பிள்ளையார் சிலையை எங்கள் பள்ளிக்கூடத்தில் பிரதிஷ்டை செய்யும் சடங்கு என் வாழ்க்கையில் நான் மறக்கவே முடியாமல் ஆழப்பதிந்து விட்ட நிகழ்வாகும். பரவசத்துடன் குதித்தாடியது; ஒருவர் மீது ஒருவர் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு செவ்வண்ணப் பொடியை விசிறியடித்தது; அப்போதிருந்த கொண்டாட்டமான சூழ்நிலை என எதையும் என்னால் இன்று கூட நினைவு கூற முடிகிறது. ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் சிலை முன்னால் ஆராதனையும் நீண்ட வழிபாடும் இருக்கும். பிள்ளையாரை ஆற்றில் கரைக்க எடுத்துப் போகும் ஊர்வலமும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வளர்ந்தவர்களுக்கும் அதே மாதிரியான ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகவே இருக்கும். இந்தச் சித்திரங்களை நான் நினைவுபடுத்திக் கொண்டிருக்கையில் என் மகள் என் தலையில் இருந்து ஒவ்வொன்றாக நரை முடியைப் பிடுங்கி எடுக்கிறாள். என்னைக் கொஞ்சம் இளமையாகக் காட்டி விட வேண்டும் என்ற அவளின் இந்த வீண் வேலை எவ்வளவு கவனமாகச் செய்தாலும் வீணில்தான் முடிகிறது.

‘‘ஏ முடிய பிடுங்குறத நிப்பாட்டு. அதுதான் எல்லாமும் நரச்சிருச்சே! உங்கப்பா திருப்பியும் எளமையா ஆவப் போராறாக்கும்''என என் மனைவி ஊடே புகுந்து சொன்னாள்.

மகள் தன்னுடைய இலக்கில் விடா முயற்சியுடன் தொடர்கிறாள்.மகள் தந்தைக்காற்றும் இந்த எளிய காரியம் எனது மகளை எனக்கு அணுக்கமாகக் கொண்டு வருகிறது.எங்கள் தெருமுனையில் ஒரு சதுக்கத்தில் ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டது. ராமகிருஷ்ணரானாலும், மகாதேவரானாலும் பிள்ளையாரானாலும் எல்லா இந்துக் கடவுள்களின் சிலையும் அந்தந்த சாமிக்குரிய தனிப்பட்ட ஆயுதங்களுடன் தான் வடிக்கப்படுகின்றன. இப்படி ஆயுதங்களுடன் அச்சிலைகளை வடிப்பதால் அவை ஆக்ரோஷமாகக் காட்சி அளிக்கின்றன. பிள்ளையாரும் அவருக்கே உரித்தான ஆயுதத்தைக் கையில் பிடித்திருக்கிறார். எல்லா வகையான தடைகளையும் சச்சரவுகளையும் அழிப்பவராக அவர் சொல்லப்படுகிறார். ஆனாலும் இப்போதெல்லாம் எல்லா வகையான தடைகளும் பெரும்பாலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருந்த மகள், ‘‘அப்பா கணபதியோட உடம்பு மனுச உடம்பாகவும் தலை யானை தலையாகவும் இருக்கே அப்படின்னா அவரோட அம்மா, அப்பா எப்படி இருப்பாங்க'' என என்னிடம் கேட்டாள். பயத்திலும் பதற்றத்திலும் எனது முகம் வெளிறி விட்டது.

‘‘பாப்பா இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் பொது எடத்துல ஒரு போதும் கேட்டுராதேம்மா. மத்தவங்களோட மத உணர்வுகளை அவை புண்படுத்தி விடும்.'' மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டால் மதத்துக்கு ஒன்றும் நடந்து விடவில்லை என்றாலும் பொதுச் சொத்துக்கள் அநியாயத்துக்குப் பாழாக்கப்படுகின்றன. கலவரங்களும் தீ வைப்புகளும் நடந்தேறுகின்றன. சுதந்திரம் அடையும் நோக்கில் நாட்டுப்பற்றைத் தட்டி எழுப்புவதற்கான ஓர் இயக்கமாக பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடுவதைத் திலகர் தொடங்கி வைத்தார். இப்போதெல்லாம் மத வெறி மட்டுமே ஊட்டப்பட்டு அதன் விளைவாகப் பகைமையும் வன்முறையுமே ஏற்படுகிறது. சிறிய கவனப் பிசகினால் எனது மகள் ஒரு கருப்பு முடியைப் பிடுங்கியதை மனைவி கவனித்து விட்டாள். ‘‘இந்த களை பிடுங்குற வேலைய நிப்பாட்டு. உங்கப்பனோட மண்டையில வழுக்கைய ஜாஸ்தியாக்காதே'' என அவர் கத்தினார்.

தெரு முனையில் பிள்øயார் சிலை முன்பாக பெருஞ்சத்தத்துடன் சத்திய நாராயணா பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அதே அளவு சத்தத்துடன் அருகிலுள்ள பள்ளி வாசலிலிருந்து மோதினார் பக்தர்களைத் தொழ அழைத்துக் கொண்டிருந்தார். எனது வீட்டின் முன் வாசல் கதவு அதிகாரத் தோரணையில் படபடவெனத் தட்டப்படுவது கேட்டது. பிள்ளையார் சதுர்த்திக்கான எனது ‘மனமுவந்த' பங்களிப்பை பெறுவதற்காக எட்டிலிருந்து பத்து பேர் கொண்ட ஓர் இளவட்டக் கும்பல் வந்திருந்தது. நான் மட்டும் மறுப்பேன் என்றால் அது எனக்கு ஒரு பேராபத்தைத் தருவதாக இருக்கும். எனது பருவ மகள் கேலி கிண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வெகு நாட்களுக்கு உள்ளாக்கப்படுவாள். எனது ‘மனமுவந்த' பங்களிப்பைக் கொடுத்துப் பிரச்சினையை அத்துடன் முடித்துக் கொள்வதே நல்லது என்பது எனக்குத் தெரியும். என்னுடைய மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு இருபத்தோரு ரூபாய் குறையும்.ஞாயிற்றுக் கிழமை இறைச்சி வாங்குவதை ரத்து செய்து விட வேண்டியதுதான்.

அந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தியும் மொகரம் பண்டிகையும் ஒரு நேரத்தில் அமைந்து விட்டது. மதச் சண்டை வெடிக்கும் என எதிர்பார்த்து பலமான போலிஸ் பந்தோபஸ்து போடப்பட்டு விட்டது. ஊர்களில் அமைதி குழுக்கள் அவசர அவசரமாக அமைக்கப்பட்டன. இந்து முஸ்லிம் மதத்தினரிடையே அமைதியும் சகோதரத்துவமும் நிலவ வேண்டியதன் அவசியத்தை ஒலிபெருக்கிகளில் இடைவிடாது ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளையார் சிலையைக் கரைப்பதற்கான ஊர்வலத்தின் பாதை போலிசாரால் மிகக் கவனமாகக் கண்டறியப்பட்டது. சிலைக்கருகில் போலிஸ்காரர்கள் எந்நேரமும் காவல் இருந்தனர். பிள்ளையாரின் திருவிழாவா? என்று சொல்லத்தக்க வகையில் மகிழ்ச்சியை விட பதற்றமும் பயமுமே பெரிதாக இருந்தது. பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்படும் பத்து நாட்கள் முழுமையும் சினிமா பாட்டுகளின் இரைச்சலும் இளவட்டங்களின் வெறி கொண்ட கோலாட்டச் சத்தமும் காதை கிழிக்கும். கூப்பாடும் பரபரப்பும் அதிகாலை வரைக்கும் தொடரும் சத்தமும் புழுதியும் தெருக்களிலிருந்து கிளம்பி கதவுகள், ஜன்னல்கள் வழியாக வீடுகளை வந்தடையும்.

இந்தக் காட்டுக் கூச்சலை நிறுத்தச் சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது? தனக்குத் தானே குரோதத்தையும் பகைமையையும் வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு அவ்வளவு முட்டாளாய் யார் இருப்பார்கள்? கொந்தளிப்பானதும் வெறி கொண்டதும் ஆன இந்த பத்து நாள் பொழுதையும் எந்த எதிர்ப்புமில்லாமல் அமைதியாகத் தாங்கிக் கொள்வதே உசிதமானது. யாராவது எதிர்ப்புடனோ எரிச்சலுடனோ ஒரு சின்ன முணுமுணுப்பை வெளியிட்டால் அவ்வளவுதான்; உடனடியாக அவன் ‘இந்து விரோதி' என்றோ ‘நாத்திகன்' என்றோ முத்திரை குத்தப்படுவான். அதே இடத்தில் அதே அக்கம் பக்கத்து வீட்டாருடன் தான் ஒருவர் தொடர்ந்து வசிக்க வேண்டும் என்பதுதான் எதார்த்தமான நடைமுறையாக இருக்கிறது. எனவே விட்டுக் கொடுத்து விடு; எல்லாருக்கும் நல்லவனாக நடந்து கொள். என்னுடைய நெருங்கிய நண்பனும், எனது நேர் எதிரான குணமுடையவனாய் இருக்கிறவனுமான தினேஷ் காம்ப்ளே எனது அடங்கிப் போகும் நடவடிக்கையை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை.

