தலையங்கம்

“மக்கள் நலத்திற்கான கொள்கையைக் காக்க வேண்டும் என்றால், நீதிமன்றத்திற்கு மதிப்பு இருக்கக்கூடாது. அரசாங்கம் போட்ட சட்டம், கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்களால் செய்யப்படுகிறது. அது தப்பு என்றால், கோடிக்கணக்கான மக்கள் அளித்த ஓட்டுக்கு என்ன மரியாதை? இவன் யார் தப்பு என்று சொல்லுவதற்கு?... அரசாங்கம் செய்த சட்டத்தைத் தப்பு என்று சொல்ல இவன் யார்? இவன் அவனிடம் சேவகம் செய்கிறவன் தானே! ஆகவே, இப்படித் தீர்ப்பு செய்யும் உரிமை அவனுக்கு இருக்கக் கூடாது.''

பெரியார், 'விடுதலை' 25.4.1964

இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு, வரலாறு நெடுக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவேதான், அவர்களுக்கு சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் பூர்வீகக் குடி மக்களுக்கு சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டதால் அதன் காரணமாகவே இந்நாட்டை ஆளும் உரிமையையும் அவர்கள் இழந்தனர். தங்களின் சொந்த நாட்டை நிர்வகிப்பதில் அவர்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்பதால், அரசு வேலைவாய்ப்பிலும் அதற்கு வழிகோலும் கல்வியிலும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.

நாடு விடுதலை பெற்ற இந்த 58 ஆண்டுகளில், பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான உரிமைகள், எந்தளவுக்கு மக்களைச் சென்றடைந்தன; அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்டன என்பது குறித்து இதுவரை, நீதிமன்றங்கள் கவலை தெரிவித்ததில்லை. ஆனால், இந்த உரிமைகளுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மநுதர்மம்தான் சாதி அடிப்படையிலான முதல் இடஒதுக்கீடு. ஆனால், இதுவரை எந்த நீதிமன்றம் இதைக் கேள்வி கேட்டதில்லை!

நீதித் துறையில், மார்ச் 1993 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மொத்தம் உள்ள 547 நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகள் பதவிகளில் தலித்துகள் 13 பேரும் (2.38%), பழங்குடியினர் 4 பேரும் தான் (0.73) இருந்தனர். மார்ச் 1982 இல் மொத்தள்ள 325 பதவிகளில் தலித்துகள் 4 பேர்தான் (1.23%); பழங்குடியினர் அறவே இல்லை. ஆனால், இதைக் கண்டிக்காத ஜனநாயக அமைப்புகள் இதைச் சரிசெய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை எழுப்பும்போது மட்டும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக ஊளையிடுகின்றன.

அண்மையில் வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பை, மக்கள் மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பியுள்ளன. ஆனால், இதுபோன்ற தீர்ப்புகளைக் கண்டிப்பதுடன் நாம் நின்றுவிடக் கூடாது. இத்தகைய தீர்ப்புகளுக்கு ஆதாரமாக இருக்கும் இந்து சமூக அமைப்பைத் தகர்க்காமல், அதன் வெளிப்பாடுகளை மட்டும் கண்டிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

இடஒதுக்கீடு, மநு தர்மத்தின் சாதி அமைப்பைத் தலைகீழாக மாற்றுகிறது. அதனால்தான் பிறவி ஆளும் வர்க்கத்தினர் இதற்கு ஓயாமல் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இடஒதுக்கீட்டின் மூலமே, அம்பேத்கர் குறிப்பிடும் அடிமை வகுப்பினரான (Service Classes) தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்நாட்டின் உயர்பதவிகளை எட்ட முடியும்; கல்வியின் சிகரத்தைத் தொட முடியும். அதுமட்டுமல்ல, மூன்று சதவிகிதமே இருக்கும் பார்ப்பனர்கள், நாட்டின் பெரும்பான்மைப் பதவிகளை ஆக்கிரமித்திருக்கும் அநீதிக்கும் கல்லறை எழுப்ப முடியும். எனவேதான் இடஒதுக்கீட்டுக் கொள்கை, ஆதிக்கவாதிகளைப் பெரிதும் அச்சுறுத்துகிறது.

இந்த நாட்டில் அரசுப் பணியிடங்கள் என்பது, இரண்டு சதவிகிதத்திற்கு மேல் இல்லை. ஆனால், இவைதான் நாட்டைக் கட்டுப்படுத்தும் அதிகார மய்யமாக செயல்படுகின்றன. சட்டமன்றங்கள்/நாடாளுமன்றம், அரசு எந்திரம், நீதித்துறை மற்றும் பத்திரிகைகள் ஆகியவைதான் மக்களாட்சியின் மிக முக்கிய தூண்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால், நாட்டை இயக்கும் இம்முக்கிய கேந்திரங்களில் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், அவர்களுடைய விகிதாச்சாரத்தின்படி இல்லை என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை. சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் மட்டுமே பிரதிநிதித்துவம் இருக்கிறது. மற்ற துறைகளிலும் பெரும்பான்மை மக்கள் வந்துவிடக்கூடாது என்பதால்தான் நீதிமன்றங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குகின்றன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் போதெல்லாம் அதற்கு அரணாக நின்று அதை ஆதரிப்பவையாக பத்திரிகைகள் இருக்கின்றன. "இந்து' ஏடு சமூக நீதிக்கு எதிராக பச்சைப் பார்ப்பனியத்தைக் கக்கியுள்ளது.

ஆக, அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற உரிமைப் போர் முன்பு எப்போதைக் காட்டிலும் தற்பொழுது வெடித்துக் கிளம்ப வேண்டும்.