இந்தியாவில் ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் மக்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுகிறது. இதுபோன்ற வன்கொடுமைகள் எல்லாம் அநீதிக்கு எதிராக தலித்துகள் போராடும்போதோ, தங்களுடைய சமூக, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகக் குரல் கொடுக்கும்போதோ, வேறு ஜாதியைச் சார்ந்த ஒருவரை காதலித்த ‘குற்ற'த்திற்காகவோ, பொதுத் தெருவில் நடப்பதற்கு உரிமை கேட்ட ‘கொடுமை'க்காகவோ அல்லது தேநீர்க்கடையில் எல்லோருக்கும் வழங்கப்படும் குவளையில் தங்களுக்கும் தேநீர் வழங்கப்பட வேண்டும் என்று ‘ஆசை'ப்பட்டதற்காகவோ நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் எந்த உரிமையுமே கோராமல் ஜாதிய சமூகம் கொடுத்த வேலையை அமைதியாக செய்து கொண்டிருந்தாலும் – அவர்கள் தலித்துகளாகப் பிறந்துவிட்ட காரணத்திற்காக மட்டுமே – கொல்லப்படும் கொடுமையை என்னவென்று சொல்வது? அண்மையில் கர்நாடக மாநிலத்தில் நரபலிக்காக இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டுள்ள செய்தி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.கர்நாடக மாநிலத்தின் சாமராஜ நகர் மாவட்டத்தில் உள்ள சந்தேமாரனஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணய்யா(50) மற்றும் கவுடா வடி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சய்யா(55) என்ற இரு தலித் விவசாயத் தொழிலாளர்கள் 19.03.2015 அன்று, நிலச்சுவாந்தாரான விஜயப்பாவின் வயலுக்கு காலை 6.30 மணிக்கு வேலைக்குச் சென்றனர். அதற்குப்பிறகு அவர்கள் வீடு திரும்பவே இல்லை. இவ்விருவரின் தலையில்லாத உடல்கள் மட்டும் (சாமராஜ நகரிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள சந்தேமாரனஹல்லிக்கு அப்பாலுள்ள தேசிய நெடுஞ்சாலை 209) ரக்கசம்மா கோயிலுக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டன.

karnataka dalit

இவ்விரண்டு தொழிலாளர்களும் அமாவாசை நாளான 19.03.2015 அன்று பகல் 12 மணிக்கு கொல்லப்பட்டுள்ளனர். அன்று பகல் 1 மணிக்கு ரக்கசம்மா கோயில் பூசாரியான மகாதேவா – கோயில் சொத்திலிருந்து அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அய்ந்து ஏக்கர் நிலத்தில் – இவ்விருவரின் தலைகளையும் கையில் பிடித்திருந்தபோது போலிசாரால் கைது செய்யப்பட்டார். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் நிலச்சுவாந்தாரான விஜயப்பாவின் சித்தப்பா சங்கரப்பா (உள்ளூர் காங்கிரஸ் தலைவர்) இருவரின் உடல்களையும் தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

தலித் தொழிலாளர்களான கிருஷ்ணய்யாவும் நஞ்சய்யாவும் விஜயப்பாவின் வயலில் கடந்த 15 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் ஒவ்வொரு வார இறுதியிலும் கூலி அளிக்கப்பட்டு வந்தது. இங்கு வலுவாக உள்ள லிங்காயத்து சாதியைச் சேர்ந்த விஜயப்பாவுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. விஜயப்பா மற்றும் மந்திரவாதி மகாதேவா ஆகியோருக்கும் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் கூலி தொடர்பாகவோ, வேறு பிரச்சினைகள் தொடர்பாகவோ இதுவரை எவ்வித சச்சரவும் ஏற்பட்டதில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கொலைக்கான முகாந்திரமே இல்லாத நிலையில் இத்தொழிலாளர்கள் கொல்லப்பட வேண்டிய தேவை என்ன?