டாக்டர் அம்பேத்கரால் தொடங்கப்பட்ட தலித் இயக்கத்திற்குள் இந்துத்துவ தலைவர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஊடுறுவி விட்டார்கள். எங்களது தலித் எழுத்தாளர்களுள் கொஞ்சம் பேர் இந்துத்துவச் சார்பான தளங்களில் இருந்து உரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். தங்களது தலித் வேர்களின் மீது மரியாதை அற்ற தன்மையை இது காட்டுகிறது என தினேஷ் காம்ப்ளே சொல்வான். இதை நான் சரியான விமர்சனம் என ஏற்றுக் கொள்ள மாட்டேன். மதம் சார்ந்த விருப்பங்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது தேவையற்றதுதானே! நமது நாட்டில் இந்துக்கள் தான் மிகப் பெரும்பான்மையானவர்களாய் இருக்கிறார்கள் என்பது தானே எதார்த்தம். அவர்களுக்கு மிக நீண்ட வரலாறும் இருக்கிறது. அவர்களுக்கு எதிராக மல்லுக்கட்டுவது முட்டாள்தனமானது.இந்துக்களோடு நேரடியாக மோதுவது பயனற்ற ஒன்று.நமது தலித் சாதிகளை அவர்களுக்குப் பதிலடி கொடுக்கத்தூண்டுவது அவர்களை தவறாக வழி நடத்துவதாகும். அதன் மூலம் மிகச் சிறுபான்மையான தலித் தலைவர்களாக நாம் ஆகலாம். அவ்வளவுதான்.ஆனால் நமது தீவிரமான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அது உதவாது. இந்து உணர்வைப் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. என்னுடைய உரைகளில் நான் இணங்கிப் போகிற அணுகுமுறையையே மேற்கொள்வேன். அந்த அமைதியான தருணத்தில் யாரும் கவனிக்கா வண்ணம் மெதுவாக தலித் போராட்டத்தின் நியாயத்தைச் சொல்லி விடுவேன்.

எனது சகாக்களால் இந்த அணுகுமுறை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.எனது அணுகுமுறையின் பலனளிக்கும் தன்மையை நிறுவுவதற்காக, பார்ப்பானும் எனது அண்டை வீட்டுக்காரனும் ஆன சமீர் ஜோஷியுடனான எனது உறவை விளக்குவேன். நாங்கள் இருவருமே ஒருவர் மற்றவரின் வீட்டுக்குள் சுதந்திரமாகப் புழங்குவோம், ஒன்றாகத் தின்போம், ஒன்றாகக் குடிப்போம். சமீர் ஜோஷியின் நடத்தையில் தீண்டாமையை அறவே ஒழித்துக் கட்டுவதை கொஞ்சம் கொஞ்சமாய் அவனது மனதில் செலுத்த என்னால் எப்படி முடிந்தது சொல்லுங்களேன் பார்ப்போம்! சமீருடனான எனது நட்பு தினேசுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

என்னுடைய வாதங்களை அவன் கேலிக்கூத்தாகவே பார்ப்பான்.

இந்துத்துவ கருத்தாக்கங்கள் அம்பேத்கர் தோற்றுவித்த தலித் இயக்கத்திற்குள் பம்மிப் பம்மி வந்து ஊடுறுவி விட்டன என்பதை நான் உணர்கிறேன். இன்று அம்பேத்கரின் சிறப்புகள் ஆர். எஸ்.எஸ். இன் ஹெட்கேவரின் சிறப்புகளோடு ஒப்பிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தேவாலய மணி அடித்தது / எல்லாரும் உள்ளே போனார்கள்! /மசூதியிலிருந்து தொழுகை அழைப்பு கேட்டது / எல்லாரும் உள்ளே போனார்கள்! /இந்துக் கோயில் மணி அடித்தது / கொஞ்சம் பேர் உள்ளே போயினர் / கொஞ்சம் பேர் வெளியே நின்றிருந்தனர்!

