சூலூர் வரலாற்று நூலுக்கு முன்னோடியான – ஊர் வரலாறுகள் உள்ளன; வாழ்வியல் வரலாறுகள் இல்லை.

வாழ்வியல் வரலாற்று நூல் வரிசையில் தமிழ் நாட்டின் முதல்முயற்சி – முன்னோடி நூல் – சூலூர் வரலாறுதான்!

ஓர் ஊரை மையப்படுத்தி, அவ்வோர் தொடர்பான மக்கள் வாழ்வியலின் பலமுனைச் செய்திகளையும் சமூகவியல் பார்வையோடு வழங்கும் பணியை சூலூர் வரலாறு தொடங்கி வைத்துள்ளது. எதிர்காலத் தமிழகத்தில் இப்பணி இன்னும் வேர்விட்டுக் கிளை பரப்பும் என நம்பலாம்.

sulurசிற்றூர் கலைச் செய்திக் களஞ்சியங்கள் என வாழ்வியல் வரலாற்றும் முயற்சியைத் தமிழக அரசே அறிவித்ததும் உண்டு; செய்திகள் தொகுக்கப்பட்டதும் உண்டு. ஏனோ, அவை நூலாக வெளிவரவில்லை.

சென்னை, மதுரை, நெல்லை, முகவை – இந்த நான்கு மாவட்டங்களில் சிற்றூர்க் கலைச் செய்திக் களஞ்சியங்கள், தொகுக்கப்பட்டன: வல்லுநர் குழுவிற்கும் அனுப்பப்பட்டன. அவை வெளியுலகை எட்டிப்பார்க்காத காரணம் புலப்படவில்லை.

தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்தளிக்கும் தமிழ் நாட்டரசின் முயற்சியில் – இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும் எதிர்காலத்தை வடிவமைக்கவும் கடந்த காலச் செய்திகளே கைகொடுக்கும்.

தமிழருக்கு வரலாற்று உணரவில்லை என்னும் பழிச்சொல் வராமல் பாதுகாப்பது – இன்றைய அறிவாளர்களின் கடமை.

ஊர் வரலாறு என்ற வகையில் இது வரை சில நூல்கள் வெளிவந்துள்ளன.

செந்தலை வரலாறு - எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்
பூளைமேடு - அ.கி. நாயுடு
சென்னை மாநகர வரலாறு - மா.சு. சம்பந்தன்
கோலார் தங்கவயல் வரலாறு - கே.எஸ். சீதாராமன்
கோவை மாநகர வரலாறு - சக்தி தேவி
அன்னூர் வரலாறு - க.அ. புவனேசுவரி
மாகி வரலாறு - சி.எஸ். முருகேசன்
இதுவோ எங்கள் கோவை - கோவை கிழார்
அரிக்க மேடு அகழ்வாய்வு - சு.தில்லைவனம்
வரலாற்றில் வளவனூர் - இலட்சுமிமூர்த்தி
நெஞ்சை அள்ளும் தஞ்சை - புலவர் செ. இராசு
பேருர் - அரங்க. பூங்குன்றன்
தருமபுரி வரலாறு - பெ. பெரும்பாக்கன்

ஊர் வரலாறு என்ற அடிப்படையில், பண்டைய அரசியல் வரலாற்றுக் தொகுத்துக் கூறும் நூல்களே இவற்றில் மிகுதி பூளைமேடு வரலாறு, இதுவோ எங்கள் கோவை, கோலார் தங்கவயல் வரலாறு – மூன்றும் வாழ்வியல் வரலா ற்றுச் சாயலுடையவை.

மக்களின் பொருளியல், சமுதாயவியல், பண்பாட்டியல் தொடர்பான வரலாறுகளை விரிவாகத் தொகுத்தளிக்கும் முயற்சி – சூலூர் வரலாறு என்னும் இந்த நூலிலிருந்து தான் தொடங்குகிறது.

------------------------

“பெரியார் மாவட்டத்தின் சமுதாய வரலாற்றை எழுதுவதே என் வாழ்க்கைப் பணியாகும். அரசியல் வரலாற்றைக் காட்டிலும் பொருளாதார, சமுதாய, பண்பாட்டு வரலாறுதான் மக்களுக்குத் தேவையான ஒன்றாகும்.”

அறிஞர் கு.ச. ஆனந்தம் 15.1.1994 ஆம் நாள், பெரியார் மாவட்டக் கலை இலக்கியக் கூட்டமைப்புத் தொடக்கவிழாவில் இவ்வாறு அறிவித்துள்ளார். (வளரும் தமிழ் உலகம் – சனவரி 94).

இது போன்ற அறிவிப்புகளும், அவற்றுக்கான முயற்சிகளும் – சூலூர் வரலாறு நூலைக் கண்டபின் இன்னும் மிகுதி பெறவும் வேகம் பெறவும் வாய்ப்பு உண்டு.

தமிழ்நாட்டின் பல துறைகளுக்குத் தலைமை தாங்கும் கோவை – வரலாற்றுத் துறையிலும் வழிகாட்டியாக உள்ளது.

கொங்கு நாட்டின் மண்வரலாறு – கோவை கிழார் எழுதிய கொங்குநாட்டு வரலாறு என்னும் நூலாக வெளி வந்துள்ளது. கொங்குநாட்டு மக்கள் வரலாறு – பாரதியார் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கொங்கு நாட்டியல் என்னும் நூலாக உருவெடுத்துள்ளது.

கோவை நகரின் பல துறைவளர்ச்சியைச் சுருங்கக் கூறும் அறிய நூலாக கோவை கிழாரின் இதுவோ எங்கள் கோவை 1952 இலேயே வெளிவந்துள்ளது. ஊர் வரலாற்று வரிசையில் முதல் முயற்சியாக, கோவை மாவட்டத்தின் பூளைமேடு வரலாறு வெளிவந்துள்ளது.

கொங்கு நாட்டு வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிய பணியில் – கோவை வானொலி நிலையமும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

கோவை வானொலி நிலையப் பொன் விழா மலராக வெளிவந்துள்ள தமிழ்மணம் – கொங்கு நாட்டு வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் நல்ல தொகுப்பு நூல்.

கொங்கு நாட்டுப் பண்பாட்டுப் படிவங்கள் என இப்போது (1995) வானொலியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் – நூலாக வெளிவரும் பொது – வரலாற்றிற்கு வளம் சேர்க்கவல்ல அரிய தொகுப்பாய் அமையும்.

சமகாலத் தமிழக வரலாற்றைத் தெளிவுபடுத்தும் நூல்கள் அண்மை நாளாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி (வே. ஆனைமுத்து)
மனித இன வரலாற்றில் பெரியார் பேணிய அடையாளம் (கு.வெ.கி.ஆசான்)
திராவிட தேசியும் தமிழ் தேசியமும் – குணா

நவீன காலத்திற்குள் தமிழகம் நுழைந்த வரலாற்றை விளக்கும் – ஏராளமான குறிப்புகள் இந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன.

அண்மைக் கால நடப்பு வரலாற்றை ஆழத்தோடும் கூர்மையோடும் வெளிப்படுத்தும் முயற்சி இப்போது பெருகி வருகிறது.

அறந்தை நாராயணன்
அ.மா.சாமி
அருணன்
க.திருநாவுக்கரசு
வே. ஆனைமுத்து
பெ.சு. மணி
புலவர் இரா. இளங்குமரன்
ரண்டார்கை
விடுதலை க. இராசேந்திரன்
ரகமி
கோ. கேசவன்
என். ராமகிருஷ்ணன்
மா.சு. சம்பந்தன்
ஆ.இரா. வெங்கடாசலபதி

சமகால வரலாற்றைத் தெளிவுபடுத்தும் முன்னணி ஆய்வாளர்களாக, இப்படிப் பலர் உருவாகியுள்ளனர்.

வரலாற்றுணர்வோடு செய்திகளைப் பதிவு செய்யும் அரசியல் தலைவர்களும் உள்ளமை – இந்நூற்றாண்டின் புதுமை.

கலைஞர் மு.கருணாநிதி, ம.பொ. சிவஞானம் இருவரும் – வரலாற்றாசிரியர்களாய்த் திகழும் அரசியல் தலைவர்களில் முன்னனி இடத்திற்கு உரியோர்.

கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி (மூன்று தொகுதிகள்) ம.பொ.சி. எழுதிய விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழகத்தில் பிற மொழியினர் முதலிய நூல்கள் – வரலாற்றின் தனி மனிதச் சாதனைகளாக எதிர்காலத்தில் வியக்கப்படும்.

வளர்ச்சியும் மாறுதலும் நொடிதோறும் நிகழ்ந்து வரும் இன்றைய சூழலில் – ஆண்டு வாரியான வரலாற்றுப் பதிவுகளும் இன்றியமையாதவை. மலையாள மனோரமா இதழ் இவ்வகையான வெளியீட்டை 1991 முதல் வெளியிட்டு அரும்பணியாற்றி வருகிறது. ‘மனோரமா இயர்புக்’ என்னும் பெயரில் இதுவரை ஆண்டு நூல் களஞ்சியங்கள் அய்ந்து வெளிவந்துள்ளன.

தினத்தந்தி பொன் விழாவை ஒட்டி வெளியான வரலாறு படைத்த தினத்தந்தி (1992) என்ற வெளியீடும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஊர் வரலாறு என்ற முறையில் மிகச் சில நூல்களே வெளியாகி உள்ளன.

சூலூர் வரலாறு – ஆறாண்டு

சூலூர் வரலாறு 1989இல் தொடங்கப்பட்டது; ஆறாண்டு கால உழைப்பிற்குப் பின்பே நூல் வடிவைக் கண்டுள்ளது. வேறுவகையான நூல்களாயிருப்பின் – இந்த ஆறாண்டில் இருபது முப்பது நூல்களை உருவாக்கி இருக்க முடியும்.

கடும் உழைப்பை உணவாகத் தந்தால் மட்டுமே – வரலாறு கைநீட்டுகிறது. வாழ்வியல் வரலாறாய் உருவான சூலூர் வரலாறு – கூட்டு முயற்சி காரணமாக ஆறாண்டிற்குள் உருவம் பெற்று விட்டது.

காரல் மார்க்சு ‘மூலதனம்’ நூல் எழுத 17 ஆண்டுகள் தேவைப்பட்டதாம். கிப்பன் ‘ரோமப் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும்’ எழுதி முடிப்பதற்கு 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டனவாம். ஆடம்சுமித்து ‘நாடுகளின் செல்வம்’ நூல் எழுத 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம். காரல் காண்டுபர்க்கு 'ஆபிரகாம் லிங்கன் வரலாறு' நூலை 30 ஆண்டுகளுக்குப் பின்பே முடிக்க முடிந்ததாம். சிங்காரவேல் முதலியார் ‘அபிதான சிந்தாமணி’ எழுதி முடிக்க 12 ஆண்டுகள் ஆயினவாம். பொன்னீலன் ‘புதிய தரிசனங்கள்’ புதினம் எழுதுவதற்குள் 14 ஆண்டுகள் கடந்து விட்டனவாம். ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ நூல் எழுத, மறைமலையடிகளார் 24 ஆண்டுகளைச் செலவிட்டாராம்.

சூலூர் பாவேந்தர் பேரவை சூலூர் வரலாறு தொகுத்து முடிக்க எடுத்துக் கொண்ட காலமோ – ஆறு ஆண்டுகள்! கூட்டு முயற்சி காரணமாக, குறுகிய காலத்தில் நூலை அணியமைக்க முடிந்தது.

பேரவைத் தோழர்களின் கூட்டு முயற்சியில் செய்திகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஒழுங்கு செய்து நூலாக்கும் பணியைச் செந்தலை ந. கவுதமன் மேற்கொண்டார். தனிமனித முயற்சியாக சூலூர் வரலாறு தொகுக்கப் பட்டிருந்தால், இன்னும் பல ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கும்.

நூலுக்கு இடம் பெறுவது இரண்டு வரியாக இருந்தாலும், அந்த இரண்டு வரிக்காகப் பல நாள்களைப் பலியிட்டுப் பேரவைத் தோழர்கள் அலைந்த நிகழ்ச்சிகளை, அருகிலிருந்தோர் மட்டுமே அறிவர். பாவேந்தர் பேரவைத் தோழர்களின் ஒன்றுபட்ட முயற்சியில் உருவான சூலூர் வரலாறு பல்வேறு பட்டறிவுகளை வழங்கியது.

* * * * *
ஈரான் நாட்டு வணிகம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் சூலூரில் நடந்தது என ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்த குறிப்பைக் கண்டு எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. உரோமானிய வணிகம் மட்டுமல்ல ஈரானிய வணிகமும் சூலூரில் நடந்துள்ளதே! அதுவும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில்! சொல்பவர் ஆய்வாளராயிற்றே. செய்தியை நம்பினோம். இந்தச் செய்திக்கு ஆதாரமாக ஆய்வாளர் காட்டிருந்த வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய ஆங்கில நூலைத் தேடி அலைந்தோம். நல்ல வேளை! மூலநூல் கிடைக்காவிட்டாலும் (புலவர் கா. கோவிந்தன் மொழி பெயர்த்த) மொழி பெயர்ப்பு நூல் கிடைத்தது. அதில் ஈரானைக் காணோம்! எரான் எனும் நாணயவகை மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. எரான் என்னும் நாணயப் பெயரை, ஈரான் என்னும் நாட்டுப் பெயராக அந்த ஆய்வாளர் மொழிபெயர்த்திருந்த ‘பொறுப்புணர்ச்சி’ அப்போது தான் புரிந்தது.

‘சூலூர் தந்தது – ஈரான் நாட்டு வணிகம் அல்ல! எரான் வகை நாணயம்’! மொழி பெயர்ப்பு நிகழ்த்திய குழப்பத்திலிருந்து நாங்கள் விடுபட, வெகுநாள் முயற்சி தேவைப்பட்டது. (காண்க : ஏடு போற்றும் சூலூர்)

சூலூர் வரலாறு தொடர்பான தொடர் சொற்பொழிவுகளை – தொல் பொருள் ஆய்வாளர்கள் அரங்க பூங்குன்றன், ஐ. இராமசாமி, அ. செல்வராசு, இரா.ப. கருணானந்தன் நால்வரும் சூலூர் வந்து வழங்கினர். சூலூர் வரலாற்றுக் கருத்தரங்கம் எனப் பாவேந்தர் பேரவை அவர்களைக் கொண்டு பல தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியது.

சூலூர் பற்றிய ஒரு சொல் இருந்தாலும் போதும். சூலூர் தொடர்பான எல்லா நூல்களையும் திரட்டிவிட வேண்டும் என விரும்பினோம். நூல்களைத் தேடத் தொடங்கினோம். செய்தி இருக்குமோ என அய்யுற்ற எல்லா நூல்களையும் வாங்கிக் குவித்தோம். பல நூறு புத்தகங்களை எழுத்து எழுத்தாகப் படித்துப் பார்த்தோம். பல நூறு நூல்களில் சில பத்து நூல்களே தேறினே.

சூலூர் பற்றிய செய்திகளைச் சுமந்து நிற்கும் அறுபத்து மூன்று நூல்களும் இதழ்களும் கிடைத்தன. செய்திகளுக்கு ஆதாரம் காட்டுவதாக அவற்றைப் பயன்படுத்துவதே முறை.

ஆய்வு நூல் தோற்றத்திலிருந்து சூலூர் வரலாறு விலகி நிற்க வேண்டுமென விரும்பினோம். ஊர் வரலாற்றுச் செய்திகளை, ஊர் மக்கள் அறிந்து கொள்வது தானே முதன்மை.

சூலூர் வரலாறு ஆய்வு நூலாக அமைந்துவிட்டால் – மக்கள் விலகி நின்று அச்சத்தோடு பார்ப்பார்களோ என அஞ்சினோம். மிகவும் எளிமையாக அமைந்துவிட்டால் – ‘ஆசை’யில் உருவான நூலாக ஆய்வுலகம் ஒதுக்கிவிடுமோ என்றும் கவலைப்பட்டோம்.

இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் – எல்லோரையும் சென்றடையும் வண்ணம் சூலூர் வரலாற்றை உருவாக்க முனைந்தோம்.

சூலூர் பற்றிய நூல் செய்திகளை ஏடு போற்றும் சூலூர் எனத் தனித் தலைப்பாகத் தந்துள்ளோம். பொதுமக்களுக்கு அது அறிமுகப்பகுதி! ஆய்வாளருக்கு அது அடிக்குறிப்புப் பகுதி! இரண்டின் சாயலும் அதில் கலந்து நடக்கக் காணலாம்.

