தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றுகிறோம் என்று சட்டமசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோதே இந்திய மாணவர் சங்கம் எதிர்த்தது. காரணம் இந்த சட்ட மசோதா தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுப்பதற்கு பதிலாக அவர்களது கட்டணக் கொள்ளைக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாகவே அமையும் என்பதால்தான். மட்டுமின்றி நூறாண்டுகால போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டத்தை நிறைவேற்றியுள்ள சூழலில் இலவச கல்வி கொடுப்பது குறித்து பேசுவதற்கு பதிலாக கல்வி வியாபாரிகளின் கட்டண வசூலை அங்கீகரிப்பதாகவே தமிழக அரசின் சட்ட மசோதா இருக்கிறது என்று விமர்சித்தோம்.

school_340ஆஹா! மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துவிட்டது, இனி நம் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும், அதுவும் இலவசமாகவே கிடைக்கும் என்று கருதிய ஏழைத் தமிழனின் கனவில் தமிழக அரசு மண்ணை மட்டுமல்ல பெரிய பாறாங்கல்லையே தூக்கி போடுவதாக இந்த சட்டம் இருக்கிறது என்று எதிர்த்தோம். ஆனாலும் தமிழக சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இம்மசோதாவை எதிர்த்த சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடும், எதிர்க்கட்சிகளின் மௌனங்களோடும் இம்மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியது திமுக அரசு.

இச்சட்டத்தின் அடிப்படையில் நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள 10,934 தனியார் பள்ளிகளுக்கும் தனித்தனி கட்டணங்களை நிர்ணயம் செய்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கும் தெரிவித்துள்ளது கோவிந்தராஜன் கமிட்டி. இக்கமிட்டி ஐந்தாம் வகுப்புவரை ரூ. 5000, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை ரூ. 8000, ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளுக்கு ரூ. 9000, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு ரூ. 11000 வரை அதிகபட்சமாக நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தது.

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் அதிகமென்று மாணவர்களும், பெற்றோர்களும் குமுறிக் கொண்டிருக்கும் போது, தனியார் பள்ளி முதலாளிகள் இந்த கட்டணம் போதாது இன்னும் அதிகமாக நிர்ணயிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் அதிகமாக உள்ளது. இதனை குறைத்திட வேண்டுமென்றும், விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மட்டுமல்லாது சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பெற்றோர்களும் கூட நேரடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் தனியார் பள்ளிகள் எந்தவித தயக்கமுமின்றி தங்கள் கட்டண வசூலை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அதிகமான கட்டண வசூல் என்பது மட்டுமன்றி டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், துணிக்கடை, ஷூ கடை, ஸ்டேசனரி கடை என எல்லாக் கடைகளையும் திறந்து வைத்துக் கொண்டு இவர்கள் அடிக்கும் கொள்ளையால் பெற்றோர்களும், மாணவர்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு வாய்மூடி, மௌனியாக இருக்கிறது. கண்ணியமான (?) சட்டத்தை இயற்றியதுடன் தனது கடமை முடிந்து விட்டது என்று கட்டுப்பாடு காக்கிறது திமுக அரசு.

வழக்கம் போல் தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளது. போதாக்குறைக்கு நீதியரசர் கோவிந்தராஜனும் அதிக கட்டண வசூல் நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளார். இவரது கமிட்டியின் அதிகாரம் குறித்தும் இவரது அதிகாரம் குறித்தும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் கோவிந்த ராஜனுக்கு தெரியாமல் இருக்க முடியாது. தமிழகம் முழுவதுமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 13 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார். 71 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்துள்ளார். இதுதான் தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை.

தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தின் படி அதிகமாக வசூலித்த கட்டணத்தை பெற்றோரிடம் திருப்பி கொடுப்பதுடன், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது ஐந்தாயிரம் ரூபாய் வரை (எவ்வளவு பெரிய தொகை?) அபராதம் விதிக்கலாம். குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முதல் அதிகபட்சம் ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். பெரம்பலூரில் Golden Gates நடத்திய போராட்டத்தின் விளைவாக பெரம்பலூரிலுள்ள கோல்டன் கேட்ஸ் பள்ளி ரூ. 6000 பெற்றோரிடம் திருப்பிக் கொடுத்துள்ளது. இந்த பள்ளிக்கு மெட்ரிக்குலசேன் இயக்ககமோ, கோவித்ராஜன் கமிட்டியோ நோட்டீஸ் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூரில் நடத்திய போராட்டத்தின் விளைவாக அங்குள்ள பள்ளிகள் தங்களின் வசூலை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.

மளிகை கடையில் கூட வாங்கிய பணத்திற்கு ‘பில்’ கொடுக்கும் போது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து வாங்கிய கட்டணத்திற்கு ரசீது கொடுப்பது இல்லை. டி. ஒய். எப். ஐ, எஸ். எப். ஐ நடத்திய போராட்டத்திற்கு பிறகு திருப்பூரில் சில பள்ளிகள் வாங்கிய கட்டத்திற்கு முழுமையாக ரசீது கொடுத்துள்ளனர். இது தவிர தமிழகத்தில் வேறு எந்த பள்ளி நிர்வாகமும் மாணவர்களிடம் அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல வாங்கிய கட்டணத்திற்கு ரசீது கூட கொடுக்கவில்லை. இந்நிலையில் இதுவரை ஒரு பள்ளி மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயித்த அறிவிப்பை 07. 05. 2010 அன்று கோவிந்தராஜன் கமிட்டி வெளியிட்டது. அப்போது இரண்டு தினங்களில் ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விபரங்களை இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. பெற்றோர்களுக்கு மட்டுமன்றி கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்குக் கூட கட்டண விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டண விபரம் தெரியாத போது அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று எப்படி புகார் கொடுக்க முடியும்? மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கூட கட்டணம் விபரம் தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? தமிழக அரசிற்கே வெளிச்சம்.

