தோழர்களே! நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாம் கூட ஆரியப் பிரச்சாரத்திற்காகவே ஏற்பட்டவைகளாகும்.அதுவும் பல இழிவுக்காகவே பயன்படுவதாகவும் இருக்கின்றன.யாரோ இரண்டொருவர் அடிகளாகவும் சுவாமிகளாகவும் பண்டார சந்நதிகளாகவும் பெரியாராகவும் ராஜாவாகவும் மந்திரியாகவும் சர். ஆகவும் ஆக்கப்பட்டு விடுவதில் திராவிட சமுதாயமோ அல்லது இப்படி அழைக்கப்பட்ட ஆட்களோ உயர்ந்த பிறவி ஆகிவிட்டதாகக் கருதுவது முட்டாள்தனமேயாகும். எப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட அயோக்கியப் பார்ப்பானும் உயர்ந்த பிறவியாக மதிக்கப்படுகிறானோ, அப்படியே எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி பெற்ற ஒழுக்கமான திராவிடனும் கீழ் பிறவியாகத்தான் மதித்து நடத்தப்படுகிறான்.

Periyar 264ஆதலால், நாம் ஒரு சரிசமமான மனிதப்பிறவி என்கின்ற உரிமை பாராட்டிக் கொள்ள வேண்டுமானாலும் ஆரிய சர்வத்திலிருந்தும் விடுபட வேண்டும். ஏன் நான் இப்படிச் சொல்கிறேன் என்றால் சில விஷயங்களில் மாத்திரம் தங்களைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்றும் சொல்லிக்கொண்டு வேறு அநேக விஷயங்களில் – ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால் – இரண்டுங்கெட்ட இழிநிலையைத்தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை. ஆதலால்தான் ஆரியப்பண்டிகைகளைப் பற்றியும் ஆரியக் கடவுள் தத்துவங்களையும் அவை சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் பற்றியும் பேச வேண்டியதாயிருக்கிறது.

உதாரணமாக, சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை எடுத்துக்கொள்ளுங்கள். சுமார் 15 வருஷ காலமாகவே திராவிடர்கள் தீபாவளிப்பண்டிகை கொண்டாடுவதானது தங்களை ஆரிய அடிமை என்று முத்திரை போட்டுக்கொள்வதாக ஆகுமென்று எழுதியும் சொல்லியும் வருகிறேன். தமிழ் மக்கள் அடியோடு தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும்.

நமது கோவில்கள் என்பவைகள் எல்லாம் திராவிடத்தில் ஆரிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ஏற்பட்டவைகளே தவிர, அதற்கு முன் ஏற்பட்டவைகள் அல்ல. இன்றுள்ள திராவிடச் செல்வவான்கள், திராவிட அறிஞர்கள், திராவிடப் பட்டம், பதவி வேட்டைக்காரர்கள் பலர் எப்படித் தன்மானமற்று ஆரியர்களுக்கு உதவியாகவும் உளவாளிகளாகவும் இருந்து வருகிறார்களோ – எப்படி ஆரியர்களுக்கு கோவிலும் சத்திரமும் வேத பாடசாலையும் தர்மப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்களோ அதுபோல்தான் திராவிட மன்னர்கள் – திராவிடச் செல்வவான்கள் ஆரியர்களுக்கு அடிமையாகிற, அவர்கள் உயர்வுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்கும் ஆதாரமான அநேகக் காரியங்களைச் செய்தார்கள்.

இன்றுள்ள பண்டிதர்களில் சிலர் எப்படி ஆரியர்களுக்கு கூலியாளாக இருந்து கொண்டு கொஞ்ச நஞ்சம் பாக்கியுள்ள இலக்கண இலக்கியங்களைக் கூட ஆரியமயமாக்க உடந்தையாக இருக்கிறார்களோ, சர்க்காராரும் அப்படிப்பட்டவர்களையே திராவிட இலக்கியம் அமைக்க ஏற்படுத்துகிறார்களோ அது போலத்தான் அந்தக் காலத்திலும் பல பண்டிதர்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி அநேக இலக்கியங்களை ஆரிய சமயத்துக்கு ஆதாரமாக இயற்றிவிட்டுப் போய்விட்டார்கள். இவற்றை அடியோடு அழித்துத்தான் புதுப்பிக்க வேண்டியிருக்கிறதே ஒழிய, பழுது பார்த்துச் சரி செய்யக்கூடியதாக ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. உருவ வணக்கம் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். கோவில் உற்சவம் முதலியவைகளுக்கு உள்ள ஆதிக்கங்கள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

ராமாயணம், பாரதம், பாகவதம், பக்தவிஜயம், கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் முதலாகியவைகளை நீக்கிவிட்டால் – திராவிடர்களுக்கு இப்படிப்பட்ட உருவக்கடவுள்கள் இருக்குமா என்று பாருங்கள். அப்புறம் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத திராவிடர்களுக்கும் பேதம் இருக்காது; பல வேற்றுமை உணர்ச்சிகளும் இருக்காது.திராவிட நாட்டில் 100 க்கு 3 பேர்களாயுள்ள ஆரியர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களும் நாமும் ஒன்று என்று எண்ணிக்கொண்டிருக்கிற உணர்ச்சியின் பயனாய், நமது வர்க்கத்தையே சேர்ந்த கிறிஸ்தவர், முஸ்லிம், ஆதித்திராவிடர் ஆகியவர்களை வேறாகவும் வேறுபட்ட வகுப்பார்களாகவும் கருதி விலக்கி வைத்திருக்கிறோம். அவர்களுடைய வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாகி இருக்கிறோம்.அதனாலேயே நாம் பலம் குன்றிவிட்டோம்.

(‘பகுத்தறிவு' மாத இதழ், மே 1936)