சூலூர் பற்றித் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதியுள்ளார் எனச் சிலர் செய்தி தந்தனர். நானும் படித்திருக்கிறேன் என்று சிலர் சொன்னார்கள். என்ன எழுதியிருக்கிறார் என்பதைச் சொல்ல யாரும் இல்லை.

திராவிட நாடு இதழில் ‘தம்பிக்கு’ கடிதமாகச் சூலூர் பற்றி அண்ணா எழுதியுள்ளார். தம்பிக்கு கடிதத் தொகுப்பில் அக்கடிதம் இருக்குமே! இதழையும் நூலையும் தேடித் தேடிச் சலித்தோம். இரண்டுமே கிடைக்கவில்லை.

சூலூரிலிருந்து சுடலையூர் வரை என்பது அக்கடிதத்தின் தலைப்பு எனக் கூறினர். இது மட்டுமே நாங்கள் அறிந்த உச்சநிலைச் செய்தி.

நூலை வெளியிட்டுள்ள, சென்னை பாரிநிலையம் சென்றே பார்த்து விட்டு வந்துவிடுவோம். சூலூர் பற்றி அண்ணா எழுதியுள்ள செய்தியாயிற்றே! அது இல்லாமல் என்ன சூலூர் வரலாறு?

சென்னை சென்று, பாரிநிலையம் புத்தகக் கடையில் செய்தியைச் சொன்னோம். அண்ணா எழுதிய தம்பிக்கு தொகுப்புகள் அனைத்தும் எங்கள் முன் அடுக்கி வைக்கப்பட்டன.

பாரிநிலையத்தில் அமர்ந்தபடி, சூலூர்... சூலூர்... என பக்கம், பக்கமாக விழிகளால் தாவினோம். ஊகூம்... எந்தத் தொகுப்பிலும் சூலூரைக் காணோம். சென்னைக்கு வந்ததும் கிடைக்காத செய்தியை, இனி எங்கே போய்த் தேடுவது ? ஏமாற்றமும் வருத்தமும் எங்களைத் தொடர்ந்தன.

சென்னை குறளகம் சென்று தமிழ்நாட்டு அரசு வெளியிட்டுள்ள ‘தொல் பழங்காலம்’ நூலை வாங்கினோம்.

சூலூர் பற்றி அண்ணா எழுதிய செய்தி கிடைக்காத வருத்தத்துடன், தொடர் வண்டியில் சோர்வாக ஏறி அமர்ந்தோம்.

தொல் பழங்காலம் நூலைப் புரட்டியபடி, கையும், கண்ணும் அசைந்து கொண்டிருந்தன, சென்னையிலிருந்து கோவை நோக்கித் தொடர்வண்டி பறந்து கொண்டிருந்தது. அதைவிட அதிகமான வேகத்தில் மனம் பறக்கத் தொடங்கிய வியப்பு அப்போதுதான் நடந்தது.

தொல் பழங்காலம் நூலில் சூலூர் பற்றிய செய்தி இருக்கும் என நாங்கள் நம்பவில்லை. நம்பாதது நடக்கும் போது, மனம் பறக்கத் தானே செய்யும்! சூலூரின் தொன்மை பற்றிய செய்தி ‘தொல் பழங்காலம்’ நூலில் இடம் பெற்றிருந்தது.

சூலூர் பற்றி – எதிர் பார்த்த செய்தி கிடைக்காமல் போனாலும் இன்னொரு செய்தியாவது கிடைத்ததே! சென்னை அலைச்சல் வீண் போகவில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டோம்.

(திருப்பூர் க.நா. சங்கரன் அவர்களின் நூலகத்திலிருந்து) கோவை யாழ் நூலகம் துரை மடங்கன் – அண்ணாவின் சூலூர் செய்தி கிடைக்கக் காரணமாயிருந்த நிகழ்ச்சி, அதற்குப் பின் நிகழ்ந்தது.

கிளிக்குப் பச்சை பூசுவதா – என்று திராவிடநாடு இதழில் அண்ணா எழுதிய கடிதத்தில்தான் சூலூர் பற்றிய செய்தி கிடைத்தது. (தவறான தலைப்பில் தேடியதால்தான் சென்னை ஏமாற்றம்) அதே கடிதம் தம்பிக்கு என்னும் இரண்டாம் தொகுதி நூலாகவும் வெளிவந்துள்ளது. இதழ், நூல் இரண்டையும் கிடைக்கச் செய்து எங்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்து விட்டார் யாழ் நூலகம் துரை மடங்கன்.

சூலூர் பற்றிய ஒவ்வொரு செய்திக்குப் பின்னும் – இப்படிக் கவலையும் உழைப்பும் கலந்த ஒரு வரலாறு உண்டு.

ஓய்வு, விடுமுறை, பொழுதுபோக்கு – என எல்லா மகிழ்ச்சியையும் பேரவைத் தோழர்கள் இழந்து திரட்டிய செய்திகளே சூலூர் வரலாறு.

சூலூர் பேருராட்சிச் செய்திகளுக்கு மட்டுமே ஆறுமாதம் நாங்கள் செலவிட வேண்டியிருந்தது. தூசியும் அழுக்கும் மண்டிய நிலையில் பழைய பதிவேடுகள் எங்கள் கைக்கு வந்தன. சளியும் தும்மலும் தொடர்ந்த நிலையில் இரவு, பகலாக பணி நடந்தது. செய்தி திரட்டுவதற்கு மட்டுமே ஆறுமாதம் ஆனது. திரட்டிய செய்தியை வகைப்படுத்த வேண்டும். வகைப்படுத்தியவற்றை ஒன்று சேர்க்க வேண்டும். ஆவணங்கள் தரும் ஆதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். ஊர் மக்கள் நேர் காணல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கூறியது கூறலாகிவிடாமல் தனிப்படுத்த வேண்டும். அவற்றைப் முன் பின் மாற்றி முறைப்படுத்த வேண்டும், இத்தனைக்கும் பின்புதான் அச்செய்தி ஓர் உருவத்துடன் பார்க்க முடியும். இவற்றுக்கான உழைப்பும் நேரமும் தனியாகவும், கூட்டாகவும் – தொடர்ந்து ஆறாண்டுகள் செலவிடப்பட்டன.

கல்வெட்டுகள்
நேர்காணல்கள்
அகழ்வாய்வுப் பொருட்கள்
பதிவேட்டு ஆவணங்கள்
செவிவழிச் செய்திகள்
நூல்கள்
அழைப்பிதழ்கள்
இதழ்கள்
அறிக்கைகள்
எழுத்துரைகள்
ஒலிநாடாக்கள்
பட்டயங்கள்
வினா நிரல்கள்
ஆய்வேடுகள்
கருத்தரங்கக் கட்டுரைகள்

இப்படிப் பல வடிவங்களில் திரட்டப்பட்ட செய்திகளால் – சூலூர் வரலாறு வரைந்தது.

வெளியீட்டு எல்லையை விளங்கிக் கொள்ள முன் வெளியீட்டுத் திட்டத்தைப் பேரவை முன் வைத்தது.

தமிழில் முன் வெளியீட்டுத் திட்டம் சீவக சிந்தாமணி நூலுக்காக 1887 இல் உ.வே. சாமிநாதய்யர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முறையில் பல நூல்கள் தமிழில் வெளியாகி உள்ளன. பேரவைத் தோழர்களின் முயற்சியும் ஊர் மக்களின் ஆர்வமும் முன் வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் – நூலுக்கான தேவை எல்லையைத் தீர்மானிக்க உதவின.

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It

கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் – தலைக்கனம் வராது; தளர்ச்சியும் வராது. வரலாற்றுப் படிப்பினைகள் வாழ்க்கைக்கு வழிகாட்ட வல்லவை.

கனவுத் தோரணங்களால் அரண்மனை எழுப்பி அரசனும், அரசியும் உலா வருவது மட்டுமே வரலாறு என்ற எண்ணம் இப்போது மாறி வருகிறது.

வரலாற்றின் ஆணிவேர் – மக்கள் வாழ்வில் தான் ஊடுருவி நிற்கிறது. 

நமது வாழ்வின் வேர்கள் எத்தனையோ திசைகளில் ஓடுகின்றன. அரசியல், புவியியல் திசைகளை மட்டுமே காட்டியே நம் வரலாறு – மண்ணையும், மக்கள் வாழ்வையும் காட்ட வேண்டும். 

அந்த ஆணிவேரை அடையாளம் காட்டும் முயற்சியாய் அரும்பியதே – சூலூர் வரலாறு என்னும் இந்த நூல்.

ஓர் ஊருக்கு வரலாறு எழுதி என்ன பயன்? என்று கேட்கத் தோன்றும். 

ஊர்களின் வரலாற்றை ஒருங்கிணைத்தால் போதும்! நாட்டு வரலாறு முழுமை பெற்றுவிடும். 

பத்துப் பேரிடம் பத்துப் பத்துக் காசாக வாங்கினால் உறுதியாக ஓர் உரூபா கிடைக்குமே! 

உங்களை நோக்கி ஓடிவரும் சிறிய நாணயம் – சூலூர் வரலாறு. நாணயத்தைச் சேமித்தால், பணமாக்கிப் பார்ப்பது எளிது. 

மண்ணையும் மக்களையும் அறிந்து கொள்ளும் விழிப்புணர்ச்சி இப்போது மிகுந்து வருகிறது. 

நம்மைச் சுமக்கும் ஊரும், ஊர் சுமக்கும் பேரும் – எந்த அடிப்படையில் எழுந்தன என அறிய விரும்புவோர் பெருகி வருகின்றனர்.

வெளியே நிறுத்தும் கொசுவலை எது? வெளியேறாமல் தடுக்கும் மீன்வலை எது? வலைகளைக் கூட இப்போது இனம் பிரித்து அலசுகின்றனர்.

வழிகாட்டியவை எவை? வழியடைத்தவை எவை? – வாழ்வின் வேர்களைக் கூர்ந்து பார்க்கின்றனர். 

மன்னர்கள் வரலாறு எழுதப்பட்டு விட்டது. மக்கள் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

மக்களின் கலை, பண்பாடு, சமுதாய வரலாறுகள் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது. 

சூலூர் பாவேந்தர் பேரவையினராகிய எங்களுக்கும் இந்த ஏக்கம் இருந்தது. ஊர் வரலாற்றை உருவாக்கும் முயற்சியை 1989 இல் தொடங்கினோம். ஆறாண்டு கால உழைப்பு, சூலூர் வரலாறாக உருவெடுத்துள்ளது.

மக்கள் வாழ்வியல் வரலாற்றை – சூலூர் என்ற புள்ளியில் இருந்து தொடங்கியுள்ளோம். 

எந்த ஓவியமும், புள்ளியிலிருந்து தானே புறப்பட வேண்டும். எந்த பாதையும் ஒரு காலடியில் இருந்துதானே தொடங்க வேண்டும். நாங்கள் சூலூரிலிருந்து தொடங்கியுள்ளோம். 

                                                                                ------------                -----------------

தமிழ்நாட்டு வாழ்வியல் வரலாறு – சூலூரிலிருந்து தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் வாழ்வியல் வரலாற்று நூல் – சூலூர் வரலாறு. 

மக்களின் வாழ்வும் வளர்ச்சியும் எங்கெல்லாம் வேரோடியுள்ளனவோ, அங்கெல்லாம் தேடி அலைந்தோம்; வேரோடும் திசையெல்லாம் சேர்ந்தோடினோம்.

மனிதரை மனிதருக்கு அடையாளம் காட்ட சூலூர் வரலாறு துணை செய்யும் என நம்புகிறோம்.

சமுதாய மேம்பாட்டு முயற்சிகளும் இயக்கங்களும் தொடக்க நாளிலிருந்தே சூல் கொண்டுள்ள ஊர் சூலூர். அதனால், எங்கள் உழைப்பும் முயற்சியும் இங்கே மதிப்படைந்தன. வெளியீட்டுப் பணிகளில் துணை நிற்கவும் தோள் கொடுக்கவும் – சூலூர் பெருமக்கள் மகிழ்வோடு முன் வந்தனர். 

பனித்துளிக்குள் மலைமுகட்டைப் பார்ப்பதுபோல், கோவை வரலாற்றையும் கொங்கு நாட்டு வாழ்வினையும் – சூலூர் வரலாற்றில் பார்க்க முடியும். 

வாருங்கள்! நூலுக்குள் நுழைவோம்.

சாதனைகளை அறிந்து நம்பிக்கை பெறுவோம்!

தவறுகளை அறிந்து எச்சரிக்கை பெறுவோம்!

ஊருக்கு ஒரு வரலாற்றை உருவாக்கி, மக்கள் வரலாற்றை மலரச் செய்வோம்.

***

சூலூர் வரலா(று) ஊரும் வாழ்வும்
         தோன்றி வளர்ந்த நிலைகாட்டும்!
மேலும் மேலும் வளரும் வாழ்வின்
         வேர்கள் செல்லும் திசைகாட்டும்!
காலும் சுவடும் ஓடும் திசையின்
         காலம் உணர்த்தும் கண்ணாடி!
வாழும் வாழ்வின் மூலம் காட்டும்
         வரலாற் றிற்கிது முன்னோடி!

***

சூலூர்

இருகுளமும் ஒருமூக்காய் நிமிர்கின்ற சூலூர்
எழும்கல்வி கண்ணாகி முகம்காட்டும் சூலூர்
இருபுரத்துக் கோவில்களும் விரலான சூலூர்
எண்ணத்தில் வளமானோர் உடலான சூலூர்

நெடுங்காலச் சந்தையினார் திசைகாக்கும் சூலூர்
நினைவோடு வெள்ளிதொரும் ஊர்கூடும் சூலூர்
கொடுஞ்சாதி மதம் என்ற வெறியற்ற சூலூர்
குறிக்கோளில் வாழ்வோர்க்கே புகழ்சேர்க்கும் சூலூர்

பயிர்மாற்றம் நிகழ்ந்தாலும் துயர்மாற்றும் சூலூர்
பணிவாழ்வில் புகழ்பெற்றோர் அணிசேர்க்கும் சூலூர்
உயிர்காக்கும் சிறுவாணி சுவை ஏற்றும் சூலூர்
உறவாகி வந்தோரின் நலம்காக்கும் சூலூர்

காற்றோடு பஞ்சேற்றி நூலாக்கும் சூலூர்
களிப்பாக்கும் வெற்றிலையால் புகழ்பூத்த சூலூர்
ஏற்ற தொழில் வணிகவகை விரிவாகும் சூலூர்
இருமூன்று பெயர்கொண்ட வரலாற்றுச் சூலூர்

நாவுலவும் மொழிபலவும் நடமாடும் சூலூர்
நாடேறும் வானூர்தி நலம் கேட்கும் சூலூர்
தூவுகுளிர் மேனிதொடும் இதமான சூலூர்
சுயமரியா தைநெறியில் நடைபோடும் சூலூர்

ஊர்காக்க நெஞ்சொன்றிக் கைகோர்க்கும் சூலூர்
உயர் பெரியார் – அண்ணாவும் புகழ்ந்திட்ட சூலூர்
ஈராயிரம் ஆண்டாக நிலைபெற்ற சூலூர்
எழில்காக்க நமைநோக்கி அழைக்கின்ற சூலூர்

***

சூலூர் – பாவேந்தர் பேரவை 

13.4.1988 இல் தொடங்கப்பெற்ற கலை, இலக்கிய பண்பாடு அமைப்பு, (பதிவு எண்:1344/93)

- சமுதாய வளர்ச்சிச் சிந்தனைகளை மேம்படுத்துதல்

- ஊர் நலப் பணிகளை ஊக்குவித்தல்

- மக்கள் நலச் சிந்தனையாளர்களைச் சிறப்பித்தல் 

- வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் 

- வரலாற்று ஆவணங்களைத் தொகுத்துப் பராமரித்தல்

- அறிவு நெறி நூல்களைச் சேகரித்தல் 

- மொழி வளர்ச்சிக்கு வளம் சேர்த்தல் 

இப்படிப் பாவேந்தர் பேரவையின் செயல் எல்லைகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

சூலூர் பாவேந்தர் பேரவையின் ஆறாண்டுகால உழைப்பில் உருவான சூலூர் வரலாறு தமிழ்நாட்டின் முதல் வாழ்வியல் வரலாற்று நூல்

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It

பண்டாரவாடை (Pandaravadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் எனது கிராமம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். பல சமூகங்கள் வாழும் எனது ஊரின் வரலாற்றை அறிய எடுத்த சிறு முயற்சியே இந்த பதிவு....)

pandaravaadaiதென் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பேரரசான விஜயநகர பேரரசு 1336'ல் ஹரிஹர ராஜா மற்றும் அவரது சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற ஸ்ரீனகிரி மடத்தின் 12 ஆம் ஜகடகுருவான வித்யாரன்யா (Vidyaranya) என்ற பார்ப்பனரே விஜயநகர பேரரசின் மூளையாகவும், முதன்மை அமைச்சராகவும் செயல்பட்டார். அவர் பேரரசின் நிர்வாக வசதிக்காக நிலங்களை எட்டு பிரிவுகளாகப் பிரித்தார். அவை ராஜ்யம், நாடு, சிம்மா, ஸ்த்லா, வலிதா, கவாடி, பூமி மற்றும் கிராம ஆகும்.