மேல்சாதி என்று சொல்லப்படுகின்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களே பெரும்பான்மையாக வசிக்கின்ற ஒரு பகுதியில் நான் குடியிருக்கிறேன். எனது அண்டை வீட்டுக்காரர்களான பார்ப்பனர்கள் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கிறார்கள் என்ற போதும் நாங்கள் சேர்ந்து வசிக்கிறோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களால் வரலட்சுமி நோன்பிற்கு என் மனைவி அழைக்கப்படுவது வழக்கமான ஒன்று. அதனாலேயே அவளுக்கு அம்பேத்கர் கருத்தியலில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட முடியாது. அப்படித்தான் தீர்த்த பிரசாத சடங்குகளில் நானும் பங்கெடுத்துக் கொள்வேன். என்னைச் சுற்றிலும் எல்லா பக்கமும் சுற்றியிருக்கிற இந்துக்களின் சூழலிலிருந்து என்னை நான் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.

இத்தகைய சூழலில் ஒரு புது விதமான பண்பாடு பரிணமிக்கிற வாய்ப்பு கூட இருக்கிறது என்று நான் நம்புகிறேன். என்னுடைய விருப்பத்திற்கு எதிராகவே பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு எனது மனமுவந்த பங்களிப்பை நான் வழங்கினேன். தனது பங்கிற்கான தொகையைத் தருவதற்கு தினேஷ் காம்ப்ளே உறுதியாக மறுத்து விட்டான். இத்தகைய தனிமைப்பட்ட நிலையில் வசிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். நிலைமை மோசமடைந்தால், அவன் வீடு குறிவைக்கப்பட்டு எரித்து நாசமாக்கப்படும். போலிஸ்காரர்கள் கூட ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்பர். வரவிருக்கிற ஆபத்திற்குப் பயந்து பிள்ளையார் சதுர்த்தி, சிவராத்திரி கொண்டாட்டங்களின் போது, தனது மனைவியையும் குழந்தைகளையும் உடனழைத்துக் கொண்டு வீட்டை விட்டே போய் விடுவான். மிகப் பெருமளவிலான இந்த கொண்டாட்டங்களை அவனால் தாள முடியாது. இந்துக்கள் அவனுக்கு எதிராகப் பழி வாங்கலில் ஈடுபடுவார்கள் என்ற அச்சமும் அவனுக்கு உண்டு. இந்துக்கடவுளர்க்கு எதிரான நிந்தனையை அவன் இடைவிடாது செய்து கொண்டிருப்பான். ஆனால் இந்த வெறுப்பு பகைமையைத்தான் அதிகரிக்கும்.

இந்நிலையில் நான் அக்கம் பக்கத்தாரால் ஒழுக்கசீலத்தின் வகை மாதிரியானவனாகப் பார்க்கப்படுவேன்.இருந்தபோதிலும்.சில நேரங்களில் நான் வசைகளைக் கேட்க வேண்டியிருந்தது. நக்கல் நய்யாண்டியைத் தாங்க வேண்டியிருந்தது. ஏனென்றால் நான் பட்டியல் ஜாதியைச் சேர்ந்தவனாய் இருக்கிறேனே! அப்போதெல்லாம் எனது இதயத்தில் ரத்தம் வடியும்.இருப்பினும் நான் என்னை மரத்துப் போக வைத்துக் கொண்டு துன்பத்தை அமைதியாக அனுபவிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்.

எனது நண்பனும் அண்டை வீட்டுக்காரனுமான சமீர்ஜோஷி, ஜாதி வித்தியாசம் எங்கள் நட்புக்கு இடையில் குறுக்கிடுவதற்கு விடவே மாட்டான். போன வாரம் பீர் குடிப்பதற்காக நாங்கள் ஒரு பாருக்குப் போயிருந்தோம். நாங்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் சில குண்டர்களால் தாக்கப்பட்டோம். அந்த தள்ளுமுள்ளில் சமீரின் மேல் கையில் கத்தியாலான ஒரு காயம் ஏற்பட்டு விட்டது. அந்த குண்டர்கள் ஓடி விட்டனர். இந்நிகழ்வு ஒரு மோசமான பிணக்கை உண்டாக்கி விட்டது.

