தலித் இலக்கியத்தை சிறீதர கணேசன் மேலும் செழுமைப்படுத்துகிறார்

திராவிட இயக்கம் மற்றும் இடதுசாரி இயக்க எழுத்துகளின் போதாமைகளை கவனத்தில் கொண்டுதான் தலித்திய எழுத்துகளும் பெண்ணிய எழுத்துகளும் உருவாயின. திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு பெரியாரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, இடதுசாரி எழுத்தாளர்களுக்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் மாவோவின் பங்களிப்புகள் எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்ததோ அவ்வாறே தலித் எழுத்தாளர்களுக்கு அம்பேத்கரின் பங்களிப்புகள் மிக முக்கியமானதாகும். அவ்வகையில் அம்பேத்கரின் எழுத்துகளைப் படிக்காத ஒருவரை தலித் எழுத்தாளராகக் கொள்ள முடியாது. ஆனால், தலித் படைப்பாளிகளாக முன்னிறுத்தப்படுகின்ற பலருக்கும் அம்பேத்கர் பற்றிய வாசிப்பு இல்லை.

""ஒரு தலித் படைப்பாளர் தலித்துகளுக்காக எழுத வேண்டும். சாதி இந்துக்களின் அங்கீகாரத்துக்காக அலையக்கூடாது. ஆதிக்க சாதிப் படைப்பாளர்களின் அங்கீகாரத்தைவிட தலித்துகளைத் தட்டி எழுப்புவதே முழுமையானதாக இருக்க வேண்டும். தங்களின் எழுத்து வேரூன்றி தழைத்து செழிக்க வேண்டும் என்றால் விமர்சனங்களைத் தள்ளி வைத்துவிட்டு அவரவரின் வாழ்க்கைக்குள் திரும்பவேண்டும். ஒரு படைப்பாளி தன்னுடைய வாழ்க்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையை எடுப்பதே தலித் இலக்கியத்தின் அம்பேத்கரியம் ஆகும்'' என்பார் சரண்குமார் லிம்பாலே.

அண்ணல் அம்பேத்கரின் கருத்தியல்களை உள்வாங்கிக்கொண்டு தலித் இலக்கியம் எழுதவந்த மிகக் குறைந்த ஒருசிலருள் சிறீதர கணேசன் மிகவும் முக்கியமானவர். அவரது முதல் நாவலான "உப்பு வயல்' இடதுசாரிப் பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் அதன் முக்கியமான கதைமாந்தரான வடுவச்சி ஒரு தலித் பெண். வடுவச்சியின் வாழ்வும் போராட்டமும் கலைவடிவம் பெற்றதாக "உப்பு வயல்' அமைந்துள்ளது. தூத்துக்குடியில் உப்பளத்தில் உழைக்கிற மக்கள் படும் துன்பமும் வாழ்வியல் அவலமும் அந்த வட்டார வழக்கு மொழியின் அழகோடு பின்னப்பட்டிருக்கும். வடுவச்சியின் தளராத போராட்டக் குணம் தலித் பெண்களுக்கே வாய்த்த ஒன்று. உப்பு போட்டு சாப்பிடுகிறவர்களுக்கு உப்பின் உற்பத்தி எப்படி நடக்கிறது என்பதும் அதன் தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களும் கதையின் ஊடாகவே சொல்லப்படுகிறது. உப்பு வயலில் உழைக்கிற மக்களின் வியர்வையும் கண்ணீரும் கூட உப்பின் கரிப்பைக் கூட்டுகிறதோ என்று எண்ணும் வண்ணம் எழுதப்பட்டது அந்த நாவல்.

அதைத் தொடர்ந்து சிறீதர கணேசன் எழுதிய "அவுரி' நாவல் உலகமயமாக்கல் சூழலில் உருவான புதிய முதலாளிய வர்க்கத்தின் வக்கிர உணர்வுகளை அம்பலப்படுத்துகிறது. முதலாளியச் சுரண்டலுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாகி நிற்கும் தலித் மக்களின் அவலங்களைப் பதிவு செய்கிறது. அவரது "சந்தி' நாவல் நமது கல்வியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நாவலாக அமைந்துள்ளது. மீனவர்களுக்கும் தலித்துகளுக்குமான உறவை முன்னிறுத்தும் படைப்பு "வாங்கல்' என்கிற நாவல். மனிதாபிமானக் கண்ணோட்டத்துடனும் போராட்ட உணர்வுகளுடனும் பின்னப்பட்ட சிறுகதைகளின் தொகுப்புதான் "மீசை.'