இதில் கிராம என்பதை மேலும் மூன்று வகைகளாகப் பிரித்தார். அவை

1. அமர கிராமா (Amara gramas)
2. மான்ய கிராமா (Manya gramas)
3. பண்டாரவாடா கிராமா (Bandaravada gramas)

1. அமர கிராமா (Amara gramas) :

இங்குச் சூத்திர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்தனர். நிலத்தின் முழுமையான வருவாய் பேரரசின் ராணுவ செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

2. மான்ய கிராமா (Manya gramas) :

மான்ய கிராமா என்பதை இன்றைய வழக்கில் அக்ரஹாரம் என்று புரிந்துகொள்ளலாம். நிலங்கள் அரசர்களால் பார்ப்பனர்களுக்குப் பரிசாக கொடுக்கப்பட்டது. நிலமும் நிலத்தின் வருவாயும் பார்ப்பனர்களுக்கே முழுமையாக வழங்கப்பட்டது.

3. பண்டாரவாடா கிராமா (Bandaravada gramas) :

பண்டாரவாடா கிராமா என்பது கோவிலுக்காகக் கொடுக்கப்பட்ட கிராமங்கள். இங்குச் சூத்திர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்தனர். கிராமத்தின் நிர்வாகம் கோவில் தருமகர்த்தாக்களால் நடத்தப்பட்டது. விளைச்சலில் பெரும்பகுதி மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[1]

Dr. பார்வதி மேனன் என்ற வரலாற்று ஆய்வாளர் 1986'ல் "AGRARIAN ECONOMY OF THE CARNATIC IN THE 17th AND 18th CENTURIES" என்ற தலைப்பில் வெளியிட்ட தனது ஆய்வறிக்கையில், கிராம பிரிவுகள் பற்றிப் பேசும் போது "This classification was clearly not a Karnataka phenomenon alone as amara, and bandaravada (pandaravadai, in Tamil) villages were prevalent in the Carnatic as well." என்று குறிப்பிடுகிறார்[2]. அதாவது, பண்டாரவாடா என்பது கர்நாடகாவின் நிகழ்வாக மட்டுமல்லாது Carnatic Region எனப்படும் பண்டைய தமிழ் நிலத்திலும் "பண்டாரவாடை" என்ற பெயரிலிருந்ததாக குறிப்பிடுகிறார்.

மேலும் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பண்டாரவாடா கிராமங்கள் பின்னர் சில அதிகாரம் படைத்த சூத்திர சாதிகளின் தனியுடைமையாக மாறி இருக்கிறது என்றும் விளக்குகிறார்[3].

"தமிழ் மானிடவியலின் விவிலியம்" (Bible of Tamil Anthropology) என்று போற்றப்படும் பேராசிரியர் பக்தவச்சல பாரதி அவர்களின் "பண்பாட்டு மானிடவியல்" புத்தகத்திலும் இதே போன்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

அதில் "தஞ்சைப் பகுதியில் ஆய்வு செய்த ஆந்த்ரே நெத்திலி (1965). சிற்றூர்களில் அக்ரஹாகாரவாடை (பார்ப்பனர்கள் வாழும் இடம்), பண்டாரவாடை (பார்ப்பனர் அல்லாதோர் வாழும் இடம்) என இரு பிரிவுகள் உள்ளது எனச் சுட்டிக் காட்டுகிறார். சில சிற்றூர்கள் முழுவதும் அக்ரஹாரவாடையாகவும் சில பண்டாரவாடையாகவும் உள்ளன எனக் கூறுகிறார்.[4]".

ஆந்த்ரே நெத்திலியின் கூற்றுப்படி பண்டாரவாடை எனும் பெயர் "பார்ப்பனர் அல்லாதோர் வாழும் இடம்" என்னும் வகையில் சமூக குறிப்பு பெயராக இருந்துள்ளது.

மேலும் 1738'ல் தஞ்சையை ஆண்ட சஹாஜீ ராஜா (சரபோஜி மன்னர்) பிரஞ்ச் வணிகர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் "You are not to convert the Bramins houses into those of Bandaravada or sudra caft"- பார்ப்பனர் குடியிருப்புக்களை பண்டாரவாடா அல்லது சூத்திர இடங்களுக்கு மாற்ற கூடாது என்று நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. [8]

கிராமங்களை இப்படித் பார்ப்பனர்களுக்கு தானமாகக் கொடுக்கும் முறை விஜயநகர பேரரசு புதிதாக ஏற்படுத்தியது அல்ல, அதற்கு முன் சோழர் காலத்திலேயே 'பிரமதேயம்' என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வரி இல்லாத தனியுடைமையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பல கல்வெட்டுக்கள் சான்று கூறுகின்றன. பிரமதேயம் -என்பதில் பிரம்ம/பிரம -என்பது பார்ப்பனர்களையும், தாயம் என்பது உரிமையையும் குறிக்கிறது[5].

எனவே பண்டாரவாடை என்னும் பெயர் விஜயநகர பேரரசின் தஞ்சை வருகைக்குப் பின் வந்ததா அல்லது அதற்கு முன்பே இந்த பெயர் இங்கு இருந்ததா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

-*-

பண்டாரவாடா - சொல் பொருள்:

பண்டாரவாடா என்ற தெலுங்கு சொல்லைப் பண்டாரி + வாடா என்பதாகப் பிரிக்கின்றனர்.

இதில் 'வாடா'(వాడ) என்ற தெலுங்கு சொல்லுக்குத் தெரு அல்லது வரிசையான வீடுகள் என்று பொருள்.[6]

'பண்டாரி' என்பது சமூகத்தைக் (சாதியைக்) குறிக்கும் சொல்லாகும். அதன் பொருள் ' பொருளாளர்' என்பதாகும்.

Edgar Thurston என்ற வெள்ளைக்காரர் எழுதிய Castes and Tribes of Southern India புத்தகத்தில் பண்டாரி சமூகத்தைப் பற்றி பின் வருமாறு எழுதுகிறார்.

"Bandari (“treasurer”) is one of the many exogamous septs (division) among the Telugu section of the Devangas (a caste of weavers). The Devangas, speaking Telugu or Canarese, are found all over the Madras Presidency. Devanga is composed of Deva and angam, “limb of god”."

தெலுங்கு உச்சரிப்பில் உள்ள 'Ba' என்பதைத் தமிழில் பா என்று உச்சரிப்பதால். தமிழகத்தில் கோவில் நிர்வாகம் செய்யும் சமூகங்களை பண்டாரம் என்று அழைத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் பண்டாரம் சமூகத்தைப் பற்றி Edgar Thurston எழுதியுள்ள சில குறிப்புகள்:

1. Pandārams are those who are made to pass through some ceremonies in connection with Saiva Āgama.
2. Pandārams, who belong to the Sōzhia sub-division of the Vellālas, regularly recite Tamil verses from Thēvāram and Tiruvāchagam in Saivite temples.
3. Pandārams are usually Vellālas by caste
4. In their ceremonial observances, the Bhatrāzus closely follow the standard Telugu type. At marriages, the bridal couple sit on the dais on a plank of juvvi (Ficus Tsiela) wood. They have the Telugu Janappans as their disciples, and are the only non-Brāhman caste, except Jangams and Pandārams, which performs the duties of guru or religious instructor. The badge of the Bhatrāzus at Conjeeveram is a silver stick.
5. Dīkshitar Brāhmans, and Pandāram priests are in higher order[7]

மேலுள்ள குறிப்புகளிலிருந்து பண்டார வகுப்பினர் தமிழகத்தின் நிலவுடைமை சமூகமான வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் சைவ சமயத்தை ஏற்றவர்கள் இருந்துள்ளனர் என்றும், மத அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு இணையான நிலையிலும் இருந்துள்ளனர் என்றும் தெரிகிறது.

இந்த 'சர் சூத்திரர்கள்' பார்ப்பனர்களுக்கு இணையாக ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததாக "கோவில்-நிலம்-சாதி" என்ற நூலில் பொ. வேல் சாமி குறிப்பிடுகிறார்.

உழைக்கும் மக்களிடம் இருந்து மதம், சாதி என்ற பெயரால் நிலம் பிடுங்கப்படவும், அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதுமாக வரலாறு முழுவதும் நிலைத்திருக்கிறது. அந்த வரலாற்றின் நினைவுக் குறியீடே இந்த "பண்டாரவாடை".

-*-

இஸ்லாத்தின் வருகை:

அரபு தேசத்தில் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்னரே அரபுகளுக்கும் தமிழர்களுக்கும் இடையே வணிக தொடர்பு இருந்துள்ளது என P.T ஸ்ரீனிவாச ஐயங்கார் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர் [9]. 707A.D முதல் 1005 A.D வரை என மூன்று நூற்றாண்டுகளை உள்ளடக்கிய 155 அரபு நாணயங்கள் தமிழகத்தில் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[10]

அப்படி வணிக காரணங்களுக்காகத் தமிழகம் வந்த அரபுகள் தஞ்சையின் கடலோர நகரங்களான நாகூர், காயல் பட்டினம் போன்ற பகுதிகளில் தங்கி, அங்கு இருந்த தமிழ் பெண்களை மணந்து இருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் தமிழர்கள் பலரும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர்.

கடலோர நகரங்களைத் தாண்டி தமிழகத்தின் மையப் பகுதியிலும் இஸ்லாம் எட்டாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே வந்தடைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டில் திருச்சியில் பள்ளிவாசல் கட்டுவதற்காகப் பாண்டிய மன்னன் நிலம் வழங்கியுள்ளது; இதற்கு மிகப் பெரும் சான்றாகும் [11].

1659'ல் பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சியின் போதுதான் முதன் முதலில் ராஜகிரி, பண்டாரவாடை மற்றும் அய்யம்பேட்டை பகுதிகளில் இஸ்லாமியக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன என 20 ஆம் நூற்றாண்டு ஆய்வாளர்கள் கருதுவது தவறாகும்[12].

1389'லேயே பண்டாரவடையில் சைவத்தில் இருந்து மதம் மாறிய தமிழ் முஸ்லீம்களால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் சுல்தான்களால் குடியமர்த்தப்பட்ட உருது முஸ்லிம்கள் இன்றும் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டு பண்டாரவாடையில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1659-1784 இடையேயான பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சியில் அதிகமான நிலங்கள் தர்காக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பண்டாரவாடையில் உள்ள காசிம் சாகிப் தர்காவுக்கு நான்கு ஏக்கர் நிலம் அனாதைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 1765 துளாஜ் (thulaj) என்ற மன்னனால் வழங்கப்பட்டுள்ளது[12].

பல சமூகம் வாழும் பண்டாரவாடையில் தேடியவரை சமூக, மத மோதல்கள் இல்லாத அமைதியான பகுதியாகவே வரலாறு முழுவதும் இருந்துள்ளது. இன்றும் அது அப்படியே தொடர்கிறது.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

அடிக்குறிப்புகள்:

1. http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/223939/6/06_introduction.pdf

2. AGRARIAN ECONOMY OF THE CARNATIC IN THE 17th AND 18th CENTURIES - SUBMITTED FOR THE DEGREE OF DOCTOR OF PHILOSOPHY IN HISTORY - PARVATHI MEIMON - DEPARTMENT OF HISTORY - ALIGARH MUSLIM UNIVERSITY -1986 : Page Number - 32

3. "In the same region, villages of which the absolute proprietary right was chiefly held by sudra inhabitants were termed pandara vadiky" - AGRARIAN ECONOMY OF THE CARNATIC IN THE 17th AND 18th CENTURIES - PARVATHI MEIMON : Page Number - 224

4. பண்பாட்டு மானிடவியல் - பக்கம் 125.

5. https://bit.ly/2kl0Co5

6. http://telugudictionary.telugupedia.com/telugu_english.php?id=15339

7. Castes and Tribes of Southern India - Edgar Thurston

8. Italian History of resorgimento period- H.Nelson Gay-1896

9. P.T. Srinivasa Iyengar, History of the Tamils (reprint), Chapters VII and X, New Delhi, 1992.)

10. E.Thurston, Coins of the Madras Museum, Catalogue No.2. Also see Robert Caldwell, History of Tinnevelly, (reprint),New Delhi, 1982), pp, 287-288.)

11. Bayly,Susan, Saints, Goddesses and kings , Muslims and Christians in South Indian society, 1700 – 1900, Cambridge University Press. pp. 73-74

12. ROYAL PATRONAGE TO ISLAM IN TANJORE MARATHA KINGDOM [AS GLEANED FROM MODI RECORDS]- S. Chinnaiyan- Proceedings of the Indian History Congress-Vol. 65 (2004), pp. 370-374

Pin It

கடல்சார் வரலாறு என்றால் என்ன?

கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பைக் கடல்சார் வரலாறு என்று வரையறுக்கலாம். இது, பொதுவான பாடவகைப் பிரிவுகளைத் தாண்டி உலக அளவில் நிகழ்ந்து தாக்கங்களை ஏற்படுத்திய சம்பவங்களைப் பற்றிய ஆய்வு என்று கருதலாம். நிலம்சார் வரலாற்றில் (terrestrial history) நிகழும் சமூகப் போக்குகளுக்கு, பலசூழல்களில் கடல்சார் நிகழ்வுகளே பெரிதும் காரணிகளாய் அமைகின்றன. அதற்கு கடல் ஒன்றே சான்று. கடலின் செல்வங்களையும் நிலப்பரப்பிலுள்ள செல்வங்களையும் தமதாக்கிக் கொள்வதற்கு மனித சமூகம் படும்பாடே கடல்சார் வரலாறு என்றும் கூறலாம். மனித வரலாறு நெடுக இது நடந்துள்ளது.

பரப்பு

Valvai Tamils Kappalபூமியில், நான்கில் மூன்றுபங்கு இடத்தைப் பெற்றுள்ள கடல் எல்லையற்று, விரிந்துள்ளது. நிலத்தின் உள்பகுதியில் அமைந்துள்ள கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவற்றையும் இதில் சேர்க்க வேண்டும். கடல்கள், நாடுகளைப் பிரிக்கின்றன என்று பொதுவாக நம்பப்படுகிறது. உண்மையில், அவை நீரினால் நாடுகளை இணைக்கின்றன. அந்த இணைக்கும் புள்ளிகளாக அமைபவை கடற்கரை நகரங்கள், துறைமுகங்கள். நிலப்பகுதியில் நாட்டு எல்லைகள் பிரிவினை உண்டாக்குகையில் கடற்பரப்பு உறவினை ஏற்படுத்துகிறது. மனித சமூகத்தினையும் உறவினையும் புதிதாக மாற்றுகிறது. காட்டாக, கடத்தல்காரர் மதிப்புள்ள பொருளை வயிற்றில் மறைத்து வைத்துள்ளதுபோல் கடல் தன்மடியில் அழியாச் சான்றுகளை கொட்டி வைத்துள்ளது. அவற்றை கண்டறிந்து மனித வரலாற்றினை மீளாய்வு செய்வது நம் பொறுப்பு.