‘‘அந்த மகர் ஜாதிக்காரனோட சேந்து நீங்களும் ஒரு மகராவே ஆயிட்டேள். பிராமணனுக்கும் மகருக்கும் எடையிலே என்ன இருக்கு?அவங்களும் நாமளும் ஒருத்தொருத்தர் பகையாளியாத்தாம் காலங்காலமா இருந்துருக்கோம். எனக்கென்னவோ இது அந்த லிம்பாலேவோட சதி வேலயாத்தாம் இருக்கும்னு தோன்றது. அவன் மட்டும் ஒரு செறாய்ப்பு கூட இல்லாம தப்பிச்சிடுவானாம். ஒங்களுக்கு மட்டும் கத்திக் குத்து உளுமாம். இதெப்படி நடக்க முடியும்?ஒங்களத் தீர்த்து கட்டத்தாம் இந்த தாக்குதல அவன் நடத்திருப்பான்.''

சமீரின் வீட்டில் இந்த மாதிரியான எதிர்வினைதான் நிகழ்ந்தது.

இம்மாதிரியான குதர்க்கமான குற்றச்சாட்டில் நான் நொந்து போனேன். ஒரு தலித் என்பவன் சமூகத்திலுள்ள வக்கிரத்தோடும் தீங்கோடும் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவான். இது போன்ற அநியாயங்கள் அனைத்தின் மீதும் எனக்கு அப்போது கோபம் வந்தது. ஆனால் என்னுடைய சாதியை எப்போதாவது மாற்றக் கூடிய சக்தி என்னிடம் இருக்கிறதா என்ன?

தினேசும் நானும் தலித்துகளாக இருப்பினும் இந்துத்துவ சார்பானவன் நான் என என்னை அவன் காயப்படுத்துவான்.என்னுடன் நட்பாக இருப்பதினால் சமீர் ஜோஷி அவனுடைய அக்கம் பக்கத்து பார்ப்பனர்களால் ஜெய்பீம்காரன் என்று கேலி பேசப்படுவான். இவையனைத்திற்கும் மத்தியில் ஒரு சிலையைப் போலத்தான் நான் வாழ்ந்து வருகிறேன். பிள்ளையார் சதுர்த்திக்குப் பங்களிப்பைக் கொடு, அதே போல் தலித் அமைப்பிற்கும் பங்களிப்பைக் கொடு, ஆனால் எதையும் தொந்தரவு செய்யாதே என்பதுதான் என்னுடைய கொள்கை. இந்த நிலைப்பாடு என்னுடைய சக தோழர்களால் கடுமையாகச் சாடப்படுகிறது. தலித்துகளையும் அவர்களது துயரங்களையும் நான் வெறுமனே எழுத மட்டுமே செய்கிறேன். அவர்களுடைய போராட்டத்தில் நேரடியாக நான் பங்கெடுப்பதில்லை என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு. ஆனால் நான் தலித் மக்கள் மத்தியில் வாழவில்லையே! அது சரி, என்னுடைய வேர்கள் குறித்து நான் உள்ளூர வெட்கப்படுகிறேனா என்ன?தலித்துகளைப் பற்றி எழுதுவதன் மூலம் பணம் வருகிறது எனக்கு.அதனால் தலித் நோக்கிற்கு துரோகம் இழைக்கிறேன். பார்ப்பனர்களுக்கு மத்தியில் ஆதிக்கச் சாதியினர் வாழும் தெருவில் நான் இப்போது வசிக்கிறேன். அதோடு சமீர் ஜோஷியைப் போன்று ஒரு பார்ப்பானை என்னுடைய நெருங்கிய நண்பனாகக் கொண்டிருக்கிறேன். நத்தையின் வாழ்க்கையை வாழும் ஒரு தலித் பார்ப்பான் நான்.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த ஒரு வகுப்புக் கலவரத்தின் போது, இஸ்லாமிய இளைஞர்களால் நான் மறிக்கப்பட்டேன். எனக்கு குலை நடுக்கமெடுத்தது. பயத்தில் பேச்சே வரவில்லை, ‘‘நான் இந்து இல்லீங்க; நான் பவுத்தனுங்க'' இந்த வார்த்தைகள் என்னைக் காப்பாற்றியது. அடுத்த தெருச்சந்தியில் ஒரு இந்துக்கும்பலால் நான் மறிக்கப்பட்டேன். ‘‘நான் முஸ்லிம் இல்லீங்க! நான் பவுத்தனுங்க'' நான் இறைஞ்சினேன். இவ்வாறான கலவரங்களில் முஸ்லிமான யாக்கூப்பும் இதே மாதிரியான வாக்கியங்களைச் சொல்லித் தன்னைத் தற்காத்துக் கொண்டான். தினேஷ் இதையெல்லாம் செய்ய மாட்டான். ஒரே ஓட்டமாக ஓடிப் பறந்து விடுவான்.

