பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரைத் தமது அறிவாயுதங்களாகத் தரித்து இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராக ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதியவர் இனியன் இளங்கோ.

ஏறத்தாழ நான்கு மாதங்களாகின்றன, மருத்துவர் இனியன் இளங்கோ மறைந்து. எனக்கும் அந்தச் செய்தி மிகத் தாமதமாகவே வந்து சேர்ந்தது. நண்பர்கள் சொல்லியிருப்பார்கள் என்று "தலித் முரசு' ஆசிரியர் நினைத்திருக்கிறார். ஆனால் யாரும் சொல்லவில்லை. கடைசியில் அவர் மூலமே தகவல் தெரிய வந்தது.

இனியன்இளங்கோவின் இறப்புக்குப் பின் எனக்கு வேண்டிய அய்வர் இறந்து போனார்கள். எங்கள் குடும்பத்தில் முதல் தலித் மாப்பிள்ளையாக வந்த சந்திரசேகரன் என்னும் அற்புதமான மனிதர், 59 ஆவது வயதில் மாரடைப்புக்குப் பலியானார். அந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் எங்கள் குடும்ப நண்பரும் ஆய்வாளரும் பேராசிரியரும் திராவிட அறிஞருமான எம்.எஸ்.எஸ். பாண்டியன் 56 ஆம் வயதில் சாவை வரவழைத்துக் கொண்டார். டிசம்பர் தொடக்கத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த மாபெரும் மனித உரிமைப் போராளி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைந்தார். இதற்கிடையே என்னால் மிகவும் மதிக்கப்பட்டு வந்த பெண்ணிய முற்போக்கு எழுத்தாளர், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பரிவும் பாசமும் கொண்டிருந்த ராஜம் கிருஷ்ணன் காலமானார். ஓவிய விமர்சகர் தேனுகாவும் அகால மரணமடைந்தார். ஆக, கடந்த நான்கு மாதங்கள் என்னைப் பொருத்தவரை சாவு மாதங்களாக இருந்து விட்டன.

எம்.எஸ்.எஸ் பாண்டியனுக்கும் வி.ஆர். கிருஷ்ணய்யருக்கும் எற்கனவே இரங்கலுரை எழுதிவிட்டேன். இந்த ஆண்டு முடிவதற்குள் இன்னும் எத்தனை இரங்கலுரைகள் எழுத வேண்டியிருக்குமோ என்னும் அச்சம் என்னைக் கவ்வியுள்ளது.

இனியன் இளங்கோவின் மறைவுச் செய்தி எந்தத் தமிழ் நாளேட்டிலும் வெளிவரவில்லை. அவர் எழுதிய பல ஆங்கிலக் கட்டுரைகளை வெளியிட்டு வந்த countercurrents.org என்னும் இணைய தளத்தில் அவரைப் போலவே ஏறத்தாழ அதே கருத்துகளையே எழுதிவந்த (வரும்) தமிழ் இளைஞர்கள் யாரேனும் எழுதுவார்கள் என்று காத்திருந்தேன். எனது கட்டுரைகளை வெளியிடும் ஏடுகளை நடத்துபவர்களுக்கு இனியன் இளங்கோ யார் என்றே தெரியவில்லை.

எனக்குமே, நான் சென்னையிலிருந்த காலத்தில் அவருடன் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பழக்கம்.2002 இல் நான் சென்னையிலிருந்து வந்த பிறகு புனித பாண்டியன் போன்ற நண்பர்களிடம் ஓரிரு முறை அவர் நலம் விசாரித்ததுண்டு.அவ்வளவுதான். அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு மேல் அவர் இங்கிலாந்தில் இருந்தது தெரியும். இரண்டாண்டுகளுக்கு முன் இணையதளத்தில் அவரது கட்டுரைகள் வெளிவரத்தொடங்கியதைக் கண்டதும், பெரியாரைக் கொச்சைப்படுத்தும் இயக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்ததை அவர் சற்றுத் தாமதமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரைத் தமது அறிவாயுதங்களாகத் தரித்து, இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராக ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதியவர் இனியன் இளங்கோ. இங்கிலாந்தில் இருந்த காலத்திலும் தமது வலைத்தளத்தில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு பால்வினை நோய்கள், உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றிற்கான சிகிச்சை வழங்கும் சிறப்புப்பட்டயங்கள் பெற்றவர். எய்ட்ஸ் நோய் பற்றியும் நல்ல புத்தகமொன்றை எழுதியுள்ளார். 1992 இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதன் பின்னணி பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்கள் எழுதி தமது சொந்தச் செலவில் வெளியிட்டிருக்கிறார் என்பது எனக்குப் புதிய செய்தி. அப்போது அவர் எந்த இயக்கத்திலோ, கட்சியிலோ இருக்கவில்லை.