சான்று

நிலத்திலும் கடலிலும் தோன்றும் உயிர்கள் அழிவன. பல ஊர்கள் அழிந்துள்ளன. சில தீயில் அழிந்தன. சில கடலால் அழிந்தன. ஆனால், கடல்சார் வரலாற்றுக்கு கடலே சான்று. கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளும், கப்பல்களும், கடல்சார் வரலாற்றுக்கு சான்றுகளாக அமைகின்றன. கிரேக்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்ட (Trojon war) ட்ராஜன் போர் நிகழ்ந்ததற்கான தடயங்கள் கடல்சார் தொல்லியல் வரலாற்றின் வழி நிரூபணமாகியது. இலக்கியங்கள் கடல்சார் வரலாறு பற்றிப் பேசுவன. அதனால் உருவான பண்பாட்டுப் பரவல் பற்றியும் பேசுவன. தென்கிழக்காசிய நாடுகளில் சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகளும், தமிழ்மொழிக் கல்வெட்டுகளும் கடல்சார் வரலாற்றுக்கு சான்றுகளாக உள்ளன. பண்பாட்டுப் பரவல்கள், வழிபாட்டுக் கட்டிடங்கள், சிற்பங்கள் வாயிலாகவும் அறியப்படுகின்றன.

இந்தியத் துணைக்கண்டத்தின் இலக்கியங்கள் தென்கிழக்காசிய மொழிகளில் பெயர்க்கப்பட்டவையும் ஒருவகைப் பண்பாட்டுப் பரவல். Ptolemy, Strabo, Pliny போன்ற கிரேக்கர்கள் அளித்த குறிப்புகளுடன் Marcopolo, Bernier, Frishta போன்ற பயணியர்கள் குறிப்புகளுடன் காலனிய காலத்தின் கப்பல்மாலுமிகள் எழுதி வைத்த நினைவுக் குறிப்புகள் போன்றவையும், அனந்தரங்கப் பிள்ளை போன்றோரின் நாள்குறிப்புகளையும் முதன்மை சான்றுகளாகக் கருத வேண்டும். இவையன்றி, காலனிய காலத்தில் கிறித்தவ சமய பரப்புரையாளர்களுக்கும், ஐரோப்பிய அலுவலர்களுக்கும், வணப்பிதாக்களுக்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்கள் மிக முக்கியமான சான்றுகளாகக் கொள்ள வேண்டும். இவை மட்டுமன்றி நேரடி களப்பணி, கள ஆய்வுகள் முக்கியமானவை.

பேராசிரியர் பா.ஜெயக்குமார் அந்தமான் தீவுகளில் நேரடி களஆய்வு செய்து அத்தீவு மக்களின் படகு வடிவங்களைக் கண்டறிந்தது. அவை போன்று இந்தியப் படகுகள் அமைந்துள்ளனவா என்று ஒப்பீடு செய்வது கடல்சார் ஆய்வினை மேலும் வலுப்படுத்தும். அவரும் மறைந்த பேராசிரியர் நடராஜன் அதியமான் அவர்களும் கண்டுபிடித்த கல்நங்கூரங்கள் மிக முக்கிய சான்றுகளாக அமைகின்றன. சில இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் நன்கு புலமை பெற்ற ஜெயசீல ஸ்டீபன் கடல்சார் வரலாற்றில் அண்மையில் வியக்கத்தக்க முடிவுகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.

கடல்சார் வரலாற்றில் தடம் பதிப்பவர்கள் பன்மொழிப் புலமையுடன் ஊர்சுற்றி களப்பணி மேற்கொள்ளும் உடல் பலமும் கொண்டிருத்தல் நலம்.

ஆய்வுமுறை

கடல்சார் வரலாற்றில் ஆய்வுமுறையே அதற்கு உயிர் தரும், உண்மை சொல்லும். வெவ்வேறு வகையான தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அவற்றுக்கிடையேயான உள்ளுறவுகளைத் தொடர்புபடுத்தி ஒரு கருத்திலிருந்து பிறிதொரு கருத்தினை அறிய முயற்சிகள் தேவை. இதற்கு மொழியியல், மானிடவியல், சமூகவியல், பொருளியல், இலக்கியம் போன்ற துறைகளில் பயிற்சி வேண்டும்.

20 ஆம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை ஒரு நாட்டின் வரலாறு அங்கு வாழும் மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவு முறை, உடை, கேளிக்கை போன்ற கருத்தோட்டங்களின் பின்னணியில் கணக்கிடப்பட்டன. ஆனால், அவற்றுக்கான காரண காரியங்களை ஆய்வாளர்கள் கண்டறியத் தவறினர். 1848-இலேயே வரலாற்றுச் சம்பவங்களுக்கு காரணம் வர்க்கச் சண்டைகளே என்று Kalr Marx, Frederich Engles இருவரும் கணித்திருந்தனர். எல்லா சமூக வரலாற்று நிகழ்வுகளுக்கும் பொருளியலே காரணம் என்று நிரூபித்தனர் (Karl Marx and Frederich Engles,1848). அந்த காலத்திலேயே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து பகுதிகளில் வாழ்ந்துவந்த வேளாண்குடிகள், கூலியாட்கள் ஆகியோரின் நிலைமைகளை அறிவதற்கு இருவரும் களஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து 1920-30களில் பிரான்சில் தோன்றிய New History என்ற இயக்கம் வரலாற்று நிகழ்வுகளுக்கான இன்ன பிற காரணங்களையும் முன்னிறுத்தியது (Peter Burke,2015). இவ்வியக்கம் உருவாக்கிய அன்னல் சிந்தனைப்பள்ளி கடல்சார் வரலாறு எழுதுவதற்கான பல உத்திகளைக் கற்றுத் தருகிறது. அவற்றுள் ஒன்று பருவ காலம். எனவே, கடல்சார் வரலாற்றினை முழுமையாக அறிவதற்கு பருவகால அறிவு (calendrical knowledge) முக்கியமானது. இதனுடன் வான்கோள்கள், வி்ண்மீன்களின் நகர்வுகள் பற்றியும் போதிய அறிவு தேவை. இதனைக் கடல்சார் தொழில் செய்யும் மக்களிடம் இருந்து பெறலாம். உலகம் முழுதும் கடல்சார் தொழில்செய்யும் சமூகங்களின் வாய்மொழிப் பாடல்களின் கதைகளில் மேற்சொல்லப்பட்ட அறிவுபொதிந்துள்ளது. அவற்றினை உடைத்து பொருள்காண்பதற்கு மானிடவியல்பயிற்சி முக்கியமானது.

காட்டாக, வள்ளுவர் கன்னியாகுமரி வட்டத்தினைச் சார்ந்தவர் என்றும், மயிலாப்பூர்காரர் என்றும் இருவிதக் கருத்து உண்டு. ஆனால், ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்வர். குறள் எண் 103இன்படி அவர் ஒரு கடல்சார் ஊரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று இப்போதைக்குச் சொல்லலாம் (Tirukkural,1976). இந்தியப் புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ள விஷ்ணு பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கும் காட்சியினை இடைக்காலத்திய தென்கிழக்காசிய நாடுகளின் வரலாற்றில் கடல் வணிகம் பெருத்த நிலையில் கடுநஞ்சு கொண்ட கடற்பாம்புகள் கப்பல் சிப்பந்திகளுக்கு பெருஞ்சவாலாக அமைந்திருப்பதன் எதிரொலியாகக் கருதலாம்.

கடற்சம்பவங்கள் மனிதரால் மட்டும் நிகழ்வன அன்று. இயற்கைப் பேரிடர், ஆழிப் பேரலை, கண்டத் திட்டுகளின் உரசலால் உண்டாகும் சுனாமி போன்றன உள்நிலப் பகுதிகளில் வரலாற்றுச் சம்பவங்களை உருவாக்குகின்றன. 2004 டிசம்பர் 24 அதிகாலையில் உருவான ஆழிப்பேரலை மீன்பிடி சமூகத்தின் கடற்கரை ஊர்களில் ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்தினை உருவாக்கியது. அதுவரை விதவைத் திருமணம் வழக்கில் இல்லை என்பதனை மாற்றி ஆழிப்பேரலையில் கரை திரும்பாத கணவன்மார்களின் விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்விக்கும் புதுவழக்கம் ஓர் ஊரில் நடைமுறைக்கு வந்தது (2008 ஆம் ஆண்டில் நாகபட்டினம் வட்டாரத்தில் களஆய்வில் திரட்டப்பட்டசெய்தி).

கடல்சார் வரலாறும் சமயமும்

உலகில் தோன்றிய சில சமயங்கள் காலனிய காலத்திலும் அதற்கு முன்பும் கடல் கடந்து வேறுவேறு இடங்களுக்கு பரப்பப்பட்டன. அதற்கு கடற்பரப்பு ஓர் ஊடகமாக அமைந்தது.

இந்தியாவில் தோன்றிய சமண சமயம் பெண்களும் சமயக்குரவர்கள் ஆவதற்கு உரிமை அளித்தது. ஆனால், சமணர் நூல் என்று அறிஞர்களால் கொண்டாடப்படும் தொல்காப்பியம் ஒரு சூத்திரத்தில் கடல் கடந்து செல்லும் வழக்கம் பெண்களுக்கு இல்லை என்று மொழிகிறது (ச.வே.சுப்பிரமணியன், 2005). கடற்பரப்பினை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தாத இம்மதம் கடல்தாண்டிச் செல்லவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் உருவான பவுத்தம் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவியது. அங்கிருந்து கடல் தாண்டி வந்த பவுத்த சந்யாசிகள் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றனர்.

கடல்சார் தமிழ் இலக்கியம்

தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் காப்பிய நாயகி மணிமேகலையினை மணிமேகலா தெய்வம் கடல் தாண்டி ஒரு தீவிற்கு வான்வழியே அழைத்துச் செல்கிறது; மாறாக புராண சமய இலக்கியமான இராமாயணத்தில் இராவணன் சீதையினைக் கடல் (நீர்நிலை) தாண்டி கடத்திச் செல்கிறான். 12ஆம் நூற்றாண்டின் கடல்சார் வணிகத்தோடு தொடர்புடைய பட்டினத்தார் கூற்றான காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழியனுக்கே என்ற கூற்று பொருளியல் வாழ்க்கைத் தத்துவத்தில் முக்கியமான ஒன்று. சென்ற நூற்றாண்டில் ப.சிங்காரம் என்பவர் எழுதிய புயலிலே ஒரு தோணி (2018) என்ற நாவல் கடல் கடந்து கிழக்காசிய நாடுகளுக்கு சென்ற தமிழரின் அவல நிலையினை விவரிக்கிறது. அண்மையில் மறைந்த, தோப்பில் முகமது மீரான் தம் துறைமுகம் என்ற நாவலில் கன்யாகுமரியினை சேர்ந்த ஒருவர் இலங்கையில் கொழும்பு வணிகருடன் கொண்ட தொடர்பினையும் அவர் இயற்கைச் சீற்றத்தால் பொருளாதாரத்தில் பெற்ற இடரினையும் கதைக்கருவாக அமைக்கிறார் (தோப்பில் முஹம்மது மீரான், 1994).

கடந்த இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தில் கடல்சார் நாவல்கள் எழுதப்படுகின்றன. அவை nautical fiction, maritime fiction என்று வகைப்படுத்தப் படுகின்றன. இவற்றின் ஆசிரியர்களில் சிலர் படைத்தளபதிகள், கடலோடிகள் ஆவர். 1770 இல் முதன் முதலில் அரேபிய இரவுகள் என்ற கதைத்தொகுப்பில் ஒன்றான சிந்துபாத் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. சிந்துபாத்தின் ஏழாவது கடற்பயணம் சுவாரஸ்யமான கதையமைப்பு கொண்டது. 1882 இல் Robert Louis Stevention என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட (Treasure Island) புதையல் தீவு என்ற நாவல் இதுவரை 50 முறை திரைப்படமாக்கப் பட்டுள்ளது. பலமுறை தொலைக்காட்சித் தொடருக்காக கதையாக்கப்பட்டது. வடஅமெரிக்காவிற்கும் தென்னமெரிக்காவிற்கும் இடையில் அமைந்த பவளப் பாறைகள் நிறைந்த சிறுசிறு தீவுக் கூட்டங்கள் கரீபியன் தீவுகள் என்று அழைக்கப்படும். அத்தீவுகளில் புதைக்கப்பட்ட செல்வத்தினைக் கண்டறிவதாக இந்நாவலின் கதை அமைகிறது. சென்ற நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் பல கடல்சார் நாவல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் 1903இல் Erskine Childres என்பவர் எழுதிய The Riddles of the Sands என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. 1951இல் Ernest Hemingway என்பவர் எழுதிய The Old Man and the Sea என்ற நாவல் தனக்கு மிகவும் பிடித்தது என்று சதாம் உசேன் தம் விசாரணையின்போது சொன்னார். இதுபோன்று 20க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நாவல்களில் எழுதப்பட்ட கடலியல் கடல் பரப்பு பற்றிய விவரணைகள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மிக முக்கியமானவை. ஆய்வேட்டின் மொழிநடைக்குப் பெரிதும் பயன் தரும்.

கடலும் சினிமாவும்

கடல்சார் வாழ்க்கையினை மையப்படுத்தி சில திரைப்படங்கள் தமிழில் வெளிவந்தன. அவற்றில் படப்பிடிப்பிற்காக உருவாக்கப்பட்ட படகு/கப்பல் அமைப்புகள், அவற்றின் வடிவங்கள், தோற்றங்கள் முக்கியமானவை. சினிமாவிற்காக அவற்றை கலைநயத்தோடு உருவாக்கியவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. மரபுவழி கப்பல்/படகு கட்டும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் அதில் இடம் பெற்றிருந்தனரா எனத் தெரியவில்லை. 1950-1970களில் சினிமாவிற்காக செட் போடும் கலைஞர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், அனுபவங்கள் ஆவணமாக குறித்து வைக்கப்படவில்லை. திரைப்படக் காட்சிகளில் இடம் பெறும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய இயலுமா?

1958இல் வெளிவந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தின் தொடக்கக் காட்சியே புயலில் சிக்கிய அடிமைகளை ஏற்றி வரும் ஒரு கப்பல் அருகமைக் காட்சியாக (close up) அமைந்த அக்கப்பல் ஜெமினி ஸ்டுடியோவில் தத்ரூபமாக எடுக்கப்பட்டது. 1960இல் வெளிவந்த பார்த்திபன் கனவு படத்திலும் கப்பல் காட்சிகள் உண்டு. 1964இல் எம்ஜியார் நடிப்பில் வெளிவந்த படகோட்டி படத்தில் விதம்விதமான மீன்பிடிப் படகுகள் காட்டப்பட்டிருக்கும். ஆனால், அக்காட்சிகள் பெரும்பாலும் கேரளா, கோவா பகுதிகளில் படம் பிடிக்கப்பட்டவை. அப்படத்தில் கேரளத்தில் இன்றும் பயன்படுத்தப்பெறும் சீனவகை மீன்வலையினைக் காட்டியிருப்பர். அதில் இடம் பெறும் படகுப் போட்டிக் காட்சி கண்களுக்கு விருந்து. தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய செம்மீன் என்ற நாவல் கதையினை அடிப்படையாக வைத்து 1965 இல் எடுக்கப்பட்ட படம் கேரளத்து மேற்கு கடற்கரையோரத்து மீன்பிடித் தொழில் செய்யும் சமூகத்தின் மனஇயல்புகளை வெளிப்படுத்தும்.

அதே ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் கப்பல் செட் போடப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. 1972இல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘தர்மம் எங்கே?’ படத்தில் கப்பலில் ஒரு டூயட் காட்சி உண்டு. இப்படங்களில் இடம்பெறும் இம் மாதிரிக் கப்பல்கள் ஒரு மூலவடிவமின்றி (architypal model) உருவாக்கப்பட்டிருக்க மாட்டாது. எனவே, அப்படங்களைக் கண்ணுற்று அக்கப்பல் மாதிரிகளை உருவாக்கி வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதுபோன்று நிறைய படங்கள் உண்டு. 1908 இல் எழுதப்பட்ட ஒரு நாவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு 1980 இல் வெளியான Blue Lagoon என்ற திரைப்படம் குறிப்பிடத் தக்கது. அப்படத்தில் காட்டப்பட்டது போன்ற மாதிரி கப்பல் மேலைநாடுகளில் அல்லது அமெரிக்காவில் உள்ளனவா? 

கடலும் போர்களும்

முதல், இரண்டாம் உலகப் போர்களில் அச்சு, நேச நாடுகளிடையே கடற்பரப்பில் நிகழ்ந்த கடற்சமர்கள் பற்றி விவாதிக்க போதிய சான்றுகளை, போர் உத்திகள் பற்றிய சான்றுகளை ஓர் ஆய்வாளரால் திரட்ட இயலாது. எந்த அரசிடமிருந்தும் போர் பற்றிய விளக்கமான ஆவணங்களைப் பெற இயலுமா? 1920களில் போரினால் உருவான பொருளியல் பெருமந்தம் (great economic depression) தென்கிழக்காசிய நாடுகளில் வட்டித் தொழில் நடத்தி வந்த நகரத்தார் சமூகத்தினரைப் பெருமளவு பாதித்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு போன்ற பகுதிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இவர்கள் கையில் இருப்பதைப் பற்றிக் கொண்டு அசையாச் சொத்துகளை அங்கேயே விட்டு வந்தனர். இது, அச்சமூகத்தினை நிலைகுலைய வைத்த ஒரு வரலாற்று நிகழ்வாகும். அப்படி, நாடு திரும்பும் வழியில் போர்க்காலத்தின் பதுங்கு குழிகளில் அமர்ந்து வெ.சாமிநாதசர்மா சாக்ரடிஸ், கார்ல் மார்க்ஸ் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றினைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதினார்.

முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான சண்டையில் ஆங்கில, பிரஞ்சுப் படைகள் சோர்வுற்றபோது, 1917 இல் அமெரிக்கா திறமாக பயிற்சியளிக்கப்பட்ட தேர்ந்த படையணியினரைப் பிரான்சுக்கு அனுப்பி ஜெர்மானியப் படைமுகாம்களைக் கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் தம் தற்கொலைப் படையினரைக் கொண்டு Pearl Harbour மேல் தாக்குதல் நடத்திய பின்பே அமெரிக்கா முனைப்பாகப் போரில் இறங்கியது. வியட்நாம் மீதான அமெரிக்கப் போரினைத் தமிழ் சினிமா குடும்பச் சண்டையாகச் சித்தரித்து போர் அரசியலை மலினப்படுத்தியது. ஆனால், கடல் தாண்டி அமெரிக்கா orange gas என்ற நச்சு வாயுக் குண்டுகளை வியட்நாம் மக்கள்மேல் வீசியதன் மூலம் பல லட்சம் குழந்தைகளைக் கொன்று குவித்தது. இதனால், மூன்று தலைமுறைகளாக ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றன. அமெரிக்க-ஈராக் போரிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன.

கடல் பரப்பில் அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்படுவதால் கடலின் சூழல் பாதிக்கப்பட்டு பல வகையான கடல் உயிர்கள் மடிகின்றன. இறந்த திமிங்கிலங்கள் கரை ஒதுங்குகின்றன. இரண்டாம் உலகப் போரின்போது சென்னையில் குண்டு வீசப்பட்டதால் மயிலாப்பூர்வாசிகள் சிலர் சேலத்திற்குக் குடிபெயர்ந்தனர். இவையெல்லாம் கடல்சார் வரலாற்றில் உண்டான சமூக மாற்றமே. 2000இல் அணுசக்தியால் இயங்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான் அருகே மூழ்கடிக்கப்பட்டதனை வெளிப்படையாக விவாதிக்க இயலுமா? வங்காளத்திலிருந்து கடல்வழியே ஆகாயத் தாமரை எனும் நீர்த்தாவரம் இன்று தமிழகத்தின் ஏரி, குளங்களில் மண்டி வளர்ந்து நீர்குடித்து நீர்த் தட்டுப்பாட்டினை உருவாக்கியது பற்றி வரலாற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

கடலும் அரசியலும்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலகத்தில் அதிகார அரசியலை சமநிலைப்படுத்த 1945 இல் Yalta Conference நடத்தப்பட்டது. இதில் Winston Churchill. Franklin Roosevelt, Joseph Stalin மூவரும் கலந்து கொண்டனர். அப்போது யால்டாவின் கப்பல் தளத்தில்தான் மூவரும் தனிமையில் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்தனர். இக்கூட்டம் பின்னாளில் பன்னாட்டு மன்றம் உருவாக அடிகோலியது.

இலங்கையின் மகாவம்சம் மதுரையின் அரசன் தன் மகளுடன் தம் அமைச்சரின் மகள்களையும் இலங்கை அரசன் பராக்கிரம பாகுவிற்கு மணம்முடிக்க அனுப்பி வைத்தான் என்று குறிக்கிறது. அவர்களுடன் தமிழ்நாட்டு யானைகளும் அனுப்பி வைக்கப்பட்டனவாம். அக்காலங்களில் கப்பல்களில் யானைகளைப் பரிசாக அரசர்களுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்ததாக இந்நூல் கூறும். பராக்கிரமபாகு, தனியார் யானை வணிகத்தினைத் தடை செய்து அரசே அதனைச் செய்வதற்கு ஆணையிட்டான் என்பது மகாவம்சத்தின் கூற்று. மேலும், இராஜீய உறவுகளில் யானைகள் பரிசளிக்கப்படும் முறையினை முடிவிற்குக் கொண்டு வந்தான். இதனால், யானையினை மையமாக வைத்து தேரவாத பவுத்த நாடுகளான இலங்கைக்கும் பர்மாவிற்கும் போர் மூண்டது. இப்படி, யானை உலகமயமான கடல்சார் வரலாற்றில் புகுந்தது.

தென்கிழக்காசிய நாடுகள் யானைகளைப் போரில் பயன்படுத்தும் கலையினை இந்திய அரசுகளிடம் இருந்து கற்றதாக அறிய முடிகிறது. ஆனால், தென்கிழக்காசிய நாடுகள் இந்தியமயமானதனை சீனமொழிச் சான்றுகளே முதலில் பதிவிட்டுள்ளன; இந்திய மொழிகளில் அன்று. தென்கிழக்காசிய நாடுகளில் சீனம் அரசியல், இராஜீய தாக்கத்தினை ஏற்படுத்த இந்தியா பண்பாட்டுத் தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பர். ஆனால், இடைக்காலத்திய கம்போடிய அரசினை நிறுவியது கவுண்டியன் என்ற பார்ப்பனன் என்றும், அவன் கம்போடிய இளவரசியினை மணந்தான் என்றும் சொல்லப்படுகிறது (Thomas Trautmann,2015). இந்நாட்டில் கி.மு முதல் நூற்றாண்டில் நெற்பயிர் சாகுபடி செய்து வந்த சமூகத்தினர் இந்தியா, சீனா, ரோம் போன்ற நாடுகளுடன் உலகளாவிய வணிகத்தினை மேற்கொண்டனர், இதில் தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவும் உண்டு.

கடல்சார் வணிகம் கடல்சார் அரசியாலாக மாறியது; பண்பாட்டுத் தாக்கத்தினையும் உண்டாக்கியது. ஜாவன் மொழி சமஸ்கிருத மொழியோடு கலப்புற்று வளம் பெற்றது என்பர். அம்மொழி kawi என்று அழைக்கப்பட்டது. அம்மொழியில் இராமாயணம், மகாபாரதம், அர்ச்சுனன் திருமணம் போன்ற காவியங்கள் எழுதப்பட்டன.

கடலும் காலனியமும்

அய்ரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தினையொட்டி எழுந்த புதிய கண்டுபிடிப்புகளும், தொலைநோக்கியும், திசையறி கருவியும், கப்பல் கட்டும் தொழில்நுட்ப வளர்ச்சியும் வணிகப் போட்டியும், நாடு பிடிக்கும் போக்கினையும் காலனியாக்கக் கொள்கைகளையும் உருவாக்கின. கிழக்கில் ஸ்பானியர்களின் போர்க்குணமும், மேற்கின் வறண்ட நிலப்பரப்பும் போர்ச்சுக்கீசியர்களைத் தொழில்ரீதியாக வணிகத்தினை நோக்கித் திருப்பின. இவர்களே முதன்முதலில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வணிகத்திற்கு களமிறங்கினர். அடுத்தடுத்து பிற அய்ரோப்பிய நாடுகளும் போட்டியில் இறங்கின. இவை தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் வாழ்க்கை முறையில் பெரும்மாற்றத்தினை உருவாக்கியது.

அவர்கள், புதிய தொழில்நுட்பங்களையும், அரசியல் கொள்கைகளையும் புதிய சமய முறைகளையும் அளித்தனர். ஆனால், இங்கிருந்து அரிய அறிவுச் செல்வத்தினைக் கவர்ந்து சென்றனர். தமிழகத்தின் மரபுரீதியிலான அறிவுத்துறையிலிருந்து மருத்துவம், வானியல் தொடர்பான அறிவினை அறிந்து சென்றனர். தமிழ் மொழியில் கிடைத்த வானியல், மருத்துவம் தொடர்பான நூல்களை மொழிபெயர்த்து மேலைநாடுகளுக்கு அனுப்பினர்.

நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, தரங்கம்பாடி, சென்னை போன்ற ஊர்களில் இயங்கிவந்த சமயப் பரப்புரையாளர்கள், வணபிதாக்கள், காலனிய அலுவலர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டனர். இங்கு வாழ்ந்து வந்த அய்ரோப்பியர்கள் மருத்துவத்திற்கு தமிழ்நாட்டின் மரபுவழி மருத்துவர்களையே நம்பியிருந்தனர். அவர்கள் அட்லாண்டிக் கடலினைக் கடந்து இந்தியத் துணைக் கண்டத்தினை அடைவதற்கும் கரைசேர்ந்த பின்னும் பலவகை நோய்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. அப்போது, அவர்கள் தமிழகத்தின் மரபுசார் மருத்துவர்களையே சார்ந்திருக்க வேண்டி வந்தது. எனவே, தமிழ் மருத்துவ முறை பற்றி ஆய்வதற்கு முற்பட்டனர். தமிழர்கள் நோய்த் தடுப்புமுறை (inoculation) பற்றி அறிந்திருந்தனர் என்று ஆங்கிலமொழி ஆவணங்களில் பதிவிட்டனர்.

சென்னையருகே மரியசவரிபிள்ளை என்பவர் அம்மை நோய்த் தடுப்பு மருத்துவர் என்பதனை அய்ரோப்பியர் அறிந்திருந்தனர். தரங்கம்பாடியில் ஜெர்மனிய மிசினரிகள் தமிழ் மருத்துவர்களைப் பள்ளிகளில் பணிக்கு அமர்த்தினர். தமிழ் மருத்துவ நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததால் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ முறை புது உத்வேகம் பெற்றது (Jeyaseela Stephen,2016). தமிழகத்தில் சிபிலிஸ் என்ற பால்வினை நோய் அய்ரோப்பியர்கள் செய்த வினை.

பாரிசிலிருந்து பாண்டிச்சேரி வந்த Guillaumae Le Gentil (1725-92) என்பவர் தமிழகத்தின் வானியல் பற்றி அறிந்து அதன்படி பாரிஸ், கிரீன்விச் இரண்டின் புவிநேர அடிப்படையில் பாண்டிச்சேரியின் தீர்க்க ரேகையை வரையறுத்தார். அவர், நாகபட்டினத்து அருகிலுள்ள ஒரு தமிழ்ப் பார்ப்பனரிடமிருந்து தமிழர் மரபு வழியே சூரிய, சந்திரக் கிரகணங்களைக் கண்டறியும் முறையினை கற்றார். வானியல் அட்டவணை ஒன்றைத் தயாரித்தார். இன்னொரு பாதிரியார் (Fr.Pierere de La lare) 1709 இல் தமிழரின் கிரகண அறிவு பற்றி பாரிசில் இருந்த இன்னொரு பாதிரிக்கு எழுதினார். 1708இல் நிகழ்ந்த சூரியன், சந்திரக் கிரகணங்களை முன்கூட்டியே தமிழர்கள் அறிந்திருந்தனர் என்றும் எழுதினார். தமிழர் தொகுத்திருந்த வானியல் அட்டவணைகளை Fr.Xavier Duchamp என்பவர் பிரான்சுக்கு அனுப்பி வைத்தார்.

கடல்சார் வரலாறும் தாவரங்களும்

அண்மையில் தஞ்சாவூர் நகரில் மெக்சிகோ தாவர வகை மரம் ஒன்று கஜா புயலில் சேதமடைந்ததால் அதனை அவ்வூர் மக்கள் இடம்பெயர்த்து ஒரு புதிய இடத்தில் நட்டுள்ளனர். இராபர்ட் கால்ட்வெல் தாம் வாழ்ந்த இளையான்குடியில் புதிய வகைத் தாவரங்களை வளர்த்ததாகக் கூறுவர். காற்றின் ஈரப்பசையினையும் உட்கொள்ளும் யூகலிப்டஸ் இந்தியத் தாவரம் அன்று. குத்துக்கடலை, நிலக்கடலை இரண்டுமே தமிழகத்தில் போர்சுக்கீஷியர் அறிமுகப்படுத்திய பயிர்கள். மிளகினை மாற்றாகக் கொடுத்து பெறப்பட்ட காய் மிளகாய் எனப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கால் பிள்ளமார் என்றொரு சாதியினை உருவாக்கியது.

ஒரிசாவிலுள்ள ஒரு கோயிலில் ஒட்டைச் சிவிங்கி சிற்பம் உண்டு. இவ்விலங்கு ஆப்பிரிக்காவில் இருந்து கப்பலில் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். குதிரைகள் தமிழகம் வந்ததற்கு தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் உண்டு. ஆனால், இவ்வணிகம் குதிரைசெட்டிகள் என்ற ஒரு சாதியினையே உருவாக்கியது.

(II)

ஓரிடத்தில் பயன்பாட்டிற்கான பொருள் தேவைக்கதிகமாகக் கிடைக்கின்றபோதும் அப்பொருள் கிடைக்காதபோதும் அங்கு வணிகம் தலைப்படும். அப்பொருளுக்குச் சொந்தமானவர் வேறொரு இடம் தேடி விற்பார்; வேண்டுவோர் வேறொரு இடம்தேடி செல்வர். இவ்விரு இடத்தினையும் இணைப்பது வணிக வழிகள். அவை கடல் வழியாக இருக்கலாம்; நிலவழியாக இருக்கலாம். நிலவழி வணிகத்திற்கு நடையும், கால்நடையும் வண்டிகளும், கடல்வழி வணிகத்திற்கு கப்பல்களும் ஓடங்களும் பயன்படுவன. உள்நாட்டு வணிகத்திற்கு நிலவழியும், கால்வாய் நீர்வழியும் இடம் தருவன.

வணிகத்தினை முறையாக மேற்கொள்வதற்கு ஒரு நிறுவன அமைப்பு வேண்டும். அதற்கான அமைப்பினை வணிகர்கள் உருவாக்குவர். இவை, வணிகக் குழுக்கள். இக்குழுக்கள் தமக்கும் தமக்கான வணிகப் பொருள்களுக்கும் பாதுகாப்பினை உருவாக்கும் பொருட்டு காவலர்களையும் அமர்த்துவர். தம்மை தனித்த பெயர்களால் அழைத்துக் கொள்வர். ஆட்சியாளரோடு உறவாடிக் கொள்வர். பொருள்களை நுகரும் மக்களை ஈர்ப்பதற்கு வழிபாட்டு இடங்களைப் போற்றுவர். மக்களின் அன்றாட வாழ்வினை இயக்கும் சக்தியாக உருப்பெறுவர். இவையனைத்தும் தென்னிந்திய வரலாற்றில் நிகழ்ந்தன. குறிப்பாகத் தமிழக நிலப்பரப்பில் இப்போக்கு தடையின்றி நடந்தன. அதற்கான காலம், களம், பொருள்கள் அரசியல் காரணம் அதன் கூறுகள் இங்கு பேசப்படுகின்றன.

சான்றுகள்

பழந்தமிழகம் உலகின் வணிகர் களத்தில் இடம்பெற்றது பற்றி கிரேக்க மொழியில் தாலமி, பிளிநி போன்றவர்கள் தம் எழுத்துகளில் குறித்துள்ளனர். ஆனால், அவர்கள் அக்குறிப்புகளை நேரிடையாகத் தரவில்லை. அவர்கள் சுட்டிய தொண்டிஸ், முசிரிஸ் போன்ற இடங்களை தென்னகத்தில் அதே பெயரில் அல்லது தொடர்புடைய பெயர்களில் உள்ள தற்போதைய ஊர்களுடன் அடையாளம் காண இயலும். பிளிநி, தம் Natural Historia என்ற நூலில் இந்தியாவினை உலோகங்களின் தொட்டில் என்று வருணிக்கிறார். அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தென்னகத்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கொச்சிக்கு வந்த கப்பல் பற்றி குறிப்பு தருகிறார்.

ரோமானியக் காசுகள்

தமிழகத்தில் பட்டுக்கோட்டை, கோவை போன்ற இடங்களில் கிடைத்த ரோமனியக் காசுகளின் அடிப்படையில் தமிழகம்-ரோமானிய வணிகத்தினை உறுதி செய்யலாம் (Mortimer Wheeler,1953). தென்னகம் பொன்னிற்காக மிளகினை ரோமானியர்க்கு விற்றது. ரோமானிய நாணயத்தின் பொதுவான சின்னங்கள் புள்ளிகள், பிறைகள், வட்டங்கள். இவற்றினை வானியல் அடையாளங்கோடு பொருத்திப் பொருள் காண வேண்டும். கேரளத்தின் திருவனந்தபுரத்தின் பத்மநாதபுரம் கோயிலில் கிடைத்த தங்கப் புதையலில் பெரும்பாலானவை ரோமானிய நாணயங்கள்.

இந்தியாவில், டைபீரியஸ் அகஸ்டஸ் என்ற ரோமப் பேரரசன் வெளியிட்ட பொற்காசுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. 15 ஆம் நூற்றாண்டின் வெனிஸ் நகரத்து பொற்காசுகளும் 18 ஆம் நூற்றாண்டின் நெப்போலியன் காலத்துப் பொற்காசுகளும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வெளியிட்ட பொற்காசுகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. இப்படி, மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் வந்து குவிந்ததற்குக் காரணம் தென்னிந்தியாவின் அமைவிடமும் பொருள் வளமும் ஆகும்.

tamil shipஇந்திய மன்னர்களில் ஒருவரான கனிஷ்கர் ரோமானியப் பொன்னில் தன்னுருவக் காசுகளை வெளியிட்டார். நாட்டைவிட்டு அதிகமான தங்கம் வெளியேறியதால் ரோம் மன்னர் வெஸ்பாசியன் இந்தியாவுடனான வணிகத்திற்குத் தடை விதித்தார். வணிகத்தால் பொற்காசுகள் குவிந்திருப்பினும், சங்க காலம் தொடர்பான அகழாய்வுத் தளங்களில் ஒரு சில பொன்னால் ஆன பொருள்களே கிடைத்துள்ளன.

தென்கிழக்காசியாவின் தமிழகத்துடனான வணிக உறவு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பதன்கல் என்ற பழந்தமிழ் கல்வெட்டுப் பொறிப்பினால் உறுதி செய்யப்படுகிறது. இது, பொன் வணிகத்தோடு தொடர்புடையது. கம்போடியா, வியட்நாம், பர்மா, ஸ்ரீவிஜயம், ஜாவா, போர்னியோ போன்ற தென்கிழக்காசியப் பகுதிகள் இந்தியாவின் மன்னர்களோடு தொடர்பு கொண்டிருந்தன. இது, பெரும்பாலும் வணிகத்தால் சாத்தியப்பட்டிருக்கும். இப்படி மத்திய தரைக்கடல் தொடங்கி தென்சீனம் வரை ஓர் உலக வணிகம் (global trade) நடந்தேறியுள்ளது.

யூதர்கள், இந்தியாவின் மேற்கு கடற்கரை நகரங்களில் குடியேறுவதற்கு வணிகம் ஒரு காரணம். பண்டைத் தமிழகத்தின் முக்கியமான வணிகத்தலங்களாக காவிரிப்புகும்பட்டினம், அரிக்கமேடு, வீராம்பட்டினம், ஆலங்குளம், முசிறி, தொண்டி, கொற்கை போன்றன. ஆனால், இவ்விடங்களில் இன்று வாழ்ந்து வரும் மக்களின் அன்றாட வாழ்முறைகள் மானிடவியல் பின்னணியில் ஆயப்படவில்லை. இவற்றுள், காவிரிப்புகும்பட்டினம் சிலப்பதிகாரம் சுட்டும் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றை இன்னும் கொண்டுள்ளன என்பர். அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் அவ்வூரின் அருகே நோக்கர் என்ற சமூகம் வாழ்ந்து வருவதாகவும் அவ்வட்டாரத்து மக்களின் வாழ்க்கை வட்டச்சடங்குகளோடு நெருக்கமானவர்கள் என்றும் அறிய வந்தது. இது, ஒரு வட்டாரத்தின் மானிடவியல் ஆய்விற்கு மிக முக்கியமான கூறாகும் (18/08/2019 அன்று பூம்புகார் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் திரட்டப்பட்ட செய்தி).

ரோம், பார்த்தியா வழியே சென்ற நிலவணிகத்தினைத் தவிர்த்து இந்தியாவுடன் நேரடி கடல் வணிகத்தினை மேற்கொண்டது. அரபியர்கள் பருவக் காற்று வீசும் விதம் பற்றியும், இந்தியாவிற்கு வரும் கடல்வழி பற்றியுமான அறிவினையும் ரகசியமாக வைத்தனர். இலவங்கம் கிடைக்கும் சந்தை பற்றிய அறிவினையும் இரகசியமாக வைத்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் கிடைத்த அகில், சந்தனம் ஏற்றுமதிப் பொருள்களாயின. சீனாவிலிருந்து கற்பூரமும், இந்தோனேசியாவிலிருநது சாம்பிராணியும் இறக்குமதியாயின.

பிளிநியின் நூல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை வணிக நகரங்கள் பற்றி மட்டும் குறிக்கின்றன. இது வணிகர்களின் நகர்வினையும் பொருளியல் பெருக்கத்தினையும் கோடு காட்டும். ரோமானிய வணிகர்கள் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியே கோவை, ஈரோடு, கரூர் ஊடாக கிழக்கிலுள்ள சந்தைகளில் வணிகம் செய்தனர். மேற்சொல்லப்பட்ட ஊர்கள் கிழக்கினையும் மேற்கினையும் இணைக்கும் வணிக மையங்கள். அங்கெல்லாம் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. தாலமியின் Geography தமிழகத்தின் கடற்கரை துறைமுகங்கள் பற்றிக் குறிக்கிறது.

மேற்குத் துறைமுகங்களுக்கு நாணயங்கள், புஷ்பராகம், அஞ்சனக்கல், பவழம், கச்சாக் கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது, ஆடை வகைகள் இறக்குமதியாயின. மிளகு, முத்து, தந்தம், பட்டு, மருந்து, (இலமிச்சை தைலம்), பளிங்கு கற்கள், படிகப் பச்சை, வைரம், நீலநிறக் கற்கள், ஆமை ஓடுகள் போன்றன ஏற்றுமதியாயின. இவையனைத்தும் செல்வருக்கான பொருள்கள்; பொதுமக்களுக்கானவை அன்று.

பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் வணிகர்

பொன்வணிகர், துணி வணிகர், கொழுவணிகர், பணித வணிகர் போன்றோர் துறவிகளுக்கு கொடையளித்துள்ளனர். இதைக் குறிக்கும் கல்வெட்டுகள் மதுரைப் பகுதியில் கிடைப்பவை (தி.ஸ்ரீ.ஸ்ரீதர்,2006). இவற்றின் ஒத்த காலத்தினைச் சார்ந்த சங்க இலக்கியத்தின் பல பாடல்களை இயற்றியவர்கள் பெரும்பாலும் வணிகர்கள். நக்கீரர் எனும் புலவர் சங்கு வணிகர் என்று கருதத் துணியலாம். மதுரை வட்டாரம் பெருவணிகப் பரப்பாக இருந்தமையே இதற்குக் காரணமாகலாம். அதற்கான நிலவியல் கூறுகளை இவ்வட்டாரம் கொண்டிருந்தது. மணிமேகலையின் ஒத்த காலத்தின் சிலப்பதிகாரத்தில் அவந்தியர், யவனர் பற்றிய குறிப்புகள் அயல்நாட்டு, உள்நாட்டுக் குடியேற்றங்களைச் சுட்டும் எனலாம். இவை பெரும்பாலும் வணிகத்தால் சாத்தியப்பட்டிருக்கும். இப்புலப்பெயர்வு இனக்கலப்பிற்கு ஏது செய்திருக்கும்.

பண்டை இந்தியாவின் வணிகத் தலங்கள் நிகமம் என்று அழைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த வணிகக் குழுவினர் நிகமத்தோர் எனப்பட்டனர். உள்ளூர் வணிகப் பொருள்கள் பெரும்பாலும் ஒளிரும் வைரங்கள், மரகதக் கற்கள், புஷ்பராக கற்கள், தேன்நிறக் கற்கள், மாணிக்கக் கற்கள், நீலக் கற்கள், மஞ்சள் நிற கோமேதக்க் கற்கள் போன்றன. உள்ளூர்ப் பொருள்கள் பெரும்பாலும் துணி, பொன், தானியம், உப்பு, எண்ணை, வெல்லம், இரும்பு போன்றவையாகும். மிகு மதிப்புடைய இப்பொருள்கள் செல்வருக்கானவை என்று சொல்லத் துணியலாம்.

அரச குலத்தினரும் தூதுக் குழுக்களும்

பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மனின் தூதர்கள் சீனத்தின் சக்கரவர்த்தியினை சந்தித்ததாக சீனக் குறிப்புகள் உண்டு. பல்லவரின் நேரடி கிளைவம்சம் தற்போதைய சம்பா என்ற பகுதியினை ஆண்டனர். கி.பி.400 முதல் தாய்லாந்திலிருந்து வியட்நாம் வரையிலும், இந்தோனேசியத் தீவுகள் வரையிலும் இந்தியப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற வமிசத்தினர் ஆண்டனர். அங்கு அரசத் தளபதிகள், புரோகிதர், பார்ப்பனர், வர்த்தகர், கைவினைஞர்கள் இருந்தனர்.

தென்கிழக்காசிய நாடுகளான லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற இடங்களிலுள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் கிரந்தவரியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. சில கல்லிலும், சில பொன்னிதழ்களிலும், களிமண் பலகைகளிலும் எழுதப்பட்டன. 7 தமிழ்மொழிக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. மலாய் தீபகற்பத்தின் தகோபா என்ற இடத்தின் கல்வெட்டு ஸ்ரீநாரணம் என்ற பெயரில் அமைந்த ஒரு குளம் பற்றிப் பேசுகிறது. இந்தியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான சமூக, பொருளியல் பிணைப்புகள் மானிடவியல் பின்னணியில் ஆயப்பட வேண்டியன. அங்கு வழக்கில் உள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகள், திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளதனை ஆய்வுக் களமாகக் கொள்ளலாம் - குறிப்பாக இலக்கியங்கள் வழியேயும், கதைகள் வழியேயும்.

தூதுக் குழுக்கள்

கி.பி.501இல் இந்தியாவிலிருந்து ஒரு தூதுக்குழு சீனம் சென்றது. அக்குழு முத்து, யானை, வைரம், வேலைப்பாடு நிறைந்த மஸ்லின் துணிகள், வாசனைச் செடி, கரும்பு போன்ற பொருள்களுடன் சென்றது. மதிப்புறு பொருள்கள் எங்கிருந்தாலும் அவற்றை அரச குலத்தினர் தமதாக்கிக் கொண்டனர் என்பதனை இதில் அறியலாம். அதற்கு இங்கு வணிகமும், தூதும் ஊடகமாயின. பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மன் காலத்தில் அவனுடைய தூதர்கள் சீனம் சென்றனர் என்ற குறிப்பு உண்டு. சோழர் காலத்தில் கி.பி.1015, 1003, 1077 ஆகிய ஆண்டுகளில் சோழர்கள் சீனத்திற்கு தூதுக் குழுக்களை அனுப்பினர் (K.A.Nilakanta Sastri,1984). சீன மொழியில் முதலாம் இராஜராஜன் லோட்ஸா லோட்ஸா என்று சுட்டப்பட்டார். அவர் அனுப்பிய தூதுக்குழு முத்து, தந்தம், சாம்பிராணி போன்ற பொருள்களைக் கொண்டு சென்றது. 1077இல் குலோத்துங்கனின் சீனக் குழு கற்பூரம், கண்ணாடிப் பொருள்கள், பட்டாடை, காண்டாமிருகத்தின் கொம்புகள், தந்தம், குங்கிலியம், பிற ஆடம்பரப் பொருள்கள், மணப் பொருள்கள் போன்றவற்றைக் கொண்டு சென்றது. இவற்றை அரச குடும்பத்துக்கான பரிமாற்றப் பொருள்கள் என்று கணிக்க வேண்டும்.

சோழர் காலத்திலிருந்து தென்னிந்தியத்துடனான வணிகம் பெரும்பாலும் பட்டு, பீங்கான், கற்பூரம், வாசனை மரங்கள் இவற்றை முதன்மையாகக் கொண்டிருந்தன. சோழர் காலத்து வணிகர்கள் தத்தம் பெயரோடு கடாரம் கொண்டான், உத்தம சோழன், கரிகாலச் சோழன், ராசேந்திர சோழன் என்ற பட்டப்பெயர்களைச் சேர்த்துக் கொண்டனர். அவர்கள் தாம் வசிக்கும் தெருக்களுக்கு ராஜராஜன், ராஜேந்திரன், மும்முடி சோழன், அருண்மொழித்தேவன், லோகமாதேவி, வானவன்மாதேவி, திரிபுவனமாதேவி போன்ற அரச குடும்பத்தின் பெயர்களை இட்டனர். ஆட்சியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் இடையிலான உறவு இன்றுவரை தொடர்வது சமூக இயக்கத்தில் அதிசயமன்று.

வணிகர் குழுக்கள்

வணிகர் குழுக்கள் நானாதேசிகள், அய்நூற்றுவர், பதினெண்விஷயத்தார், திசையாயிரத்து அய்நூற்றுவர், வளஞ்சியர், வீரவளஞ்சியர், அஞ்சுவண்ணத்தார் என்ற பெயர்களில் அழைத்துக் கொண்டனர். அவர்கள் நகரம், தெரு, எறிவீரபட்டினம் போன்ற இடங்களில் வசித்தனர். உள்ளூர் வணிகர்கள் வாணியர், சங்கரபாடியார், சாலியர், மயிலாட்டி, மணிகிராமத்தார், குதிரைசெட்டிகள் என்று அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் இடைக்காலத்தின் முக்கிய வணிக நகரங்கள்: கொடும்பாளூர், முனைசந்தை, பிரான்மலை, உறையூர், தில்லைதானம் போன்றவை (Y.Subbarayalu, South India under the Cholas, 2011). இதில் முதல் மூன்று ஊர்கள் வறண்ட பகுதியில் அமைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ளூர் வணிகத்தில் வரி விதிக்கப்பட்ட பொருள்கள்:அரிசி, நெல், பருப்பு வகைகள், உப்பு, வணிகப் பயிர்கள், மிளகு, ஆமணக்கு, பாக்கு, மஞ்சள், சுக்கு, கடுகு, வெங்காயம், சீரகம், திரிபலா, பருத்தி, நெல், தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், இரும்பு, ஆடு, குதிரை, யானை மற்றும் எள். அகமதிப்புள்ள ஆடம்பரப் பொருள்களாக கஸ்தூரி, சங்கு, தந்தம், இரத்தினம், பவழம், முத்து, தாமிரம், பித்தளை போன்றவை ஆகும். இவற்றுள் மருத்துவ குணமுள்ள பொருள்களின் பட்டியலை கணக்கில் கொள்ள வேண்டும்.

இடைக்காலத் தமிழகத்தின் மருத்துவ வரலாறு பற்றிய புரிதலுக்கு இப்பெயர்கள் பெரிதும் பயன்படும். இடைக்காலத் தமிழகத்தின் வணிகப்பாதைகள் பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காகச் சென்றாலும், வணிகக் குழுக்கள் பற்றிப் பேசும் கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழகத்தின் கிழக்குப் பகுதிகளிலேயே கிடைக்கின்றன. அவற்றுள் சில கடற்கரையோர நகரங்களாகும்.

வணிகமும் அடிமையும்

வணிகத்தில் காலம் காலமாக அடிமைகள் விற்கப்பட்டனர். இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றில் அடிமைகள் பற்றி கல்வெட்டுகளில் விரிவான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அய்ரோப்பியர் வருகைக்குப் பிறகு அடிமைகள் விற்பனை அதிகரித்தது. அதற்குமுன் விஜயநகர் அரசு காலத்திலும் இவ்வழக்கம் உண்டு.