தற்பொழுது தனது அனைத்துப் படைப்புகளையும் வெற்றி கொள்ளும்படியாக "சடையன்குளம்' என்கிற புதிய நாவலை எழுதியுள்ளார் சிறீதர கணேசன்.

""ஜனங்க நல்லாயிருக்கக் கூடாதுன்னு பொசமுட்டுனவனுங்க ஒண்ணாச் சேர்ந்துகிட்டானுவ. ஊரக் கூறு போட்டானுவ. அந்தக் கும்பல் ஓடி வருது. கைல தடி, கம்பு, கத்தி, அரிவாள்ன்னு வச்சிருக்காங்க. ஒருத்தன் வீடு புகுந்தான். சாமான்களைத் தூக்கி எறிந்தான். ரெண்டு பேரு பந்தலை அசச்சிப் பார்க்காங்க அந்த மரத்துல ஏறுறாங்க. அது உச்சில ரேடியோ கட்டியிருக்கு. அது ரெண்டும் குழாய் ரேடியோ. அதுவள அவுக்காங்க பொத்துன்னு போடுறாங்க. நொங்குன்னு விழுது. படார்ன்னு சத்தம். அம்புட்டும் சப்பிப்போச்சு. இனிமே ஒண்ணுக்கும் உதவாது. எதுக்க வந்தவுங்களுக்கும் அடி உத குத்து விழுந்துச்சி. பறப்புள்ளகளா, ஒங்களுக்கு ரேடியோவா கேட்குது ரேடியா? இது இல்லாம இவங்க கலியாணம் நடக்காதோ? இவன்கள இந்தளவு விடக்கூடாது. தாயளிகத் தலைக்கு மேல ஏறி மோளுமானுக'' – இப்படித் தொடங்குகிறது "சடையன்குளம்' நாவல். தலித் மக்கள் மீது சாதி வெறிபிடித்த முக்குலத்தோர் சமூகம் நடத்துகிற வன்கொடுமைகளோடு தொடங்கி நாவல் முழுவதும் இரண்டு சமூகத்திற்கிடையே நிகழும் போராட்டக் களமாகவே விரிகிறது.

திருமணத்தில் ஒலி பெருக்கி வைத்துக் கொள்வது, ரவிக்கை போட்டுக் கொள்வது, கிணத்தடியில வாளியைக் கழுவி தண்ணீர் இறைப்பது, தோடு போட்டுக் கொள்வது, நிலம் வாங்கி விவசாயம் செய்வது, செங்கல் சூளை வைப்பது இப்படியான பல்வேறு நடவடிக்கைகளிலும் தலித் மக்கள் மேலெழுந்து வரமுடியாதபடி தொடர்ந்து அவர்களை, அவர்களது உடைமைகளை, அவர்களது வாழ்வியல் ஆதாரங்களை திட்டமிட்டு அழிக்கும் ஆதிக்க சாதியினரின் (குறிப்பாக முக்குலத்தோர்) வன்கொடுமைகளை நுட்பமாகப் பதிவு செய்கிறது இந்நாவல்.

""ஏலேய் சம்முகம் பகடைக்கு இப்படியொரு கொமரு இருக்கா? மொட்டு மாதிரி எவ்வளவு அழகா இருக்தூ. நம்ம கண்ணுக்கு தட்டுப்படாம போச்சேன்னு சொல்லிக்கிட்டு திரட்டுமேல ஏறினார் சின்னராசாத் தேவர்.'' தாழ்த்தப்பட்ட சாதிகளின் பெண்களை வல்லாங்கு செய்வதற்கு முயலும் சாதி இந்து ஆண்களின் ஆதிக்கத் திமிர் அழிக்க அருந்ததிய இளைஞர்களும் ஆதிதிராவிட இளைஞர்களும் ஒன்றிணைந்து தாக்குதல் தொடுப்பதையும் அருந்ததியர் பெண்ணைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியும் உட்சாதி முரண்பாடுகளைக் களைந்து, ஒன்றிணைந்து போராடுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் குன்னிமரியானுக்கும் செண்பகத்துக்கும் காதல் மலர்கிறது. ""குன்னிமரியான் கிட்டக் கேக்கச்சில தயங்கினான். இருந்தாலும் பயப்புடாம சத்தமாகச் சொன்னான் பறையன்னு. கணக்குப் பிள்ளையும் அத எழுதிக்கிட்டு'' ஏலே பறப்பயலாருக்க ஒழுங்கா வேல செய்..... இப்பம் தெரிஞ்சு இருப்பேல நா என்ன சாதின்னு? ""அதுக்கென்ன இப்பம்?'' அதுக்கு அவனால பதில் சொல்ல முடியல. அவள் நிதானமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படி காதலை இயல்பாக எடுத்துக்கொள்கிற பெண்ணாக செண்பகம் உருவாக்கப் பட்டிருக்கிறாள்.