கட்டணம் அறிவித்த 15 நாட்களுக்குள் பள்ளிகள் மேல்முறையீடு செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. 2010 ஜூன் 2ம் தேதி பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் 6300 மேல்முறையிட்ட மனுக்கள் வந்தள்ளதாக மாணவர், வாலிபர் சங்க தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். தற்போது 8000 மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இது எப்படி என்பதை தமிழக அரசு விளக்குமா?

தமிழக அரசு இலட்சக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த கட்டணத்தை குறைத்திட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தனியார் பள்ளி முதலாளிகளின் நலனுக்காக ஏற்கனவே நிர்ணயித்தக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கிறது. தினசரி பத்திரிகை செய்திகளும், நீதியரசர் கோவிந்ராஜன் அறிக்கைகளும் இதையே தெளிவுப்படுத்துகின்றன.

2010 மே 7ந் தேதி இரண்டு தினங்களில் கட்டண விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக சொன்ன நீதியரசர் கோவிந்த ராஜன் தற்போது மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலித்தப் பிறகு இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை கட்டண விபரம் இணையத்தளத்தில் வெளியிடப்படாததன் மர்மம் என்ன என்பதை தமிழக அரசோ, நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியோ தமிழக மக்களுக்கு விளக்குமா? தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தின் படி 15 நாட்களுக்குள் பள்ளிகள் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் இந்த காலக்கெடு முடிந்த பின்னரும் மேல்முறையீட்டு மனுக்களை தமிழக அரசுப் பெற்றுக்கொண்டது எப்படி? இதன் பின்னணியில் நடைபெற்ற பேரம் என்ன? தமிழக அரசு தெளிவுப்படுத்துமா?

92ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த கட்டாய நன்கொடை தடுப்பு சட்டத்தின் மூலம் இதுவரையிலும் ஒரு பள்ளி, கல்லூரி மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே நமது கடந்த கால அனுபவம். இதுபோல் தமிழக அரசு 2009ம் ஆண்டு கொண்டு வந்த பள்ளி கட்டண ஒழுங்குமுறை சட்டமும், கோவிந்தராஜன் கமிட்டி நடவடிக்கைகளும் மாறிவிடக் கூடாது என்பதே தமிழக மக்களின் விருப்பம். எனவே, தமிழக அரசு புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிற அர்த்தமற்ற அறிக்கைகள் வெளியிடுவதை விட்டு விட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மறுபுறம் இந்த அளவு தனியார் பள்ளிகள் கொல்லையடிக்க காரணம் என்ன? தமிழக அரசின் கட்டண நடைமுறையை அமல்படுத்த மாட்டோம், நிர்பந்தம் செய்தால் பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று சொல்லும் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது? மழையில் காளான் முளைப்பது போல் ஒவ்வோராண்டும் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் துவங்கப்படுவதன் பின்னணி என்ன? இதன் ஆணி வேர் எது என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி கல்வி கொடுப்பது தனது கடமை என்பதை கைவிட்டு, தனியாரிடம் ஒப்படைத்தனர். கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் புதிய அரசு பள்ளிகள் துவக்கப்படாதது மட்டுமல்ல, இருக்கிற பள்ளிகளையும் இழுத்து மூடியது தமிழக அரசு. தமிழகத்தின் தலைநகர் சிங்காரச் சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 30 அரசு பள்ளிகள் மூடப்பட்டது.

இருக்கிற அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை, வகுப்பறை இல்லை, கரும்பலகை இல்லை, ஆய்வுக்கூடம் இல்லை, விளையாட்டு மைதானம் இல்லை, கழிப்பறை இல்லை என இல்லைகளின் இருப்பிடமாக உள்ளது அரசு பள்ளிகள். இதுதான் தனியார் பள்ளிகளை நோக்கி செல்லுமாறு மாணவர்களையும் பெற்றோர்களையும் நிர்பந்திக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் தமிழாசிரியர் பணியிடங்கள் மட்டும் ஆறாயிரத்திற்கும் அதிகம். இப்பணியிடங்களை நிரப்பக்கேட்டால் நிதி இல்லை என்று சொல்லும் தமிழக அரசு பலநூறு கோடிகளை செலவு செய்து உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறது.

மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகளின் கல்விக் கொள்ளைக்கு துணை நின்று, தமிழ் வழிக்கல்வியை அமல்படுத்த மறுக்கும் திமுக அரசு தமிழை வளர்த்திட உலகத் தமிழ் செம்மொழி நடத்துவதை என்ன வென்று சொல்வது. ஒன்று மட்டும் நிச்சயம் “வாழ்க செந்தமிழ் வாழிய நற்றமிழர்” பழம்பெருமை பேசி, தமிழர்களின் உணர்வுகளை தூண்டும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பர வெளிச்சத்தில் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டண கொள்ளை மறைக்கப்படுகிறது. பல லட்சம் ஏழைத் தமிழர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

- என்.ரெஜீஸ்குமார்

(இளைஞர் முழக்கம் ஜூலை 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It