காலனிய காலத்தில் மதராஸில் அய்ரோப்பியர் வீடுகளில் பறையர் இனத்தினர் பல வேலைகளைச் செய்தனர். அவை: உணவு பறிமாறுதல், அவரது உடனாள், சமையல் செய்வது, பெட்டி வண்டி ஓட்டுதல். குதிரை பராமரித்தல், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாதியராக இருத்தல், தண்ணீர் சுமத்தல், வீட்டினைச் சுத்தப்படுத்துதல், பெண்கள் வீடு கட்டும் வேலைகளில் ஈடுபடுதல், வீடுகளில் விளக்கேற்றுதல் போன்ற வேலைகளைச் செய்தல் போன்றன.

போர்சுக்கீஷ், டச்சு, ஸ்பானிஷ் மொழி ஆவணங்கள் தமிழகத்திலிருந்து அடிமைகள் வாங்கப்பட்டு ஆசியாவின் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது பற்றி பேசுகின்றன. இவ்வடிமை வணிகத்தில் ஆங்கில – கிழக்கிந்தியக் கம்பெனி, டச்சு -கிழக்கிந்தியக் கம்பெனி, போர்ச்சுகீஷ் - கிழக்கிந்தியக் கம்பெனி மூன்றும் ஈடுபட்டன. 16 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் அரும்பிய முதலாளித்துவம் மனிதர்களைப் பண்ட மாற்றுப் பொருளாக மாற்றியது. இந்நூற்றாண்டின் கடைக்கூற்றில் அய்ரோப்பிய அரசர்களின் சொந்தமான கப்பல்களில் சிற்றாள், தச்சு வேலைகளுக்கு இந்தியாவிலிருந்து அடிமைகளை வாங்கினர்.

நாகப்பட்டினத்திலிருந்து மலாக்கா வழியே வாங்கப்பட்ட அடிமைகள் திறமையானவர்கள் என்று பெட்ரோ-சிர்ரினியோ என்ற ஏசு சபை உறுப்பினர் குறிப்பு தருகிறார். பெண் அடிமைகள் நல்ல தையலர்களாகவும், வேலைக்காரர்களாகவும் இருந்தனர் என்பது இவரின் கூற்று. ஒரு போர்சுகீசிய வியாபாரி கிறித்தவத்திற்கு மதம் மாறிய நான்கு அடிமைகளை நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து அனுப்பினார். அதே போன்று, ஸ்ரீலங்காவிலிருந்து மூன்று மதம் மாறிய கிறித்தவர்களை அடிமையாக அனுப்பி வைத்தார். 1661இல் ஒரு சமய நிறுவனம் ஒருவரை அடிமை என்று முத்திரை குத்தினால் அவர் அடிமையாகுவார்.

1620 இல் பிரான்ஸிஸ் காமக்கிட்டோ என்ற அடிமைகளை விற்கும் வணிகர் ஓர் இந்திய அடிமை மேல் தன் உரிமையினைக் கோரினார். அவர் இந்தியாவிலுள்ள இந்துக்களும், முஸ்லீம்களும் கிறித்தவர்களுக்கு எதிரிகள் என்பதால் அவர்கள் அடிமைகள் என்று அறிவிக்கப்பட்டனர் என்றார். போர்ச்சுகீஷிய தனியார் வணிகர்களுக்கு நாகபட்டினத்தில் அடிமை வணிகர்கள் கிடைத்தனர். டச்சு, போர்ச்சுகீஷிய கம்பெனிகளுக்கு நடந்த சண்டைகளில் அடிமைப் பெண்கள் பிடிக்கப்பட்டனர்.

போர்ச்சுக்கீஷியர்கள் கிறித்தவத்திற்குப் புறம்பாக நள்ளிரவில் அடிமைகளைத் திருடினர் என்று டச்சர்கள் கண்டித்தனர். கடத்தப்பட்ட, பிடிக்கப்பட்ட அடிமைகள் மீண்டும் விற்கப்பட்டு போர்ச்சுகீசிய வணிகர்களால் மலாக்கா வழியே மணிலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனக்குத் தெரியாமல் பிறரால் விற்கப்பட்ட தன் மனைவி, மக்களை மீட்க முயற்சிக்கையில், ஓர் அடிமை போர்ச்சுகீஷியப் பாதிரியாரை எதிர்த்தார். எதிர்த்த அவரை சிறையிலடைத்தனர். அவர் கவர்னருக்கு மனு கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை. கைமாறி கைமாறி அவர் மனைவி, மக்கள் விற்கப்பட்டனர். வெறுப்படைந்த அவர், இந்து சமயத்திற்குத் திரும்பினார். கிறித்தவப் பாதிரிமார்கள் அவருக்கு நியாயம் வழங்கவில்லை. சமயம் மாறிய கிறித்தவர்கள் சமயப் பாதிரியார்களின் மேலாண்மையில் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்பது சமயம் ஏழைகளைக் காப்பாற்றவில்லை என்பதனைக் காட்டுகிறது. சமயமும், வணிகமும் கூட்டாக மனிதரை அடிமையாக்கியுள்ளது.

ஜகார்த்தாவிலிருந்த டச்சு கவர்னர் சோழ மண்டலக் கரையிலிருந்து அடிமைகளை வாங்குதற்கு ஆணையிட்டார். எவ்வளவு இளைஞர்கள், இளம்பெண்கள் முடியுமோ அவ்வளவு பேரையும் அனுப்புமாறு வேண்டினார். இங்கிருந்து 150 குழந்தை அடிமைகளும் அனுப்பப்பட்டனர். பழவேற்காடு துறைமுகம் வழியே டச்சர்கள் அடிமைகளை வாங்கி விற்றனர். அடிமை வணிகத்தில் அதிக லாபம் கிடைக்கிறது என்று டச்சு அதிகாரி குறிப்பிட்டார். அங்கிருந்து 1622 இல் 1623 இல் தமிழ் அடிமைகள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 1624 இல் 928 அடிமைகள் அவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டனர். 1624, மார்ச்11இல் அப்படி அனுப்பப்பட்ட 630 அடிமைகளில் 45 பேர் கப்பலிலேயே இறந்தனர். மியான்மரிலும், இந்தோனேசியாவிலும் நிறுவப்பட்ட பல்வேறு டச்சு ஆலைகளில் வேலை செய்ய அடிமைகள் தேவைப்பட்டனர். தமிழ் அடிமைகள் டச்சு அதிகாரிகளுக்கு லஞ்சமாகத் தரப்பட்டனர். மரம் வெட்டும் சில அடிமைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டனர்.

1658-59 களில் பழவேற்காட்டிலிருந்து ஜகார்த்தாவின் டச்சு கம்பெனிக்கு செல்லும் அடிமை வணிகம் நின்றது. 1618 இல் பஞ்சம் காரணமாக திருப்பாதிரிபுலியூரில் ஒரு பகோடாவிற்கு 3 அல்லது 4 குழந்தைகள் டச்சுக்காரர்களால் வாங்க முடிந்தது. டச்சர்கள் தேவனாம்பட்டினத்திலிருந்து அடிமைகளை வாங்குவதற்கு அனுமதி பெற பிராட்டஸ்டண்ட் போதகரான பிலிப்பால்டியஸ் என்பவரை தூதராக செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரை சந்திக்க அனுப்பியது. செஞ்சி ராஜ்யம் சிவாஜியின் ஆளுகைக்கு வந்தபின் கடலூர், தேவனாம்பட்டினம் துறைமுகங்களில் டச்சுக் கம்பெனி நடத்திய அடிமை வணிகத்தினை 1678 இல் எழுத்துவடிவிலான ஆணையால் தடை செய்தார். தெலுங்குதேசக் கடற்கரையில் கோல்கொண்டா சுல்தான் அனுமதியுடன் ஆண், பெண், குழந்தைகளை அடிமையாக வாங்குவது சட்டப்பூர்வமாக இருந்தது.

பரங்கிப்பேட்டையிலிருந்து ஜாவாவின் பாண்டன் எனும் இடத்திற்கு 100 அடிமைகளுடன் கப்பல்கள் சென்றன. சீர்காழியில் இருந்த மிர்ஜஸ் மரைக்காயர் முக்கிய அடிமை வணிகராயிருந்தார். அடிமை வணிகரான அகமது மரைக்காயர் ஒரு கப்பலின் உரிமையாளராக இருந்தார். 1659 இல் நாகப்பட்டினத்தில் ஓர் அடிமையின் விலை ஒரு ரியால். 5000 அடிமைகள் வாங்கப்பட்டு 1659 இல் நாகப்பட்டினத்திலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். அடிமை வணிகத்தினை புரட்டஸ்டண்ட் சமய தர்மம் என்று டச்சுக் கம்பெனி அதிகாரிகள் வருணித்தனர். 1662 இல் போர்ச்சுகீஷ் இயேசு சபையின் குரு அரிசி கொடுத்து அடிமைகளை விலைக்கு வாங்கினார்.

மதுரையினை ஆண்ட முத்துவீரப்ப நாயக்கர் தூத்துக்குடியிலிருந்து டச்சர்கள் அடிமை வணிகம் செய்வதை எதிர்த்தார். இவர் இறந்தபின் மீண்டும் இவ்வணிகம் உயிர் பெற்றது. கொழும்புவின் டச்சு ஆலைகளுக்குப் பெருமளவில் அடிமைகள் விற்கப்பட்டனர். காத்தான்குடியின் மணப்பாடு பகுதியிலிருந்து அடிமைகள் வாங்கப்பட்டு விற்கப்பட்டனர். 1681 இல் கொழும்புவில் சுமார் 2000 அடிமைகள் இருந்தனர். அவர்களுக்கு தனியாகச் சீருடை வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் சிதம்பரம் என்பவர் புகழ்பெற்ற பெரிய அடிமை வணிகராவார். சென்னையில் கண்ணப்பன் என்பவர் அடிமை விற்பனையில் தரகராக செயற்பட்டார். 1683 இல் சென்னையிலிருந்து ஏராளமான அடிமைகள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். 1637 இல் 665 அடிமைகள் சுமத்ராவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். அங்கு, ஆங்கிலேயருக்கு ஒரு வணிக மையம் இயங்கியது.

போரில் பல அடிமைகள் தனியாகவோ, குழந்தைகளுடனோ, நண்பர்களுடனோ பிடிக்கப்பட்டனர். பெற்றோர், கடனிற்கு குழந்தைகளை விற்றனர். தந்திரமானவர்களால் சில குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டனர். குழந்தை விற்பனை மிக மோசமாக நிகழ்ந்தது. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோர நிலப்பகுதிகளில் இருந்து பெரும்பாலும் தமிழர்கள் அடிமைகளாக விற்கப்பட்டது, அதற்காக இங்கிருந்தவர்களே முகவர்களாக செயற்பட்டது சமூக அடுக்கினையும், பொருளியல் நிலையினையும் விளக்குவதாயுள்ளது. இவ்வட்டாரத்தில் குழந்தைகளின் அவல நிலை பற்றி பல கதைகள் உள்ளன. இங்குள்ள காளியுருவச் சிலைகளின் மடியில் உயிர் பிரிக்கப்படும் உருவம் பெரும்பாலும் குழந்தை. ஐரோப்பிய குடியிருப்புகளில் இனவிருத்திக்காகவும், பாலுறுவுக்காகவும் பெண் அடிமைகளுக்கு பெரும் கிராக்கி இருந்தது. அடிமைகள் பலமுறை கைமாறினர். இது தமிழரின் இரத்தம் உலகம் முழுதும் உறைந்துள்ளது என்பதனைக் காட்டும்.

ஐரோப்பிய கம்பெனிகள் அடிமைகளை வகைப்படுத்தியது: கம்பெனி அடிமை, தனியார் ஆண்-பெண் அடிமைகள், வீட்டு அடிமை, பண்ணை அடிமை, கைமாறிய அடிமை, உருவாக்கப்பட்ட அடிமை. 1727இல் தமிழ் வணிகர்கள் தம்பங்கிற்கு தரங்கம்பாடியிலிருந்து இந்தோனேசியாவின் ஒரு துறைமுகத்திற்கு அடிமைகளை ஏற்றுமதி செய்தனர்.

புரடஸ்டண்ட் சமயப் பரப்புரையளர்களுடன் இணைந்து கொண்ட அபிஷேகம் என்கிற இந்து 1728 இல் அடிமையாக விற்கப்பட்டார். தரங்கம்பாடி டேனிஷ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகவே அடிமை வணிகத்தினை அனுமதித்தது. தம்மைப் போன்றே கிறித்தவர்கள் தமிழர்கள்தான் எனினும் அவர்களை அடிமைகளாக விற்பதில் டச்சுக்காரர்களுக்கு மனவருத்தம் இல்லை.

நாகபட்டினத்தினைச் சேர்ந்த தாயொருத்தி வறுமையின் காரணமாக தம் 10 வயது மகளை டச்சுக் கம்பெனி பணியாளரிடம் விற்றார். சின்னத்தாய் என்ற பெயர் கொண்ட அவள் மூன்று கைகள் மாறி ரோசா என்று கிறித்தவப் பெயர் சூட்டப்பட்டு 1763 இல் கேப்டவுனுக்கு அனுப்பப்பட்டு அதற்கும் அப்பாலுள்ள கண்ஸ்டாண்சியா எனும் ஒயின் கம்பெனியில் சேர்க்கப்பட்டார்.

1707-1760 களில் புதுச்சேரியின் கவர்னர்கள் அடிமை வணிகத்தில் அக்கறை காட்டினர். போர்போர்ன் தீவுகளில் இருந்து அடிமைகளை வாங்குவதற்கு வெள்ளி அய்ரோப்பாவிலிருந்து இறக்குமதியாயின. பிரஞ்சுக் கம்பெனி தங்கத்தினைக் கொடுத்து 6 தமிழ்ப் பெண்களை வாங்கியது. போர்போனுக்கு அனுப்பப்பட்ட அடிமைகள் அங்கு வீடுகளில் பணியாளர்களாய்ச் சேர்ந்தனர். பயணத்தின்போது அடிமைகள் நோயில் இறந்தனர்.

ஆற்காட்டு நவாப் முஸ்லிம் அல்லாதாரை தாராளமாக அடிமைகளாகக் கொண்டு செல்லலாம் என்று ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி வழங்கினார். பிரஞ்சுகாரர்கள் பாகூர், ஒழுந்தியாம்பட்டு, விருத்தாசலம், திருவலஞ்சுழி ஆகிய ஊர்களில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கி விற்றனர். சிறுவர் ஒருவனுக்கு 10 தங்க நாணயம் விலை; இளைஞர் ஒருவருக்கு 15 தங்க நாணயம்; பெண் ஒருவருக்கு 20 தங்க நாணயம். தரங்கம்பாடியில் ஒரு ஊரில் 50, 100 பேர்களை அடைத்து வைத்து விற்பதற்கு ஒரு வீடு பிரத்யேகமாக இருந்தது. அடிமைகளின் கால்களில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் மொட்டையடிக்கப்பட்டு கருப்புத்துணி அணிவிக்கப்பட்டனர். தமிழகத்தின் நாட்டுப்புறங்களில் தலை மொட்டியடிக்கப்படுவது தண்டனைகளில் ஒன்று. கறுப்புத் துணி அணிவித்தல் சமூக விலக்கத்திற்கான நடைமுறையாகும்.

அடிமை வணிகத்தில் சமயம் முக்கிய இடம் வகித்தது. தமிழ் அரசர்கள் இந்துக்களையும், ஆற்காட்டு நவாப் முஸ்லிம்களையும், ஐரோப்பிய சமயப் பரப்புரையாளர்கள் கிறித்தவராக மாறியவர்களையும் அடிமைகளாக வாங்குதற்கும் விற்பதற்கும் விரும்பவில்லை.