சாதி வெறி இருவரின் காதலையும் பிரிக்கிறது. ""செண்பகத்த அழச்சுட்டுப் போனாங்க அன்னைக்கே அவ தூக்குல தொங்கிட்டான்னு சொல்லி பொணத்த எரிச்சிட்டதா பறக்குடிக்குத் தகவல் வந்துச்சு. கழுத்த நெறிச்சே கொன்னுட்டதா குசுகுசுன்னு பேசினாக. இனிப்பேசி என்ன ஆக? சாதி வெறி இப்படித்தான் காதலை முடித்து வைக்கிறது''. இந்தப்படுகொலைகளை எந்த வல்லூரு கவுரவக்கொலை என்று சொன்னது என்று தெரியவில்லை.

""உள்ளபடியே வைத்தான் செல்லையா கிறிஸ்தவராகிட்டார். அவர் பெயரையும் மாத்திக்கிட்டார். இப்பம் அவர் பெயர் மரிய சிலுவை. அவர் பெஞ்சாதி பெயர் அமலோற்பவம். அவிய புள்ளிய பெயர் அந்தோணிசாமி.'' இந்து மதத்தின் சாதியக் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்டு கிறித்துவம் தழுவிய தலித்துகளுக்கு என்னென்ன முன்னேற்றமெல்லாம் கிடைக்கிறது என்று தன் கதை மாந்தர்கள் மூலம் பதிவு செய்கிறார்.

முத்துவீரன் என்கிற அருந்ததியர் கோமதி என்கிற கோனார் விதவைப் பெண்ணின் மீது காதல் கொள்வதும் பின்னர் ராணுவத்தில் சேர்ந்து அவளை அழைத்துக்கொண்டு போய்த் திருமணம் செய்து கொள்வதும் அதற்கு தொடிச்சி பேருதவி புரிவதும் விரிவான கதையாடல்களாகக், காட்டப்பட்டுள்ளது. கோமதி கைம்பெண்ணாக வாழும் கொடுமையையும் அவள் தங்கை கணவன் அவளை அடைய முயன்று அவமானப்படுவதையும், முத்துவீரன் கோமதியைச் சந்திக்க வந்து மாட்டிக்கொண்டு துன்புறுவதையும் மிக இயல்பாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

அங்குலம் அங்குலமாக தங்கள் வாழ்க்கையை உழைப்பின் மூலம் உயர்த்திக்கொள்ள தலித்துகள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அதற்கு எதிராக சாதிவெறியர்கள் சதி செய்து முறியடிப்பதையும் விவரித்துக் கொண்டே நகர்கிறது நாவல். கடைசியாக, சடையன்குளத்துக்கு பஞ்சாயத்து தேர்தல் வருகிறது. தலித்துகள் சார்பாக புலமாடன் நிற்கிறார். ஆதிக்க சாதிகளின் சார்பாக ராமசாமி நாயக்கர் எதிர்த்து நிற்கிறார். தேர்தலில் தலித்வேட்பாளர் வெற்றிபெற்று விடுவார் என்கிற சூழலில் ஆதிக்க சாதியினர் கலவரத்தை உருவாக்கி தலித்துகளை ஊரைவிட்டே துரத்துகிறார்கள். சடையன் குளம் கலவரக்காடாக, தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலித் மக்கள் பிள்ளைக் குட்டிகளோடு புறப்படுகிறார்கள். கனத்த இதயத்தோடு நாவல் முற்றுப் பெறுகிறது.

தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் எதிரெதிர் முரணாக முன்னிறுத்தப்படுகிறது. ஒன்று சாதியை ஒழிக்கும் வழியைச் சொன்ன அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை நிறுவுவது; மற்றது சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பசும்பொன் முத்துராமலிங்கம் சிலையை நிறுவுவது. இந்த இரண்டு முரண்களையும் அடையாளப்படுத்துகிறார் ஆசிரியர். இது ஒரு சிறந்த தலித் நாவல் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

சிறீதர கணேசனின் தனித்துவமாக நாம் ஒன்றை அடையாளம் காணலாம். அவரது ஒவ்வொரு படைப்பிலும் நாயகியை முன்னிறுத்தியே கதையை நகர்த்துகிறார். "உப்பு வயலில்' வடுவச்சியைத் தொடர்ந்து "சடையன்குளத்தின்' தொடுச்சிவரை பெண்ணின் பார்வையிலேயே இந்த சமூகத்தை விவரிக்கிறார். பெண்ணின் உழைப்பு, தளராத முயற்சி, போராட்ட உணர்வு, அர்ப்பணிப்பு என பெண்ணியப் பார்வையிலேயே நாவல் நகர்கிறது. பெரும்பாலான பாத்திரங்கள் ஆசிரியரின் வாழ்வோடு தொடர்புடையவை. அன்றாடம் சந்திக்கிற நபர்கள், ஒடுக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடுகிறவர்கள் என தனது வாழ்விடத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மய்யப்படுத்தியே கதை பின்னப்பட்டிருக்கிறது.

கற்பனையான எதையும் வலிந்து புனையாமல் எதார்த்தத்திலிருந்தே எல்லா சொல்லாடல்களையும் உருவாக்குகிறார். கதை மாந்தர்கள் வாயிலாகப் பல்வேறு அறங்கள் வலியுறுத்தப்படுகின்றன. ""அதெல்லாம் சரிதாங்க. இந்தத் தங்கம் எப்படி கெடச்சது? நேர் வழில கெடச்சதா இல்லாட்டி கெட்ட வழில கெடச்சதா? என்ன கன்னி இப்படிக் கேட்டுட்ட? என்ன திருட்டுக்காரப் பய, சவுமாரிப் பயன்னு நெனச்சுட்டியா? நா ஒண்ணும் கள்ளப்பய கெடயாது. இது ஒண்ணும் களவு சாமானுல்ல. இங்கிருந்து கொழும்புக்கு போகச்சில, ஆட்க துட்டுப்போட்டு ஜவுளி எடுத்துக்கிட்டுப் போனோம். அத வித்து தங்கமாக ஆக்குனோம். பங்கு வைக்கச்சில எனக்கு ஆறு தங்கக்காசு கெடச்சது. அதத்தான் கொண்டு வந்திருக்கேன். நீ நெனக்கிற மாதிரி அடிச்சிப் பிடிச்சோ, களவெடுத்தோ கொண்டுவந்த சாமான்க கிடையாது.'' இங்கே திருட்டுக்கு எதிரான அறம் முன்வைக்கப்படுகிறது. அடுத்தவங்க எப்படியும் இருக்கட்டும். நம்ம நேர்மையாக உழைப்போம், நேர்மையாக தொழில் செய்வோம். அதுலதான் நிம்மதி இருக்கும். இவ்வாறாக, தலித்மக்களின் வாழ்வியல் விழுமியங்களை அழகாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

தலித் இலக்கியத்திற்கான அழகியல் என்ன? இந்து சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற அரசியல் கோட்பாடுகள் எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் தலித் இலக்கியத்திற்கான அழகியல். மீறலே தலித் அழகியல். நாயக பிம்பத்தை அழித்தல், இலக்கண மொழியை தவிர்த்து மக்கள் மொழியைப் பயன்படுத்துதல், பெண்பற்றிய பிம்பங்களைச் சிதைத்து அவளைப் போராளியாக முன்னிறுத்துதல், அடிமைத் தனத்திற்கெதிராக கலகம் செய்தல் என இத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கிறது சிறீதர கணேசனுடைய "சடையன் குளம்.'

பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத சிறீதர கணேசன் படைப்புலகில் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்வது வியப்புக்குரிய ஒன்று. பரிசுகளுக்காக ஏங்காமல், ஆதிக்க சாதிக்காரர்களின் அங்கீகாரத்திற்காக காத்திருக்காமல் தலித் விடுதலை ஒன்றையே தன் வாழ்வின் இலக்கெனக் கருதி தொடர்ந்து தன் இயல்பான போக்கில் அவர் எழுதிக்கொண்டிருப்பது, தலித் இலக்கியத்தை மேலும் செழுமைப்படுத்துகிற செயலாகும். இன்னும் ஏராளமான புதினங்களை அவர் எழுத வேண்டும்.                                  

சிறீதர கணேசன்

பக்கங்கள் : 367

 விலை : ரூ.250

கருப்புப் பிரதிகள்

சென்னை – 600 005

 பேசி : 94442 72500