இவ்விருவரின் உடல்களின் எந்தப் பகுதியிலும் எவ்விதக் காயங்களோ, கொலை நடந்த இடத்தில் ரத்தம் சிந்தியதற்கான தடயங்களோ இல்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. கடவுளுக்காக விலங்குகளை பலியிடும்போது எப்படி தலையை மட்டும் வெட்டுவார்களோ அதேபோல இவர்களின் தலைகள் வெட்டப்பட்டுள்ளதால் இக்கொலைக்கான நோக்கம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கர்நாடக முதலமைச்சர்களைப் பொருத்தவரை, சாமராஜ நகர் பகுதிக்கு வந்தால் – தங்கள் பதவி பறிபோய்விடும் என்ற மூட நம்பிக்கையில் – இங்கு வருவதைத் தவிர்த்து வந்திருக்கின்றனர் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தியாகும். இந்தப் பின்னணியில்தான் இவ்விரு தலித் தொழிலாளர்களின் மரணத்தின் உண்மையான நோக்கம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சாமராஜ நகர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் சித்தராமையாவின் பதவி பறிபோகாமலிருப்பதற்கான பரிகாரமாகவே இந்த நரபலி நிகழ்த்தப்பட்டிருக்குமோ என்று உள்ளூரில் உள்ள மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இப்பிரச்சினையில் அரசாங்கத்தின் மறுப்பும் மவுனமும் இதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. சந்தேகத்திற்கிடமான இவ்விஷயங்களை கவனத்தில் கொண்டு நரபலி தடுப்புச் சட்டத்தின்படி இவ்வழக்கை அணுகாமல் சாமராஜ நகர் காவல் துறை, கொலை (பிரிவு 302) மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது மேலும் அய்யங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மை அறியும் குழுவை வழி நடத்திய சமதா சைனிக் தளத்தின் மாவட்டத் தலைவரான சங்கசேனா, இந்த நரபலிக் கொலையை அடுத்து தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்வுகளும் காவல் துறையின் அலட்சியப்போக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.’’கடவுளுக்கு நரபலி கொடுப்பதற்காகத்தான் தலையை மட்டும் வெட்டுவார்கள். உண்மை அறியச் சென்றபோது பூசைக்காகப் பயன்படுத்தப்பட்ட பூசணிக் காயில் குங்குமம் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். அவர்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கட்டையில் ரத்தக்கறைகள் படிந்திருப்பதையும் கண்டறிந்தோம். ஆனால் குற்றப் புலனாய்வுக்கான இவ்விஷயங்களை போலிஸ் பாதுகாக்கவோ, கவனத்தில் கொள்ளவோ இல்லை'' என்கிறார் சங்கசேனா.

பிரேதப் பரிசோதனை நடைபெறுவதற்கு முன்பே சாமராஜ நகர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மகாதேவ பிரசாத், சம்பவ இடத்திற்கு வந்து 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை இரு வீட்டாருக்கும் அளித்துள்ளார். பிரேதப் பரிசோதனையோ வேறு எந்த புலனாய்வுகளோ மேற்கொள்ளப்படாத நிலையில் அமைச்சர் இவ்வளவு அவசரமாக இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டிய தேவை என்ன?

சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தைச் (Institute of Social and Economic Change) சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் தாசனூர் கூசண்ணா, இது கொலையல்ல; நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது என்கிறார். ரத்தக்கறை அங்குமிங்கும் சிதறாமல் இரு விவசாயத் தொழிலாளர்களின் தலை வெட்டப்பட்டிருப்பதன் மூலம் இது பொருளுக்காகவோ, முன் பகை காரணமாகவோ நடத்தப்பட்ட கொலை அல்ல என்பது தெளிவாகிறது.’’உடல் வலிமையுடன் கூடிய இரு மனிதர்களின் தலையை ஒருவரால் எளிதில் வெட்டிவிட முடியாது. தலித் தொழிலாளர்களை நரபலி கொடுப்பதற்காகவே ஒரு குழுவினர் திட்டமிட்டுத்தான் இக்கொலையை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை '' என்கிறார் அவர்.

கர்நாடக மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் 2013 அய் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த டாக்டர் அரவிந்த் மாளஹத்தி, ‘இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், நரபலி சடங்கில் ரத்தமும் தலையுமே முக்கியக் கூறுகளாக இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.’’கழுத்தில் வெட்டப்படுவதைத் தவிர நரபலி கொடுக்கப்படுபவருக்கு வேறு எந்த வெளிக்காயங்களும் இருக்கக் கூடாது. இந்த சடங்கு அமாவாசை நாளன்று மட்டுமே நடைபெறும். இப்பிரச்சினையிலும் அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது. தீண்டாமைப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, தலித்துகள் தான் உண்மையில் இது போன்ற நரபலிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்'' என்கிறார் மாளஹத்தி.

காவல் துறையினரின் இரக்கமற்ற, கொடூரமான அணுகுமுறையைக் கண்டித்து பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டங்களை நிகழ்த்தினர். ஏப்ரல் மாதத்தில் சமதா சைனிக்தளம், ஸ்வபிமானி தலித் சக்தி, ஜோதிபா புலே சேவா ட்ரஸ்ட், பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா, கர்நாடக தலித் சிறுத்தைகள், என்சிஎச்ஆர்சி மற்றும் கர்நாடக சங்ஹொலி ராயண்ணா இளைஞர் அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து தயாரித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஏப்ரல் மாதத்தில் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது.