கடல்சார் வணிகமும் இனக்கலப்பும்

இடைக்காலத்தின் இந்திய வரலாற்றில் குஜராத்தின் மேற்குக் கடற்கரை ஊர்களில் அரபியக் குதிரை வணிகர்கள் இந்தியர்களோடு கலந்தனர். கேரளத்தின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் இதுபோன்று உருவானவர்களே மாப்ளா இனத்தினர். தமிழகத்தின் முத்து குளிக்கும் கிழக்குக் கடற்கரையோரங்களில் தமிழ்ப் பெண்களை மணந்த போர்ச்சுகீஷியர்கள் casados என்ற தனிக்குடியாக அழைக்கப்பட்டனர். இக்குடிகள் பின்னாட்களில் செல்வந்தராயினர். இதன்மூலம் தென்னகத்தின் முத்து வணிகத்தினை தம்கட்டுக்குள் போர்ச்சுகீஷியர் கொண்டு வந்தனர். ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் உருவான Anglo-Indian என்ற இனம் நன்கு அறியப்பட்ட ஒன்று. மலேயத் தீபகற்பத்திலிருந்து கைதிகளாக அழைத்து வரப்பட்ட சீனர் இனத்தின் வழிவந்த ஆண்களை பிரிட்டிஷ் அரசு நீலகிரி தேயிலை, காபித் தோட்டங்களில் அடிமைகளாக அமர்த்தினர். அவர்கள் தமிழ்ப் பெண்களுடன் கலப்புற்றனர் (Edgard Thurston and V.Rangacharya). அண்மையில் மியான்மரில் ரோகிங்கியா இனத்து இஸ்லாமியர் துரத்தி அடிக்கப்பட்டு அவர்கள் தரை வழியே / கடல் வழியே அகதிகளாக பிற நாடுகளுக்கு வெளியேறியதனை கடல்சார் வரலாறாக எழுத இயலுமா? இந்தியக் கடல் பரப்பு இரத்தச் சிவப்பாக மாறுவதனை இவ்வரலாற்று வகையில் வைக்க முடியுமா?

படகும் கப்பலும்

கடல்சார் வணிகத்திற்கு கப்பலும் படகுகளும் பண்டைக்காலம் தொட்டே முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன. பண்டைக்காலத்தில் படகுகள், நாணல், மரப்பலகை போன்றவற்றால் செய்யப்பட்டன. குடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த படகுகள் மரப்பலகைகளால் செய்யப்பட்டன. மொஹஞ்சோதராவில் நாணலில் செய்யப்பட்ட படகுகள் பயன்படுத்தப்பட்டன. தேக்கு மரம் படகு செய்வதற்கு ஏற்றதாக அமைந்திருந்தது. அதன் உறுதி, எண்ணைப் பசைத்தன்மை, காலத்தினை தாக்குப் பிடிக்கும் தன்மை, நீரினால் உப்பிப் போகாமல் இருத்தல் போன்றவற்றால் பெரிதும் பயன்பட்டது. மெசபடோமியாவின் படகுகள் அவற்றின் இடப்பெயர்களால் அழைக்கப்பட்டன (Shereen Ratnagar,2001;2006). அழகன்குளத்தின் பானையோட்டில் தீட்டப்பட்ட கப்பல் உருவம், பல்லவர், சாதவாகனர் காசுகளில் கிடைத்த படகு உருவங்களின் சாயலில் இன்றும் கப்பல்களும் படகுகளும் பயன்பாட்டில் உள்ளனவா என்பதனைக் கண்டறிய வேண்டும்.

கருத்துரு

மனித வரலாற்றின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த புலப்பெயர்ச்சி பற்றி அறிய கடல்சார் வரலாறு பெரிதும் உதவுகின்றது. வேதாகமம் போன்ற சமய நூல்களில் அவ்வரலாற்றின் நினைவுப் பதிவுகள் உள்ளன. நாட்டார் இலக்கியங்களிலும் இதுபோன்ற பதிவுகள் உண்டு. இந்த உயிரணுவின் நினைவுத் தொடர்ச்சிதான் தற்போதைய நாவல் வடிவங்களிலும் திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது. புலப்பெயர்ச்சிக்காக கடல் கடந்த மக்கள் தொடர்ந்து வணிகத்திற்கும் அடுத்து நாடு பிடிக்கும் கொள்கைகளுக்கும் கடலினைப் பயன்படுத்தினர். பொருளியல் தேவையின் வளர்ச்சிக்கேற்ப படகு, கப்பல் கட்டும் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெருகியது. தற்போது கடல்சார் வரலாற்று நிகழ்வுகள் பெரும்பாலும் போர்களுக்கு மட்டும் பயன்படுவதுபோல் தெரிகிறது. இப்போக்கு உலக மக்களை அச்சமூட்டுகிறது.

கடல்சார் வரலாறு தொடர்பான இடைக்காலத்து சான்றுகளையும், நவீன காலத்துச் சான்றுகளையும் அகழாய்வுகளில் கிடைத்த பொருள்களின் அடிப்படையிலும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து அறிகையில் அவை உயர்குடிச் சமூகங்களான ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோரைச் சுற்றியே இயங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவர்களுக்கு விளைபொருள்களை வழங்கிய வேளாண் மக்கள் நிலை பற்றியும், கைவினைஞர்கள் நிலை பற்றியும் அறிய இயலவில்லை. சுருக்கமாக, அகழாய்வுகளில் கிடைத்த அதிசயப் பொருள்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நிலையினை அறிவதற்குப் பெரிதும் உதவா. ஆனால், காலனிய காலத்துச் சான்றுகள் பெரிதும் பயனுள்ளவை.

Select Bibliograpahy

Burke, Peter, 2014. The French Historical Revolution: The Annales School 1929-2014, Stanford University Press, California.

Gupta, Ashindas, 2004. India and the Indian Ocean World: Trade and Politics, OUP.

Sastri, K.A.Nilakanta, 1984. THe Colas, University of Madras, Madras.

Ratnagar Shereen, 2001. Understanding Harappa Civilization in the Greater Indus Valley, Tulika.

--------------------2006.Trading Encounters: From the Euphrates to the Indus in the Bronze Age, OUP

subbarayalu, Y.2011.South India under the Cholas, OUP.

Stephen S.Jayaseela, 2015, A Meeting of the Minds: European and Tamil Encounters in Modern Sciences, 1507-1857, Primus Books, Delhi.

Trautmann R.Thmos, 2015, Elephants and the Kings: An Environmental History, Permanent Book,New Delhi.

Wheeler, Mortimer, 1954.Rome Beyond the Imperial Frontier, A Pelican Book, London.

அதியமான், ந & ஆ.துளசேந்திரன், 2010. நாவாய்: கடல்சார் வரலாற்றாய்வுகள், தஞ்சாவூர்.

கார்ல்மார்க்ஸ் & பிரடெரிக் ஏங்கல்ஸ், 1848. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, (தமிழில் தேவபேரின்பன்), என்.சி.பி.எச்.வெளியீடு. சென்னை

காளிமுத்து,கே.ஏ, 2012. தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801-1947) : ஒரு சமூக பொருளியல் பார்வை, பாரதி புத்தகாலயம், மதுரை.

முகுந்த், கனகலதா, 2016. பழந்தமிழர் வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள், (தமிழில்:எஸ்.கிருஷ்ணன்), கிழக்கு பதிப்பகம், சென்னை

ஜெயசீல ஸ்டீபன்,எஸ், 2017, சோழமண்டலக் கடற்கரையும், அதன் உள்நாடும்: பொருளாதார, சமூக, அரசியல்அமைப்பு, என்.சி.பி.எச்.சென்னை.

----------------------2018. காலனியத் தொடக்கக்காலம் (கி.பி.1500-1800), NCBH, சென்னை.

- கி.இரா.சங்கரன், இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல், மயிலாடுதுறை

Pin It
vetchi poo 1என் இளமைக் கால நினைவுகளில் ஒன்று இட்லிப்பூ. 
 
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் என் ஐயாப்பா வெளியூரிலிருந்து - சென்னையாயிருக்கலாம் - செடி வாங்கி வந்தார். 
 
வீட்டின் முன்னால்  பரந்த வெளியிடம். அதன் நடுவே செயற்கை நீருற்றுடன் கூடிய வட்ட மீன் தொட்டி. வாசலின் ஒரு பக்கம் வீட்டிற்கும் தொட்டிக்குமிடையே அமர்வதற்கு கல்லாலான இருக்கை. அதன் அருகே இச் செடி வைக்கப் பட்டது. 
 
சில நாட்களில் பூவும் பூத்தது. செம்மஞ்சள் நிறத்தில் இட்லிப்பூ. நீண்ட குழல்களின் மேற்புறத்தில் நான்கு சிறிய இதழ்கள். பல குழல்கள் சேர்ந்து கொத்தாக இட்லி போல் இருக்கும். குழலை உறிஞ்சினால் இனிப்பாக இருக்கும். தேன் குடிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வோம். செடியில் பூ அரும்பத் துவங்கியவுடன் பேரன், பேத்திகள் நாங்கள் எனக்கு, உனக்கு என்று வரிசை போட்டு விடுவோம்.
 
சிறுவயதில் இட்லிப்பூவைத் தலையில் ஸ்டைலாக (அப்படி நினைப்பு அப்பொழுது) வைத்துக் கொண்டு பள்ளிக்குப் பெருமையாகச் சென்றிருக்கிறேன். அக்காலத்தில் விருதுநகரில் ஆரஞ்சு வண்ண இட்லிப்பூவெல்லாம் புதுமையாகத் தான் இருந்தது. இப்பொழுது பேரன், பேத்திகளிடம் சொன்னால் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்!
 
இந்த சாதாரண இட்லிப்பூ தமிழ் நாட்டின் பழமையான மலர்களில் ஒன்று; 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில், அவைகளை விடப் பழமையான தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா!
 
எங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய "வேள்பாரி" வரலாற்றுப் புதினத்தைப் படித்து முடித்த வேகத்தில், பாரியின் தோழரான கபிலரின் சங்கத் தமிழ்ப் பாடல்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். 
 
கபிலர் பிரகத்தன் என்ற ஆரிய அரசனுக்கு தமிழின் பெருமை உணர்த்த வேண்டிப் பாடியது சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டு.  அப்பாடலில் குறிஞ்சி நிலக் கோதையர் குவித்து விளையாடிதாக 99 மலர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
 
அம்மலர்களின் பெயர்களையும், படங்களுடன் அவை பற்றிய விவரங்களையும் கண்டேன். (ஒரு திரைப்படத்தில் நடிகர் சூர்யா 99 மலர்களின் பெயர்களைக் கூறும் அந்தப் பாடல் வரிகளைக் கூறுவார்). அதில் நான்காவது மலராக இந்த இட்லிப்பூ "வெட்சிப்பூ" என்ற பெயருடன் இருந்தது..
 
"வெட்சி" என்ற பெயரைக் கேட்டவுடன் இன்னொன்றும் மணியடித்தது. பழந்தமிழ் நாட்டில் மன்னர்கள் வேற்று நாட்டுடன் போர் தொடுக்கும் போது, முதலில் பகை நாட்டின் எல்லையில் "ஆநிரை கவர்தல்" - ஆடு, மாடுகளைப் பிடித்துச் செல்லுதல் - மரபு. 
 
பழங்காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்த போது ஆடுமாடுகளே அவர்களது செல்வமாக இருந்தது. வலிமை கொண்ட குழுவினர் மற்றவரின் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வர். இவ்வாறு தோன்றிய வழக்கு, குழுக்கள் மறைந்து அரசாட்சி தோன்றிய பின்னரும் போருக்கு முன் ஆநிரை கவர்தல் என்ற மரபாக நின்றது. அவ்வாறு ஆநிரை கவரச் செல்லும் வீரர்கள் தலையில் செந்நிற வெட்சிப் பூவை அணிந்து செல்வர். 
 
வெட்சி தலையில் அலங்கரிக்க, ஆநிரை கவர்தலைப் பாடுவது வெட்சித் திணை. இவை பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் செய்திகள். பள்ளியில், கல்லூரியில் வெட்சித் திணை பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் கூட வெட்சி என்பது இட்லிப்பூ தான் என்று கூறியதில்லை. அவர்களுக்கே தெரிந்திருக்குமோ?
 
 குறிஞ்சி நிலத் தெய்வமான முருகப் பெருமான்  செச்சை என்னும் வெட்சிப்பூவாலான கண்ணியைத் (கண்ணி - தலையில் சூடும் மாலை)  தலையில் சூடியிருந்தார்,
 
      "செய்யன்....கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்" 
 
 என்று திருமுருகாற்றுப் படை கூறுகின்றது. போர்த் தெய்வமான முருகனை வழிபடுவோரும் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியைச் சூடியிருந்தனர் என்ற செய்தியும் 
 
    "செங்கால் வெட்சி" என்று அதே நூலில் வருகிறது.
 
ஊசி போல் அரும்பு விடும் வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. அவன் போருக்குச் செல்லும் போது பனை, வெட்சி, வேங்கை மலர்கள் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்,
 
"உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர்" என்று புறநானூறு சொல்கிறது.
 
அகநானூறு காடைப் பறவையின் கால் நக முள் போல வெட்சிப்பூ முதிரும்,
 
"இதல முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி" 
 
என்று உவமை காட்டிப் பேசுகிறது.
 
வையை நீராடச் சென்ற பெண்கள் வெட்சிப்பூ தலையில் சூடியிருந்தனர்,
 
vetchi poo"ஈர்அமை வெட்சிஇதழ் புனை கோதையர்" 
 
என்பது பரிபாடல் காட்டும் காட்சியாகும்.
 
கலித்தொகை ஏறு தழுவச் சென்ற இடையர் குலக் காளையர் சூடியிருந்த கண்ணியில்  பலவித மலர்களோடு இலையுடன் வெட்சிப்பூவும் இருந்தது என்று கூறுகின்றது.
 
இவ்வாறு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் படும் இட்லிப்பூ, இரட்சிப்பூ, விருட்சிப்பூ, அலம்பல் மல்லிகை, தேன்பூ என்றும் பலவாறு அழைக்கப் படுகிறது. 
 
மலையாளத்தில் செத்தப்பூ, தெலுங்கில் ராமபாணமு, கன்னடத்தில் செம்புலகிடா, இந்தியில் ருக்மணி என்பவை இட்லிப்பூவின் பெயர்கள். 
 
ரூபியேசியே குடும்பத்தில், இக்சோரா பேரினம் சார்ந்த இட்லிப்பூவில் வெள்ளை, மஞ்சள், அடர் சிவப்பு மற்றும் பல வண்ணங்களிலும், இதழ்களில் சிறு வேறுபாடுகளுடனும் ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.
 
சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் போது, திருவில்லிப்புத்தூரிலிருந்து வரும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்தே இறங்குவார். அந்த மாலை சிவப்பு நிற இட்லிப்பூவைக் கொத்தாகக் கட்டிச் சேர்த்து நல்ல தடிமனான மாலையாக, மஞ்சள் செவந்தி, பச்சை மரு இலைகள் சேர்த்துக் கட்டப் பட்டிருக்கும். ஆண்டாளுக்குச் சாற்றி, அடுத்த நாள் மதுரைக்குக் கொண்டுவந்து, மறுநாள் விடியற்காலையில் அழகருக்குச் சாற்றும் போதும் மாலை அப்படியே இருக்கும்.
 
திருப்பதி பெருமாளுக்கும் இட்லிப்பூ வைத்துக் கட்டப் பட்ட ஆண்டாள் மாலை, பிரம்மோற்சவத்தின் போது அனுப்பப் பட்டு சாற்றப் படுகிறது.
 
மேலும் சிவபூசைக்குச் சிறப்பானது. சிவப்பு நிறத்தில் இருப்பதால் அம்மனுக்கும் சாற்றலாம். முருகனுக்கும் உகந்த மலர்.
 
"வெட்சி புனையும் வேளே போற்றி
உயரகிரி கனக சபைக்கோர் அரசே"
 
என்று கந்த சஷ்டிக் கவசத்தின் இறுதியில் வருகிறது. எத்தனை முறை சூலமங்கலம் சகோதரிகளின் இனிய குரலில் கந்த சஷ்டிக் கவசத்தைக் கேட்டிருக்கிறோம்; சேர்ந்து பாடியிருக்கிறோம், குறிஞ்சி நிலக் கடவுளான முருகவேள் புனைந்துள்ள வெட்சி என்பது இட்லிப்பூ என்ற அறியாமலே!
 
பல பதிவுகளில் வெற்றி புனையும் வேலா என்று தவறாகப் பதியப் பட்டுள்ளது.
 
இட்லிப்பூவிற்கும், அதன் இலைகளுக்கும் பலவித மருத்துவ குணங்கள் உண்டு. காய்ச்சல், வயிற்றுப் போக்கு, தோல் வியாதி மற்றும் புற்று நோய்க்கும் உகந்த மருந்து என்று கூறப் படுகிறது.
 
நம் அருகே அடிக்கடி தென்படும் சாதாரண காட்டு மலர்! அதைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியத்தில், மற்றும் அதற்கும் முற்பட்ட தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. 
 
சில நேரங்களில் நமக்கு மிக அருகே இருப்பவற்றின் பெருமை நமக்குத் தெரிவதில்லை!
 
- பொற்செல்வி ஜெயப்பிரகாஷ்
Pin It