கணபதி பப்பா மோர்யா / அடுத்த வருஷம் சீக்கிரம் திரும்பி வாய்யா / ஆனா ஆயுதமில்லாம வாய்யா!

தெருக்கார இளவட்டங்களால் என்னுடைய வீடு பலமுறை கல்வீசித் தாக்கப்பட்டிருக்கிறது. அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.ஆனால் புகாரளிக்க என்னால் முடியுமா? சேரி பழக்க வழக்கங்களிலிருந்து என் குழந்தைகளைக் காப்பாற்றித் தூரமாக வைக்க வேண்டும் என்பதற்காக பாப்பாரத் தெருவில் வாழ்வதை நான் தேர்ந்து கொண்டேன். எனவே இந்த பாப்பார வானரங்களின் கல்வீச்சை சகித்துக் கொண்டு வாழ்வது என முடிவு செய்து கொண்டேன். ஒரு கவுரவமான தெருவில், நல்ல வீடொன்றில், பண்பாடுள்ள அக்கம் பக்கத்தாருடன் வாழ்வதற்கும் கொடுக்க வேண்டிய விலையாக அது இருந்தது.

வலி மிகுதியால் கண்ணீர் வந்தாலும் கூட என்னைப்போன்ற நபர்கள் கண்ணில் ஏதோ தூசி விழுந்து அதனால் கண்ணீர் வந்தது போலவே நடிக்க வேண்டும். யாகூப்பும் தினேசும் வேறு அணியைச் சேர்ந்தவர்கள். போன வருசம் யாகூப் மீது செவ்வண்ணப் பொடியைத் தூவிய நான்கு இளவட்டங்களுக்கு ஆளுக்கு ரெண்டு அறை கொடுத்து பதிலளித்தான். பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குப் பங்களிக்க தினேஷ் நிர்தாட்சண்யமாக மறுத்தபோது இளவட்டப்பயல்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. திடீரென தினேஷ் கத்தி ஒன்றை எடுத்து மின்னல் வேகத்தில் பாய்ந்தான். அவர்கள் சிட்டாகப் பறந்து விட்டனர். இத்தகைய சாகசங்களை என்னால் செய்ய முடியுமா? செம்மறி ஆடாக மாறிய ஒரு வேங்கை நான்.

எனது சின்ன மகள் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். அவள் பிள்ளையார் சதுர்த்திக்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் இருந்த சிலரால் அவமரியாதை செய்யப்பட்டிருக்கிறாள். நான் கதை எழுதுவதில் மும்முரமாக இருந்தேன். ‘‘அத மறந்துரு தங்கம்! பிரச்சனையை பெரிசு படுத்தாதேம்மா!''–அவளை சமாதானப்படுத்தும் விதமாக நான் சொன்னேன். ‘‘இந்த ஏரியா முழுக்கவும் அவங்க தாம் இருக்காங்க! ஊரே அவங்க ஊருமாரி தான். நாயங்கேட்டுப் போனா நாம நம்ம வீட்டயே காலி பண்ணிட்டுப்போக வேண்டி வந்திரும். நீ தான் ஜாக்கிரதயா இருக்கணும்மா!'' நான் தொடர்ந்து சொன்னேன்.என் மனைவி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.அப்போது தான் என் மகன் பாய்ந்தோடி வந்தான். அவன் தன்னுடைய தங்கைக்காக ஏண்டு கொண்டு போய் அது சண்டையாக ஆகி விட்டிருக்கிறது. வாய்ச்சண்டையாக ஆகி விட்டிருக்கிறது.வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறியிருக்கிறது. என் மகனுக்குச் சரியான

அடி, அப்புறம் அந்த இளவட்டங்கள் கடுங்கோபத்தோடு என் வீட்டின் முன் வந்து காச் மூச்சென கத்திக்கொண்டிருக்க ஒரு களேபரம் நடந்து கொண்டிருந்தது.

பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பாக நான் ஏதாவது சத்தம் போட்டால் அது ஒரு பெரும் கலவரமாக மாறி விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு நான் அமைதி காத்தேன்.என் பிள்ளைகள் எல்லாம் பயந்து போய் இருக்கிறார்கள்.இங்கிருந்து கொண்டு தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதை விட மகர்கள் குடியிருக்கும் பகுதிக்குப் போய் விடுவது மேலானது என அவர்கள் உணர்ந்தனர்.