தலித்துகளை நரபலியிடுவது கர்நாடகத்தில் புதிதான ஒன்றல்ல. ஹவேரி மாவட்டத்திலுள்ள திருமலா தேவர கொப்பா என்ற இடத்தில் ஒரு நிலச்சுவாந்தார், தாங்கள் கட்டிய புது வீட்டில் ஏற்பட்ட வாஸ்து பிரச்சினையை சரி செய்வதற்காக 2012 இல் பதினேழு வயதான பசவராஜா என்ற தலித் இளைஞரை நரபலி கொடுத்துள்ளார். இந்த நரபலி சடங்கைச் செய்த மந்திரவாதி, பசவராஜாவின் உடம்பிலிருந்து ரத்தத்தை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி அவர்களின் வீட்டைச் சுற்றி தெளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ‘ஸ்வபிமானி தலித் சக்தி' என்ற அமைப்பு உண்மையறியும் குழுவை ஒருங்கிணைத்து அதன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. விரிவான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதும் காவல் துறை நரபலி கொடுக்கப்பட்டதை மறுத்து இக்குற்றவாளியை பிரிவு 302 இன் கீழ் வழக்கு பதிவு செய்து, ஒரே ஆண்டில் அவருக்கு பிணையும் அளித்தது.

தீண்டாமை என்ற கோட்பாடு தலித் மக்களை தூய்மை அற்றவர்கள் என்று கருதினாலும் – தலித் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதற்கும் கடவுளுக்கு நரபலி கொடுப்பதற்கும் – ஜாதி இந்துக்களை உரிமம் பெற்றவர்களாக்குகிறது. இந்தப் பழக்கம் பல தலைமுறைகளாக நிலவி வருகிறது என்றாலும் இன்று வரை அது தொடர்கிறது என்பதுதான் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுபோன்ற செய்திகள் கர்நாடகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.அய்.ஏ.எஸ். அதிகாரியான உ.சகாயம் தென் தமிழகத்தில் மணல் மற்றும் கிரானைட் சுரங்கக் கொள்ளை தொடர்பாக நடத்தும் புலனாய்வின் போது – இது போன்ற கிரானைட் சுரங்கங்களில் நரபலி கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக – ஏடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் தலித்துகளும் நரபலிக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவிக்கின்றன.

இது போன்ற மனிதத்தன்மையற்ற வழக்கம் மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது ஊடகங்கள் மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. தலித் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தினாலும் அரசியல்வாதிகள் இது குறித்து வாய் திறப்பதில்லை. தேசிய எஸ்.சி.எஸ்.டி. ஆணையமோ, மனித உரிமை ஆணையமோ இதுவரை சாமராஜபுர மாவட்டத்தில் நரபலி நடந்த இடத்தை வந்து பார்வையிடவில்லை. இன்றுவரை காவல் துறையும் நரபலி கொடுக்கப்பட்டதை மறுத்தே வந்திருக்கிறது.நரபலி கொடுப்பதை அரசு மறுப்பதன் மூலம் அது இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இக்கொடூரம் தொடர்வதற்கே வழிவகுக்கிறது.

மறுபுறம் இதுபோன்ற நரபலிகள் குறித்து காவல் துறையினரிடம் எந்தப் பதிவும் இல்லை. கர்நாடக குற்றப்பிரிவு ஆணையம் இம்மாநிலத்தில் நிகழ்ந்த நரபலி தொடர்பான எந்த புள்ளிவிவரத்தையும் வைத்திருக்கவில்லை. இத்தகைய நரபலிகளை அவர்கள் கொலை அல்லது வன்கொடுமை என்ற அளவில் முடித்து விடுகின்றனர். அதனால் உண்மையில் இம்மாநிலத்தில் எத்தனை உயிர்கள் பலியிடப்பட்டன என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. இக்கொடூரமான உண்மைகளை மறைப்பதன் மூலம் அரசு தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

மூடநம்பிக்கை பழக்கங்களைத் தடுக்கும் கர்நாடக அரசின் சட்டம் 2013 மற்றும் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப்பள்ளி தயாரித்துள்ள மாதிரி வரைவும் இச்செயலை பிணையில் வெளிவர முடியாத கிரிமினல் குற்றமாக்குகின்றன. கர்நாடக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் விதி 3 இது போன்ற நரபலிகளைச் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கிறது. ஆனால், இவை வெறும் காகிதங்களாகவே இருக்கின்றன.

நாகரிகமற்ற சமூகத்தின் பிற்போக்குத்தனமான நரபலி கொடுக்கும் வழக்கம் அழிந்துபோய்விடவில்லை. நாகரிக பண்பாடும் இத்தகைய வழக்கங்களை மறுதலித்து அதை அழிக்கத் தயாராக இல்லை. நரபலிக்கு தொடர்ந்து தலித்துகளே பலியாக்கப்படுவதற்கு அப்பட்டமான மூட நம்பிக்கைகளும் இன்றுவரை நிலவும் ஜாதிய சமூக அமைப்புமே காரணமாகும். தற்பொழுது நடந்துள்ள மரணங்களும் இதற்கு முன் நடந்தவையும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவையும் ஒரு பிரிவு மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மாண்பு ஆகியவை இந்த அரசால் காப்பாற்றப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. அதிலும் முக்கியமாக நரபலிக் கொலைகள் இந்த ஜாதிய சமூகத்தில் பல்வேறு வழிகளிலும் தலித் மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்பதற்கு ஆணித்தரமான சான்றாகின்றன.