அவரது தாயார் அனுசூயாராமன் பெரியார் மரபைச் சேர்ந்த பெண்மணி. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இன்றுவரை உறுதியான பகுத்தறிவாளர்.அனுசூயாவின் தந்தையார் திராவிடர் கழகச் செயல்வீரர். அனுசூயாவின் கணவர் இனியன் இளங்கோவின் தந்தையார் ராமன் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ்நாடு அரசாங்கப் பொதுப் பணித்துறையில் பொறிஞராக இருந்தவர். தமிழக கிராமங்களிலும் நகரங்களிலுமுள்ள குடிதண்ணீர்த் தொட்டிகளை வடிவமைப்பதில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.

1990 களின் இறுதியில் தான் இனியன் எனக்குப் பழக்கமானார்.அயோத்திதாசர், பெரியார், சுயமரியாதை இயக்கம், இந்துத்துவம் ஆகியன பற்றிப் பல ஆண்டுகள் ஏராளமாக எழுதித் தளர்ந்து போயிருந்தேன். இனியன் இளங்கோ அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் என்னிடம் பேசுவார். சிலசமயம் அது உற்சாகம் தரும், சில சமயம் சோர்வை உண்டாக்கும். ஆங்கிலத்தில் புலமையுள்ள, தமிழில் நன்றாக எழுதக்கூடிய அவரைப் போன்றவர்கள் என்னைப் போன்றவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியதுதானே என்று கூறுவேன்.

ஆனால் இதில் அவரால் முனைப்பாக அப்போது ஈடுபட முடியாததற்குக் காரணம் ஈழப் பிரச்சினையில் அவர் கூடுதலான ஈடுபாடு கொள்ளத் தொடங்கியதுதான். அம்பேத்கரிய, பெரியாரியக் கருத்துகளைப் பரப்புதல், ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை புரிதல் ஆகிய இரண்டு செயல்பாடுகளுடன் நின்று கொள்ளுமாறு நான் அவருக்கு அறிவுறுத்துவேன்.

ஈழப் பிரச்சினையைப் பேசுவதையும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதையும் தொழிலாகக் கொண்டிருந்த சிலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்ததை அறிவேன். இவர்களால் ஈழத்தமிழர்களுக்கோ, விடுதலைப் போராளிகளுக்கோ ஆக வேண்டியது ஒன்றுமில்லை. ஆனால் உங்களுக்குத் தொல்லை ஏற்படப் போவது உறுதி என்று ஒரு முறை எச்சரித்தேன். நான் சொன்னதுதான் நடந்தது. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பெண் மருத்துவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சென்னைக்கு வந்திருந்தார். மருத்துவர் என்னும் முறையில் தாமும் அவரைச் சந்தித்துப் பேச விரும்புவதாக இனியன் இளங்கோ கூறினார். ஆனால் எப்போது அந்த சந்திப்பு நடந்ததோ தெரியவில்லை.சில நாட்களுக்குப் பிறகு நாளேடுகளில் வந்த செய்தி எனக்குத் திகைப்பை உண்டாக்கியது.