‘‘நாட்டின் எந்த மூலைக்கு வேணும்னாலும் போங்க, நீங்க தாழ்த்தப்பட்டவர்களா இருக்கிற காரணத்துக்காகவே நீங்க தண்டிக்கப்படுவத பாப்பீங்க. அதுக்காக நாம நாட்டையே விட்டு ஓடிப் போயிர முடியுமா?'' என்னுடைய கேள்வி பொருள் பொதிந்ததாகத் தான் இருந்தது. ஆனால் அதனால் எனது குடும்பத்தாரை சமாதானமடைய செய்ய இயலவில்லை. என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நாங்கள் வாழ்ந்திருந்தால், ஓர் ஆபத்துக் காலத்தில் எங்களைச் சுற்றி அவர்கள் அரண்போல நின்றிருப்பார்கள் என என் குடும்பத்தில் என்னைத் தவிர எல்லாருமே உணர்ந்தார்கள். ‘‘இவ்ளோ நடந்திருக்கும் போது ஜோஷி மாமா வீட்டிலருந்து யாராவது ஒருத்தராவது வந்து என்ன ஏதுன்னாது கேட்டாங்களா? தினேஷ் மாமா இங்க இருந்திருந்தா இப்படி ஊமயா பாத்திட்டிருந்திருக்க மாட்டாரு.'' இது மாதிரியான நேரங்களில் ரத்த உறவு தான் துடிக்கிறது. என் மகன் மோசமான சாதியவாதி. அதி தீவிரமான நிலையை எடுக்க சுற்றியுள்ள சூழ்நிலை அவனை நிர்பந்திக்கிறது. அமைதியின் உருவமாகவே நான் ஆகிவிட்டேன்.வேறென்ன நான் சொல்ல முடியும்?

Ambedkar Tribeசமீர் ஜோஷி பார்க்க வந்த போது நடந்த எல்லாவற்றையும் நான் விளக்கமாகச் சொன்னேன்.என்னுடைய பரிதாபமான நிலையைப் பார்த்தும் அவனுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.அந்த ரவுடிப்பயல்களை வண்டை வண்டையாகத் திட்டினான்.அவனுடைய பேச்சால் தெம்படைந்து நான் கேட்டேன். ‘‘ஜோஷ்யா நாம அந்தப் பசங்க வீடுகளுக்கு போவோம். போயி அவங்க கிட்ட பேசுவோம். நீ இங்க பேசுனத அதே மாதிரி அவங்க கிட்ட சொல்லு. அது நல்ல மாதிரியான விளைவ ஏற்படுத்தும்.''நான் ஜோஷியிடம் நச்சரித்தேன். ஜோஷியின் முகம் சுருங்கியது. தலை கவிழ்ந்து மன்னிப்பு கோரும் விதமாக அவன் உட்கார்ந்திருந்தான். ‘‘நான் ஒரு வலிமையான பேச்சாளன் இல்ல.என்னால சண்ட போட முடியாது.அதனால என்னால வரமுடியாது. ஒரு புதிய மாதிரி ஒன்னோட சொந்த பலத்துல நீ போராடனும். சமூகத்துல உள்ள இம்மாதிரியான பிளவுபடுத்துற சக்திகள தோக்கடிக்கனும். ஆனா என்ன இதுக்குள்ள இழுக்காதே. என்னோட பலவீனங்கள் ஒனக்கு தெரியும் தானே. நீ ஒரு புலி, நீ போராடித்தான் ஆகணும்.''

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, என்னைப் போல ஒரு மகர் சாதிக்காரன் மீது நான் அன்பு வைத்திருந்தால் அவன் என்னுடன் தோளுக்குத் தோள் கொடுத்து நின்றிருப்பான்.என்னுடைய தெரிவு தவறானதாகி விட்டது. ஜோஷி எங்கள் வீட்டை விட்டு வெளியேறிப் போனான்.

