முகமூடிகள் கிழிந்து தொங்கும்
கேவலம்
ஒரு பாம்பைப் போல எழும்பி அசைகிறது
சிதறடிக்கப்பட்ட மனிதத்தசைத் துணுக்குகள்
துடிக்கும் நிமிடத்தின் கைகள்
மறைக்கப்பட்ட வார்த்தைகளை
கொண்டு வந்து கொட்டுகின்றன
‘இந்து பயங்கரவாதம்'

வரலாற்றின் நிகழ்வனைத்திலும்
காவிப்பற்களால் குதறிய காயங்களை
பூக்களென்று பொய்யுரைத்த
புண்மையில் வடிகிறது சீழ்

சம்பூகக் கொலையில் தொடங்கி
பாபர் மசூதி, பம்பாய் கலவரம்
குஜராத், ஒரிசா, கயர்லாஞ்சி
கர்நாடகம், மாலேகான்
என நீளும் பட்டியலில்
கூட வேண்டியவை எத்தனையோ
இன்னும்?

பயங்கரத்தின் "மூலஸ்தான'ங்களே
அரியணையில் இருக்கும்
ஆயுதங்களாய் ஆகினால்
சாக்காடாகும்
சனங்கள் வாழும் நாடு

இருந்தாலும்
கூப்பாட்டைக் கொஞ்சம்
உற்று நோக்குங்கள்

அப்சல் குருவை
தூக்கிலிட வேண்டுமாம்
பிரக்ஞாவுக்கு
மனித உரிமை வேண்டுமாம்!