அதாவது, அந்தப் பெண் மருத்துவர் விடுதலைப் புலிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்து மருந்துகள் திரட்டிக் கொடுக்க ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்ததாகவும் அதற்கான திட்டம் சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் சில விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஆகியோரால் வகுக்கப்பட்டதாகவும் அந்தத் திட்டத்தைத் தமிழக காவல் துறையினர் உளவறிந்து முறியடித்ததுடன் அந்தப் பெண்மணி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறியது. கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இனியன் இளங்கோவின் பெயரும் இருந்தது.

அந்தப் பெண் மருத்துவர் ஆஸ்திரேலிய அரசாங்கத்தில் குடியுரிமை பெற்றிருந்தவர் என்பதால் இந்தியாவிலுள்ள ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகளே தலையிட்டு, அவரை விடுதலை செய்ய வைத்து அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டனர். அப்படிப்பட்ட செல்வாக்கு இனியன் இளங்கோவுக்கு இல்லையே. தேவையே இல்லாமல் சில மாதங்கள் சிறையில் இருந்து விட்டு உடல் தளர்ந்து வெளியே வந்தார். சில நாட்களுக்குப் பிறகு என்னைச் சந்தித்த அவர் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சிலரின் பெயர்களைச் சொல்லி, இந்த மாதிரியான ஆட்களா அய்யா விடுதலைக்கு உதவப் போகிறõர்கள் என்றார். அத்தகையவர்களை எனக்கு நீண்டகாலமாகவே தெரியும். அதனால்தான் அவர்களது சகவாசம் வேண்டாம் என்று உங்களை எச்சரித்தேன் என்று கூறினேன். சிறைவாசத்தையல்ல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த மனிதர்களின் பொறுப்பற்ற தன்மைதான் தமக்கு ஏற்பட்ட மிகக் கசப்பான பாடம் என்றார் இனியன் இளங்கோ.

அவருமே மருத்துவர் என்னும் வகையிலோ அம்பேத்கரிய, பெரியாரிய கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றலுடையவர் என்னும் முறையிலோ தமக்குக் கிடைத்த நல்வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பெற்றோர்களின் செல்லப்பிள்ளை. பாட்டனாரும் பாட்டியும் விட்டுச் சென்ற சொத்துகள் இன்னும் கூடுதலான செல்லம் கொடுத்து அவரை வளர்த்திருந்தன. இரவு 2 மணி வரை கணினிக்கு முன் அமர்ந்து எதையாவது படிப்பது, காலை 11 மணிக்கு எழுவது, மருத்துவத் தொழிலை ஒழுங்காகச் செய்யாதது, அய்.நா. அவை ஜெனீவாவில் நடத்திய மனித உரிமை மாநாடொன்றில் கலந்து கொண்ட பிறகு தமிழ்நாட்டுக்குத் திரும்பி வராமல் பத்தாண்டுகள் இங்கிலாந்தில் கழித்தது, இவையெல்லாம் தமிழ்ச் சமுதாயத்துக்கு அவரால் செய்திருக்க வேண்டிய கடமைகள் பலவற்றைத் தடுத்து விட்டன.

இந்த எதிர்மறைக் கூறுகளைக் கடந்து அவர் சாதி ஒழிப்புக் கருத்துகளை,இந்துத்துவ பாசிச எதிர்ப்புக் கருத்துகளை தலித் முரசில் மட்டுமின்றி இணையதளங்களில் ஆங்கிலத்திலும் எழுதி வந்ததுடன் தலித் முகமூடி தரித்த பார்ப்பனர்களையும் பார்ப்பனர்களின் அங்கீகாரம் பெற்றுள்ள தலித்துகளையும் அம்பலப்படுத்தி வந்தார். இனியன் இளங்கோவும் எம்.எஸ்.எஸ். பாண்டியனும் தங்கள் சாவைத் தாங்களாகவே வரவழைத்துக் கொண்டதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்கள் இந்தக் கூட்டணியினர்தான். ஆக, இந்த இரு அறிஞர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் கருதிப் பாடுபடுவோருக்கு உள் உந்துதல் தருவதைப் போலவே, வாழ்க்கையை அவர்கள் ஒழுங்காக அமைத்துக் கொள்ளாதது ஓர் எச்சரிக்கைப் பலகை போலப் பயன்படட்டும்.