாட்டார்கள். வண்டியில் கொடி பறக்க விடுவார்கள், ஸ்டிக்கர் ஒட்டுவார்கள், மாட்டுப் பொங்கல் அன்று கொம்பில் கட்சி வண்ணம் பூசுவார்கள். ஆனால் ஆதிக்க சாதிகளை எதிர்த்து எதுவும் செய்ய மாட்டாங்க. ஜாதி இந்துக்களை கையெடுத்து கும்பிடும் பழக்கம்இன்றும் இருக்கிறது. ஆனால், தலித் விடுதலைஎன்பதுபேச்சளவில் தான் இருக்கிறது. இருப்பினும் அநீதியை எதிர்த்து எஞ்சியவரை போராடுவேன்.