ஒரு புலியைப் போல அவர்களுடன் நான் போராடுவேன்.அநியாயத்திற்கு எதிராகப் போராடி அவர்களை நான் வெல்வேன். எனக்குள்ளே ஒளிந்திருந்த ஏதோ ஒரு சக்தி என்னை முடுக்கி விட நான் எழுந்தேன். ‘கணபதி பப்பா மோர்யா' என்ற இடைவிடாத உச்சாடனம் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. லெசிம் குச்சிகள் காற்றைக் கிழிக்கும் சத்தமும் தோல் வாத்தியக் கருவிகளின் மேளச் சத்தமும் கிணிகிணியென முழங்கும் கோயில் மணிச் சத்தமும் காற்றைக் கிழித்தன. எனக்கு ரத்தம் கொதித்தது.கோபம் தலைக்கேறியது. எனது பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டேன்.

‘‘இந்த பாப்பானுகளுக்கு எப்பவும் அடுத்தவனுகளத் தூண்டி விட்டே பழக்கம்.ஜோஷி அந்த கும்பலைத் தூண்டி விட்டுட்டான்'' நான் கத்தினேன்.என்னைச் சாந்தப்படுத்த மனைவி முயன்று பார்த்தாள்.ஆனால் முடியவில்லை.கட்டுப்படுத்த முடியாதவனாகி விட்டேன் நான். மிகவும் நெருக்கடியான நேரங்களில் நாம் அவரவரது சாதிகளைக் குறித்த உணர்வை உடனடியாகப் பெற்று விடுகிறோம்.

இது நாள் வரை அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் பங்கெடுத்துச் செல்ல சமீர் ஜோஷி சந்தோஷமாக உடன் வருவான். வரலட்சுமி நோன்பு விழாக்களில் பங்கெடுக்க ஜோஷியின் மனைவியுடன் எனது மனைவியும் போவாள். மட்டன் குழம்பு எங்கள் வீட்டில் வைக்கும் நாட்களில் ஜோஷியின் பிள்ளைகள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். ஜோஷியின் மகளும் என் மகனும் சேர்ந்து ஒன்றாகக் கோயிலுக்கு போவார்கள்.

ஒரு கணத்தில் இவையெல்லாம் எப்படி மறைந்து விடுகின்றன? அம்பேத்கர் பிறந்த நாள் அன்று காலையில் உரை நிகழ்த்தி விட்டு மாலையில் பூஜைக்கு ஜோஷி தலைமை தாங்கியதை இப்போது நினைத்துப் பார்த்தால் மோசமான இரட்டை வேடம் என்றே தோன்றுகிறது. பகை மூட்டி விடுதல் நடக்கும் வரையிலும் உறவுகள் நன்றாகவே இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.

என் வீட்டின் மீது ஒன்றிரண்டு கற்கள் விழுந்தன.ஒரு காட்டுப் புலியைப் போல் நான் ஆவேசம் கொண்டேன். பிள்ளையாருக்கு நடந்து கொண்டிருக்கும் பூஜையில் ஜோஷி மும்முரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தான். நேராக மண்டபத்திற்குள் பாய்ந்து போய், ஒலிபெருக்கியைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, என் குரலையெல்லாம் திரட்டி நான் சத்தம் போட்டேன். உடனடியாக ஒரு கும்பல் கூடியது.அந்த இடம் உடனடியாக கலவர பூமியானது.நான் திட்டித் தீர்க்கப்பட்டேன். சகட்டு மேனிக்கு விமர்சிக்கப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன்.ஒருவர் பாக்கியில்லாமல் எல்லாரும் இதைச் செய்தார்கள். ஊமையாய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஜோஷி மட்டும் அதில் விதி விலக்கு.

மகாபாரதத்தில் திரவுபதியின் துகிலுறியப்பட்ட போது துரோணர், பீஷ்மரெல்லாம் அமைதியான பார்வையாளர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களின் நூற்றுக்கணக்கிலான ஏச்சுப் பேச்சுகளை விடவும் ஜோஷியின் அமைதிதான் என் இதயத்தைப் பிளந்தது. அதுதான் அவனுடைய பலவீனம்.திடுமென எங்கிருந்தோ தினேஷ் காம்ப்ளே எனக்கு முன்னால் வந்து நின்றான். ஒரு கத்தியை

உருவியெடுத்து கூட்டத்தின் முன்னால் ஒரு வீசு வீசினான். கூட்டம் கலைந்தோடியது, நான் குனிந்து தினேஷின் கால்களைப் பிடித்து கொண்டேன்.

‘‘பிள்ளையார் சிலைய கரைக்குற வரைக்குமாவது எங்க வீட்டுல எங்க கூட இருப்பியா தினேஷ்'' – நான் மன்றாடினேன்.

தமிழில் : ம.மதிவண்ணன்