"இயற்கையைக் கடந்த தத்துவத்தைப் புறக்கணிப்பதில் புத்தருக்கு மூன்று நோக்கங்கள் இருந்தன. அவருடைய முதல் நோக்கம், மனிதனைப் பகுத்தறிவுப் பாதையில் வழிநடத்துவது. அவருடைய இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமானவனாக்குவது. அவரது மூன்றாவது நோக்கம், மூட நம்பிக்கைகளின் பலமான மூலத்தை – எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையை – தகர்த்தெறிவது. பவுத்தம் என்பது பகுத்தறிவின்றி வேறல்ல.''

– டாக்டர் அம்பேத்கர், "புத்தரும் அவர் தம்மமும்', பக்கம் : 250

மூட நம்பிக்கைகளான பேய், பில்லி சூன்யம், மாய மந்திரம், நரபலி என அனைத்தையும் கடுமையாக எதிர்த்து மகாராட்டிர மாநிலத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வந்த டாக்டர் நரேந்திர தபோல்கர், 20.9.2013 அன்று மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்துனைக்கும் அவர் நேரடியான கடவுள் – மத எதிர்ப்பில்கூட ஈடுபடவில்லை. இருப்பினும் இந்துமதவாதிகளால் இதை ஏற்க முடியவில்லை. மூடத்தனங்களில் மக்களை சிக்க வைக்கும் சாமியார்களை தண்டிக்க டாக்டர் தபோல்கரே ஒரு சட்டவரைவை உருவாக்கி, அதைச் சட்டமாக்க இறுதிவரை போராடினார். அவருடைய மறைவுக்குப் பிறகு, மகாராட்டிர அரசு அவர் உருவாக்கிய சட்டவரைவை நிறைவேற்றியுள்ளது. அறியாமை எனும் இருள் கொளுத்த தன்னுயிரை ஈந்த டாக்டர் தபோல்கருக்கு நம் வீரவணக்கம்!

மும்பை நாசிக்கில் உள்ள சாவித்திரிபாய் புலே மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் சஞ்சய் சால்வே என்ற தலித் ஆசிரியர், அப்பள்ளியில் நடத்தப்படும் இறைவணக்கத்தின்போது தமது கைகளைப் பின்புறம் கட்டியிருந்ததற்காக 2007 ஆம் ஆண்டு முதல் பள்ளி நிர்வாகத்தால் தண்டிக்கப்பட்டு வருகிறார். தான் ஒரு நாத்திகன்; பவுத்தத்தை ஏற்ற பகுத்தறிவுவாதி என்பதால் தன்னை கைகட்டி வணங்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது; பள்ளிகளில் இறைவணக்கம் என்பதே இந்திய அரசமைப்புச் சட்டம் 28(3) க்கு எதிரானது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ("தி இந்து' 01.09.2013). தங்களை நாத்திகர்களாக, பவுத்தர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்களைக்கூட சட்டம் "இந்து' என்ற வரையறைக்குள் அடைக்கிறது. இதற்கெதிரான ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர தீவிரமாகப் போராட வேண்டும்.

அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்களின் சிந்தனையை மழுங்கடித்து மூட நம்பிக்கைகளைத் திணிக்கும் சாமியார்களைப் போற்றும் இச்சமூகம், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பவர்களை ஏற்பதில்லை. நித்தியானந்தா போன்ற குற்றவாளிகள் இன்றளவும் நீதிபதிகளாக ('தந்தி' தொலைக்காட்சி) வலம் வருகின்றனர். சாய்பாபா போன்றவர்கள் இறக்கும்வரை சிறையில் அடைக்கப்படவில்லை. தபோல்கர் கொல்லப்பட்டதை செய்தியாக்கிய ஊடகங்கள், அவருடைய பகுத்தறிவுப் பணியை இருட்டடிப்பு செய்தன. 75 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரும் அவருடைய இயக்கமும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மேற்கொண்ட பரப்புரையை பத்திரிகைகள் முற்றாக இருட்டடிப்பு செய்தன; செய்கின்றன.

அரசியல் தளத்தில் புரட்சிகர, முற்போக்குச் சிந்தனைகளை முன்வைத்துப் போராடுபவர்கள் கூட கடவுளையோ, மதத்தையோ, சடங்குகளையோ, மூடநம்பிக்கைகளையோ கேள்வி கேட்கத் துணிவதில்லை. மக்களின் சிந்தனையில் மண்டிக் கிடக்கும் இருளை அகற்றாமல் போராடுவதற்குப் பெயர் புரட்சியா? மேலும், பேய், பில்லி சூன்யம், நரபலி, ஜோதிடம், வாஸ்து போன்றவை மட்டுமே மூடநம்பிக்கைகள் அல்ல; இவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் கடவுளும், மதமும், ஜாதியும், கோயில்களும், சடங்குகளுமே தலையாய மூடநம்பிக்கைகள். ஆழ்ந்த கடவுள் மத நம்பிக்கையாளனாக இருப்பவன் ஜாதி என்ற மூடநம்பிக்கையை எதிர்ப்பவனாக இருக்க முடியாது; ஜாதி என்ற மூடநம்பிக்கைதான் தீண்டாமையைத் தோற்றுவிக்கிறது. தீண்டாமை சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கிறது.

எனவே, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு சட்டம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல; இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்பட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக–பண்பாட்டு இயக்கங்கள் முன்வர வேண்டும். அறியாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முதல் போராளி புத்தர். 2,500 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் தேவைப்படுகிறார். ஏனெனில், புத்தர் முன்னிறுத்திய பகுத்தறிவு என்பது மனிதனை மனிதனாகப் பார்ப்பது; மனித நேயத்தை வளர்த்தெடுப்பது; சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவது.